
படங்கள் : எல்.ராஜேந்திரன்

நிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதைக் கட்டுரைகளாக நீண்டுகொண்டிருந்தன. தட்டச்சு செய்வது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் மதியத்தில் ஆரம்பித்து நடு இரவு வரை நீளும். திங்கட்கிழமை `அந்திமழை’ இணைய இதழில் வெளிவரும்.
விகடனில் நாவலாசிரியர் இதயன், ‘மனைவியின் நண்பன்’ என்று ஒரு தொடர் எழுதியிருந்தார். அந்தக் கதை நினைவில்லை. எப்போதுமே அந்தத் தலைப்பு என்னைத் தொந்தரவு செய்கிற தலைப்பு. அன்றும் எனக்கு அந்தத் தலைப்பு நினைவில் வந்து சுற்றிக்கொண்டிருந்தது. எதிர் வீட்டில் குடியிருந்த அப்பாவின் சினேகிதர் ஒருவரும், அவர் மனைவியும் அப்பாவிடம் நிறையப் பிரியத்துடன் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் வைத்து என் நினைவுகளை எழுத நினைத்து எழுதிக்கொண்டிருந்தேன். உண்மையில் என் முடிச்சில் நானே கழுத்தை

மாட்டிக்கொண்டிருந்தேன். எழுத எழுத கத்தி மேல் நடப்பது போன்ற விஷயத்தை எழுதுகிறோம் என்று தோன்றியது. முதலில் எழுதியிருந்த ஒரு முடிவைச் சற்று மாற்றி இன்னொரு சம்பவத்தை இதற்குப் பொருத்தி முடித்திருந்தேன். ரொம்ப இயல்பாக வந்த முடிவு. மெயில் அனுப்பிவிட்டுப் படுக்கும்போது இரவு மணி ஒன்று.
அதிகாலையில் தொலைபேசி அழைத்தது. “வணக்கம் கோபால், நான் கல்யாணி அண்ணன் பேசறேன். நான் நாற்பது வருடமாக எழுதியதை, நீ ஒரே கதையில் காலிபண்ணிட்டே, எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தெரியலைப்பா” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். தூக்கக் கலக்கத்தில் எது குறித்துச் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. நேத்து எழுதினதைப் படித்திருப்பாரோ என்று அவசர அவசரமாக இணையத்தைத் திறந்து பார்த்தேன். ஆம், கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார்கள். அவரின் வார்த்தைகளின் ரீங்காரம் அடங்கவில்லை. என்ன இது. அவரது கதைகள் எங்கே. இது எங்கே. மனம் சந்தோஷமடைந்தாலும், சமாதானம் ஆகவில்லை. ஆனால், அவர் எப்போதும் அப்படித்தான். பாராட்டுவதென்றால் மனதாரப் பாராட்டிவிடுவார். சமயத்தில் வீடு தேடி வந்துகூடப் பாராட்டி இருக்கிறார். குறைகளை, ‘இப்படி இருந்தா, இன்னும் நல்லாருக்கும்’ என்கிற மாதிரி, சொல்லிவிடுவார். ஆனால் இப்படி உணர்வு மீதூற, ‘நான் அர்த்தப்படுத்திக்கொண்டதே, நான் சொன்னது’ என்ற பாணியில் சொன்னது இல்லை. காதில் அவரது வார்த்தைகள் ஒலிக்க, மனதில் முகம் நிழலாட, நினைவு பின்னோக்கிப் போனது. அவரது ‘அன்பகம்’ வீட்டு மாடி, நினைவில் அதன் வளமையான வெளிச்சத்துடன் விரிந்தது. நான்கு ஐந்து சன்னல்கள், நடுவில் அகல ஊஞ்சல், அழகான பாவூர்ச் செங்கல் பாவிய தரை என உயிர்ப்புடன் இருக்கும் விசாலமான மாடி.
அன்பகம் என்பது தி.க.சி தங்கள் வீட்டுக்கு வைத்த பெயர். உண்மையில் அது எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது அதனுடன் உறவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு முறை கி.ராஜநாரயணன் மாமாவைப் பார்க்கப் போயிருந்தபோது, புதிதாக வந்திருந்த அவரது புத்தகத்தைக் காண்பித்தார். ஒரு பிரதிதான் இருந்தது. மாமா சட்டென்று ஏதோ ‘ரோசனை’ வந்தவர் போல, ‘அன்பகவாசிகளுக்கும் அதை நேசிக்கிறவர்களுக்கும்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, ‘கல்யாணியிடமும் வாசிக்கக் கொடுத்திரு’ என்றார். அந்த மனுஷரை அப்படி எழுதவைத்தது அவர் கைகளைக் ‘குளுர’ப் பற்றியிருக்கும் அன்பகத்தின் அன்புக் கரங்களாகத்தான் இருக்கும்.
அந்த அன்பகத்தின் மாடி அலமாரிகளில் எல்லாம் புத்தகங்கள் பிதுங்கி விழப் போவது போல நிறைந்திருக்கும். அவ்வளவு புத்தகங்கள். மாக் மில்லன் கம்பெனியின் வெளியீடுகளான தாகூரின் மொத்தப் புத்தகங்கள். நவயுகப் பிரசுராலயம், சக்தி காரியாலயம், பேர்ல் பதிப்பகம், வாசகர் வட்டம், கோபுலுவின் அட்டைப் படங்களுடன் காண்டம் காண்டமாக கம்பராமாயணம், சோவியத் லிட்டரேச்சர், சைனீஸ் லிட்டரேச்சர், விகடன், குமுதம் தொடர்கதைகளின், சினிமாப் பாட்டுப் புத்தகங்களின் பைண்ட் வால்யூம்கள் என்று பிதுங்கி வழியும் பீரோவும் அலமாரிப் பலகைகளும். அவற்றில் கொஞ்சத்தையாவது படித்ததை வைத்துத்தான், இப்போது ஏதாவது ஜல்லி அடிக்க முடிகிறது. அவருக்கு அண்ணனும் எங்கள் இருவருக்குமே குருநாதருமான கணபதியும், கல்யாணி அண்ணனும் பிரமாதமான ஓவியர்கள். வண்ணதாசனை ஓவியராக அறிந்திருப்பார்கள். ஆனால், அவரை அப்படி உணர்ந்தது நானாகத்தான் இருக்கும். சன்னலுக்கு மேல் உள்ள சுவரில் கல்யாணி அண்ணன் பெரிய படங்களாக வரைந்து வைத்திருப்பார். பிளாக் இங்க் கேக்கைத் தொட்டு வரைந்த நடராசர் படம் அதில் ஒன்று. மேசையிலும் சிறிய ஸ்டூல்களிலும் ‘ரீவ்ஸ்’ (Reeves) இந்தியன் இங்க் பாட்டில்களும், வெவ்வேறு அளவிலான பிரஷ்களும், ‘கிட்டார்’ (Guitar) வாட்டர் கலர் பாக்ஸும் கிடக்கும். எத்தனையோ இண்டியன் இங்க் இருந்தாலும் ரீவ்ஸ்தான் இருவருக்குமே பிடித்தமானது.

அப்போது 1961 –இல், மோகன் ஆர்ட்ஸ், சபா ஆர்ட்ஸ் வரைந்த சிவாஜியின் சினிமா பேனர்கள் பிரபலம். அவர் முகபாவங்கள் எந்த ஓவியனுக்குத்தான் பிடிக்காது. `பாவ மன்னிப்பு’ `பாச மலர்’ பேனர்களை எல்லாம் ஈடுபாட்டுடன் பார்ப்பார். கணபதி அண்ணனிடம் பகிர்ந்துகொள்வார். நன்றாக நினைவிருக்கிறது, எனக்கு பத்து அல்லது பதினோரு வயது இருக்கும். பொருட்காட்சியில், திராவகம் வீசப்பட்ட சிவாஜிகணேசன் முகத்தில் கட்டுப் போட்ட `பாவ மன்னிப்பு’ கட் அவுட் வைத்திருந்தார்கள். பேண்டேஜ் துணியில் சொருகியிருக்கும் சேஃப்டி பின் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து ‘என்னப்பா ‘ஊக்கு’ அவ்வளவு அழகா வந்திருக்கேனு பாக்கியா?’ என்று ஒரு கரம் தோளைத் தொட்டது. கல்யாணி அண்ணன். ‘ஆமாண்ணே... ரொம்ப நேச்சரலா இருக்கு’ என்றேன். எங்களுக்கு விளையாட்டு மடமான, தெருவின் பிள்ளையன் கட்டளை ஆபீஸ் சுவரில், அவர் கரியால் வரைந்திருந்த ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாவ மன்னிப்பு சிவாஜியும், ஸ்கூல் நோட்டுத் தாளில் பென்சில் ஸ்கெட்ச்சாக, துப்பாக்கியை வைத்து திரண்டு வரும் கண்ணீரைத் துடைக்கும் பாசமலர் சிவாஜியும், இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்கள்.

அவருக்கு விகடன் கோபுலுவின் கோடுகள் என்றால் உயிர். அவரது அண்ணணுக்கு குமுதம் ஓவியர் வர்ணத்தின் வாஷ் டிராயிங் என்றால் உயிர். பழைய விகடன், குமுதம் இதழ்களை விரித்து வைத்துக்கொண்டு, செங்கல் தரையெங்கும் சாக்பீஸால் படம் வரைவதில் இரண்டு பேருக்கும் அவ்வளவு ஈடுபாடு. இரண்டு பேரும் அப்போது ’தினத்தந்தி’யில் வரும் சிரிப்புப் படங்களுக்கு சிரிப்பும் படமும் வரைந்து அனுப்புவார்கள். என்னுடைய `வெள்ளம், தீர்த்தயாத்திரை, மற்றாங்கே’ எல்லா கவிதைத் தொகுப்புகளுக்கும் அவர்தான் அட்டை ஓவியம். `சுயம்வரம்’ குறுங்காவியம் படித்துவிட்டு அவர் வரைந்த ஓர் ஓவியத்தின் பாதிப்பினால், அதில் ஒரு கவிதை புதிதாக எழுதிச் சேர்த்தேன்.
“முயலகத் திமிறல்களுக்காக
முகஞ்சுளிக்காமல்
நர்த்தன லௌகீகமென
நான் ஆடித் தொலைக்கிறேன்”
நகுலனுக்குப் பிடித்த வரிகள் இவை. இப்படி நான் எடுத்துக்கொண்டதெல்லாம் கல்யாணி அண்ணனிடமிருந்து எடுத்துக்கொண்டதுதான்.
அவரது வீட்டுக்கு இட்டுச் செல்கிற நடைக்கூடத்தின் தெருப்படியில் அமர்ந்துதான் எல்லோரும் பேசிக் கொண்டிருப்போம் அல்லது மாடியில் அமர்ந்து கேரம்போர்டிலோ, ‘88’ சீட்டு விளையாட்டிலோதான் எங்கள் கோடை காலம் கழியும். 1963 கோடை விடுமுறை. வாசல் நடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.அவரது கையில் ‘புதுமை’ என்ற மாத இதழ். கே.டி.கோசல்ராம் என்கிற காங்கிரஸ் எம்.பி நடத்தி வந்தது. அதில் வண்ணதாசனின் முதல் கதையான ‘ஏழையின் கண்ணீர்’, வெளிவந்திருந்தது. உடல்நிலை சரியில்லாத கணவனை வீட்டில் விட்டுவிட்டு, பகல் பூராவும் வெளியே போய் வரும் மனைவியை வளவுக்காரர்கள் ஜாடைமாடையாகப் பேசுவார்கள். தாங்க முடியாத ஒரு பொழுதில் அவளுடைய கணவன், “அவள் அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் வேலைக்குப் போய் கௌரவமாகக் கஷ்டப்பட்டு சம்பாதித்து வருகிறாள்… விபரம் தெரியாமல் பேசாதீர்கள்” என்று ஆங்காரமாய் உண்மையைச் சொல்வான். அந்தக் கதை வந்தபோது அவருக்கு வயது 16 அல்லது 17 இருக்கும். தொடர்ந்து இன்னொரு கதையும் `புதுமை’ இதழில் வந்தது. இந்தக் கதைகள் எல்லாம் தொகுப்புகளில் வரவில்லை.

மாலைமுரசில் ‘கருகிய நோட்டுகள்’ என்று ஒர் கதை வந்தது. அப்போதைய ஃபிலிம் ஃபேர் சினிமா இதழில் நடிகர் ஜிதேந்திரா நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எரித்து சிகரெட் பற்றவைப்பது போல ஒரு படம் போட்டிருந்தார்கள். அதை பொது நூலகத்தில் பார்த்துவிட்டு நானும் அவரும் ஆதங்கம் பொங்க, `அவனவன் வங்கியில் கிழிந்த ஒரு ரூபாயையும், இரண்டு ரூபாயையும் மாற்ற நாயாய்ப் பேயாய் அலைகிறான், இவனுக்குத் திமிரைப் பாரேன்’ என்றுபேசிக் கொண்டோம். ஆதங்கத்தை அவர் ஓர் அருமையான கதையாக எழுதியிருந்தார். இதே கதை அவர் பணிபுரிந்த ஸ்டேட் பேங்க், அதன் ஊழியர்களுக்காக நடத்தும் மனை இதழில் (House magazine- ‘colleague’) மறுபடி வெளிவந்த நினைவு. அவற்றின் பிரதிகளும் வரைந்த ஓவியங்களும் ஒன்றுகூட இப்போது இல்லை என்று சமீபமாக வருத்தப்பட்டார். என்னிடம் சில ஓவியங்கள் இருக்கின்றன. அது கிருஷியால் சுடப்பட்டு, கோயில்பட்டி நண்பர்களால் கடத்தப்பட்டு, கடைசியாக மாரீஸ் வழியாக, செய்கூலி சேதாரத்துடன் என்னை அடைந்தது.
பின்னர் அவரது கதைகள் `தீபம்’, `கண்ணதாசன்’, `கணையாழி’, `கசடதபற’ இதழ்களில் வரத் துவங்கின. அவரது ஓவியப் பார்வைகளே வாழ்வின் நிகழ்வுகளை நுணுக்கமாக அவதானிக்க வைத்திருக்கின்றன என நினைக்கிறேன். அடிப்படையில் அவர் ஒரு கவிஞர் என்பது என் அபிப்ராயம். ஓவியப் பார்வையும், கவி வரிகளும்தான் அவரின் கதைகளைத் தனித்துவம் மிக்கதாக்கி இருக்கின்றன என்று நினைக்கிறேன். நான் அவரிடம் விளையாட்டாகச் சொல்வேன், எனக்கு ஓவியத்தைக் கற்றுத்தராமல் விட்டு விட்டீர்களே என்று. ஏன் படித்துக்கொள்ள வயசா இல்லை என்பார். சோவியத் லிட்டரேச்சரில் வந்த சில ரஷ்யக் கவிதைகளை கல்யாணி அண்ணன் மொழிபெயர்த்து அவை ‘தாமரை’ பத்திரிகையில் வந்தன. ஒரு கவிதையில் போரின் மோசமான தாக்கங்கள் அடிநாதமாய் இயங்கும். குழந்தைகள் துப்பாக்கியால் சுடுவது போலவும் சாவது போலவும் நடித்து விளையாடுகிற குழந்தைகள் பற்றியது. போரையும் மரணத்தையும் அவைகளுக்கு விளையாட்டுக்கான பொருளாக, குழந்தைகளே ஆக்கிக்கொண்ட நகைமுரண் வெளிப்படும் கவிதை. அழகாக மொழி பெயர்த்திருந்தார். `கண்ணதாசன்’ இதழில் அவரது கதைகளுடன், கவிதைகளும் வெளி வந்தன. நா.காமராசனின் `கறுப்பு மலர்கள்’ புத்தகமும், கண்ணதாசனில் வந்த கவிதைகளும் அவருக்கு ஏகப் புகழ் தந்தவை. கண்ணதாசன் இதழில் கல்யாணி அண்ணன் பாதியில் நிற்கும் பாடல்களுக்காக பாடுகிறேன் ஒரு பாடல்… என்று சி.கல்யாணசுந்தரம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை எப்போதும் நா.காமராசன் வெகுவாகப் பாராட்டுவார்.

இதையெல்லாம் படித்துவிட்டு, எனக்குத் தெரிந்த அரைகுறை மரபை விடுத்து நானும் அவரைப் பின்பற்றி நிறையக் கவிதைகள் எழுதினேன். அவ்வப்போது, பத்துப் பதினைந்து நாள் இடைவெளியில் என் கவிதை நோட்டைக் கொண்டுபோய் அவரிடம் கொடுப்பேன். சில திருத்தங்கள் சொல்லுவார். சில சமயம், மேஜை மேல் வைத்துவிடு, அப்புறமாகப் படிக்கிறேன் என்பார். அடுத்த முறை போகையில் அதில் அவருக்குப் பிடித்த வரிகளை ஓரத்தில் கோடு போட்டு வைத்திருப்பார். ஒரு முறை கொண்டுபோயிருந்தபோது ஊஞ்சலில் படுத்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தார். படித்துவிட்டு ஒன்றுமே பேசாமல் இருந்தார்.என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க என்று தயக்கத்துடன் கேட்டேன். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, எப்படி திடீர்ன்னு இப்படி எழுத ஆரம்பிச்சிட்டே, கணபதியண்ணன் சொன்ன மாதிரி தூக்க மாத்திரை சாப்பிட்ட விளைவோ என்று லேசான கேலியுடனும் சொன்னார். கணபதி அண்ணன் என் சில கவிதைகளைப் படித்துவிட்டு, “இந்தப் பாவியின் தலையில் எந்த மின்னல் வந்து கவிதையின் தலைப்புகளைச் சொருகிப்போகிறது, அவன் சாப்பிட்ட தூக்க மாத்திரைகளா?” என்று அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை என்னிடமும் காண்பித்தார்.

அவருக்கு வரும் சில கடிதங்களை என்னிடம் காண்பிப்பார். நானாகவும் வண்ண நிலவன், வல்லிக்கண்ணன், போன்ற இலக்கிய அன்பர்கள் நண்பர்களின் கடிதங்களை எடுத்துப் படிப்பேன். ஒன்றும் சொல்ல மாட்டார். அப்படியெல்லாம்தான் என்னை வளர்த்தெடுத்தார் வண்ண தாசன். அவருடைய கதை கவிதைகளைப் போலவே, அவருடைய கடிதங்கள் அற்புதமானவை. நாமே நிர்ணயித்த ஒரு சட்டகத்திற்குள் நின்று கதை எழுதுவது கொஞ்சம் சுதந்திரக் குறைவானதுதான். அதைவிட கடிதம் எழுதுவது, ஒரு வகையில் சுதந்திரமானது. அப்படி உரிமையும், சுதந்திரமும், அன்பும் போட்டியிடும் அவரது கடிதங்களை எல்லாம் அதிகமாகப் படிக்க வாய்த்தது எங்களுடைய பெரும்பேறு. ஆம், அவருடைய கடிதங்களைத் தொகுக்கும் முயற்சியில் கோவை நஞ்சப்பன் ஈடுபட்டபோது, ரவி சுப்ரமணியனும், வண்ணநிலவனும், நானும் உதவினோம். அவர்கள் கொஞ்சம் தேர்வு செய்த பின், கடைசியாக என்னிடம் வந்தது. எனக்கு வந்ததில் எதை விடவும் மனமில்லை. ஆனாலும் சிலவற்றைத் தள்ளலாம் எனக் குறித்து, எல்லாவற்றையும், கல்யாணி அண்ணனிடமே அனுப்பினேன். அவர் அதிலும் குறைத்துவிட்டுப் பதிப்பிக்கத் தந்தார். கடிதங்கள் கேட்டு நண்பர்களை அணுகியபோது பலரும் கடிதங்களை நகலாகக்கூடப் பிரிய மனமில்லாமலேயே ஜெராக்ஸை அனுப்பினார்கள். ஒருவர், ‘அது எனக்கே எனக்கானது, அவர் இவை பதிப்பிக்கப்படும் என்று நினைத்து எழுதியிருப்பாரா என்ன’ என்று தர மறுத்திருந்தார். எத்தனையோ மன நிலைகளுடன் எத்தனையோ மனிதர்கள். பதிப்பிக்கப்படாத கடிதங்கள் என்னையும் சேர்த்து பலரிடமும் இன்னமும் இருக்கின்றன.
சமயத்தில் என் வாழ்க்கை கொஞ்சம் தடம் புரண்டுவிட நேர்கிற நேரத்தில் ஏதோ ஒரு சக்தி, ஒரு சிறிய ராக்கெட்டைச் செலுத்தி என்னை என் சுற்று வட்டப்பாதையில் மீண்டும் வைத்து விடுவதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். அப்படி ஒரு மகா பெரிய சக்தி கல்யாணி அண்ணன். நான் எம்.ஜி.ஆர் மன்றங்களின் பின்னால் அலைந்து, தியேட்டர்களில் காத்துக்கிடந்து, வசூல் நோட்டீஸ்கள் அடித்து தமிழகமெங்கும் உள்ள மற்ற மன்றங்களுக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து வாங்கி, ஒரு வகையான தேக்கத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, நாலு வீடு தள்ளி இருக்கிற கல்யாணி அண்ணன் கடிதம் எழுதியிருந்தார். ‘உன் அப்பாவின் மனோகரமான நம்பிக்கைகள் உன் மீது கவிந்திருக்கையில், நீ அவற்றைச் சிதறடித்து விடாதே. ரசிகனாய் இருப்பது வேறு… இப்படி நோட்டுப் போட்டு வசூல் குறித்துக் கொண்டிருப்பது வேறு..’ என்று எழுதியிருந்தார். அப்போது அதைக் கேட்டுக் கொள்கிற மனநிலையையும் நான் அவளால் பெற்றிருந்தேன். ஆக, ஒரு திருப்பம் நிகழ்ந்தது. இப்படிப் பல சந்தர்ப்பங்களில் ஆசானான அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். ஏன், என் காதல் புலம்பல்களின் நல்ல வரிகளைச் சுட்டிக்காட்டி அதைப் பொதுத் தளத்திற்கு மடை மாற்றுகிற காரியத்தை அவரே செய்தார். தோள்மட்ட நண்பர்கள் யாரிடமும் பகிர முடியாத சொந்தத் துயரங்களைக்கூடக் கேட்டு ஆறுதலோ, தீர்வோ சொல்லுகிற நல்ல நண்பரும் அவர். என் அக வாழ்க்கையின் சில சிக்கல்களுக்குக்கூட அவரிடம் தீர்வு பெற்றிருக்கிறேன். நான் என்றில்லை, எத்தனையோ பேருக்கு அவர் நல்லாசான், நல்லமைச்சன், நல்ல நண்பன்.
நான் உரைநடைக்காரனாகி இரண்டு மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வந்து விட்ட நேரத்தில், எனக்குத் தோன்றியது, இனி கவிதை சாத்தியமில்லையோ என்று. அப்படி ஒரு நேரத்தில் முகநூலில் சில கவிதைகளைப் பதிவிட்டேன். முதன் முதலாகப் பதிவேறிய கவிதை:
‘ஒவ்வொரு புது வாக்கியமும்
மொழி செய்து கொள்ளும்
சுயமைதுனம்’
இதற்கும், தொடர்ந்து எழுதியவற்றிற்கும் கல்யாணி அண்ணன் உற்சாகத்துடனும், நான் மீண்டு வருகிறேன் என்ற உள்ளார்ந்த மகிழ்ச்சியுடனும் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அவருக்கும் இந்தக் கவிதைகள் உத்வேகம் அளித்தன என்று குறிப்பிட்டு, அவரும் முகநூலில் 17 நாட்களில் 84 கவிதைகள் எழுதினார். அவை ‘பூனை எழுதிய அறை’ என்ற பெயரில் தொகுப்பாக வந்தன. அந்தத் தொகுப்பில் `இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் மொத்தக் கவிதைகளையும் நேற்றிரவு ஒரே இருப்பில் வாசித்தேன். இவற்றை எழுதியதற்கான ஒரு வித நிறைவை அவை தந்தன. இந்த நிறைவை நான் அடைவதற்கும், இந்தக் கவிதைகளை எழுதுவதற்கும் ஆதாரமான தூண்டுதலாக, தன் தனித்துவம் மிக்க ஆதி வீரியத்துடன் கவிதைகள் எழுதி, முன்னிலும் சுடர்கிறவனாக இருக்கும் கலாப்ரியாவுக்கு இந்தத் தொகுப்பை பெரும் மரியாதையுடனும் மிகுந்த ஆனந்தத்துடனும் சமர்ப்பணம் செய்கிறேன்.’ என்று குறிப்பிட்டிருந்தார். எந்தச் சூரியனிடமிருந்து இந்தக் குத்துச் செடி தன் பச்சையங்களைப் பெற்று முட்களுக்கு ஊடாக சில இலந்தம் பழங்களைத் திருப்பித் தருகிறதோ, அந்தப் புளிப்புக் கனிகளுக்கே அவர் கவிதைகளை சமர்ப்பணம் செய்வதென்பது அவருடைய பெருந்தன்மையன்றி வேறெதுவாக இருக்க முடியும். அந்தப் பெருந்தன்மை இந்த இளையவனிடத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களை உண்டு பண்ணும்.

வண்ணதாசனைப் பொறுத்து அவர் தன்னுடன் பழகுகிற எல்லோருக்கும் தனிப்பெரும் அன்புடன் நெருக்கமானவர். அன்பான தனி ஊசல் ஒன்று அவருக்கும் ஒவ்வொருவருக்கும் இடையே நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்கும். ஆனால், அதன் அலைவுகள் நிர்ணயிக்கும் ‘நேரம்’ என்பதோ யாவருக்கும் ஆனது. தமிழ் இலக்கியத்துக்குஆனது.
கல்யாணி அண்ணனை வண்ணதாசனாக நான் அறியத் தொடங்கியபோதே தமிழ் இலக்கியம் அவரைத் தெரிந்து கொண்டிருந்தது. அவரை நான் தொடர்ந்து வரும் இந்த 53 வருட எழுத்து வாழ்க்கையில் அவரை அடைந்த அங்கீகாரங்கள், விருது பற்றிய செய்திகளை என்னிடம் முதலில் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அணுக்கமாக இருக்க வாய்த்ததே நான் பெற்ற அங்கீகாரம் என்பேன். விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்தினையும் அப்படியே பகிர்ந்து கொண்டார், அதே எளிமையுடன். ஒவ்வொரு முறையும் சொல்வதுபோல் இப்போதும் சொன்னார் “இதை நினைத்தெல்லாமுமா நாம் எழுத ஆரம்பித்தோம், கோபால்!”.