மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

வீரயுக நாயகன் வேள் பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள் பாரி ( வீரயுக நாயகன் வேள் பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

குடிலின் தாழ்வாரம் முழுக்க விளக்கின் வெளிச்சம் படர்ந்திருந்தது. பெருங்கலயத்தில் கஞ்சியும் இலையில் சுருட்டப்பட்ட துவையலும் கொண்டுவந்து கொடுத்தாள் அந்தப் பெண். துவையலைத் தொட்டு வழிப்பதற்கு ஏற்ப சுருட்டப்பட்ட இலையை விரித்துவைத்து, கலயத்தை வாங்கிக் குடிக்கத் தொடங்கினார் கபிலர். கஞ்சி தொண்டைக்குள் இறங்கும்போதே குளிர்ச்சி உடல் எங்கும் பரவியது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

புளிப்பேறிய அருஞ்சுவையாக இருந்தது. ‘சுவைத்துச் சிறிது சிறிதாகக் குடிக்கவேண்டும்’ என்று எண்ணிய கபிலர், ஆட்காட்டி விரலால் துவையலை எடுத்து, நடுநாக்கில் வைத்து விரலை எடுப்பதற்குள், அதன் காரம் உச்சந்தலைக்குப் போய் முட்டியது. கண்கள் பிதுங்கின. விழுங்கிய துவையல் தொண்டையில் நின்றது. விழுங்குவதா... துப்புவதா என யோசிக்கும் முன்னர் காரம் சுழன்று பரவிக்கொண்டிருந்தது. கணநேரத்துக்குள் முழுக் கலயத்தையும் வாய்க்குள் கொட்டி முடித்தார். மூச்சு வாங்கியது. நாக்கு, காற்றைத் துழாவியது. சற்றே ஆசுவாசப்பட்டார். கண்கலங்கிய கபிலரைப் பார்த்து, வாய் பொத்திச் சிரித்தாள் அவள்.

தலையை உலுப்பி, காரத்தைக் கீழிறக்கினார் கபிலர். மறுகலயத்தைக் கொடுத்தாள். அணில்வால்தினை கொண்டு காய்ச்சப்பட்ட கஞ்சி.

``புளிப்பிரண்டையை வால்மிளகோடு பிசைந்து செய்யப்பட்ட துவையல்’’ என்றாள்.

கபிலருக்கு இப்போதுதான் நிதானம் வந்தது.

“வால்மிளகு இவ்வளவு காரமாகவா இருக்கும்?” என்று கேட்டார்.

“காரத்துக்குக் காரணம், துவையல் சுருட்டப்​பட்ட மகரவாழையின் கொழுந்து இலைதான். முதல்நாள் இரவே அதில் சுருட்டி வைத்து​விடுவோம், நாள் செல்லச் செல்ல காரம் கட்டி​நிற்கும். இதுவே மூன்றாம் நாளாக இருந்திருந்தால்…” என்று சொல்லி மீண்டும் வாய் பொத்திச் சிரித்தாள்.

கபிலர் சற்றே நிதானமாக மறுகலயத்தை வாங்கிக் குடித்தார். கண்களின் ஓரம் நீர் வழிந்தது. அவள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இடது பக்கமாகத் தலையைத் திருப்பிக்​கொண்டார். துவையலை கண்கள் பார்த்தன. ஆனால், விரல்கள் கிட்ட நெருங்கவில்லை. எரிந்துகொண்டிருக்கும் விளக்கின் இலுப்பை எண்ணெய் வாசனை அவருக்குப் பிடிபட்டது. ஆனால், அந்த விளக்கின் வடிவம்தான் வித்தியாசமாக இருந்தது. இது எதனால் செய்யப்பட்ட விளக்கு என யோசித்துக்​கொண்டிருக்கும்​போது பழக்கத்தில் துவையலை விரல் வழித்து எடுத்துவிட்டது. உடனே அவருக்குப் பொறிதட்டியது. சட்டெனத் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தார். அவளோ வெடித்துச் சிரிக்கத் தயாராக இருந்தாள்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

துவையலை எடுத்த விரலை அவளுக்கு நேரே நீட்டி, “காரமலை என்று இந்த மலைக்கு இதனால்தான் பெயர் வந்ததா?”  எனக் கேட்டார்.

“எனக்குத் தெரியாது” என்றாள் அவள்.

‘ஒருவழியாகச் சமாளித்துவிட்டோம்’ என்று மனதுக்குள் நினைத்தபடி, விரலை இலையின் ஓரத்தில் தேய்த்துவிட்டு, மீதிக்கஞ்சியைக் குடித்து முடித்தார்.

கலயத்தை அவரிடம் வாங்கும்போதும் அவள் முகத்தில் இருந்த சிரிப்பு அடங்கவில்லை.

“நான் உன்னிடம் விளக்கம் கேட்கத்தான் இரண்டாம் முறை துவையலை எடுத்தேன்” என்றார்.

“நான் அதற்காகச் சிரிக்கவில்லை” என்றாள்.

“பின்னர் எதற்குச் சிரிக்கிறாய்?”

“மாலையில் நான் நாவற்பழங்கள் கொண்டு​வந்து கொடுத்தபோது, நீங்கள் முதலில் பூநாவலை எடுத்துத் தின்றீர்களாமே?”

கபிலருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தான் எடுத்துத் தின்ற நாவலுக்கு அதுதான் பெயரா என்றும், அவருக்குத் தெரியவில்லை. மெள்ளத் தலையை ஆட்டி “ஆம்” என்றார்.

அவள் வாய்விட்டுச் சிரித்தபடி, இலையோடு சேர்த்துத் துவையலை மடித்து எடுத்துவிட்டுச் சொன்னாள், “உதிரப்போக்கு நிற்காத பெண்கள்தான் பூநாவலைச் சாப்பிட வேண்டும்.''

பழையனும் நீலனும் மீண்டும் குடிலுக்குள் நுழைய, அவள் சிரித்தபடி வெளியேறினாள்.

“என்ன சொல்லிச் சிரித்துக்கொண்டு போ​கிறாள்” எனக் கேட்டார் பழையன்.

கபிலரோ ‘எதைச் சொல்ல?’ என்ற திகைப்பும் வியப்பும் மிரட்சியும் கலந்தவராக இருந்தார்.

“இவளிடம் பேச்சு கொடுத்தால் மீளமுடியாது, என்னையவே வந்து பார் என்பாள். விருந்தினர் என்பதால் உங்களிடம் சற்று பக்குவமாக நடந்துகொள்கிறாள்” என்றார் பழையன்.

“ஆம்” என்று அவளது பக்குவத்தை ஆமோதிப்பதைத் தவிர, அவருக்கு முன் வேறு எந்த வழியும் இல்லை. காட்டின் இருளுக்குள் இருந்து குளிர்க்காற்று அவ்வப்போது வீசியது. விளக்கு நிலைகொள்ளாமல் ஆடிக்​கொண்டே இருந்தது. மகரவாழையில் இருந்து பேச்சைத் தொடங்கிய கபிலர், நெடுநேரம் பழையனோடு பேசிக்கொண்டிருந்தார். நீலன் அங்கும் இங்குமாகப் போய் வந்தபடி இருந்தான். பகலில் வேட்டைக்குப் போயிருந்த நாய்கள் குடில் திரும்பியிருந்தன. குரைப்பொலி விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. தனது கண் முன்னால் கடந்து​போன ஒரு நாயின் உயரத்தைக் கண்​கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த கபிலரிடம் பழையன் கேட்டார், “பாரியைப் பார்த்துவிட்டு எப்போது திரும்பப் போகிறீர்கள்?”

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

“மழைக்காலம் தொடங்குவதற்குள் கீழிறங்க வேண்டும். எனவே ஒரு மாதம்தான் எனது திட்டம்.”

“அப்படி என்றால் நீங்கள் கொற்றவைக் கூத்தைப் பார்க்கத்தான் வந்திருக்கிறீர்களா?”

“இல்லையே, அப்படி ஒரு கூத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே” என்றார் கபிலர்.

“நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கூத்து இது. பறம்பு நாட்டின் உக்கிரம் ஏறிய விழா. நாடே திரண்டிருக்கும். பழைமையான பாணர் கூட்டம் எந்த நாட்டில் இருந்தாலும் இந்த விழாவில் வந்து பங்கெடுக்கும். நீங்கள் அதைக் கேள்விப்பட்டு வந்திருப்பதாகத்தான் நான் நினைத்தேன்” என்றார் பழையன்.

மறுநாள் அதிகாலை கபிலரை அழைத்துக் கொண்டு பழையன், நீலன் உள்பட பத்துக்கு மேற்பட்டோர் ஆதிமலைக்குப் புறப்​பட்டனர்.

“நேற்று முன்தினம் ஊரே புறப்பட்டுப் போய்விட்டது. உங்களை அழைத்துச் செல்லத்தான் நாங்கள் இருந்தோம்” என்று சொல்லிக்கொண்டே பழையன் முன்நடந்து சென்றார். 

இரண்டு பகல் ஓர் இரவு நீடிக்கும் பயணம் அது. பயணம் முழுவதும் கபிலர் கொற்றவைக் கூத்து பற்றித்தான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே வந்தார்.

மற்றவர்கள் கபிலருக்காக வேகம் குறைத்தே நடந்தனர். ஆனாலும் கபிலரால் ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. நீலன் அவருக்கு அவ்வப்போது உதவிகள் செய்தான். பாதை சில இடங்களில் மிகக் கடினமாக இருந்தது. சிறு பிசகு ஏற்பட்டாலும் பெரும்பள்ளத்தில் விழும் அபாயம் இருந்தது. விலங்குகளின் தடயங்களைப் பார்த்தபடி அனேக இடங்களைக் கடந்தனர்.  யானைக் கூட்டங்கள் கடந்து செல்லட்டும் என்று சில இடங்களில் பொறுத்திருந்தனர். கிழங்குகளைத் தின்றுவிட்டு, சிறுத்தோடும் சுனைநீர் அருந்தினர்.

பின்கோடை காலமாதலால் செடிகொடிகள் சற்றே துவண்டுபோய்க் கிடந்தன. ஆனாலும் தொலைவு செல்லச் செல்ல காட்டின் உள் அடர்த்தி அதிகமானபடியே இருந்தது. எல்லா மரங்களும் கொடிகளைப்போல ஒன்றை ஒன்று பின்னிக்கிடந்தன. நீலனின் வயதொத்த மூன்று `இளைஞர்கள்’ உடன் வந்துகொண்டிருந்தனர்.

நீண்டு திரும்பும் பாறையைக் கைபிடித்து கடக்கும்போது சற்றே கீழ்ப்பக்கம் குனிந்து பார்த்தார் கபிலர். அந்தக் காட்சியின் அற்புதம் பெரும்பரவசத்தை ஏற்படுத்தியது. அது காரமலையின் உச்சிப்பகுதி. பெரும்மலைச்சரிவு காலுக்குக் கீழ் பரந்துகிடக்கிறது. ஒளியின் தகதகப்பில் இலைகள் சுடரேற்ற, காடே தீப நாக்கால் சீழ்கை அடிப்பதைப்போல இருக்கிறது. நின்ற இடம்விட்டு கபிலரின் கால் நகரவில்லை.

“காட்டின் பேரழகுக்கு ஈடில்லை” என்றார் கபிலர்.

“சரி வாருங்கள்” என்று பக்குவமாய் அவரைக் கைபிடித்து அழைத்தபடி நீலன் சொன்னான், “புலியின் மீசைமயிரின் மீது உட்கார்ந்திருக்கும் சிறு தும்பி போலத்தான் நாம்”, நீலன் பேச்சை முடிப்பதற்குள், முன்னால் நடந்துகொண்டிருந்த இளைஞன் சொன்னான், “பாதையில் மட்டும் கவனம்கொள்ளுங்கள், பார்வையை ஓடவிடாதீர்கள்”.

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

‘அப்படி இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனால், இந்த அழகில் கரையவில்லை என்றால் நான் கவிஞனா?’ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டார் கபிலர். உச்சியில் இருந்த குறுகலான பாறையைக் கடந்ததும் காரமலையின் பின்புற இறக்கத்தில் இறங்கத் தொடங்கினர்.

கபிலர் கேட்டார்...

“பறம்பு நாட்டின் தலைநகரான எவ்வியூருக்குச் செல்லும் எல்லா பாதைகளும் இதுபோன்ற ஒற்றையடிப் பாதைகள்தானா அல்லது வண்டிகள் செல்லும் சாலைகள் இருக்கின்றனவா?”

“பறம்பு நாடு நானூறுக்கும் மேற்பட்ட ஊர்களைக்கொண்டது. எல்லா ஊரில் இருந்தும் இதுபோன்ற பாதைகள் உண்டு. இதுதவிர எட்டுத்திசை எல்லைகளுக்கும் குதிரைகள் போய்த் திரும்பும் பாதைகள் உண்டு. அதைக் காவல்வீரர்கள் மட்டுமே அறிவர்” - சொல்லிவிட்டு அவன் நீலனைப் பார்த்ததை கபிலர் கவனித்தார்.

அவன் பேச்சைத் தொடர்ந்தான் “வண்டிச்சாலை ஒன்று உண்டு. வட திசையில் இருக்கும் தண்டலை ஆற்றின் கரை வழியாக அது காரமலைக்கு ஏறுகிறது. ஆனால், மலையின் பாதித்தொலைவில் இருக்கும் பள்ளத்தூர் வரைதான் அந்தச் சாலை இருக்கும். அதன் பிறகு இதுபோன்ற ஒற்றையடிப் பாதைதான்.

கடற்கரையில் இருந்து உப்பு கொண்டுவரும் உமணரின் வண்டிகள் பள்ளத்தூர் வரை வரும். அங்கு வந்து உப்பைக் கொடுத்துவிட்டு, மலைப்​பொருட்களை வாங்கிக்கொண்டு உமணர் திரும்பிவிடுவர். அங்கு இருந்து பறம்பு நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களுக்குமான உப்பை பள்ளத்தூரைச் சேர்ந்தவர்கள் பிரித்துக் கொடுத்துவிடுவர்” என்றான்.

நீலன் குறிக்கிட்டுச் சொன்னான், “வெளியில் இருந்து பறம்பு நாட்டுக்குள் வரும் ஒரே பொருள் உப்பு மட்டும்தான்.”

பேசியபடி நடந்து​கொண்டி​ருக்கும்போது மரங்களின் மீது பறவைகள் படபடத்துக் கலைவது​போல் இருந்தது. மனிதச் சத்தத்தைக் கேட்டு அவை கலைகின்றன என்று நினைத்​தார்கள். அடுத்த சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் பறவைகள் கத்தத் தொடங்கின. ஒன்று இரண்டு பறவைகளின் சத்தம்தான் முதலில் கேட்டது, கணநேரத்துக்குள் மொத்தப் பறவைகளும் காது கிழிவதைப்​போல, `க்கீ… க்கீ…க்கீ…’ எனக் கத்தி, இங்கும் அங்கும் அலைமோதின. மரக்கொப்புகள் மோதி இலைகள் சிதறி உதிர்ந்தன. மேலே என்ன நடக்கிறது என்று தெரியாமல், மரக்கொப்புகளை அண்ணாந்து பார்த்தபடி அவர்கள் இருந்தனர். கொப்புக்குள் பறவைகள் அம்பைப்போல காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தன. பெரும்பருந்து ஒன்று இவர்களின் தலையை உரசிக்கொண்டு போனது. கூட்டம் மொத்தமும் என்ன எனத் தெரி​யாமல் முழித்தபோது, திடீரென பழையன் பெரும்குரலெடுத்துக் கத்தினார்...

“காக்காவிரிச்சிடா...”

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

மொத்தக் கூட்டமும் கண்ணிமைக்கும் நேரத்தில் சிதறி பாறைகளின் ஓரம் விழுந்து சரிந்தனர். கரும்பாறையை ஒட்டி கீழே சரிந்து, பாறையோடு பாறையாக ஒண்டினான் நீலன். மற்றவர்கள் இங்கும் அங்குமாக இடுக்குகளில் புதைந்தனர். பாறையின் இடுக்கில் இருந்த நீலன் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். கபிலர் தன்னந்​தனியாக நின்று​கொண்டிருந்தார். அவருக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. மின்னல் வேகத்தில் கபிலரின் மீது பாய்ந்தான் நீலன். அவர் நிலைகுலைந்து மண்ணில் சரிந்தார். அவரைக் கீழே போட்டு அமுக்கியபடி கிடந்த நீலன், தலையை மட்டும் தூக்கி மேலே பார்த்தான். பறவைகளின் வேகம் மொத்த மரத்தையும் உலுக்கிக்கொண்டிருந்தது. `க்கீ... க்கீ...க்கீ…’ எனக் காடே நடுங்குவதுபோல் ஓசை வந்துகொண்டிருந்தது. புதருக்குள் இருந்த ஒரு பெரும்விலங்கு தாவி வெளியேறியது. பாறை ஓரத்தில் இருந்த மற்ற இரு இளைஞர்களும் நீலனை நோக்கிப் பாய்ந்து புரண்டனர். மண்ணில் சரிந்து குத்தீட்டிகளைக் கையில் பிடித்தபடி அண்ணாந்து மரத்தைப் பார்த்தனர். 

அவர்களின் கண்கள் அலைமோதின. அவர்கள் யாராலும் காக்காவிரிச்சியைப் பார்க்க முடியவில்லை. பாறை​யோடு பாறையாகக் குத்தவைத்தபடி அமர்ந்திருந்த பழையனின் கண்கள் மட்டும், அதைத் துல்லியமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. நின்று நிதானமாக அது வேட்டையாடியது. அங்கும் இங்குமாகப் பறவைகளின் உடல் துண்டுதுண்டாகச் சிதறின. ஒரு பெரும்பருந்தின் தலையை, வாள்கொண்டு சீவுவதைப்போல அதன் கூர்மூக்கால் வெட்டி எறிவதை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டி​ருந்தார் பழையன். துடிக்கும் அதன் கழுத்துக்குள் காக்காவிரிச்சியின் அலகு இருந்தது. அதன் இறக்கைகள் மெள்ள அசைய, காற்றில் பறந்த​படியே அது பருந்தின் ரத்தத்தைக் குடித்துக்கொண்டே சென்றது.  

நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கிழவனின் குரல் வெளியே கேட்டது.

“போயிருச்சுடா...”

கீழே கிடந்தவர்கள் மெள்ள எழுந்தார்கள். கிழவன் பார்த்த திசைநோக்கிப் பார்த்தபடி இருந்தன மற்றவர்களின் கண்கள். ஆனால், அவர்கள் கிடந்த இடத்தில் இருந்து அதைப் பார்க்க முடியவில்லை. மரங்களின் அசைவுகளும் பறவைகளின் ஓசையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின.

கபிலர் கையை ஊன்றி மெள்ள எழுந்தார். உடம்பு எங்கும் சிராய்ப்புகள். பாறை ஓரத்திலும் செடிகளுக்குள்ளும் பதுங்கிக் கிடந்தவர்கள் எழுந்து வந்தனர். அவர்களின் கண்கள் இங்கும் அங்குமாக அலைமோதிக்கொண்டுதான் இருந்தன. அது கொன்றுபோட்ட பருந்தின் உடல், சரிவில் இருந்த செடிகளுக்குள் கிடந்தது. ஒருவன் அதை எட்டிப்பார்க்க முயன்றான்.

“அதைப் பார்க்க வேண்டாம்” என்று கத்தினார் பழையன்.

அவன் திரும்பிவிட்டான். கிளைகளின் ஆட்டம் நிற்கவில்லை. பழுத்த இலைகள் உதிர்ந்துகொண்டே இருந்தன.

கபிலர் கேட்டார் “என்ன பெயர் சொன்னீர்​கள்?”

பழையன் சொன்னார், “காக்காவிரிச்சி. வெளவால் இனத்தைச் சேர்ந்த ரத்தம் குடிக்கும் பறவை.”

“இதைக் கேள்விதான்பட்டிருக்கிறேன். இன்றுதான் இதன் தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனாலும் அதைப் பார்க்க முடியவில்லை” என்றான் நீலன்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

“அது மரங்களில் இருக்கும் சிறுபறவைகளை வேட்டையாடாது. பாறைகளின் பொந்துகளில் இருக்கும் பருந்து இனங்களைத்தான் வேட்டையாடும். பருந்துகள் வானில் பறந்து இதனிடம் இருந்து தப்பிக்க முடியாது.  அதனால்தான் இந்தப் பருந்து மரங்களுக்குள் நுழைந்து தப்பிக்க இங்கும் அங்குமாக அலை​மோதியது. பருந்தின் இந்தக் கூச்சலால் மற்ற பறவைகள் எல்லாம் அலறியடித்தன. இனி உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் ஏற்பட்டால் மரங்களைப் பார்க்காதீர்கள். பக்கத்தில் இருக்கும் மலைப்பாறைகளை அண்ணாந்து பாருங்கள். பருந்தோ, கழுகோ சிதறிப் பறந்தால் அது காக்கா​விரிச்சி​தான் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று இளைஞர்களுக்குக் குறிப்பு சொன்னார் பழையன்.

“இதற்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்​கிறீர்களா?” என்று பழையனைப் பார்த்துக் கேட்டார் கபிலர்.

“பார்த்திருக்கிறேன். கைக்கெட்டும் தொலைவில் உட்கார்ந்திருந்த என் மனைவியின் பிடறியை தனது அலகால் தட்டிவிட்டுப் பறந்தது. பின்மண்டையில் இருந்து ரத்தம் பீறிட அவள் என் உள்ளங்கையில் சரிந்தபடி செத்துப்​போனாள்.”

அதன் பிறகு யாரும் பேசிக்கொள்ளவில்லை. கால்கள் மட்டும் நடந்துகொண்டிருந்தன. ஊர் பழைச்சியின் அறுந்த பின்மண்டை நரம்பு நீலனுக்கு ஞாபகம் இருந்தது.

அப்போது அவன் மிகச் சிறுவனாக இருந்தான். ஆனாலும் பழையன் அழுத கண்ணீர் அவனுள் வற்றாமல் தேங்கியிருந்தது.

நீண்ட நேரத்துக்குப் பிறகு மெளனம் கலைத்து பழையன் சொன்னார், “கொற்றவை விழாவுக்கு முன்னர் பறவைகளின் ரத்தம் காற்றில் தூவப்படுவது நல்ல நிமித்தம்.”

பள்ளத்தில் சரிந்துகொண்டிருக்கும் மனிதனின் கையில் அகப்படும் கொப்புபோல இருந்தது இந்த வார்த்தை. தீமையைக் கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு. வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை. மனிதன் முதிரும்போதுதான் மனங்களைக் கையாளக் கற்றுக்கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழவைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்து கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் மிக முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்ய முடியும். அதிர்ச்சி குலையாமல் இருக்கும் இந்தக் கணத்தில் பழையனின் வார்த்தைகள், அடர் காட்டுக்குள் துணிந்து கால்களை முன்நகர்த்தும் மனதைரியத்தைக் கொடுத்தன. 

ஆனாலும் தயக்கத்தை உடைக்கவேண்டி யிருந்தது. யார் முகத்தையும் பார்த்து பழையன் இந்த முடிவுக்கு வரவில்லை. உறைந்த மெளனமே எல்லாவற்றையும் சொன்னது. பின்திரும்பாமலே பழையன் சொன்னார்...
“மின்னலைப்போல வாளை வீசி காக்காவிரிச்சியின் இறக்கைகளை வெட்டித் தள்ளியவன் வேள்பாரி.”

வார்த்தைகள், முதுகுத்தண்டை முறுக்கேற்றும் வல்லமைகொண்டவை என்பதை கபிலர் உணர்ந்த தருணம் அது. உள்ளுக்குள் உறைந்து கிடந்த அதிர்ச்சியை கிழவன் பொடிப்பொடியாக் கினான். எல்லோருக்குள்ளும் ஆவேசமிக்க ஆர்வத்தைத் தூண்டினான். பாரி வாள் சுழற்றிய கணத்தில் சரிந்த காக்காவிரிச்சியின் இடப்புற இறக்கையைப் பற்றி, காதுநரம்பு விடைக்கச் சொல்லிக்கொண்டு நடந்தான் பழையன். கபிலரின் கண்களுக்கு முன்னர் ஒரு வீரக் கதை அரங்கேறிக்கொண்டிருந்தது. 

- பாரி வருவான்...