
FOREIGN சரக்கு

அமெரிக்க தேர்தல் ஜுரம் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. மடோனா தொடங்கி சகலரும் கருத்து முத்துகளை உதிர்க்கிறார்கள். அதில் லேட்டஸ்ட் எம்மா வாட்சன். ‘இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. அதை மேலும் முக்கியமானதாக மாற்றும் சக்தி பெண்களிடம்தான் இருக்கிறது. நாம் நினைத்தால் மொத்த தேசத்தையும் காப்பாற்றலாம். எனவே, மறக்காமல் வாக்களியுங்கள்’ என ஃபேஸ்புக்கில் அவர் போட்ட ஸ்டேட்டஸ்களுக்கு லைக்குகள் பிச்சு உதறுகின்றன. இவங்க மனசுல யாரை நினைச்சு சொல்றாங்க, என்ற கேள்வியோடு சுற்றுகிறார்கள் ரசிகர்கள்.#நாடு மாறுனாலும் சீன் மாற மாட்டேங்குதே!

மொத்த ஃபேஷன் உலகமும் `ஆர் யூ ஓகே பேபி?'ங என ஆஸ்திரேலிய மாடலான மிராண்டா கேரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது. காரணம், அவர் வீட்டுக்குள் ஒரு மர்மநபர் அத்துமீறி நுழைய முற்பட்டதுதான். அவனைத் தடுக்க முயன்ற செக்யூரிட்டியை அவன் கத்தியால் குத்த, ரத்த வெள்ளத்திலும் அவனை அடித்து மயக்கமடைய வைத்திருக்கிறார் அந்தக் காவலாளி. இப்போது இருவருமே மருத்துவமனையில். சம்பவம் நடந்தபோது மிராண்டா வீட்டில் இல்லையென்றாலும் இன்னும் ஷாக்கில்தான் இருக்கிறாராம். #பாவம் பேபி!

அழகிகளுக்குள் சர்ச்சை இருக்கலாம், சண்டை இருக்கக் கூடாதென சமாதானம் சொல்லி வருகிறது ஹாலிவுட் உலகம். 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸெல்டா பிட்ஸ்ஜெரால்டின் வாழ்க்கையைத் தழுவி ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் தயாராகின்றன. அவற்றில் முறையே ஸ்கார்லெட் ஜோகன்சன்னும், ஜெனிஃபர் லாரன்ஸும் நடிக்கிறார்கள். இருவரும் கிட்டத்தட்ட ஒரே கதையில் நடிப்பதால் யார் கெத்து என்ற மோதல் எழும் என்கிறது ஹாலிவுட் பட்சி. #யாருக்கு சப்போர்ட் பண்ணலாம்?

பாப் பாடகி ரிஹானாவின் குழுவில் இருந்த ஷெர்லின் என்ற டான்ஸர் திடீரென ஒருநாள் காணாமல் போனார். காவல்துறை கழுகுக்கண்களால் தேடிக்கொண்டிருக்கும்போது, ‘இந்த அழகியைக் காணவில்லை. தகவல் தெரிந்தவர்கள் சொல்லவும். இவள் நலமோடு இருக்க பிராத்தியுங்கள்’ என உருகி உருகி ரிஹானா சோஷியல் மீடியாக்களில் சொல்ல, கைகோத்தார்கள் ரசிகர்கள். விளைவு, ஷெர்லியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். #ரிஹானாடா...!
- ஃபாலோயர்