Published:Updated:

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1

ஜெயமோகன் , ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1

நாகர்கோவிலில் வசிக்கும் ஜெயமோகன், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். பல சிறுகதைகள்,  10-க்கும் மேற்பட்ட நாவல்கள், சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக்கொண்ட ‘கொற்றவை’ எனப் பல்வேறு நூல்கள் இவருடைய எழுத்தில் வெளிவந்துள்ளன. ‘பனி மனிதன்’ எனும் சுவாரஸ்யமான நாவலை சிறுவர்களுக்காக எழுதியுள்ளார். மகாபாரதத்தை தன் மொழிநடையில் எழுதிவருகிறார். சுட்டி விகடனுக்காக அவர் எழுதும் ‘வெள்ளி நிலம்’ தொடர், உங்களை புதிய உலகத்துக்கு... புதிய எழுத்து அனுபவத்துக்கு அழைத்துச் செல்லப்போவது உறுதி.

மயமலையின் உச்சியில் அமைந்திருந்தது அந்த பௌத்த மடாலயம். மிகவும் பழைமையான கட்டடம். அதன் சுவர்கள் ரத்தச் சிவப்பு நிறமாக இருந்தன. கூம்பு வடிவமான ஓட்டுக் கூரை மேல் சிவப்பும் வெண்ணிறமும் கலந்த கொடிகள் மலைக் காற்றில் பறந்தன. கொடிகளாலான தோரணங்கள், புறாக்களின் சிறகுகள் போலப் படபடத்தன.

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1



அதன் நான்கு பக்கமும் வெண்மை நிறமான பனியால் மூடப்பட்டிருந்த மலையுச்சிகள் அடுக்கடுக்காக நின்றிருந்தன. அவை, வெண்ணிறமான முக்காட்டைப் போட்டுக்கொண்டு குனிந்து அமர்ந்து பிரார்த்தனை செய்யும் துறவிகள் போலத் தோன்றின. மலைகளில் இருந்து கடுங்குளிர் நிறைந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.

காலை 11 மணி இருக்கும். இமயமலைப் பகுதிகளில் கோடை காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கே நன்றாக வெளிச்சம் வந்துவிடும். ஆனாலும், குளிர் நடுக்கி எடுக்கும். அங்குள்ள மக்கள் காலையில் எழும் வழக்கமே இல்லாதவர்கள்.  ஆகவே, கோடை காலத்திலும் 10 மணிக்குத்தான் எழுந்து வேலைகளை ஆரம்பிப்பார்கள்.

11 மணி என்றாலும் நம்மூரில் காலை 7 மணி போல வெயில் சாய்வாக இருந்தது. பௌத்த மடாலயத்தின் பின்பக்கம் ஒரு புதிய கட்டடம் கட்டுவதற்காகக் குழி தோண்டிக்கொண்டிருந் தார்கள். மடாலயத்தின் மையக் கட்டடம் இடிந்து பாதி சரிந்து நின்றிருந்தது. அதன் கதவு, மூடித் தாழிடப்பட்டிருந்தது. அதைத் திறப்பதே இல்லை. புத்தர் சிலை ஒன்றை வெளியே வைத்து அதைத்தான் வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1

இடுப்பு அளவுக்கு குழி தோண்டிவிட்டனர். ஒருவன் உள்ளே நின்று குழியை வெட்டினான். இரண்டு பேர் மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தனர். வேறு இரண்டு பேர் அருகே சும்மா அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒருவன் சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தான். அவன் பெயர் டாவா. அவன் வெளியூரில் இருந்து மடாலயத்தின் கட்டடப் பணிக்காக வந்தவன். அந்த வேலையை அவன்தான் குத்தகைக்கு எடுத்திருந்தான்.

அனைவருமே கனமான நைலான் மேல்சட்டை அணிந்து குல்லாய் வைத்திருந்தனர். கால்களில் பழைய சப்பாத்துக்கள் அணிந்திருந்தனர்.  ஆடைகளும் செருப்புகளும் புழுதி படிந்து மண் நிறமாக இருந்தன.

மலைப் பகுதிகளில் மிகவும் மெதுவாகவே  வேலை செய்வார்கள். அங்கே எதிலுமே அவசரம் இல்லை. அவர்கள் மண் வெட்டும் ஒலி, சூழ்ந்திருந்த மலைகளில் பட்டு பல வகையாக எதிரொலித்தது. மலைகளில் இருந்து எவரோ கைதட்டி அழைப்பது போல் கேட்டது.

குழி தோண்டுபவர்களில் ஒருவன் எதையோ குனிந்து பார்த்தான். கடப்பாரையை சாய்த்து வைத்துவிட்டு குழிக்குள் அமர்ந்து கையால் மண்ணை விலக்கினான்.

“என்ன பார்க்கிறாய்?” என்று கரையில் நின்றிருந்தவன் கேட்டான்.

“ஏதோ காய் இங்கே புதைந்திருக்கிறது” என்று அவன் சொன்னான்.

“காயா? இங்கே ஏது காய்? உருளைக்கல்லாக இருக்கும்” என்றான் மேலே நின்றவன்.

“இல்லை. இது காய்தான். மேலே நார் இருக்கிறது. தேங்காய் போல தெரிகிறது.”

“எடு பார்ப்போம்.”

அவன் குனிந்து நன்றாக மண்ணைத் தோண்டினான். மேலே நின்றவர்கள் அருகே வந்து பார்த்தனர். டாவா அருகே வந்து நின்று நீல நிறமான புகையை ஊதினான். அது காலை வெளிச்சத்தில் ஒளிவிட்டபடி மேகம் போல பிரிந்தது.

“ஆ” என்று உள்ளே நின்றவன் கூச்சலிட்டான்.

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1

“என்னடா?” என்றான் டாவா.

“அய்யோ! அய்யோ!” என்று கீழே நின்றவன் அலறினான். அவன் உடல் நடுங்கியது.

“என்ன ஆயிற்று? சொல்லித் தொலை’’ என்றான் டாவா.

“இது ஒரு மனிதத் தலை! இங்கே ஒருவரை புதைத்திருக்கிறார்கள்’’ என்று உள்ளே நின்றவன் அலறினான்.

இமயமலையின் உச்சியில் உள்ள ஒரு பகுதி ஸ்பிடி சமவெளி. இந்தியாவில் மக்கள் வாழும் நிலப்பகுதிகளில் அதுவே உயரமானது. இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கிறது. ஸ்பிடி சமவெளி திபெத் பீடபூமியைச் சேர்ந்தது. திபெத் உலகத்தின் கூரை என அழைக்கப்படுகிறது. அதுதான் உலகிலேயே உயரமான இடத்தில் உள்ள நாடு. இமயமலை ஒரு நாடு அளவுக்கே பெரியது. அதன் மேற்கு நுனி, பாகிஸ்தானில் இருக்கிறது. வடக்குப் பகுதி சீனாவுக்குள் இருக்கிறது. கிழக்கு நுனி, பர்மா வரைச் சென்றிருக்கிறது. இமயமலைக்கு உள்ளேயே திபெத், நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன. இமயமலையில் ஆயிரக்கணக்கான மலைச்சிகரங்கள் உண்டு. அவற்றில் பெரும்பகுதியை இதுவரை மனிதர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான மலைச்சிகரங்களுக்கு பெயரே இல்லை. இப்போதுதான் அவற்றுக்கு எண்களே இட ஆரம்பித்திருக்கிறார்கள்.

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1

இமயமலையில் மக்கள் வாழும் இடங்கள் மிகமிகக் குறைவு. அங்கே தமிழ்நாடு அளவுக்குப் பெரிய நிலப்பரப்பில் 10,000 பேர்களே இருப்பார்கள். தமிழ்நாட்டில் அதே அளவு நிலப்பகுதியில் 10 கோடிப் பேர்கள் இருப்பார்கள். இமயமலையின் மேல் பகுதியில் மலைகளின் இடுக்குகளில் மட்டும்தான் கொஞ்சம் மரங்கள் இருக்கும். கடுங்குளிரிலும் வளரும் கூம்பு மரங்கள் அவை. அவற்றில் உண்ணத்தகுந்த காய்களோ, கனிகளோ விளைவது இல்லை. எனவே, அங்கே விலங்குகள் மிகக்குறைவு. மலை பெரும்பாலும் மண் நிறத்தில் மொட்டையாக இருக்கும். ஆகவே, இமயமலைப் பகுதிகள் மிக அமைதியானவை. அமைதிக்குப் பழக்கம் இல்லாதவர்கள் போனால், செவி அடைப்பது போல இருக்கும். அங்கே வாழ்பவர்கள் தொன்மையான பழங்குடிகள். குளிர் நிறைந்த இமயமலை மேல் வாழ்வதற்கு ஏற்றமுறையில் அவர்களின் உடலும் கண்களும் இருக்கும். இங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.

மலை மேல் உள்ள பனி, கோடை காலத்தில் உருகி, ஆறுகளாக மாறி கீழே வழிந்து வரும். இவ்வாறு வரும் வழி, மலைகளுக்கு நடுவே ஆழமானப் பள்ளமாக ஆகிவிடும். அங்கே அந்த ஆறுகள் கொண்டுவரும் வண்டல் படிந்து இருக்கும். அந்த வண்டலில் விவசாயம் செய்து மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் கிராமங்கள் அந்த ஆற்றுப்பள்ளத்தை ஒட்டியே அமைந் திருக்கும். அப்படிப்பட்ட ஒரு சிற்றூர்தான் ‘ஸ்கிஜின் ஸ்போ’. ‘ஸ்கிஜின்’ என்றால், திபெத்திய மொழியில் மலையாடு. ‘ஸ்போ’ என்றால், மலைச்சிகரம். ‘ஆடு வாழும் மலைச்சிகரம்’ என்று அந்த ஊருக்குப் பெயர். ஸ்பிடி சமவெளியின் வடகிழக்கே அந்த ஊர் இருந்தது.

அந்த ஊர், அதற்குக் கீழே பள்ளத்தில் ஓடிய ‘ட்மார்’ என்னும் ஆற்றை ஒட்டி மலைச்சரிவில் இருந்தது. திபெத்திய மொழியில் ‘ட்மார்’ என்றால், சிவப்பு. சிவந்த நிறமான வண்டல் கலந்த நீர் ஓடுவதனால் அந்தப் பெயர். அந்த ஊருக்கு நேர் மேலே இருந்த பனிமூடிய மலைச்சிகரம்தான் ஸ்கிஜின் போ. அந்த மலைச்சிகரத்தின் அடியில் இருந்தது தொன்மையான பௌத்த மடாலயம். ‘ஸ்கிஜின் கோன்பா’ என அழைக்கப்பட்ட அந்த மடாலயம்,  1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. 100 வருடங்களுக்கு முன் பூகம்பத்தில் அது இடிந்தது. பின்னர், பாழடைந்துதான் கிடந்தது. சமீப கால மாகத்தான் அதைப் பழுதுபார்க்க ஆரம்பித் திருந்தார்கள்.

கீழே வயல்களில் ஊர்க்காரர்கள் விவசாய வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். பனி உருகும் பருவம் வந்துவிட்டது. ஆகவே,  வயலில் உழுதுப் போடப்பட்டிருந்த  மண்கட்டிகளை பெரிய மரச்சுத்தியலால் அடித்து உடைத்துக் கொண்டிருந்தார்கள்.

கிராமத்தில் இளம் பெண்கள், விறகுகளை கொண்டுவந்து உலர்த்திக்கொண்டிருந்தனர். குளிர்காலத்துக்கு அவர்களுக்கு நிறைய விறகு தேவைப்படும். முதிய பெண்கள், கோதுமை,  சோளம் போன்ற தானியங்களை பாயில் பரப்பி காயவைத்துக்கொண்டிருந்தார்கள். மேலே மடாலயத்தில் கூச்சல்கள் எழுவதைக் கேட்டு அவர்கள் ஓடிச்சென்றார்கள். அந்த ஊரில் எப்போதுமே அமைதிதான் இருக்கும். அதைப்போன்ற கூச்சல் அங்கு எழுவதே இல்லை. ஆகவே, அவர்கள் பதற்றம் அடைந்திருந்தனர்.

ஓடிவந்த ஊர் மக்கள், கூட்டம் கூடி குழிக்குள் எட்டிப் பார்த்தார்கள். குழியைச் சுற்றி முண்டி அடித்தார்கள். மேலும் கூட்டம் வந்துகொண்டிருந்தது. டாவா பதற்றமாக இருந்தான்.  “யாரும் பக்கத்தில் வரக் கூடாது… தள்ளி நில்லுங்கள்” என்று அதட்டினான்.

இரண்டு பேர் குழிக்குள் இருந்து ஒரு மனித உடலை மேலே தூக்கினார்கள். தங்கள் மேல்சட்டையை விரித்து, அதில் அந்த உடலை வைத்து அசைக்காமல் மேலே கொண்டுவந்தார்கள்.  அந்த உடல் மிக மெலிந்து, வயதானவர் என்று பார்த்தாலே தெரிந்தது.

அவர் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார். கைகளை மடியில் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்திருந்தார். தலையில் ஒரு தோல் குல்லாய். உடலில் கம்பளி ஆடையும் கால்களில் கம்பளி செருப்பும் இருந்தன.
“யார் இவர்? யாருக்காவது தெரியுமா?” என்று டாவா கூட்டத்தை நோக்கிக் கேட்டான்.

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1

யாருக்கும் தெரியவில்லை. “இல்லை… எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.

“புதைத்து நாலைந்து நாள்கூட இருக்காது. உடம்பு மட்காமல் இருக்கிறது. ஊரில் யாராவது தொலைந்துவிட்டார்களா?” என்று டாவா கேட்டான்.

“இல்லை. எந்த வயோதிகரும் காணாமல் போகவில்லை” என்றார்கள் ஊர் மக்கள்.

அந்த உடலை எடுத்து கரையில் வைத்தார்கள். புத்தர் அமர்ந்திருப்பதுபோல அந்த உடல் அமர்ந்திருந்தது.

ஊரிலேயே வயது மூத்தவர் ‘சோடாக்’ என்பவர். அவருக்கு 118 வயது. ஆனாலும் மெள்ள மெள்ள நடக்க முடியும். கண்களும் நன்றாகத் தெரியும். காதுதான் கொஞ்சம் மந்தம்.

சோடாக் அப்போதுதான் மெள்ள மெள்ள மேலே ஏறிவந்தார். கண்கள் மேல் கையை வைத்து அந்த உடலைப் பார்த்தார். அவர் தலை ஆடிக்கொண்டே இருந்தது. வலைபோல சுருக்கங்கள் நிறைந்த முகம் சுருங்கி விரிந்தது.

“தாத்தா, இவர் யார் என்று தெரியுமா?” என்றான் டாவா.

“என்ன?” என்று அவர்  கேட்டார். தாடை தொங்கியதனால் வாய் திறந்தே இருந்தது. வாய்க்குள் பற்களே இல்லை. ஒரு துளை மாதிரி இருந்தது. உள்ளே நாக்கு மட்டும் அசைந்தது.

ஒர் இளைஞன் அவர் காதில் உரக்கக் கத்தினான். “தாத்தா, இவர் யார் தெரியுமா? இவர் நம் ஊர்க்காரரா?”

“இதுவா? முட்டாளே. இவர் புத்த பிட்சு. தியானத்தில் அமர்ந்திருக் கிறார்.    கண் தெரியவில்லையா உனக்கு?” என்றார் சோடாக்.

அனைவரும் அப்போது தான் அதை உணர்ந்தார்கள். அந்த உடல் பழங்காலத்து புத்த பிட்சுக்கள் போல உடை அணிந்திருந்தது. அவர்கள் அப்படிப்பட்ட பிட்சுக்களை படங்களில் தான் பார்த்திருந்தார்கள்.

“இன்றைக்கு பிட்சுக்கள் இப்படி உடை அணிவது இல்லையே” என்றான் டாவா.

“ஆமாம். இவர் பழங்காலத்து பிட்சு” என்றார் சோடாக்.

“இந்த மடாலயத்தில் பிட்சுக்கள் இல்லையே. இங்கே பிட்சுக்கள் வந்தே 100 ஆண்டு இருக்குமே? இவர் எப்படி இங்கே வந்தார்?” என்றான் டாவா.

“என்ன?” என்றார் சோடாக், காதில் கையை வைத்தபடி.

இரண்டு இளைஞர்கள் அதை அவர் காதில் உரக்கக் கூவினார்கள்.

“முட்டாள்களே... எதற்குக் கத்துகிறீர்கள்? என்னை செவிடு என்று நினைத்தீர்களா?” என்று சோடாக் சீறினார்.

“மன்னியுங்கள் தாத்தா… சொல்லுங்கள்” என்றான் டாவா.

“அந்த உடலின் ஆடையைத் திறந்து வயிற்றைப் பார்” என்றார் சோடாக்.

டாவா கொஞ்சம் தயங்கியபின் தானே சென்று அந்த உடலை அணுகினான். ஆடையை விலக்கி உள்ளே பார்த்தான்.

 “ஆ!” என அலறியபடி எழுந்துகொண்டான்.

“என்ன? என்ன?” என்றார்கள் மற்றவர்கள்.

“வயிறு கிழித்து தைக்கப்பட்டிருக்கிறது” என்று டாவா நடுங்கியபடி சொன்னான்.

“அடேய் மூடா. அது ஒரு பாடம் செய்யப்பட்ட உடல். நெடுங்காலம் முன்னரே இங்கே அதை புதைத்திருக்கிறார்கள்” என்றார் சோடாக்.

“மம்மியா? பௌத்த மரபில் மம்மிகளை செய்யும் வழக்கம் உண்டா?” என்று டாவா கேட்டான்.

“இறந்தவர்களை முறையாகச் சடங்குகள் செய்து புதைப்பதுதான் பௌத்த மதத்தின் வழக்கம். மிக அபூர்வமாகச் சில பிட்சுக்களை பாடம் செய்து வைப்பார்கள்” என்றார் சோடாக்.

“இந்த மம்மியை புதைத்தது யார்?” என்று டாவா கேட்டான்.

“புதைக்கவில்லை. இங்கே இருந்த மடாலயத்தின் அறையில் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார்கள். 100 வருடங்கள் முன்பு இங்கே ஒரு பூகம்பம் வந்தது. இந்த மடாலயம் பெரும்பாலும் அன்று இடிந்துவிட்டது. அப்போது இந்த பிட்சுவின் உடல் மண்ணுக்குள் சென்றிருக்க வேண்டும்.”

டாவா குனிந்து அந்த உடலை பார்த்தான். “ஆம். பழங்காலத்து பிட்சு. இவர் அணிந்திருக்கும் மாலைகூட பழைமையான கல்மாலை” என்றான்.

“தாத்தா, இந்த மம்மி எத்தனை வருடங்களுக்கு முன் செய்யப்பட்டு இருக்கும்?’’ என்றான் ஓர் இளைஞன்.

‘‘எப்படியும் 500 வருடங்கள் இருக்கும். ஏனென்றால்,  மம்மிகளை உருவாக்கும் வழக்கம் அப்போதுதான் இருந்தது” என்றார் சோடாக்.

“500 வருடங்களா? நம் முன் அமர்ந்திருக்கும் இந்த பிட்சு 500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவரா?” என்று டாவா கூவினான்.

அனைவரும் அந்த பிட்சுவின் உடலையே பயத்துடனும் வியப்புடனும் பார்த்தனர். அவர் கண்மூடி அமர்ந்திருந்தார். வாயில் இரண்டு பற்கள் வெளியே தெரிந்தன. ஆகவே, அவர் புன்னகைப்பது போல இருந்தது.
 
[தொடரும்]

வெள்ளி நிலம் - புதிய தொடர் - 1

மாச்சலப்பிரதேசத்தில் உள்ள ‘ஸ்பிடி’ சமவெளியில் உள்ளது ‘க்யூ’ என்னும் கிராமம். 1975-ம் ஆண்டு இங்கே இருக்கும் பழைமையான பௌத்த மடாலயத்தை சீரமைப்பதற்காகத் தோண்டினார்கள். அப்போது உள்ளே ஒரு பாடம் செய்யப்பட்ட உடல் கிடைத்தது. முதலில், யாரோ ஒருவரைக் கொன்று புதைத்திருப்பதாகவே நினைத்தார்கள். ஆனால், அது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மம்மி என்பது நிரூபணம் ஆயிற்று.

மடாலயக் குறிப்புகளின்படி அந்த பிட்சுவின் பெயர், சாங்கா டென்சிங்.[Sangha Tenzin]. 500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மடாலயத்தில் வாழ்ந்தவர். தியானம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவர் உடலை பாடம் செய்து அங்கே வைத்து வழிபட்டார்கள்.

100 ஆண்டுகளுக்கு முன் பூகம்பத்தில் அந்த மடாலயம் இடிந்தபோது, மம்மி மண்ணுக்குள் சென்றுவிட்டது. ஆனால், கடுங்குளிர்ப் பகுதி என்பதால், மட்காமல் மண்ணுக்குள் இருந்தது. அதை எடுத்து வெளியே கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கிறார்கள். ஆனால், வெளியே எடுத்தபின் மட்க ஆரம்பித்திருக்கிறது.

இன்று கிடைக்கும் பௌத்த மரபைச் சேர்ந்த ஒரே பழங்காலத்து மம்மி இதுதான்.