பொது அறிவு
FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

காயாம்பூவும் இரண்டு பறவைகளும்!

காயாம்பூவும் இரண்டு பறவைகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
காயாம்பூவும் இரண்டு பறவைகளும்!

வெய்யில்

ம்மாவும் அப்பாவும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.  காயம்பூ  தூங்கவில்லை.  நிலவைப் பற்றி இன்று டீச்சர் நடத்திய பாடம் நினைவுக்கு வர, பௌர்ணமி நிலவைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.

காயாம்பூவும் இரண்டு பறவைகளும்!

சத்தம் எழாமல் ஜன்னலைத் திறந்தாள். குளிர்ச்சியான காற்றோடு நிலவைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

‘‘அக்கா... அக்கா’’  என்றொரு குரல்.

ஜன்னல் பக்கம் வரை நீண்டு  இருந்த வேப்ப மரக்கிளையில் ஒரு பறவை அமர்ந்து இருந்தது. காயம்பூவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘பறவைகளால் பேசமுடியாதே... ஒருவேளை கனவாக இருக்குமோ’ என்று தன் கையை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். கனவில்லை நிஜம்தான்.

காயாம்பூவும் இரண்டு பறவைகளும்!

“நீ மைனாதானே?” எனக் கேட்டாள்.

“மைனாங்றது வடமொழிப் பெயர். தமிழில் என்னோட பெயர் ‘நார்த்தாங்குருவி’, இலங்கையில என்னை ‘நாகணவாய்’னு கூப்பிடுவாங்க.”

ஒரு பறவையோடு முதன்முதலாகப் பேசுவது காயாம்பூவுக்கு அளவற்ற உற்சாகத்தைத் தந்தது.

“கிளிதான் பேசும்னு சொல்வாங்க. உன்னால எப்படி பேசமுடியுது?”

“கிளியைவிட நல்லாவே என்னால பேசமுடியும். மேற்கு தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தவங்க நாங்க. முன்பு மனிதர்கள் எங்களோட நெருக்கமா இருந்தாங்க. சாப்பிட தானியங்கள் தருவாங்க. பேசவும் சொல்லித்தருவாங்க. நாங்களும் கத்துக்கிட்டு பேசுவோம். இப்போ  எங்களை யாரும் கவனிக்கிறதே இல்ல. நாங்களும் பேசுறதை நிறுத்திட்டோம்.”

காயாம்பூவும் இரண்டு பறவைகளும்!

நார்த்தாங்குருவியிடம் ‘‘கொஞ்சம் இரு’’ என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் தானியங்களை எடுத்துவந்து சாப்பிடக் கொடுத்தாள் காயாம்பூ. தனது அழகான அலகால் கொத்தி கொத்தித் தின்றது.

“ஏன் உனக்கு நார்த்தாங்குருவின்னு பெயர் வெச்சாங்க?”

“எனது கண்களோட ஓரம் இருக்கிற இந்த மஞ்சளைப் பாரு. நார்த்தம்பழத்தோட சுளையைப் போலவே இருக்கா? அதனாலதான் அந்தப் பெயரை வெச்சாங்க.”

“இந்த நேரத்தில இங்கே என்ன செய்றே?”

“என்னோட நண்பர் ஆந்தையைப் பார்க்க வந்தேன். அது சில வருத்தமான செய்திகளை என்கிட்ட சொல்லுச்சு. அதுக்கு உதவலாம்னு நெனைச்சேன். அதன் பிரச்னையை உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்.”

“அப்படியா?”

“ஆமாம். ஆந்தை ஓர் இரவாடிப் பறவை. இரவு நேரத்துலதான் உணவை வேட்டையாடும். ராத்திரியில மட்டுமே பார்க்கிறதால ஆந்தையைக்  கெட்ட சகுனம்னு நினைக்கிறாங்க. ஆனா, ஆந்தை ரொம்ப நல்ல பறவை.”

காயாம்பூவும் இரண்டு பறவைகளும்!

“எப்படி நல்ல பறவைன்னு சொல்றே?”

“அது மனிதர்களுக்கு நன்மை செய்யுமே தவிர, ஒருபோதும் தீங்கு செய்யாது. வயல்கள், சேமிப்புக் கிடங்குகளில் உணவுத் தானியங்களைச் சேதம் செய்யும் எலிகளைக் வேட்டையாடி, விவசாயிகளுக்கு நன்மைதான் செய்யுது.”

“ஓ... சரி, அதுக்கு என்ன ஆபத்து வந்திருக்கு?’’

“மாந்திரீகச் சடங்குகளுக்கும், மூடநம்பிக்கையான மருத்துவங்களுக்கும் ஆந்தையைக் கொல்றாங்க. திருட்டுச் சந்தைகளில் 10,000 ரூபாய் வரைக்கும் விற்கிறாங்க. ஆந்தைக்் குஞ்சுகளையும்  திருடுறாங்க.”

“அய்யய்யோ... ஆந்தை பாவமாச்சே... இதை  அப்பா அம்மா, நண்பர்கள், டீச்சர்கள் எல்லோரிடமும் சொல்றேன். உனக்கு நிச்சயமாக உதவுவேன். உனக்காக இல்லாமல், உன்னோட நண்பர்களுக்காகவும் நீ பேசுற. நீ ரொம்ப நல்ல பறவை.”

“ரொம்ப நன்றி. ஆந்தைக்கிட்ட இந்த மகிழ்ச்சியான செய்திய பகிர்ந்துக்கணும். நான் கிளம்புறேன். இதுபோல வாய் பேசமுடியாத எவ்வளவோ உயிர்கள் மனிதர்களால் பாதிக்கப்படுது. நீங்க மனசு வெச்சா எங்களைப் போன்றவங்களைக் காப்பாற்ற முடியும்.”

சொல்லிவிட்டு நார்த்தாங்குருவி பறந்து சென்றது. பௌர்ணமி நிலவில் முன்பைவிட வெளிச்சம் கூடியிருந்தது. தூரத்தில் ஓர் ஆந்தையின் உற்சாகமான குரல் ஒலிப்பது கேட்டது. காயாம்பூவுக்கு அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.