
இங்கேயும்... இப்போதும்...படம்: உ.கிரண்குமார், வீ.சிவக்குமார், ஏ.சிதம்பரம், தி. ஹரிஹரன்,

ஆசு
“மனதில் காடுள்ள மனிதன் நான். நெகிழ்ச்சியும் பெருமிதமும்தான் என் எழுத்துக்கான அடையாளம். பாசாங்கும் பூடகமும் இல்லாத எளிய மொழியில் என் வாழ்க்கையை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். உண்மை என்ற பெருவெளிச்சத்தின் ஒரு துளியை என் படைப்புகள் பதிவுசெய்துவிட்டால் காலத்தில் நான் முழுமை பெற்றுவிடுவேன்.”
அம்பத்தூர், ஒரகடத்தில் வசிக்கிறார் ஆசு. ஒரு தொழிற்சாலையில் டர்னராக வேலை. ‘ஆறாவது பூதம்’, ‘என்றொரு மௌனம்’, ‘ஈரவாடை’, ‘குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன்’, ‘நேசித்தவனின் வாழ்வுரை’, ‘தீண்டும் காதலின் சொற்கள்’ கவிதைத் தொகுப்புகளையும், ‘அம்மாக்கள் வாழ்ந்த தெரு’, ‘நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்’, ‘கடந்து போகிறவர்களின் திசைகள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். தொழிற்பேட்டை வாழ்க்கையையும், தொழிலாளர்களின் பிரச்னைகளையும் உள்ளடக்கிய நாவல் ஒன்றை எழுதிவருகிறார். ஆ.சுப்பிரமணியன் என்ற இயற்பெயரின் சுருக்கமே ஆசு.
படம்: உ.கிரண்குமார்

ரேவதி முகில்
“வாழ்வின் போதாமையும் அதீதமும் தருவிக்கிற உளச்சிக்கல், அதன் மடிப்புகளில் ஒளிந்து விளையாடிக்கொள்கிற சிறுபிள்ளைத்தனம்... இவையே என் எழுத்து. வீட்டிலும் பணியிடத்திலுமாக அன்றாடங்களில் நிறைந்திருக்கிற பெண்களும் குழந்தைகளும் அதை இன்னும் மெருகேற்றுகிறார்கள். என் இலக்கியத்தில் புனைவென்பது, நான் அனுபவித்த பெண்மையின் வலி. அதனால் அதில் ரத்தவாடை மிகுதியாக இருக்கும்.”

வத்தலக்குண்டைச் சேர்ந்த ரேவதி முகில், திண்டுக்கல் வட்டாரக் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர். வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்கள் மத்தியில் ஊட்டச்சத்து, நலக்கல்வி மற்றும் குழந்தைகளின் முன்பருவக் கல்வி குறித்து களப்பணி புரிகிறார். ஊர்வசி புட்டாலியா, சிரோதிப் மஜூம்தார், கௌதம் குப்தா உள்ளிட்ட பல பிறமொழி ஆளுமைகளின் படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். ‘எலக்ட்ரா’ என்றொரு கவிதை நூலை எழுதியுள்ளார். விரைவில், இவரது சிறுகதைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது.
படம்: வீ.சிவக்குமார்

ஸ்ரீதர கணேசன்
“எல்லா வகையிலும் புறக்கணிப்புகளுக்கு உட்பட்டு, அவமானங்களையும் வேதனைகளையும் வலிகளையும் சுமந்து, வாழ்வின் ஒவ்வொரு கணமும் சுயமரியாதைக்காகப் போராடும் எளிய மனிதன் நான். என்னைப் போன்றவைதான் என் படைப்புகளும். என்னுடைய, என் மக்களுடைய புழங்கு மொழியே என் இலக்கியத்தின் மொழியும். அங்கீகாரக் குறைபாடு உடையவனின் விடுதலை ஓலமாகவே என் படைப்புகளை நான் அடையாளப்படுத்துவேன். அதிகாரத்தால் மறுதலிக்கப்படும் என் மரபுகளையும் சடங்குகளையும் வழிபாடுகளையும் சந்ததிகளையும் ஆவணப்படுத்துவதைத் தவிர வேறெந்த லட்சியமும் எனக்கு இல்லை.”
ஒரு தனியார் தொழிற்பயிற்சிக் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார் ஸ்ரீதர கணேசன், ‘உப்புவயல்’, ‘சந்தி’, ‘வாங்கல்’, ‘அவுரி’, ‘மீசை’, ‘விரிசல்’, ‘சடையன்குளம்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு இவரது சொந்த ஊர். தற்போது, தூத்துக்குடி மக்களின் வாழ்வியலைக் களமாகக்கொண்டு ஒரு நாவல் எழுதிவருகிறார்.
படம்: ஏ.சிதம்பரம்

தம்பிச்சோழன்
“இங்கு உலவும் அத்தனை மனிதர்களும் தங்களுக்கென நிறைய முகமூடிகளை வைத்திருக்கிறார்கள். முகமூடிகளுக்குள் மறைந்திருக்கும் நிஜ முகங்கள் வெவ்வேறு தருணங்களில் தானாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நான் முகமூடிகளை ஊடுருவி, மனிதர்களின் நிஜ முகங்களைக் காணும் முயற்சியையே வாழ்க்கையாகக்கொண்டிருக்கிறேன். என் எழுத்து, என் இயக்கம் எல்லாமே அதைத்தான் முயன்றுகொண்டிருக்கின்றன. கவிதை, கட்டுரை, கதை, எதுவெனினும் அதில் நான் மனிதர்களைத்தான் பொருத்துகிறேன். அது வெவ்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.”

தம்பிச்சோழன், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உச்சனப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கூத்துப்பட்டறையில் நெடுங்காலம் பயிற்சிபெற்ற இவர், தற்போது நடிப்புப் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார். ‘ஆக்டர் ஸோன்’ என்ற நடிப்புப் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறார். சிற்றிதழ் தளத்தில் தீவிரமாக இயங்கும் இவர், உளவியல்தன்மை மிக்க பூடகக் கவிதைகளுக்காகக் கவனிக்கப்படுபவர். தன் அனுபவங்களை உள்ளடக்கி ‘நீங்களும் நடிக்கலாம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். கவிதை நூல் ஒன்று விரைவில் வெளிவரவிருக்கிறது.
படம்: தி. ஹரிஹரன்