மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

  அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

பகிர்வுஓவியங்கள்: ராமமூர்த்தி ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200

பயணிகள் கவனத்துக்கு!

  அனுபவங்கள் பேசுகின்றன!

நான் போன மாதம் பெங்களூரு செல்வதற்காக சென்னை ‘சென்ட்ரல்’ ரயில் நிலையத்துக்கு போய் எனது ரயிலிலும் ஏறிவிட்டேன். பிறகு, என் கணவர் எனக்கு பயணத்தின்போது படிப்பதற்காக சில புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். தமிழ்ப் புத்தகங்கள் இரண்டுடன், ஆங்கில மாத இதழ் வாங்கிக் கொடுத்தார். அந்தப் புத்தகம் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஒட்டியிருந்தது. நான் சிறிது நேரம் கழித்து படிக்கலாம் என்று புத்தகத்தை பிரித்தவுடன் அது நான்கு மாதங்கள் முன்பு வெளி யான புத்தகம் என்று தேதி பார்த்ததும் தெரிந்தது. பயணிகள் ரயில் ஏறும் அவசரத்தில் தேதியை பார்க்க நேரம் இருப்பதில்லை. அதனால் இப்படியும் ஏமாற்றி விடுகிறார் கள். அன்பார்ந்த நண்பர்களே, அடுத்த முறை புத்தகம் வாங்கினால் ஜாக்கிரதையாக தேதியை கவனித்து வாங்கவும்.

- ஆர்.பத்மா, சென்னை

மனைவிக்கு மரியாதை!

  அனுபவங்கள் பேசுகின்றன!

என் தோழியின் தந்தை கட்டட ஒப்பந்தக்காரர். புதிய கட்டடங்கள் கட்டுவது, இடம் வாங்கி அதில் கட்டடம் கட்டி விற்பது அவரது தொழில். தொழிலில் அத்தனை நுணுக்கங்களுமே அவருக்கு தெரிந்திருந்தாலும், எல்லா விஷயங்களையும் முதலில் தோழியின் அம்மாவிடம் தெரிவித்துவிடுவாராம்.எதை வாங்கினாலும், மனைவி பெயரில்தான் பத்திரம் பதிவு செய்வாராம். மணல், ஜல்லி, செங்கல், கம்பி என மூலப் பொருட்களின் விலை நிலவரம், பணப்பட்டுவாடா, தொழிலாளர்களுக்கு சம்பளம் எல்லாமே மனைவியிடமே ஒப்படைத்துவிடுவாராம். இதனால் தொழிலில் எந்த பிரச்சனையும் எழாமல், சீராக செல்வதோடு, தோழியின் அம்மாவுக்கு நிர்வாகத்திறனும் அதிகரித்து விட்டது.‘உனக்கு என்ன வேண்டுமோ என்னிடம் கேள்’ என்ற ஆணாதிக்க அதிகாரப் போக்கு இன்றி மனைவிக்கு சம உரிமையும், மரியாதையும் தரும் அவர் மீது புதிய மரியாதையே வந்துவிட்டது.

- கவிதா ராஜன், மதுரை

அழுகை 70 எம்எம்!

  அனுபவங்கள் பேசுகின்றன!

சினிமாவுக்கு சென்றிருந்தேன். பக்கத்து இருக்கையில் கைக்குழந்தை யுடன் ஒரு பெண்மணி. விளக்குகளை அணைத்து படம் போட ஆரம்பித்ததும், குழந்தை ‘வீல்’ என்று கத்தத் தொடங்கியது. அந்தப் பெண் எவ்ளோ சமாதானப்படுத்தியும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.பக்கத்து இருக்கைக்காரர்கள் முணுமுணுக்க ஆரம்பித்ததும் அந்தப் பெண்ணுக்கு வந்த கோபத்தை பார்க்கணுமே! ``சனியன்! நாள் பூரா இதைக் கட்டிக்கிட்டே அழுவணும். நிம்மதியா ஒரு படம் பார்க்க விடுதா?” என்று திட்டிக்கொண்டே குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேறினாள். இரண்டு மணி நேரத்துக்குள் இப்படியே நாலைந்து முறை வெளியே போய்விட்டு வந்தாள்.விவரம் தெரியாத குழந்தையை தியேட்டருக்கு தூக்கிக்கொண்டு வந்தது. அந்த பெண்ணின் தவறு! தவறை நம் மேல் வைத்துக்கொண்டு குழந்தையை நொந்து என்ன பயன்?குழந்தைகளுக்கு ஓரளவு விவரம் தெரியும் வரை, தியேட்டருக்கு வருவதை தவிருங்கள். குழந்தைக்காக இந்த தியாகம்கூட செய்ய வில்லை என்றால் எப்படி?

- ஆர்.வசந்தி, போளூர்

கொஞ்சம் காத்திருங்கள்!

  அனுபவங்கள் பேசுகின்றன!

எங்கள் குடும்ப நண்பரின் ஆறு வயது மகனுக்கு சரியான காய்ச்சல். தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவனை நன்கு பரிசோதித்த டாக்டர், ஊசி போட்டு மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். டூவீலரில் உட்கார வைத்துக்கொண்டு வந்து, கடை வீதியிலுள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிக்கொண்டிருந்தபோது  கண்கள் மேலே செருக, அப்படியே மயங்கி விழப் போனான் பையன். சட்டெனெ தாங்கிப்பிடித்தவர், மீண்டும் அதே டாக்டரிடம் செல்ல, மாற்று மருந்து கொடுத்ததும் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. உடனே டாக்டரிடம் கொண்டு சென்றதால் பையன் பிழைத்தான். இல்லாவிட்டால் விபரீதமாகியிருக்கும். எப்போதும் ஊசி போட்டால் 15, 20 நிமிடங்கள் ஆஸ்பத்திரிலேயே இருக்க வேண்டும் என்பதை மருத்துவமனையில் இருப்பவர்கள் அறிவுறுத்தலாமே!

- பி.பார்வதி பாலகிருஷ்ணன், நாமக்கல்