
ஓவியங்கள்: மணிவண்ணன்

தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை நூலை முன்வைத்து
கவிதை, கட்டுரை, விமர்சனம் எனத் தொடர்ந்து இயங்கிவரும் தமிழச்சியின் இந்தக் கவிதைத் தொகுப்பு அழகியலாய் நகைக்கிறது, தார்மீகமாய்ச் சீறுகிறது; சில இடங்களில் சிணுங்குகிறது, பிற இடங்களில் ஆவேசம்கொள்கிறது; மரபு - தொன்மங்களுக்குள் ஆழ்ந்து, இக்கணத்துப் பிரக்ஞைத் தெறிப்புக்கு அந்த அவசத்தைக் கொண்டுவந்து சேர்ந்துவிடுகிறது. நெரூடா போல காதலில் கரையவும் செய்கிறது, சிக்கல்களை முன்வைக்கவும் செய்கிறது, இழிவுகளைக் கண்டு காறி உமிழ்கிறது, மேன்மைகளைப் போற்றுகிறது.
‘கம்பளிப்பூச்சிகளாக வந்தவைகளைப் பட்டாம்பூச்சிகளாகத்தானே பறக்கவிட முடியும்?’
என்றொரு படிமம் ஒரு முரண் நிலையை முன்வைத்தால்,

‘விடுதலையின் சிறகுகளை எதில் நெய்தாலென்ன -வானம் கருணைமிக்கது’
என்னும் வரிகள் ஒரு நுட்பத்தைப் பேசுகின்றன.
‘சேர்தலின் ஈரமும் பிரிதலின் உக்கிரமும் வெயிலும் வெயில் சார்ந்த காதலுமே கரிசல்’
எனத் தனது பூமியை அடையாளங்காட்டி, ‘நான் வெயிலுகந்தவள்’ என்று தன் மரபைத் தன்னில் ஏற்றிக்கொள்வது கவிதையின் இயங்குதளத்தை விரிவுபடுத்துகிறது; ஆழங்காணச் செய்கிறது. சமூகம் தன்னைச் சக்கையெனப் பிழிந்து எறிய, தேவாலயப் பிரார்த்தனை இனி உதவாது / மீட்காது எனப் பிரக்ஞை பற்றியெரிய, பட்டன் ரோஸ் செடியைப் பராமரிக்கவே விரும்புகிற ஒருத்தியைப் பார்க்க முடிகிறது. இந்தப் பார்வையின்/அனுபவத்தின் உச்சமாக நாலு வரிகள் பீறிடுகின்றன:
‘கனன்ற சுருட்டணைக்கக் காறித்துப்பினாள் பேச்சிசூல் ரத்தம் பனங்காடெல்லாம்.
மண்டியிட்டுத் தேம்பும் கருப்பனின்கண்ணீரில் கண்மாய் தளும்பத் தொடங்கியது’
இந்தப் பேச்சி இன்றைய கிராமத்திலும் உலவுகிறாள்; நகரின் நடைபாதையிலும் நாறிக்கிடக்கிறாள்; மரபில் சிறுதெய்வமாய் சிம்மசொப்பனம் தருகிறாள். தன் கவிதைக் குரலுக்கு ‘பேச்சி’ என்று பெயரிட்டு, அபலையாய்ப் பலிகொள்ளப்படும் இன்றைய யுவதியின் ஓலத்திலிருந்து பனங்கிழங்கு ருசிக்கும் அன்றைய மூதாட்டி வரை தமிழச்சியால் செறிவாகச் சித்தரிக்க முடிவது ஒரு தனித்தன்மை; தனிச்சிறப்பு. இந்தப் பேச்சி அறிவுத்திறமும், உணர்வுத் தீவிரமும் நிரம்பியவள்.

மதுரைப் பகுதியில் உருக்கொண்டு, வளம் தந்து வந்து, காலப்போக்கில் காணாது போய்விட்ட ‘கிருதுமாலை’ நதி தன் வேதனையைப் பாடலாகப் பாடிவிடுகிறது. கவிதை பாடலாகும்போது பலரிடத்தில் நீர்த்துப்போய்விடும். ஆனால், இங்கே அந்த விபத்து நிகழவில்லை. பார்வையில் கவனக்குவிப்பில் விலகல் இல்லாது, உத்தேசத்தைத் தெளிவுபட முன்வைப்பது நிறைவேறிவிடுகிறது. அதேவேளையில் மிகையுணர்ச்சி விவரிப்பாக ஆகிவிடாமல், ஒரு முரண் நகை அம்சம் சேர்ந்துகொள்கிறது:

‘ஒரு வாட்டி உட்கார்ந்து ரோசிச்சுதூர்வாரிப் போடுங்க -துரைமாரே ஒங்க கட்டையில போற கோப்புகளை’
நெகிழ்வும் ஆறுதலும் தரும் கணங்களை தமிழச்சி விவரிப்பதும் அலாதியானது. அன்பு செண்பகப்பூவென மணப்பதும் கதகதப்பு அத்திப்பழமென ருசிப்பதுமாயிருக்கிறது. அப்போது,
‘நேற்றுப் போலல்லாத நாளையைச் சுமந்தபடி இன்றும் கடந்துபோகலாம்.’
நாட்குறிப்பு வரிகளிலிருந்து நாறிப்போகும் வாழ்வின் உக்கிரம் வரை இக்கவிதைகள் நிறையப் பேசுகின்றன. பேசும் கணம் எதுவாயினும் அதில் செறிவு இருக்கிறது; நுட்பம் சேருகிறது; வாசகனால் தொடர்புபடுத்த முடிகிறது; பங்கேற்க இயலுகிறது; தனக்குரிய கணம் அதுவென்று அடையாளங்கொள்வது சாத்தியமாகிறது.
இந்தப் பேச்சி பெருநகருக்கு வரும்போதான கணம், அத்தகைய கணங்களில் ஒன்றென உறுதியாகக் கூறலாம்:

‘கிடாத்திருக்கை பூசாரியின் அபின் ருசிக்கும் ஆசைக்கு மெட்ரோ ரயில் பாலத்தடியில் கஞ்சா விற்பவனிடம் இரண்டு பொட்டலங்கள் பெற்றுச் சுருக்குப்பையில் பத்திரப்படுத்துகிறாள்.’
அழகியலாக, உணர்வு நெகிழ்வாகப் பேச நிறைய உள்ளன. பேச்சி வாயிலாகப் பெண்ணியக் குரலை முன்வைக்க, தமிழச்சி போன்ற ஒரு சிலரால்தான் முடியும். இந்தக் களத்தில், இந்தத் தீவிரத்தில் விதவிதமான வெளிப்பாடுகளில் தமிழச்சி இயங்குவது தமிழுக்குக் கனபரிமாணம் சேர்க்கும். ஏனெனில், இப்பெண்ணியக் குரல் தொன்மத்தையும் சிறுதெய்வ மரபையும் உள்வாங்கி ‘வெயிலுகந்த அம்மனாய்’ சிரிக்கவல்லது, சீறிப்பாய்வது. அப்போது தெறிக்கும் பிரக்ஞைப் பொறிகள் பற்றிக்கொள்ளும் தணல்கள்தான்...
‘அவளுக்கு வெயில் என்று பெயர்’ என தமிழச்சி கூறுகிறார். ‘அவளுக்கு புன்னகை புரியும் இளவரசி’ என்பது இன்னொரு பெயராகும். கவிதைகளுக்கிடையே இடம்பெற்றிருக்கும் மணிவண்ணனின் ஓவியங்கள் இத்தொகுப்புக்குக் கூடுதல் பரிமாணம் தருகிறது.