சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியம்: செந்தில்

சொல்வனம்

மீன்கள் எங்கே போயிருக்கும்?
முன்பொரு காலத்தில்
மரங்கள் அடர்ந்த பறவைக் கரைகளோடு
இங்கோர் அழகிய ஓடையிருந்ததென்று
நான் காட்டிய இடத்தில்
இன்று கரிய சாலையிருந்தது.
இரண்டு பக்கமும் கடைகள் வழிந்திருந்தன.
`ஓடையென்றால் என்னப்பா?’ என்கிறாள் அம்மு
`வாட்டர் ஸ்டிரீம்’ என்றதும் தலையாட்டுகிறாள்
`எவ்வளவு பெரிய ஓடை அது?’ என்று கேட்கிறாள்
`குழந்தைகள் நீந்துமளவு குட்டி ஓடை’ என்கிறேன்
`அப்ப குட்டிக் குட்டி மீன்களெல்லாம் இருந்திருக்கும்’
அவளாகவே ஒரு முடிவுக்கு வருகிறாள்.
`பெரிய மீன்கள் எல்லாம் எங்கே இருந்துச்சுப்பா?’
`அதோ தெரிகிறதா பேருந்து நிலையம்
அங்கே முன்பொரு தாமரைக் குளமிருந்தது
இந்த ஓடை அங்கே சென்றுதான் கலக்கும்
பெரிய மீன்களெல்லாம் அங்கேதானிருந்தன’
சொல்லிவிட்டு அமைதியாகிறேன்
இப்போது ஓடைக்கரையின் இருமருங்கிலும்
தள்ளுவண்டிகளில் சில்லி ஃபிஷ் விற்கிறார்கள்.
வித் கூலிங் லிட்டர் இருபத்தைந்து ரூபாய்க்கு
பேருந்து நிலையத்தில் தண்ணீர் கிடைக்கிறது.
`அந்த மீன்களெல்லாம் எங்கே போயிருக்கும்?’
கவலையாகக் கேட்கிறாள் அம்மு
முனை திரும்பிவந்து குலுங்கி நிற்கிறது
விடுமுறை முடிந்து நகரம் நோக்கி
நாங்கள் செல்லவிருந்த சொகுசுப் பேருந்து.

- ஷான்

ரோஜாக்களை விற்பவன்
தொன்மங்களின் சாட்சியாக எஞ்சியிருக்கிற
துருப்பிடித்த ட்ரங்க் பெட்டியில்
ரோஜாச் செடிகளை நிரப்பிக்கொண்டு
விற்பனைக்குக் கிளம்பியவன்
வாசல் தெளித்தாற்போல அப்போது பெய்திருந்த
சிறுமழை நனைத்திருந்த வீதிகளின் வழியே
`ரோஸ்... ரோஸ்...' எனக் கூவியபடி செல்கிறான்.
மென்காற்றின் இளவெப்பமென மிதந்த அவன்
குரல் தான் சூட நினைத்து சூடாமல் வந்த ஒற்றை ரோஜாவை
நினைவுபடுத்துகிறது அவளுக்கு.
மற்றொருவனுக்கு அப்பாவின் இறுதியாத்திரையில்
வீசப்பட்ட ரோஜாக்களின் பன்னீர் மணம் கமழ்ந்து
இன்னொரு துக்க கணத்துக்கு இட்டுச் செல்கிறது.
பால்யத்தில் சுவைத்த மென்னிதழ்களின் துவர்ப்பு
வேறொருவனின் நாவில் கசியத் தொடங்குகிறது.
தான் நிராகரித்த ரோஜாக்களின் எண்ணிக்கையை
கணக்கிடத் தொடங்குகிறாள் இன்னொருத்தி.
செடிகள் விற்பனையாகாத விரக்தியில்
அந்த வீதிகளைக் கடந்து செல்கையில்
சற்றே சுரத்தில்லாமல் கசிகிற தேய்ந்த குரல்
அவனறியா ஓர் கணத்தில் எல்லோர் மனதிலும்
ஓர் ரோஜா செடியைப் பதியமிட்டுச் செல்கிறது.

- வே.முத்துக்குமார்

எட்டாம்நாள் ஞாயிற்றுக்கிழமை
வழக்கம்போல் முதலில்
தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவாள் மகள்.
சனிக்கிழமை விளையாட்டுக் களைப்புத் தீர
சற்றுக் கூடுதல் உறக்கம் தேவைப்படும் மகனுக்கு.
வாரம் ஒருமுறை
வெகு அதிகாலையிலே வீடு திரும்பும் நான்
குழந்தைகளின் நடுவில் படுத்துவிடுவேன்.
உறக்கம் கலைந்ததும்
கைகளால் எனைக் கண்டுபிடித்தே கண்திறப்பார்கள்.
அவர்களுக்கு வாரத்தின்
ஏழாம்நாள் ஞாயிற்றுக்கிழமை என்பது
பள்ளிவிடுமுறை நாளாகவும்
எட்டாம்நாள் ஞாயிற்றுக்கிழமை என்பது
அப்பா நான் வீடு திரும்பும் நாளாகவும்
அமைந்துவிடுகிறது.
இந்த வாரத்தில்
எட்டாம்நாள் ஞாயிற்றுக்கிழமை
இல்லையென்பது தெரியாமலே
கைகளால் என்னைத் தேடிக் களைத்து
மீண்டும் தூங்கியிருக்கக்கூடும் இருவரும்.

- ஆண்டன் பெனி