
குட்டியா ஒரு தோட்டம்!

``செடி வளர்க்குற தொட்டிக்கென கூழாங்கல் தனியா வாங்கிட்டு இருந்தோம். இப்போ தொட்டி செய்யும்போது சலிக்கிறப்ப கிடைக்கிற சின்னச்சின்ன கல்லையே கூழாங்கல்லுக்குப் பதிலா பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். எங்க வீட்டைப் பொறுத்தவரைக்கும் எதுவுமே கழிவு இல்ல. எல்லாத்தையும் முடிஞ்ச அளவுக்கு மறுசுழற்சி செஞ்சு பயன்படுத்திக்கிட்டு இருக்கோம்'' எனச் சொல்லும் மனோகரன், வீட்டுக்குள்ளே வீடுகளில் வளர்க்கும் செடிகளை பகுதி நேரமாக விற்பனை செய்து வரும் ஐ.டி இளைஞர். சென்னையின் ஐ.டி கம்பெனிகள் தாண்டியும் இவரின் குட்டிச்செடிகள் `டைனி'ஸ் கார்டன்' செம பாப்புலர்!

``என்ன பண்றீங்க ப்ரோ?''
``சொந்த ஊரு மதுரை. இப்போ பெங்களூர். சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்க்கிறதுல ரொம்ப இஷ்டம். வீட்டுல சும்மா இருக்குற நேரத்துல கண்ணாடி பாட்டில்கள்ல செடி வளார்த்துக்கிட்டு இருந்தேன். போன வருஷம் மாமா போன் பண்ணி, `இன்ஃபோசிஸ்ல ஒரு நிகழ்ச்சி நடத்துறாங்க. அங்க ஸ்டால் போடுறியா'ன்னு கேட்டாரு. Steller saturdayனு ஒரு நிகழ்ச்சி. என்னோட செடிகளை எல்லாம் கொண்டு போயிருந்தேன். அங்கே வந்தவங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. சரி எல்லாருக்கும் பிடிச்சிருக்கே, இதையே ஏன் சும்மா இருக்கிற நேரத்துல பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சது தான் tinys garden!''

``அதென்ன tinys garden?''
``நான் குட்டையா இருப்பேன். ஸ்கூல்ல எனக்குப் பேரு டைனி. அதுபோக இது வீட்டுக்குள்ள வளர்க்குற செடிகள். இதுவும் நம்மள மாதிரி தானேன்னு டைனி கார்டன்னே பேரு வெச்சுட்டுட்டேன்!''
``வீண்பொருட்கள்ல செய்ற தொட்டிகளுக்கான ஐடியா?''
``ஆரம்பத்துல ஒயின் பாட்டிலை நல்லா சுத்தம் பண்ணி பெயிண்ட் அடிச்சு மூங்கில் செடி வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணி இப்போ பீங்கான் கிளாஸ்ல ஆன கலைப்பொருட்களை தொட்டிகளா பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். பெரும்பாலும் பீங்கான் பொருட்களை வெளில வாங்குவேன். சிமெண்ட் தொட்டிகள் நானே செஞ்சுடுவேன். இது எல்லாத்துக்குமே ஃபேஸ்புக் தான் காரணம். சின்னதா ஒரு போஸ்ட்ல ஆரம்பிச்ச ஒரு விஷயம். அதைப் பார்த்து நண்பர்கள் அவங்களோட நண்பர்களுக்கு ஷேர் பண்ண ஆரம்பிச்சாங்க. எந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவுல கிடைக்கிற நேரத்துல இதைப் பண்ணுறதுல ஆத்ம திருப்தி! நீங்களும் இதைச் செய்யலாம்!''
- ந.புஹாரி ராஜா