சினிமா
Published:Updated:

உதிரிப்பூக்கள் - சிறுகதை

உதிரிப்பூக்கள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
உதிரிப்பூக்கள் - சிறுகதை

03.11.2016 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...

‘‘மத்தவங்கள்லாம் வரலையா?” - அனுஷா கதவைத் திறந்தவுடன் பிரகாஷ் கேட்டான்.

‘‘மொதல்ல உள்ள வா. எல்லாரும் வர்ற நேரம்தான். வந்ததும் வராததுமா ‘எப்படி இருக்கே’னு கேட்கத் தோணுதா உனக்கு?”

“எப்படி இருக்கே அனு? பார்த்து ரொம்ப நாளாச்சு.”

‘இப்ப கேளு ட்யூப் லைட்... மர மண்டை’ -நினைத்ததைச் சொல்லாமல் அடக்கிக் கொண்டாள்.

அவளை சந்தோஷத்துடன் பார்த்தான் பிரகாஷ். ஜீன்ஸ் பேன்ட் சர்ட்டில் இன்னமும் கல்லூரிப் பெண்போலத்தான் இருந்தாள். நிறம்கூட கல்யாணத்துக்குப் பிறகு இன்னும் மினுமினுப்பாக மாறியிருந்தது. அனுஷாவின் பின்னாலே நடந்து, அவள் சோபாவில் அமர்ந்ததும் அவளுக்கு எதிரே இருந்த ஓர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்தான்.

உதிரிப்பூக்கள் - சிறுகதை
உதிரிப்பூக்கள் - சிறுகதை

பெரிய ஹால். இடது பக்கத்தில் சமையல்கூடம் தெரிந்தது. வலது பக்கம்... படுக்கை அறையாக இருக்க வேண்டும். அனுஷா உட்கார்ந்திருந்த சோபாவுக்குப் பின்னால் பால்கனியும் அதை ஒட்டி ட்ரெட்மில் ஒன்றும் இருந்தது.

‘‘வீடு நல்லாருக்கு. உங்க ஹஸ்பெண்ட் இல்லையா?’’

பிரகாஷ் வீட்டை அளந்து முடிக்கிற வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த அனுஷா ‘‘இல்ல’’ என்றாள்.

மீண்டும் பால்கனி வழியே கடலைப் பார்க்க ஆரம்பித்திருந்த பிரகாஷ், அவள் எதற்காக ‘இல்ல’ என்றாள் என்பதை, அவன் கேட்ட கேள்வியை நினைவுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. வீட்டை ஆச்சர்யமாகப் பார்த்தபடி இருந்தான். நினைவுச் சிதறல்கள்... என்ன பேசுகிறோம் என்பதில் அவனுக்கே பிடிமானம் இல்லை.

``பொண்ணு எங்கே?” என்றான் திடீரென நினைவு வந்த பாவனையில்.

அனுஷா அவனையேதான் பார்த்துக்கொண்டி ருந்தாள்.

‘‘பாட்டி வீட்டுக்குப் போயிருக்கா” என அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு, `வேறு என்னதான் பேசுவான்?’ என அவன் சங்கடங்களை ரசித்தாள்.

`நல்லவனாக இருப்பது நல்லதா?’ என ஓர் ஏடாகூடமான கேள்வி அவளுக்கு உதித்தது. நல்லவனாக இருப்பதில்தான் எவ்வளவு இழப்புகள்? இழப்பு அவனுக்கா... அவளுக்கா? எத்தனை சந்தர்ப்பங்கள்... ஒருமுறையாவது நம்மைப் புரிந்துகொண்டிருக்கலாம் என நினைத்துப்பார்த்தாள். என்ன இந்தக் கடற்கரை வீடும் காரும் இல்லாமல்போயிருக்கும். ஒவ்வொரு அன்புக்குப் பின்னாலும் எத்தனை காரணங்கள் ஒளிந்திருக்கின்றன? காதல், காமம், ஆதாயம், பிரதிபலன் எதுவுமே தேவையிருக்காதா இவனுக்கு? அன்புக்குப் பதிலாக அன்பு மட்டுமேவா, இவன் நல்லவனா... அப்பாவியா, இந்த லட்சணத்தில் `சினிமாவில் சேர்ந்து ஜெயிக்கப்போகிறேன்’ என்ற கனவு வேறு...' 

வெகுநேரமாக மௌனம் மட்டுமே அந்த இடத்தை ஆக்கிரமித்திருப்பதைச் சுதாரித்த நொடியில், சமையல்கட்டைப் பார்த்து, ‘‘லஷ்மி’’ எனக் குரல்கொடுத்தாள். அங்கு இருந்து ஒரு பெண்மணி சொல்லிவைத்ததுபோல, ஒரு பேப்பர் பிளேட்டில் பர்கரையும் தண்ணீரையும் கொண்டுவந்து வைத்துவிட்டு, அடுத்த விநாடியே சமையல் அறைக்குள் மறைந்துவிட்டார். சொல்லிவைத்ததுபோல அல்ல... சொல்லிவைத்தபடி என நினைவைத் திருத்தினான் பிரகாஷ். மூன்றாவதாக இன்னோர் ஆள் இருப்பது, பிரகாஷுக்கு ஏனோ இறுக்கத்தைக் குறைத்தது.

‘‘உங்க வொய்ஃப் எப்படி இருக்காங்க?”

“நல்லாயிருக்காங்க.”

கேள்வி, பதில் இரண்டுமே வெகுசம்பிரதாயமாக இருந்தன. மற்ற நான்கு பேரையும் 12 மணிக்கு வரச் சொன்னவள், பிரகாஷை மட்டும் 11 மணிக்கே வரச் சொன்னது, அவன் அந்த ஒரு மணி நேரத்தில் எப்படி எல்லாம் நினைக்கிறான், தடுமாறுகிறான், சங்கடப்படுகிறான், நெளிகிறான் என ரசிப்பதற்காகத்தானா என, அனுஷாவும் இப்போது அவனை உற்றுப் பார்க்கும்போதுதான் உணர்ந்தாள்.

ந்து பேருமே திரைப்படக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அனுஷா டாக்டருக்கு வாழ்க்கைப்பட்டு சினிமா பார்ப்பதோடு தன் திரைக்கலையை நிறுத்திக்கொண்டவள். பிரகாஷ் இன்னமும் உதவி இயக்குநர் படியில் ஜான் - முழம் என சறுக்குமரம் ஆடிவருபவன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வர இருக்கிற திவ்யாவும் மணியும் விளம்பரப்பட கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். அசோக் ஒரு டி.வி சேனலில் இருக்கிறான்.

‘‘எப்படிப் போகுது வேலை?’’

‘‘டிஸ்கஷன் போய்க்கிட்டிருக்கு. லவ் ஸ்டோரி. இப்ப கொஞ்சம் தெளிவாகிட்டேன். இனிமே மரமண்டையா இருக்க மாட்டேன்.’’

‘‘நான் உன்னை ஹர்ட் பண்ணணும்னு எதையும் சொல்லலை. என்னமோ அந்த நேரத்தில அப்படிப் பொங்கிட்டேன்.''

``நீ சொல்லாமயே இருந்திருக்கலாம்...'' என்றவன், ``நீ சொன்னது ஒருவகையில நல்லதுதான். இப்பல்லாம் நான் கவனமா இருக்கேன். வார்த்தையில் மட்டும் டபுள் மீனிங் இல்லை... வாழ்க்கையிலும் டபுள் மீனிங் இருக்குனு தெரியவெச்சுட்ட.''

``என்னென்னவோ பேசுறே. எனக்குத்தான் ஒண்ணும் புரிய மாட்டேங்குது'' எனப் பொய்யாக அலுத்துக்கொண்டாள் அனுஷா.

``பெருமையா இருக்கு'' என பிரகாஷ் தோளைக் குலுக்கினான்.

``சரி... நீ சினிமாவுக்குப் பண்ணிவெச்சிருக்கிற கதையைச் சொல்லு.’’

சொல்லிச் சொல்லி மனதில் ஒரு திடப்பொருள் போல மாறிவிட்ட அந்தக் கதையின் அவுட் லைனை சில வரிகளில் சொல்ல முனைந்தான் பிரகாஷ்.

‘‘படம் ஒரு கல்யாணத்திலதான் ஸ்டார்ட் ஆகுது. ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருக்குமே விருப்பம் இல்லாத கல்யாணம். குடும்ப வற்புறுத்தலால் கல்யாணம் நடக்கிறது. ஃபர்ஸ்ட் நைட்ல ரெண்டு பேரும் வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்றாங்க. இருவரும் அவரவர் காதல் ஜோடியுடன் இணைய விருப்பமா இருப்பதைத் தெரிவிக்கிறாங்க. குடும்பச் சச்சரவுகள் நீங்கும் வரை ஒரே வீட்டில் இருப் பதாக முடிவெடுக்கிறார்கள். ஜென்டில்மென் அக்ரிமென்ட்.’’

‘‘ `ஜென்டில்’னாலும் `மென்’னாலும் ஒண்ணுதான். ஜென்டில்வுமன் அக்ரிமென்ட்னு சொல்லு.’’

‘‘நல்லாருக்கு. படத்தில யூஸ் பண்ணிக்கிறேன். ரெண்டு பேரும் அவங்க ஜோடியைப் பார்த்தது இல்லை. ஃபேஸ் புக் லவ்வர்ஸ். ஃபேக் ஐடி-யில பழகினவங்க. கடைசியில பார்த்தா...’’

‘‘இவங்கதான் அவங்களா?’’

‘‘அதுக்குள்ள கண்டுபிடிச்சுட்ட... நான் சுருக்கமா சொன்னேன். இன்னும் நிறைய ட்விஸ்ட் இருக்கு.’’

‘‘வேணான்டா... ஒரு நாள் கே-டி.வி பார்த்தவன் கூட இது பழைய கதைன்னு சொல்லிடுவான்.’’

பிரகாஷ் மௌனமாகிவிட்டான்.

‘‘சாரிடா... அன்னைக்கு உன்கிட்ட பேசினதுக்கு சாரி சொல்லத்தான் கூப்பிட்டேன். மறுபடி இன்னொரு தப்பு பண்ணிட்டேன்.’’

‘‘என் நல்லதுக்குத்தான சொல்றே. நான் இன்னும் கொஞ்சம் வொர்க் - அவுட் பண்றேன்.’’

‘‘இல்லை... நான் இன்னைக்கு உங்க எல்லாரையும் கூப்பிட்டதே உன்னைக் கூப்பிடத் தான் பிரகாஷ். உன்னை மட்டும் கூப்பிட்டா வர மாட்டேன்னு தெரியும். அன்னைக்கு ரிசப்ஷன்லயே உன்னைப் பார்க்க முடியலை. நீ என்னை அவாய்டு பண்ற மாதிரி இருந்தது. அதுக்கு சாரி சொல்லத்தான் கூப்பிட்டேன். உன்னைப் பார்த்ததும் மறுபடி பழையபடி பேச ஆரம்பிச்சுட்டேன். ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரிடா.’’

உதிரிப்பூக்கள் - சிறுகதை
உதிரிப்பூக்கள் - சிறுகதை

ஃப்லிம் இன்ஸ்ட்யூட்டில் இவர்கள் ஐந்து பேரும் பென்ச்மேட்டாக இருந்து, குறும்பு டீம் ஆக இருந்து, குறும்பட டீம் ஆகி, அந்த ஆண்டின் சிறந்த படம் என பாலுமகேந்திரா கையால் ஷீல்டு வாங்கி, சினிமா... சினிமா... சினிமா! `சில்ரன் ஆஃப் ஹெவன்’, அமரோஸ் பெரோஸ்’, பெர்க்மென், அகிரா, ழான் ரெனுவார்... பேச்சின் பெரும்பகுதி சினிமா சொற் களாக மாறியிருந்த காலம். அனுஷாவுக்கு அந்தச் சொற்கள் ஒவ்வொன்றாக நினைவுகளில் இருந்து உதிர்ந்துகொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

``ரிசப்ஷன்ல திடீர்னு எங்க போனே நீ?''- அனுஷா கேட்டாள்.

மறக்க முடியாத அந்தத் திருமண ரிசப்ஷனை அனுஷா நினைவுபடுத்தினாள். திவ்யாவுக்கு ரிசப்ஷன் நடந்த அந்தத் திருமண மண்டபத்தில், இதேபோல அனுஷாவும் பிரகாஷும் சற்று முன்னதாகவே வந்துவிட்டால், தனியே அமர்ந்து பேசினர்.

இன்னிசைக் கச்சேரி. ஓர் ஆணும் பெண்ணும் பாடுவது சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. உருக்கமான காதல் பாடல். ‘நீ பார்த்தப் பார்வைக்கொரு நன்றி... நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி.’

‘‘ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் ஒரு காதல் முறிக்கப்படுதுல?” - திடீரென ஆழ்ந்த குரலில் அனுஷா கேட்டாள். அது கேள்விபோல இல்லை. கேள்விக்குறியுடன் ஒட்டிப்பிறந்த பதில்போல இருந்தது.

‘‘ஒரு காதலா... பல காதல்கள். ஆட்டோகிராஃப் பார்த்தல?” - புத்திசாலித்தனமும் நினைவாற்றலும்கூடிய பதிலைச் சொல்லிவிட்டதாக பிரகாஷ் பெருமிதம் காட்டினான்.

‘‘ஆனா நான் யாரையும் லவ் பண்ணவும் இல்ல. என்னையும் யாரும் பண்ண மாட்டாங்க. ஸோ... என் கல்யாணத்தில் எந்தக் காதலும் முறிய வாய்ப்பு இல்லை” எனத் தன்னிரக்கம் பொங்கச் சிரித்தான்.

அந்தப் பாழாய்ப்போன தன்னிரக்கத்தில் ஒரு தெனாவட்டு தெரிந்தது. அதுதான் அனுஷாவை ஆத்திரம் ஊட்டியது. கோபமும் கிண்டலும் கலந்ததொனியில் அனுஷா சொன்னாள்... ‘‘உனக்குக் காதலிக்கவும் தெரியாது. காதலிக்கப்பட்டதும் தெரியாது... மரமண்டை!”

‘‘ஹேய் சும்மா சொல்லாதே. என்னை யார் காதலிப்பாங்க? கறுப்பு, கிராமத்துப் பையன். பைக்... காஸ்ட்லி டிரெஸ் எதுவும் இல்லை.”

“பைக்கும் காஸ்ட்லி டிரெஸ்ஸும் இருந்தாத்தான் காதல் வருமா... என்ன பிரகாஷ் பேசற?

நீ தெரிஞ்சுதான் பேசுறியா, இல்ல...”

யாரோ வந்து கூல்ட்ரிங்ஸ் கொடுத்துவிட்டுப் போனதால் சற்றே இருவரும் பேசுவதைத் தவிர்த்தனர். அவர்கள் இருந்த இடம் அமைதியாக இருந்தது. அனுஷா அந்தச் சில விநாடித் துளிகளில் நிதானத்துக்கு வந்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘‘நிஜமாத்தான் அனு... என்னை யார் காதலிப்பாங்க?’’

‘‘ஒண்ணு சொல்லட்டுமா பிரகாஷ்! காலேஜ்ல இருந்து நாம எல்லோரும் தீவுத்திடல் போயிருந்தப்ப, ஜெயின்ட் வீல்ல சுத்தினமே... அப்ப நான் உன் பக்கத்துலதான் உட்கார்ந்தேன்.”

“ஆமா...”

‘‘உன் கையைக் கெட்டியா புடிச்சுக்கிட்டேன்.”

‘‘நீ செமையா பயந்துட்ட!”

“அடையார் பேக்கரியில லிட்டில் ஹார்ட் வாங்கித் தரச் சொன்னேன்.”

ஜெயின்ட் வீல் சம்பவத்தில் இருந்து திடீரென லிட்டில் ஹார்ட்டுக்கு ஏன் மாறினாள்? எனப் புரியாமல் பிரகாஷ் கொஞ்சம் நிதானித்தான். அவள் வேறு ஏதோ சொல்லவருவது அவனுக்கு உறைத்திருக்க வேண்டும்.

‘‘ஃபேர்வெல்ல உன்கிட்ட மட்டும்தான் ஆட்டோகிராஃப் வாங்கினேன்.”

அவள் பேச்சை உள்வாங்கியபடி அமைதியாக இருந்தான் பிரகாஷ். அவள் சொல்லவருவது அதைத்தானா என அவனால் நம்ப முடியவில்லை. அவள் வாயாலேயே சொல்லட்டும் எனக் காத்திருந்தான்.

‘‘ஷார்ட் ஃப்லிம்ல உனக்கு சிஸ்டரா நடிக்கச் சொன்னப்போ, நான் `வேணாம்’னு சொன்னனே!”

‘‘அனு... நீ என்ன சொல்றே?”

அவளுடைய கண்கள் சிவப்பேறியிருந்தன. எந்த விநாடியிலும் நீர்த்திரளும் ஓர் உணர்ச்சிகர சூழ்நிலை. கண்களில் நீர் தளும்பி நின்றதே தவிர வழியவில்லை.

``நான் உனக்கு ஆட்டோகிராஃப்ல என்ன எழுதியிருந்தேன்னு படிச்சியா நீ! புரிஞ்சுதா உனக்கு?''

வழக்கமான அன்புப் புலம்பல் எனத்தான் நினைத்திருந்தான் அதை.

``நீ ஏன் சொல்லவே இல்ல?'' என ஒரு மோசமான கேள்வியைக் கேட்டான்.

‘‘ஒரு பொண்ணால அவ்வளவுதான் சொல்ல முடியும். நீ ஒரு ட்யூப்லைட். ஆனா, நீ அப்படி இருக்கிறதுதான் எனக்குப் புடிச்சிருந்தது” - ஆக்ஸிஜன் போதாமை ஏற்பட்டு, மூச்சை இழுத்துவிட்டாள்.

இப்போது ரிசப்ஷனில் கொஞ்சம் கூட்டமும் சத்தமும் அதிகரித்தன. உடன்படித்த பலரும் வந்திருந்தனர். ‘எப்படி இருக்கே... என்ன பண்றே?’ விசாரிப்புகள், சிரிப்புகள்... செல்போனில் கிளிக்குகள்...

மணி, ஒரு ஜோக் சொல்வதாக நினைத்து ஒரு உண்மையைச் சொன்னான்.

‘‘சாயங்காலம், ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு ஷட்டில் காக் ஆடக் கிளம்பறவன் இந்தச் சமூகத்துக்கு என்ன சொல்லவர்றான் தெரியுமா? நான் லைஃப்ல செட்டில் ஆகிட்டேன்கிறதைத்தான்.’’

‘‘ஆனந்த விகடன் `வலைபாயுதே’ல போன வாரமே படிச்சுட்டேன்’’ என்றான் அசோக்.

எல்லோர் நடவடிக்கையிலும் கல்லூரியின் உற்சாகத்தை மீட்டெடுக்கிற முயற்சி தெரிந்தது. அது முயற்சி மட்டும்தான் என்பதும் தெரிந்தே இருந்தது.

‘‘என்னடா இப்படி கல்யாணத்தோடு கல்யாணம் மீட் பண்ணா போதுமா? இப்படியே கொஞ்சம் கொஞ்சமா நாம ஒருத்தரை ஒருத்தர் மறந்துடுவோம்டா’’ - அசோக் நிஜமாகவே ஆதங்கப்பட்டான்.

ஒன்றாகவே இருக்கப்போகிறோம் என எல்லா உதிரிப்பூக்களும் நினைக்கின்றன. கோயிலுக்கு, அரசியல் மேடைக்கு, கல்யாணத்துக்கு, சாவுக்கு... ஒரு கொடியின் பூக்கள் இப்படி எங்கு வேண்டுமானாலும் பிரியத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், பிரகாஷுக்கு  அனுஷா ட்யூப் லைட் எனச் சொன்னதிலேயே தங்கிவிட்டது மனசு. நண்பர்களின் எந்த உற்சாகமும் மனதில் ஏறவில்லை.

‘அவ்வளவு மடையனா நான்?’ என பிரகாஷ் நழுவிப்போன சந்தர்ப்பங்களில் இருந்து அனுஷா சொன்ன ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்தான். பளிச்சென விளக்கு போட்டதுபோல எல்லாமே அவனுக்குப் புரிந்தன.

கல்யாணத்தில் களை கூடக்கூட பிரகாஷின் முகம் இருட்டிக்கொண்டிருந்தது நன்றாகவே தெரிந்தது. அவன் யாரிடமும் பேசவில்லை. அவன் ஒதுங்கி, விலகிச் சென்றபடி இருந்தான். அனுஷாவுக்கு இப்போது இதை எதற்குச் சொன்னோம் என இருந்தது. உணர்ச்சி வேகத்தில் தேவையில்லாமல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டோம் என நினைத்தாள். அந்தக் கல்யாண ரிசப்ஷனில் அதன் பிறகு பிரகாஷும் அனுஷாவும் பேசிக்கொள்ளவே இல்லை. மணமக்களோடு புகைப்படம் எடுக்கும் வைபவத்திலும் அனுஷா ஓர் எல்லையிலும் பிரகாஷ் மற்றோர் எல்லையிலும் நின்றனர். சொல்லப்போனால், அதன் பிறகு அவர்கள் விடைபெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது; அல்லது பிரகாஷ் தவிர்த்துவிட்டான்.

பிரகாஷும் அழுதிருக்கிறான் என அனுஷா நினைத்தாள். சொல்லாமலேயே தவிர்த்திருக்கலாம். காதல் ஒருவர் மனதில் மட்டும் இருந்திருந்தால் கால ஓட்டத்தில் எல்லாமே மறைந்து போயிருக்கும்; மாறிப்போயிருக்கும். இரண்டு மனங்களுக்கு ஏற்றிய பிறகு, அது நினைவுச் சிற்பமாக மாறிவிடுவதை அனுஷா உணர்ந்து, பிரகாஷுடம் மன்னிப்பும் கேட்க இருந்த நேரத்தில்... அந்த இடத்தில் பிரகாஷ் இல்லை.

திரில் அமைதியாக உட்கார்திருந்தான் பிரகாஷ்.

‘‘ஏன் யாரும் இன்னும் வரலை?”

‘‘அவங்களை எல்லாம் 12 மணிக்கு வரச் சொன்னேன்.”

ஏறிட்டுப் பார்த்த பிரகாஷின் முகத்தில் ‘ஏன்?’ ஒளிர்ந்து, மறைந்தது. புரிந்தது.

‘‘நான் உன்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது. அந்த நேரத்தில் ஏதோ பேச்சு நேசத்துல சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுடு பிரகாஷ். தான் காதலிக்கப்பட்டதைச் சம்பந்தப்பட்டவர் உணரவே இல்லைங்கிறது அவ்வளவு பெரிய குற்றமா?”
‘‘இல்ல அனு. மிஸ் பண்ணிட்டோமேனு ஒரு வலி மட்டும் இருக்கு.’’

‘‘உன்கிட்ட சொல்லிட்ட பிறகு எனக்கு அந்த வலி இல்லாமப்போயிடுச்சு. வலியை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டேன்போல.’’

பிரகாஷ் ஜீரோ வாட்ஸில் சிரித்தான்.

‘‘டைரக்டர் மகேந்திரன் சொன்னது நினைவிருக்கா? `லைப்ஃல ரெண்டாவது டேக் கிடையாது. எல்லாமே ஒரு டேக்தான்’னு சொன்னாரு’’ - நிதானமாகச் சொன்னான். அவர் அப்படியா சொன்னார் எனக் கேட்க நினைத்தாள். அவர் வேறு ஏதோ சொன்னதாக ஞாபகம். அவர் சொன்னதாக பிரகாஷ் சொன்னதும்கூட நன்றாகத்தான் இருந்தது.

அனுஷா, தலையசைத்தபோது, கண்கள் சிவக்க ஆரம்பித்திருந்தன. அடுத்து பேச வார்த்தைகள் இல்லாத அந்த நேரத்தில் காலிங்பெல் ஒலித்தது. அனுஷா  சென்று கதவைத் திறந்தாள். மொத்த நண்பர்களும் ஆரவாரமாக உள்ளே நுழைந்தனர்.

- தமிழ்மகன்

ஓவியங்கள்: ஸ்யாம்

(03.11.2016 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)