
வேண்டப்பட்டவங்களை ஆஸ்பத்திரியில சேர்த்துருக்கு... நீ வட்டிக்காச்சும் வாங்கித் தாயேன். எப்பிடியாவது திருப்பித் தந்துர்றேன்
ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் என் அறைக்குப் பதற்றமாக வந்தான் சுகந்தன்!
சுகந்தன் என்னோடு டி.வி.எஸ்ஸில் வேலை பார்த்த நண்பன். புதுக்கோட்டைக்காரன். நீண்ட நாட்களுக் குப் பிறகு நள்ளிரவில் வந்து நின்றான். உட்காரக்கூட இல்லை. ''நண்பா... அவசரமா ஒரு ஹெல்ப்!''

''என்னடா..?''
''நாளைக்குள்ள ஒரு... ஒரு லச்சம் ரூவா பொரட்டித் தர முடியுமாடா?''
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் ரேஞ்சுக்கு ஏதோ அஞ்சாயிரம், பத்தாயிரம் என்றால் பரவாயில்லை. ஒரு லட்சமா..?
''அவ்வளவு காசுக்கு நான் எங்கடா போறது... எதுக்கு இப்போ இவ்வளவு பணம் உனக்கு..?''
''வேண்டப்பட்டவங்களை ஆஸ்பத்திரியில சேர்த்துருக்கு... நீ வட்டிக்காச்சும் வாங்கித் தாயேன். எப்பிடியாவது திருப்பித் தந்துர்றேன்!''
காலையில் அவனோடு பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்குப் போனேன். 60 வயசு இருக்கும்... ஒரு பெரியம்மா ஐ.சி.யூ-வில் மூச்சுக்கு சிரமப்பட்டுக்கொண்டு கிடந்தார். அது சுகந்தனின் நடுநிலைப் பள்ளி டீச்சர். ''இசபெல்லா சிஸ்டர் நண்பா... அவங்களுக்கு ராஜமுந்திரி. குடும்பத்தையே விட்டுட்டு வந்துட் டாங்க... சும்மா ஃபார்மாலிட்டிக்கு டீச்சர்னு சொல்றேன். நான் பேராவூரணி ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சப்போ, அம்மா மாதிரி என்னைக் கவனிச்சுக்கிட்டவங்கடா.
உடம்பு முடியாததால வேலையை விட்டுட்டு ராஜமுந்திரிக்கே போயிட்டாங்க. எங்க ஆயா ஒண்ணு... அதுகிட்ட நம்பர் புடிச்சுப் போய்ப் பாத்தேன். போன வாரத்துல இருந்து இப்பிடிக் கெடக்காங்க... இங்கே அழைச் சுட்டு வந்துட்டேன். யாருக்கும் சொல்லவேயில்ல!'' என சுகந்தன் அழுதான். வளசரவாக்கம் அழைத் துப் போய், ஆறு காசு அநியாய வட்டிக்கு அவனுக்கு ஒரு லட்சம் வாங்கிக் கொடுத்தேன். 80 ஆயிரம் செலவு பண்ணி ஓர் அறுவைசிகிச்சை செய்தார்கள். ஆனாலும், மூன்று நாட்கள் கழித்து இசபெல்லா சிஸ்டர் இறந்துபோனார். சிஸ்டரின் அண்ணன் எதற்குமே சம்பந்தம் இல்லை என்பதுபோல் ஓரமாக ஒதுங்கிக் கொண்டார். சுகந்தன்தான் எல்லாவற்றை யும் செட்டில் பண்ணினான். டீச்சரின் உடலை வாங்கிக்கொண்டு ராஜமுந்திரி போனான்.
மறு நாள் இரவு போன் பண்ணி, 'சிஸ்டர்கூட இப்பிடி ஒரு டிராவல் பண்ணுவேன்னு நெனைச்சே பாக்கலடா. இப்பத்தான் தெரிஞ்சு ஸ்கூல்ல பாதிப் பேர் கௌம்பி வந்துட்டாங்க. ஆளாளுக்குப் பணம் தர்றேங்கறாங்க... நான் யார்ட்டயும் எதுவும் வேணாம்னுட்டேன் நண்பா. இந்த வாழ்க்கையே சிஸ்டர் கொடுத்ததுரா!'' என மொசுமொசுவென அழுதான்.

எனக்குத் தெரிந்த எல்லா ஆண்களுக்கும் முதல் ஆதர்ஷம் அவர்களது டீச்சர்களாகத்தான் இருக்கிறார்கள். சுகந்தனுக்கு இசபெல்லா சிஸ்டர். எனக்கு ரோஸி சிஸ்டர். வெள்ளை நிழலாய், குழந்தை இயேசுவின் புன்னகையாய், கைப்பிடி ஈர மண்ணாக என்னோடு எப்போதும் இருக் கிறது ரோஸி சிஸ்டரின் நினைவு. இப்போதும் நினைக்கிற நொடியில், மெதுமெது வெனத் தலைக்குள் இறங்கும் வெண் கரம். தேவாலய மணியோசையும் 'மேரியின் ராஜ்ஜியம், எந்நாளும் உன்னோடு’ பாடலும் மூச்சை முகிழ்த்தும் குட்டிகூரா பவுடர் வாசமுமாக பொசுக்கென்று மனசு நிறைகிறது!
மூலங்குடி கிறிஸ்துவப் பள்ளியில் படிக் கும்போது ரோஸி சிஸ்டர் எங்கள் டீச்சர். வகுப்பில் அனேகம் பேருக்கும் சிஸ்டர் மீது அவ்வளவு பிரியம். அப்போது ஊரில் பெரும்பாலான வீடுகளில் விசேஷ சமயங்களில்தான் இட்லி, தோசைக்குப் போடுவது. மதியங்களில் பள்ளி வராந்தா முழுக்க முள்ளங்கி சாம்பாரும் பீட்ரூட் பொரியலுமாக எப்போதும் ஒரே வாசத்தில் மணக்கும் சத்துணவு. இதற்கு நடுவே, தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும் பி.டி. வகுப்புகளில், யாருக்கும் தெரியாமல் விடுதிக்கு அழைத்துப் போய் ஃப்ரிஜ்ஜில் இருந்து ரோஸி சிஸ்டர் எடுத்துத் தரும் கேக் ஓர் உலக அதிசயம். யானையைப் பற்றிய ஒரு இங்கிலீஷ் எஸ்ஸே ஒப்பிக்கச் சொல்லி, மொத்த வகுப்பையும் நொச்சிக் குச்சியால் ஹெச்.எம். சிஸ்டர் உரித்தெடுத்தபோது, 'உஸ்ஸு...உஸ்ஸு...’ எனக் கைகளை ஊதிக்கொண்டு அலைந்தோம். அடுத்த வகுப்புக்கு ஆலிவ் எண்ணெய் டின்னோடு வந்து, ''கைல தேச்சிக்கங்கடா...'' எனக் கொடுத்த ரோஸி சிஸ்டர் மீது எந்தப் பயலா வது பிரியம் வைக்காமல் இருக்க முடியுமா?
ஒவ்வொரு கிறிஸ்துமஸ் இரவிலும் சர்ச்சில் கர்த்தர் அவதரித்த நாடகம் நடக்கும். ரோஸி சிஸ்டர்தான் மேக்-அப் இன்சார்ஜ். தேவதூதனுக்கு தெர்மோகோல் சிறகு கட்டிவிட்டு, முன்னால் உட்கார்ந்து, ''என் தலையில கை வெச்சுச் சொல்லு... ரட்சகர் பிறக்கும் நாளில், தென் மேற்கில் ஒரு நட்சத்திரம் உங்களை அழைத்துச் செல்லும்...' என சிஸ்டர் சொல்லித்தரும் காட்சி அப்படியே இருக்கிறது. வாணி ஒழுக, அவர் மடியில் தூங்கிப்போகும் கிறிஸ்துமஸ் இரவு, நிறைய தின்பண்டங்களோடு விடியும். சாதாரணமாகவே பென்சில், கர்ச்சீப், சாக்லேட் எனத் தினமும் யாருக்காவது ஏதாவது பரிசுப் பொருள்களுடன்தான் வருவார் சிஸ்டர். எட்டாவது படிக் கும்போது ஒரு சாயங்காலம், சர்ச்சுக்குப் பின்னால் வைத்து, என்னிடமும் சோலை யம்மாவிடமும் ஏதோ விழாவுக்காக வேளாங்கண்ணி போனபோது, தன்னிடம் ஒருவர் தவறாக நடந்துகொண்டதைச் சொல்லி சிஸ்டர் அழுதார். அந்தக் கணம் தான் நான் பெரிய மனிதனானேன்!
அப்புறம் நான் ரோஸி சிஸ்டரைப் பார்க்கவே இல்லை. அவர் எங்கே இருக் கிறார் என்று தெரியவில்லை. மஞ்சள் வெயில் இறங்கும் மலை உச்சியில், மேய்ப்பனுக்காகக் காத்திருக்கும் வழி தவறிய ஆட்டுக்குட்டியைப் போல நாம் வாழ்க்கை முழுக்க நம் மனதுக்குப் பிடித்த டீச்சருக்காகக் காத்திருக்கிறோம்.
பறவையின் இறகைப் போன்ற அப்பழுக்கு எதுவும் இல்லாத நமது பால்யத்தை எடுத்துக்கொண்டு டீச்சர்கள் போய்விடுகிறார் கள். அதனால்தான் நாம் காலத்துக்கும் அவர்களை நினைத்துக்கொண்டே இருக் கிறோம். டீச்சர்கள் நமது பரிசுத்தம்!
பாதி பின்னப்பட்ட கலர் கலர் வயர் கூடைகள்தான் தேன்மொழி டீச்சரின் அடையாளம். ஓகையில் இருந்து சிவப்பு கலர் சைக்கிளில் வரும் தேன்மொழி டீச்சர் வயர் கூடை பின்ன சொல்லித்தருவார். எம்ப்ராய் டரி பூக்கள் தைக்கச் சொல்லித்தருவார். குப்பைகளை வைத்து பொம்மைகள் செய்து தருவார். இத்தனை வருடங்களில் தேன்மொழி டீச்சரைப் போல நளினமாகப் புடவை கட்டி வருகிற யாரையும் நான் பார்த்தது இல்லை.
சீயக்காய் மணக்க, இடுப்பு வரைக்கும் தலை முடியை அள்ளிப்போட்டு, ஒற்றை செம்பருத்தியோடு வரும் தேன்மொழி டீச்சருக்குப் பக்கத்து வீட்டில்தான் மோகன் இருந்தான். அதனாலேயே அவன் வகுப்பின் வி.ஐ.பி.
''காலையில 6 மணிக்கு டீச்சர் பால் வாங்க வரும்டா'', ''இன்னிக்கு டீச்சர் ஆத்துல குளிச்சுட்டு வந்துச்சு தெரியுமா..?'', ''டீச்சர் தங்கச்சியோட ஒரே சண்ட...'', ''நேத்து பிலிப்ஸுக்கு டீச்சர் படம் பாக்கப் போச்சுரா'', ''நாளைக்குப் பாரேன் டீச்சர் வராது'' என அவன் வாசிக்கும் டீச்சர் நியூஸுக் காகவே எலந்தக்கொட்ட, தேன் மிட்டாய் எனக் கல்லாக் கட்டுவான்.
தாஸ்தான் தேன்மொழி டீச்சரை அதீதமாகக் காதலித்தான். ஒரு முறை மோகன், ''நேத்து டீச்சரைப் பொண்ணு பாக்க வந்தாங்க. மாப்ள சூப்ப்ப்பரா இருக்கான்டா. புன்னகை மன்னன் கமலாசன் கணக்கா...' எனச் சொன்ன நாளில், அத்தனை பேரும் சோகமாகத் திரிந்தோம்.

தாஸ், ''மாப்ள எந்தூருன்னு சொல்றா... எங்க மாமா காங்கிரஸ் கச்சி தெரியும்ல... மாப்ளையை க்ளோஸ் பண்ணச் சொல்லிருவோம்' என சீரியஸாகச் சொன்னான். பல வருடங்களுக்குப் பிறகு குடவாசல் பஸ் ஸ்டாண்டில் மோகனைச் சந்தித்தபோது கேட்டேன், ''தேன்மொழி டீச்சர் என்ன பண்றாங்கடா..?'' 'தெரியல மாப்ள... நான் பார்த்தே ரொம்ப நாளாச்சு!'
சத்யராஜ் மாதிரி உடம்பு முழுக்க முடி இருக்கும் ஆர்.கே.வி. வாத்தியார் இங்கிலீஷ் புத்தகம் எடுத்துப் போகாத தற்காக ஒரு முறை என்னைத் தூக்கிப் போட்டுப் பந்தாடினார்.
கிளாஸ் முழுக்க ஓடவிட்டுக் கும்மி எடுத்தார். லஞ்ச் இடைவேளையில் நான் மாலைமாலையாக அழுதபோது பஷீர் சொன்னான், ''விட்றா... அந்தாளு டி.வி.எஸ். 50-லதானே வர்றாரு? டேங்க்ல சீனியைக் கொட்டிருவோம்.'
''டேங்க்ல சீனியைக் கொட்டுனா..?'
''எஞ்ஜின் சீஸ் ஆகி, வண்டி நாசமாகிரும். சமயத்துல 'டொம்ம்ம்’முனு வெடிச்சுரும். அப்பதான் நீ யார்னு தெரியும்!' எனக்கு வெறி ஏறியது. மறு நாள் வம்பாடுபட்டு கால் கிலோ சீனி வாங்கிப் போனேன். அந்த சீனியோடு ஒரு வாரம் பள்ளிக்கூடத்தில் பஷீரோடு அலைந்து திரிந்தேன். எட்டாவது நாள் பார்த்தபோது 50 கிராம்தான் மீதி இருந்தது. அதையும் தின்றுவிட்டு பஷீர் சொன்னான், ''அவர்ட்ட டியூஷன் சேர்ந் துருவோம் மாப்ள...''
எப்போதும் வெத்தலைப் பாக்கு, டீ வடை வாங்கி வரச் சொல்லும் பத்மநாபன் வாத்தியார், பிச்சையம்மாள் டீச்சர் இரண்டு பேரும் தம்பதி. ஒரே ஸ்கூலில் உத்தியோகம். பத்மநாபன் வாத்தியார் எங்கள் காதைத் திருகி ''கம்னட்டி... கம்னட்டி...'' என அடித்துக்கொண்டு இருக்கும்போதே பிச்சையம்மாள் டீச்சர் வந்து, ''ஏன் அவனைப் போட்டு அடிக்கிறீங்க... விடுங்க'' எனக் காப்பாற்றிவிட்டுப் போவார்.
நெற்றியில் நாமம் போட்டு, பெல்பாட் டம் பேன்ட்டால் தெருவையே கூட்டிக் கொண்டு வரும் ஜி.ஆர். வாத்தியார், எப்போதும் எச்சில் தெறிக்கப் பேசும் பன்னீர் சார், எப்போதும் மாதவி படம் வரைந்துகொண்டே இருக்கும் ஓவியம் சார்... எத்தனை ஆசிரியர்கள் சேர்ந்து இந்த வாழ்க்கையை வடிவமைத்துக் கொடுத்திருக் கிறார்கள்!
எனக்குத் தெரிந்த ஒரு பள்ளிக்கூடத்தில் தலித் என்பதற்காக, பாரதி டீச்சரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ''எங்க பிள்ளைகளுக்கு இவ பாடம் சொல்லித் தர்றதா..?' என எதிர்ப்பு. ஆசிரியர் பெற்றோர் சங்கம் மீட்டிங் போட்டு பாரதி டீச்சரை வேலையைவிட்டுப் போகச் சொன்னபோது, பிரேயர் ஹாலில் இருந்து அவர் அழுதுகொண்டே வெளியேறியது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. இப்போது அவர் ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் டீச்சராக இருக்கிறார். அப்போது அவரை வேண்டாம் என்று சொன்னவர் களின் பேரன், பேத்திகள் எல்லாம் இப்போது அவரிடம்தான் படிக்கிறார்கள். ஒரு சமூகத்தின் முதல் நீதி பள்ளிக்கூடத் தில்தான் பிறக்கிறது. டீச்சர்களிடம் இருந்து தான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளி வாங்கிக்கொள்ள முடியும்!
'கடலோரக் கவிதைகள்’ படத்தை இது வரை அம்பது, அறுபது தடவை பார்த்திருப்பேன். ஒரே காரணம், ஜெனிஃபர் டீச்சர். பாதி நிழலும் பாதி வெயிலுமாய் ஓர் ஒளி விழுந்திருக்க, சர்ச்சுக்கு வெளியே நின்று, ''டீச்சர்... டீச்சர்... எனக்காக கடவுள்ட்ட பிரார்த்தனை பண்ணுவீங்களா டீச்சர்' என சின்னப்பதாஸ் கெஞ்சுவது மாதிரிதான் நாமும். நமக்கான பிரார்த்தனைகள் எப்போதும் அவர்களிடம்தான் இருக்கின்றன. 'அழியாத கோலங்கள்’ இந்து டீச்சரை இப்போது தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் நினைவுகள் சிலிர்க்கின்றன. ஜாங் இமு இயக்கிய 'நாட் ஒன் லெஸ்’ என்ற சைனீஸ் படம் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ஸ்கூலுக்குப் புதிதாக ஒரு பெண் டீச்சர் வருவாள். அவளும் கிட்டத்தட்ட மாணவி தோற்றத்திலேயே இருப்பாள். அவரை டீச்சராக ஏற்றுக்கொள்ள முடியாமல், சண்டை போடுவான் ஒரு மாணவன். அவள் கண்டிப்பதால், அந்த ஸ்கூலே பிடிக்காமல் அவன் ஓடிவிடுவான். தொலைந்துபோன அவனைத் தேடி அலைந்து, நகரத்தில் கண்டுபிடித்து, மறுபடி அழைத்து வருவாள். கடைசிக் காட்சியில் வகுப்பில் அவள் போர்டில் ஒரு பூ வரைந்து, ''இது என்ன?'' என அவனிடம் கேட்பாள். அவன் ''பூ'' என பதில் சொல்வதோடு படம் முடியும். அவன் அவளை டீச்சராக ஏற்றுக்கொண்டான் என்பதை அவ்வளவு கவிதையாகச் சொல்லியிருப்பார் இமு!
டீச்சர்கள் நமக்கு சொல்லித்தந்த பூக்கள் எப்போதும் உதிராத பூக்கள். நிறம் இழக்காமல், வெயில் மழை குடிக்கும் பூக்கள். எங்கே சென்றாலும், என்ன ஆனாலும் டீச்சர்களுக்கு நாம் சிறு பிள்ளைகள்தான். அவர்கள் கடவுளின் நிழல்போல் எங்கோ இருக்கிறார்கள். வயதாகி உடல் உடைந்து சிரமங்கள் கடந்து எப்படி எப்படி எல்லாமோ ஆகிவிடுகிறார்கள். ஆனால், நம் நினைவில் நிற்பது கம்பீரமான டீச்சர்கள்தான். ஆண்கள் தங்கள் டீச்சரைக் காதலிப்பதுபோல் சிறு வயதில் பெண்கள் தங்கள் ஆசிரியர்களைக் காதலித்தார்களா எனத் தோழி ஒருவரிடம் கேட்டேன். சட்டென்று முகம் பிரகாசமாகி, ''அதேதாம்பா... உனக்கு சிவக்குமார் வாத்தியார்பத்தி சொன்னது இல்லேல்ல...'' என இமைகள் படபடக்கப் பேச ஆரம்பிக்கிறார்!
சுகந்தன் போன மாசம்தான் அந்த ஒரு லட்சத்துக்கான வட்டியைக் கட்டி முடித்தான். அது சரி... டீச்சர்களுக்கும் நமக்குமான கடனை முழுமையாகத் தீர்த்தவர்கள் யாராவது இருக்கிறோமா என்ன..?
(போட்டு வாங்குவோம்)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan