மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்

கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்

படங்கள் : கே.ராஜசேகரன்

கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்

`பல ஆண்டுகளுக்கு முன்பு வானொலி நிலையத்தில் என் பெயர் கொண்ட இன்ஜினீயர் ஒருவர் இயந்திரங்களின் உதவியுடன் ஓர் ஆராய்ச்சி நடத்தினார்.

இம்மியளவும் ஆதார சுருதியினின்றும் பிறழாத சாரீரங்களில் எம்.எஸ்-ஸின் சாரீரம் தலைசிறந்தது என்று நிரூபித்தார். இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும்.

கச்சேரியின் தொடக்கத்திலிருந்து மங்களம் வரை, துளிக்கூட – ஒரு விநாடிகூட –சுருதியைவிட்டு விலகாமல் சாரீரம் நிலைத்து நிற்பது துர்லபம். தேகத்திலும் சாரீரத்திலும் ஏற்படும் உஷ்ணத்தினால் சாரீரம் சுருதியைவிட, ஓரளவு மேலே ஒலிக்கும். வேறு சிலருக்குப் பாடப் பாடக் களைப்புத்தட்டி, சுருதியை விட்டு விலகும்.

எம்.எஸ்-ஸுக்கு இந்தக் குறை சற்றுக்கூடக் கிடையாது. இரண்டு தம்பூராக்களை `தைரியமாய்’ வைத்துக்கொண்டு, அப்படியே ஆதார சுருதியில் மிதக்கக்கூடிய ஆற்றல் அன்னாருக்கு உண்டு.

சங்கீதத்திற்கே அடிப்படையான சுருதி லாகவமாக அமைந்துவிட்ட பின்பு, அவருடைய சங்கீதம் இளமை குன்றாது – அன்று முதல் இன்று வரை – சோபையுடன் விளங்குவதில் ஆச்சர்யமில்லை அல்லவா!’

- சுப்புடு (சாரதி எழுதிய ‘இசை உலகின் இமயம் எம்.எஸ்’ நூலின் அணிந்துரையில் இருந்து… வெளியீடு: வானதி பதிப்பகம்)என் பாட்டியிடம் ஐந்து தம்புராக்கள் இருந்தன. எல்லாமே பாட்டியின் சுருதிக்கு ஏற்ப ட்யூன் செய்யப்பட்டவை. அவற்றில் இரண்டு தம்புராக்கள்தான் முதலில் பாட்டியிடம் வந்தவை… 1940-ம் ஆண்டு இசைமேதை செம்மங்குடி சீனிவாச ஐயரால் பரிசாக வழங்கப்பட்டவை. அவரே இரண்டுக்கும் ‘சரஸ்வதி’, ‘லஷ்மி’ எனப் பெயரும்

கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்

சூட்டியிருந்தார். அவற்றைத்தான் அதிகம் பயன்படுத்துவார் பாட்டி.

1963-ம் ஆண்டில் எடின்பரோவில் நடந்த சர்வதேச இசைவிழாவில் பாடினார்; 1966-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாடினார்; 1982-ம் ஆண்டு லண்டன் ஆல்பர்ட் ஹாலில் இசை பொழிந்தார்; 1987-ம் ஆண்டு இந்திய இசைவிழா மாஸ்கோவில் நடந்தபோது, அங்கேயும் பங்கேற்றார். 1977-ம் ஆண்டில் அமெரிக்காவில் வரலாற்றுப் பிரபலமான கார்னெகி ஹாலில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தியபோது, `சரஸ்வதி’, ‘லஷ்மி’ இரண்டு தம்புராக்களையும் கொண்டு சென்றார். இப்போதும் இவை பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் நன்றாக இருக்கின்றன.

இவை தவிர, பாட்டியிடம் இருந்த முக்கியமானவை மீரஜ் தம்புராக்கள். ஒன்று, நான்கு கம்பிகள் கொண்ட தம்புரா. அதை `மீரா பஜன்ஸ்’ பாடுவதற்குப் பயன்படுத்தினார் பாட்டி. இன்னொன்று, அரிதான ஆறு கம்பிகள் கொண்ட மீரஜ் தம்புரா. அது, நடனக்கலைஞர் பால சரஸ்வதியின் குடும்பத்தாரால் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. `விஷ்ணு சகஸ்ரநாமம்’ பாடுவதற்கு அதைத்தான் அவர் பயன்படுத்தினார்.

கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்

பாட்டி வீணை வாசிப்பதிலும் வல்லவர் என்பது அதிகம்பேர் அறியாதது. என் பாட்டியின் தாயார் சண்முகவடிவிடம்தான் அவர் வீணையை வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஒரு பாடகர், வீணையும் வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டியது மிக அவசியம் என நம்பினார் பாட்டி. தஞ்சாவூரில் இருந்து அவரால் கொண்டுவரப்பட்ட வீணை ஒன்றை நாங்கள் இன்றும் வைத்திருக்கிறோம். நன்கு அலங்கரிக்கப்பட்ட அது, இன்றைக்கும் நல்ல நிலையில் இருக்கிறது. என் பாட்டி, ஒரே ஒரு வீணைக் கச்சேரிதான் நடத்தியிருக்கிறார். அது, 1968-ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.

மேடையில் பாடி, ரசிகர்களைப் பரவசப்படுத்தும் இசைக்கலைஞர் மட்டும் அல்ல. அவர் ஒரு நல்ல மாணவி. ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்பாக வீட்டில் அமர்ந்து தம்புராக்களில் சுருதி சேர்த்து, பாடிப் பார்த்து ரிகர்சல் செய்வார். எந்தக் கச்சேரியானாலும், நிகழ்ச்சிக்குப் போவதற்கு முன்பு அவர் அதைச் செய்யத் தவறியதே இல்லை. அவர் தன் குரலில் பாடி, சாகாவரம் பெற்று இன்றைக்கும் நிலைத்து நிற்பது ‘வெங்கடேஸ்வர சுப்ரபாதம்.’ அதுபோல எண்ணற்ற கீர்த்தனைகளையும் தன் தனிப்பட்ட பாணியால் என்றும் புகழ்பெற்றவையாக ஆக்கியிருப்பவர். அதற்கெல்லாம் உறுதுணையாக இருந்தன இந்த அருமையான தம்புராக்கள்.

கல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்


கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் என் அம்மா ராதா விஸ்வநாதன், என் பாட்டியுடன் இசை நிகழ்வுகளுக்கும் ரெக்கார்டிங்குகளுக்கும் இந்த தம்புராக்களுடன் சென்றிருக்கிறார். தம்புராவை மீட்டும்போதெல்லாம் தன் அம்மா அருகே இருப்பதுபோல உணர்வதாக அவர் அடிக்கடி சொல்வார். இப்போது என் மகள் ஐஸ்வர்யா, இந்த தம்புராக்களைப் பயன்படுத்துகிறார்.

என் பாட்டிக்கு ‘பக்தி பாவ’த்தின்மீது எந்த அளவுக்கு ஈடுபாடு இருந்ததோ, அந்த அளவுக்கு ஈடுபாடு தம்புராவின் மீதும் இருந்தது. தம்புரா அவருடைய ஓர் அங்கமாகவே இருந்தது. இன்றைக்கும், ஒவ்வொரு நிமிடமும் என் பாட்டியின் கந்தர்வக்குரல் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்தபடிதான் இருக்கிறது. கல்லையும் கனியச் செய்யும் அவர் கீதங்களுக்கு ஆதாரமாக நின்றது அவரது சுருதி. அதனால்தான் ஒருமுறை அவர் பாடலைக் கேட்ட இந்துஸ்தானிக் கலைஞர் படே குலாம் அலி கான் இப்படிச் சொன்னார்… ‘நீங்கள் சுப்புலட்சுமி அல்ல; சுஸ்வரலட்சுமி.’ 

தொகுப்பு: பாலுசத்யா