மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை

மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை
பிரீமியம் ஸ்டோரி
News
மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை

கே.ஏ.ஜோதிராணி - படம் : அ.குரூஸ்தனம்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை

`ஆடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு…

மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை


பசுமாடும் வயித்துக்கும் மேய்ஞ்சிருக்கு…
இந்த ஆட்டையும் மாட்டையும் மேய்ச்சவன் வயிறு
ஆல எல போல காய்ஞ்சிருக்கு…’

தொகையறாபோலத் தொடங்கும் இந்த வரிகள், பல்லவியாக உருப்பெறும்போது, கே.ஏ.குணசேகரனின் கணீர்க் குரலுக்கு ஈடுகொடுத்து இன்னொரு குரல் ஒலிக்கும். அது, அவர் கையிலிருக்கும் பறை. ஆழமான வரிகள், உருக்கும் குரல், அதிர்வலைகளைக் கிளப்பும் தப்போசை… மூன்றும் ஒன்று சேர்ந்தால் நிகழும் மாயாஜாலம். கே.ஏ.குணசேகரனின் பாடல்கள் அத்தனையையும் உயிர்ப்போடு வைத்திருந்தது அவர் கையில் இருந்த அந்த இசை ஆயுதம்தான். இசைக்கருவி என்பதையும் தாண்டி அதற்கு இன்னொரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் அவருடைய அடையாளம்!

``அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் சாலைகிராமத்துல அழகர்சாமி வாத்தியார்னு ஒரு நாட்டுப்புறக் கலைஞர் இருந்தார். தப்பு, தவில், நாயனம், உடுக்கை அத்தனையையும் வாசிக்கக்கூடிய மாபெரும் இசைக்கலைஞர். அவர் எங்க உறவுக்காரர்… மச்சான் முறை. என் அண்ணன் கே.ஏ.குணசேகரன் அவர்கிட்டதான் தப்படிக்கக் கத்துக்கிட்டாங்க. இரவும் பகலும் அங்கேயே கிடப்பாங்க. ``மாப்ளே… நீ பறையை அடிக்கக் கத்துக்கிட்டா, எல்லா இசையும் தெரிஞ்சுடும்டா. இதுக்குள்ளதான்டா எல்லாம் இருக்கு’னு சொல்லுவாரு அழகர்சாமி வாத்தியார். அமுதசுரபியை நாம பார்த்திருக்க மாட்டோம். கிராமியக் கலைஞர்களுக்கு தப்புதான் அமுதசுரபி.

மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை


அண்ணன் பள்ளிப் பருவத்துலருந்தே பாடுவாங்க. அதுனால இயல்பாகவே தப்பை அடிச்சுக்கிட்டு, காலடி எடுத்துவைக்கும் முறையும் வந்துடுச்சு. `காலடி எடுத்து வைக்கும்’ அந்த முறை தொடர்பா ஆய்வே செஞ்சார். பறை என்பது ஆகர்ஷண சக்தி. தோலிசைக்கருவி, நரம்பிசைக்கருவி, செம்பிசைக்கருவினு வகைப்படுத்திப் பார்த்தா, மனிதர்கள் முதன்முதலாகக் கையால் செய்த கருவி இதுதான். மனிதனின் உழைப்பில் பிறந்த கருவி. இப்போதான் இதை ‘போர்ப் பறை’னு சொல்றோம். ஆனா, அது ‘தொடர்பிசைக்கருவி’னு ஒரு வரலாறு இருக்கு. மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்துல, வேட்டையாடி, மாமிசத்தைச் சாப்பிட்டு மிருகத்தின் தோலை ஒரு பாறையில் போட்டுட்டுப் போறாங்க. சில நாட்கள் கழித்து, வேட்டை முடிஞ்சு அது பக்கத்துல வந்து உட்கார்றாங்க. தட்டிப்பார்த்தா, அதுல இருந்து ஒலி ஏற்படுது. அந்தச் சத்தம் அவங்க இருந்த குன்றுக்கும் அடுத்த மலைக்கும் ஓர் அதிர்வைத் தரக்கூடிய ஒலியாகவும் இருந்திருக்கு. அதனால குகைவாழ், மலைவாழ் மக்கள் ஒரு தொடர்புக் கருவியாகப் பறையை வெச்சுக்கிட்டாங்க.

நாங்க செருப்புப் போட்டு நடக்க முடியாத ஊர்ல பிறந்தோம். நாங்க அடிமைச் சாதியாகப் பார்க்கப்பட்டதும், அடிமைகளாக நடத்தப்பட்டதும் அண்ணனின் `வடு’ என்ற நூலில் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கு. வரப்புல நடக்கவிடாம, பொதுத் தண்ணியைக் குடிக்கவிடாம செஞ்ச சாதியப் பாகுபாடுக்கு அண்ணனும் நானும் ஆளாகியிருக்கோம். நான் இவ்வளவு படிச்சுட்டேன்… முனைவர் பட்டமும் வாங்கிட்டேன். இப்பவும் பலபேர், பக்கத்துல இருக்கும்போது ‘ஜோதிராணி மேடம்’பாங்க. கொஞ்சம் தள்ளிப் போனா, `ஜோதிராணி…’ தூரத்துக்குப் போயிட்டா, ‘அது பற வூட்டுப் புள்ள…’ என்பார்கள். கல்விதான் ஒரு மனிதனை உயரத்துக்குக் கொண்டுபோகும். ஆனா, சாதி எங்களை எந்த உயரத்துக்கு போனாலும் துரத்துது. `ஒரு மனிதனை மனிதனாக வாழவிடவில்லையே…’ என்கிற குரல்தான் அண்ணனின் பறையிலிருந்து உருவான ஒலி.

`பற வூட்டுப் பசங்க…’னு சொல்றப்போ, `ஆமா… நான் பற வூட்டுப் புள்ளைதான்’னு சொல்ற திராணியை இந்தக் கருவி எங்களுக்குத் தந்திருக்கு. பறையைக் கையில் எடுத்ததன் மூலமாக அண்ணன் அதை உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். `பறை என்னுடையது. இந்த மண்ணினுடையது. உலகின் முதல் மனிதன் எவனோ அவனே நான்’கிற அடையாளத்தைச் சொல்வது. அண்ணன் பறையை அடிச்சுக்கிட்டே, `ஆக்காட்டி… ஆக்காட்டி…’ பாடலைப் பாடுவார். கடைசியில `இந்தச் சமூக விலங்கை உடைச்சுக்கிட்டு வரணும்’னு ஒரு வரி வரும். ‘வலையை அறுத்துக்கிட்டு எல்லாரும் போங்க…’னு குருவிகளைப் பார்த்துச் சொல்றது, மனிதர்களுக்குமானதுதான். அதைக் கேட்கும்போதெல்லாம் அழுதிருக்கேன்.  ‘மனுசங்கடா… நாங்க மனுசங்கடா’னு அவர் பாடும்போது நமக்குள்ள உருவாகுற கோபத்துக்கும், ஆற்றாமைக்கும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கைக்கும் எதையும் உவமை சொல்ல முடியாது.   

மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை


அண்ணன் சொல்வாங்க… ‘இவ்வளவு உயர்ந்துட்டோம். மத்தவங்களோட பயோடேட்டாவை யெல்லாம்விட நம்மளோடது இமயமலை மாதிரி உசந்திருக்கு. ஆனாலும் என்னால ஒரு வைஸ்சான்சலராக்கூட ஆக முடியலியே ஜோதி…’ தகுதியைப் பார்க்காத சமூகத்தை, ஒரு அவமானப்பட்ட சமூகமாகத்தான் அண்ணன் பார்த்தாங்க. சொல்தான் வெல்லும்… அதுவே கொல்லும். பறையை ஏந்தி, இந்தச் சமூகத்தை அதிரவைத்த மனிதனாக என் அண்ணனைப் பார்க்கிறேன். அவர் என் அண்ணன் என்பதைவிட மாபெரும் பறையிசைக் கலைஞன். `சாதிய விடுதலைதான் சமூக விடுதலை’ என்று பறைசாற்றியது என் அண்ணன்  ‘கே.ஏ.குணசேகரனின் பறை’ என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.’’

பறை இந்த மண்ணின் அடையாளம்

``நாட்டுப்புறக் கலைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது பறையிசை. சமூக தளத்தில் பறையாட்டம் தீண்டாமை சார்ந்த ஓர் இசையாகத்தான் கருதப்படுகிறது. சாதியப் படிநிலைகளில் கீழாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையோடு மிக நெருக்கமானது பறை. மாட்டுத்தோலை உரிப்பதும், அதைப் பதப்படுத்துவதும், அந்தத் தோலில் இருந்து பறைக்கருவியைச் செய்வதும், அது சார்ந்த பண்பாட்டோடு வாழ்வதும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைமுறையாக இருந்துவருகிறது. பறையிசையைக் கேட்டு மயங்காத நபர்கள் யாரும் இருக்க முடியாது. தானாகத் தலையை ஆட்டச் செய்யக்கூடிய ஈர்ப்பு தன்மை பறைக்கு உண்டு. டாக்டர் கே.ஏ.குணசேகரன் இந்தக் கலையை அதற்குரிய நேர்த்தியோடு, மரபோடு, இலக்கிய நயத்தோடு வாசிக்கக்கூடியவர். பறைக்கான முக்கியத்துவம் கிடைக்குமாறும், அது கவனப்படுத்தப்பட வேண்டிய கலை என்பதை உலகம் முழுவதும் எடுத்துச் சொன்ன ஒரு சமூகப் பொறுப்பு, கடமை உணர்வு அவரிடம் இருந்தது.

அவருக்குப் பறையிசையைக் கற்றுக்கொடுத்த அழகர்சாமி ஒரு பாமரர். அவர் படித்தவர்கள் நிறைந்த அரங்கங்களில் படிக்காத மேதையாக அறிமுகப்படுத்தப்பட்டதற்கு கே.ஏ.குணசேகரனே காரணம். இன்றைக்கும் அச்சத்தோடும் தீண்டாமை உணர்வோடும்தான் பறை பார்க்கப்படுகிறது. அதைத் தொடுவதற்குக்கூட பலரும் விரும்ப மாட்டார்கள். கே.ஏ.குணசேகரன் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தன் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கச் செல்லும்போதுகூட பறையோடுதான் பயணம் செய்திருக்கிறார். கலை வேறு, படிப்பு வேறு, வாழ்க்கை வேறு என வைத்திருக்கும் பேராசிரியர்கள் மத்தியில் ‘கலையாக, கருவியாக, வாழ்க்கையாகவும் நான் இருக்கிறேன்’ என்பதன் அடையாளமாக அவர் இருந்தார். அவரின் பறையிசையின் மூலமாகத்தான் ஒரு கலையை நாம் எப்படிப் பார்க்க வேண்டும், நேசிக்க வேண்டும், வாழ்க்கைக்கு அது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்துகொள்கிறோம். பறை இந்த மண்ணின் அடையாளம் என்பதாக, குச்சியை எடுத்து மண்ணைத் தொட்டுவிட்டு அவர் பறையடிக்கும்போது நம் நாடி நரம்பெல்லாம் துடிக்க ஆரம்பித்துவிடும். சாதி, மதம், இனம் கடந்தது பறையிசை என்பதை அவரின் பறை உணர்த்தியபடியே இருந்தது.’’

- அரங்க மல்லிகா