மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்
பிரீமியம் ஸ்டோரி
News
நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

பேராசிரியரும் மனித உரிமைப் போராளியுமான பாலகோபால் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஜனநாயகபூர்வமான இந்தியாவை உருவாக்குவதில் நாம் எதிர்கொள்ள வேண்டிய மிக ஆபத்தான கருத்தியல்களை, வகுப்புவாத இயக்கங்களின் முன்னெடுப்புகளை சமூக நடைமுறை உண்மைகளை விமர்சனபூர்வமாக அணுகி எதிர்வினை செய்யும் கட்டுரைகள். மதம், வரலாறு, கல்வி, கலாசாரம் என இந்திய அரசியல் சூழலின் மீது ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை வாசிக்கத் தருகிறார் பாலகோபால். ஜனநாயகத்தின் மீது பற்றுடைய ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியது ‘கருத்தாயுதம்!’.

கருத்தாயுதம்

கட்டுரைகள்: பாலகோபால் தமிழில் : க.மாதவ்

வெளியீடு: சிந்தன் புக்ஸ்

132/251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086.

பக்கம்: 344 விலை: 250

நூல் அறிமுகம்

‘மா.அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்றுவிடுவது இல்லை. உண்மையில், அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்...’ எனக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் அசோகமித்திரன். 1950-களில் எழுதத் தொடங்கிய மா.அரங்கநாதனின்
60 ஆண்டுகால மொத்தப் படைப்புகளின் தொகுப்பு இது. இவரது ஆளுமையை முழுமையாக அறிந்துகொள்ள விரும்புகிற வாசகர்களுக்கு பெரிதும் உதவும்.  இரண்டு நாவல்கள், 90 சிறுகதைகள், 46 கட்டுரைகளுடன் நேர்காணலும் இடம்பெற்றிருக்கின்றன. இதில் கவிதை குறித்து இவர் எழுதியிருக்கும் ஆழமான கட்டுரை, கவிதை சார்ந்து இயங்குபவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய ஒன்று.

மா.அரங்கநாதன் படைப்புகள்

வெளியீடு: நற்றிணை பதிப்பகம்

6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேண், சென்னை - 600 005.

பக்கம்: 1021 விலை: 890

நூல் அறிமுகம்

விடுதலையின் குறியீட்டு நிறமான சிவப்பும் ஆப்பிரிக்கப் பெண்ணிய நிறக்குறியீடான நீலமும் இணையும்போது கிடைக்கும் வண்ணமான ஊதா நிறத்தை நாவலின் தலைப்பாக வைத்து விரிகிறது நைஜீரியப் பெண் எழுத்தாளர் சிமொந்தோ எங்கோசி அடிச்சியின் ‘ஊதாநிறச் செம்பருத்தி’ நாவல்.

60-களின் இறுதியில் தொடங்கும் நைஜீரியப் பின்காலனியச் சூழலில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிக முக்கிய நாவல். உலகப் பெண்ணிய நாவல்களில் பிரதானமான ஒன்றும் கூட. 2003-ல் வெளியான இந்த நாவல் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறது. இந்த நாவலில் விரித்துக்காட்டப் பட்டிருக்கும் பெண்ணியவெளி குறித்தும், அது எத்தகைய குறியீடுகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

காம்ப்ளி, பியாட்ரிஸ், இஃபியோமா, அமக்கா என்கிற நான்கு பெண்கள்,  அவர்களின் வாழ்க்கையை காம்ப்ளியின் பார்வையில் பேசுகிறது நாவல். குடும்ப அமைப்பு என்பது எவ்வளவு அபத்தமானது என்றும், அது ஆண் தலைமையிலான ஒன்றாக இருக்கும்போது அதன் உறுப்பினர்களின் மீது பாதுகாப்பு என்ற பெயரில் எத்தகைய அதிகாரங்களை நுட்பமாகவும், பகிரங்கமாகவும் செலுத்துகிறது என்றும், அதற்கு மதம் என்னும் ‘நிறுவனம்’ எப்படி துணைநிற்கிறது என்பதுமே நாவலின் மையச்சரடு. ‘மற்றவரின் உரிமையை மறுத்தல்’ என்ற புள்ளி நாவலின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தொடர்கிறது. இந்த நாவல் வெளிப்படுத்தும் மெல்லிய ஆனால் வலிமையான பெண்ணிய முழக்கம், வாசிப்பவர் அறியாவண்ணம் அவர்களின் மனதுக்குள் நுழைகிறது. நைஜீரியக் குடும்ப அமைப்பு முறைக்கும், இந்தியக் குடும்ப அமைப்பு முறைக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதால், நம்மால் நாவல் நடக்கும் உலகோடு பயணிப்பது எளிது.

தமிழில் பிரேம் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். பின்காலனிய ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் சினுவா ஆச்சிபிக்குப் பிறகு காத்திரமான எழுத்துகளின் மூலம் அறியப்படுபவர் சிமாந்தே எங்கோசி அடிச்சி. 2005-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விருதை இந்த நாவல் பெற்றது.

ஊதாநிறச் செம்பருத்தி

சிமாமந்தா எங்கோசி அடிச்சி

நூல் அறிமுகம்


தமிழில் : பிரேம்

வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம்,

3, முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர். புதுச்சேரி - 605 110

பக்கம்: 320 விலை: 250