
ஜெயமோகன் , ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ‘ஸ்கிஜின் ஸ்போ’ என்ற மலைக் கிராமத்தில் இருக்கும் பழைமையான மடாலயத்தில் பள்ளம் தோண்டும்போது, 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடல் கண்டெடுக்கப்படுகிறது. பிறகு...
ஸ்பிட்டி சமவெளியில் மம்மி கண்டெடுக்கப்பட்ட ‘ஸ்கிஜின் ஸ்போ’ என்னும் ஊரிலேயே வயதானவர் சோடாக். தன் பேரக்குழந்தைகளுடன் அவர் வாழ்ந்தார். அவருடையது ஒரு மிகச்சிறிய தகர வீடு. அதில் மிகச்சிறிய ஓர் அறை அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

சோடாக் இரவு மட்டும்தான் அந்த அறைக்குள் இருப்பார். பகல் முழுக்க வீட்டுக்கு வெளியே முற்றத்தின் எல்லையில் இருந்த மரத்தின் அடியில், கல்லில் அமர்ந்திருப்பார். சுருக்கங்கள் விழுந்த முகத்தை மேலும் சுருக்கி தொலைவில் தெரியும் மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டிருப்பார்.
அவரிடம் அதிகமாக எவரும் பேசுவது இல்லை. மரியாதையுடன் தலைவணங்கி கடந்து செல்வார்கள். அவர்களை வாழ்த்தி ஓரிரு சொற்கள் சொல்வார். அவருக்கு எப்போதும் துணையாக இருந்தது ஒரு நாய். அதன் பெயர், நாக்போ.
ஸ்கிஜின் கான்போ மடாலயத்தைப் பார்க்கவந்த ஒரு வெள்ளைக்காரி வைத்திருந்த நாய்க்குட்டி அது. லாப்ரடார் ரெட்ரீவர் இனத்து நாய். கறுப்பாக கரடிபோல இருக்கும்.
அன்று அந்த நாய்க்குட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதை கொண்டுபோக முடியாது. ஆகவே, அவள் அதை சோடாக்கிடமே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
கறுப்பானது என்ற அர்த்தத்தில் அதற்கு நாக்போ என்று சோடாக் பெயரிட்டார். குட்டியாக இருந்தபோது அதற்கு பாலும் இறைச்சியும் கொடுத்து வளர்த்தார்.

நாக்போ சீக்கிரத்திலேயே பெரிதாகிவிட்டது. பகலில் நாக்போ கிராமத்தின் கீழே ஓடிய ‘டுமார்’ ஆற்றின் கரைக்குச் சென்று வேட்டையாடும். அங்குள்ள சிறிய கீரிகள், எலிகள் போன்றவற்றை பிடித்து சாப்பிடும். எஞ்சிய நேரம் முழுக்க அது சோடாக்கின் அருகிலேயே அமர்ந்திருக்கும்.
சோடாக் அதனிடம் பேசிக்கொண்டே இருப்பார். லாப்ரடார் வகை நாய்களின் இரு கண்களும் மனிதர்களைப் போல முகத்தின் முன்பக்கம் இருக்கும். ஆகவே, நாம் பேசும்போது அது புரிந்துகொள்வது போலவே தோன்றும்.
சோடாக் தன் வாழ்க்கையைப் பற்றி நாக்போவிடம் சொல்வார். நாக்போ சிறிது நேரம் கேட்டுவிட்டு அவர் பக்கத்திலேயே படுத்து தூங்கிவிடும்.
ஸ்கிஜின் கான்போ மடாலயத்தில் மம்மி கண்டெடுக்கப்பட்டபோது நாக்போ, டுமார் ஆற்றின் கரையில் இருந்தது. அப்போதுதான் அந்தக் கூச்சலைக் கேட்டது.
நாக்போ மேடு ஏறி, ஸ்கிஜின் கான்போ ஊரில் வந்து, என்ன நிகழ்கிறது என்று பார்த்தது. அங்கு எவருமே இல்லை என்று கண்டதும் அறைக்குள் சென்று சோடாக் எங்கே என்று தேடியது.

சோடாகின் காலடித்தடத்தை முகர்ந்து பார்த்தபடி, ஸ்கிஜின் கான்போ மடாலயத்துக்கு வந்தது. மக்கள் நடுவே மம்மி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் பயந்துபோய் குரைக்க ஆரம்பித்தது.
சோடாக், “வாயை மூடு” என்று அதட்டினார்.
நாக்கால் முனகியபடி, காலால் மண்ணைப் பிறாண்டியபடி மீண்டும் குரைத்தது.
“வாயை மூடு” என்றார் சோடாக்.
“அது பயந்துபோய்விட்டது” என்றார் டாவா.
சிறிது நேரம் குரைத்துவிட்டு சலிப்புடன் சற்றுத் தொலைவில் போய் அமர்ந்தது. அங்கு முனகிக்கொண்டு கால்மாற்றி அமர்ந்தது.
அந்த மம்மியில் இருந்து வந்த மணம் அதற்கு பிடிக்கவில்லை. உலர்ந்த பிராணிகளின் மணம் பலவிதமான மருந்துகளின் மணத்துடன் கலந்திருந்தது.
நாக்போ மறுபடியும் மேலே போனது. வட்டமாக நின்றிருந்த இருவரின் கால்களின் நடுவில் தலையைப் போட்டு மம்மியைப் பார்த்தது. புன்னகையுடன் அமர்ந்திருந்த பிக்ஷுவை அதற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘இவர்கள் யாரும் இல்லையென்றால் நான் இவனைக் கடிப்பேன்' என்று சொல்லிக்கொண்டது.
நாக்போ மீண்டும் சோடாக்கை கவ்வி அழைத்தது. சோடாக் எரிச்சலுடன், ‘‘போ போ” என்று திட்டினார்.
நாக்போ மனம் புண்பட்டது. ஆகவே, அது திரும்பி கீழே இறங்கிவந்து, ஸ்கிஜின் ஸ்போ கிராமத்தை அடைந்தது. அங்கே தலையை தரையில் வைத்து சோர்வாகப் படுத்துக்கொண்டது.
டாவா ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று பக்கத்தில் இருந்த மலைக்கு மேல் ஏறினான். அங்குதான் செல்பேசியின் அலைத்தொடர்பு கிடைக்கும். அங்கிருந்தபடியே தன் முதலாளியிடம் பேசினான். அவர், அந்த மம்மியை மடாலயத்தின் அருகே இருந்த சிறிய கொட்டகைக்குள் மூடிவைக்கச் சொன்னார். மறுநாளே அரசாங்கத்துக்குத் தகவல் சொல்லிவிடலாம் என்றார். அதுவரை ஊராரே பார்த்துக்கொள்ளட்டும் என்றார்.
டாவா திரும்பிவந்தான். அவன் ஆட்கள் அந்த மம்மியைத் தூக்கிக்கொண்டுச் சென்று, இடிந்துச்சரிந்து இருந்த மடாலயத்தின் அருகே இருந்த சிறிய கொட்டகைக்குள் வைத்தனர். கதவை இழுத்து மூடினர். பின்னர், அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.
மம்மியைப் பற்றி பலவகையான ஊகங்களைப் பேசியபடி ஊர்மக்கள் கலைந்து சென்றார்கள்.
சோடாக் திரும்பி வந்தது நாக்போவுக்குப் பிடித்திருந்தது. சோடாக்கை பலவிதமாக முகர்ந்து பார்த்து, மம்மியின் வாசனை அவரிடம் இல்லை என்பதை அது உறுதிபடுத்திக்கொண்டது.
“என்ன பயப்படுகிறாய்?” என்று சோடாக் கேட்டார்.
நாக்போ, ‘மங்... மங்’ என முனகி, காலால் தரையைப் பிறாண்டியது.
ஸ்கிஜின் ஸ்போ கிராமத்தில் காலையில் சூரியன் மிகவும் பிந்திதான் வரும். மாலையில் மிகவும் முன்னதாகவே அணைந்துவிடும். ஏனென்றால், ஊரின் கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு பெரிய மலைச்சிகரங்கள் இருந்தன.
இருட்டியதும் சோடாக் தன் அறைக்குள் சென்று தரையில் சப்பணமிட்டு அமர்ந்து, மடிமீது கம்பளியைப்போட்டு மூடிக்கொண்டார். அவருடைய கொள்ளுப் பேத்தி சோளத்தாலான இரண்டு சப்பாத்திகளையும், பெரும்பயறால் சமைத்த கூட்டையும் கொண்டுவந்து வைத்தாள்.
சோடாக் சாப்பிட்டுவிட்டு பாத்திரத்தை நன்றாக துடைத்து பரணில் வைத்தார். அவருடைய இன்னொரு பேத்தி, இரும்பு வாணலியில் அனல் நிறைத்துக்கொண்டு அறைக்குள் வைத்தாள்.
சோடாக், நாக்போவின் தலையை வருடி, ‘‘நன்றாகத் தூங்கு” என்று சொன்னார்.
நாக்போ வாலை ஆட்டி, ‘சரி’ என்றது.
சோடாக் கதவை மூடிவிட்டு கட்டிலில் படுத்தார். கம்பளியை எடுத்து உடலில் போர்த்திக்கொண்டு, அதன் மேல் போர்த்திக்கொள்ளும் மெத்தையையும் போட்டுக்கொண்டார். புத்தரை வணங்கிவிட்டு பனிமலைகளை நினைத்துக்கொண்டார். அப்படியே தூங்கிப்போய்விட்டார்.
வெளியே நாக்போ படுத்திருந்தது. மிகக் கடுமையான குளிர். நாக்போ குளிரை நன்றாகத் தாங்கும். அதன் உடம்பில் அடர்த்தியான கரிய முடி இருந்தது. தோலுக்கு உள்ளே கனமான கொழுப்பு படலமும் உண்டு. அந்தக் கொழுப்பு படலம், வெளியில் இருந்து குளிரை உள்ளே விடாமல் பார்த்துக்கொள்ளும்.
நாக்போ இரவுகளில் ஆழ்ந்து தூங்குவது இல்லை. எப்படித் தூங்கினாலும் மணங்களை அறிந்துகொள்ளும். சத்தங்களை அதன் காதுகள் கேட்டுகொண்டிருக்கும். ஆகவே, தூக்கத்தில் காதுகள் அசையும்; மூக்கு சுருங்கி விரியும்.
பழக்கம் இல்லாத ஏதோ சத்தத்தைக் கேட்டு எழுந்த நாக்போ, ஸ்கிஜின் கான்போ மடாலயத்தை நோக்கி நான்கு பேர் நிழல் போலப் போவதைப் பார்த்தது. அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று அதற்குத் தெரிந்தது. கதவைப் பிறாண்டி குரைக்கத் தொடங்கியது.
தூங்கிக்கொண்டிருந்த சோடாக் கோபத்துடன், ‘‘கத்தாதே” என்று சொன்னார். ஆனால், நாக்போ மீண்டும் கதவை முட்டி உரத்த ஓசையில் குரைத்தது.
சோடாக் எழுந்து, ‘‘ஏன் குரைக்கிறது?” என்று கேட்டுக்கொண்டார். தன்னுடைய கனமான கம்பளி கோட்டை எடுத்து அணிந்து, அதில் பித்தான்களுக்குப் பதிலாக கயிறுகளை கட்டிக்கொண்டார். தடித்த சப்பாத்துக்களை மாட்டிக்கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தார்.
கடும் குளிர் அந்த உடைகளையும் தாண்டிவந்து அவரை நடுங்க வைத்தது. நாக்போ அவரது காலை முட்டியபடியும் வாலைச் சுழற்றியபடியும் முன்னால் ஓடியது. ‘‘எங்கு செல்கிறாய்?” என்றார் சோடாக்.
முன்னால் ஓடிவிட்டு, மீண்டும் திரும்பி வந்தது நாக்போ. துள்ளித் துள்ளிக் குரைத்தது.
‘‘என்ன... என்ன?” என்றார் சோடாக்.
நாக்போ மேலே தெரிந்த மடாலயத்தை நோக்கி ஓடியது.
‘‘மம்மியைப் பார்த்து பயந்துவிட்டாயா?” என்றார் சோடாக்.
அது திரும்பி வந்து அவர் காலைக் கவ்விய பின், மீண்டும் திரும்பி ஓடியது.
போய்ப் பார்த்துவிடலாம் என்று சோடாக் முடிவுசெய்தார். வளைந்து செல்லும் மண் பாதையில் மெதுவாக மேலேறிச் சென்றார்.

மம்மியை வைத்திருந்த கொட்டகைக்கு முன், நாலைந்து பேர் நிற்பதைப் பார்த்தார். ‘‘டேய்! டேய்! யார் நீங்கள்?” என்று கூவிக்கொண்டு அருகே ஓடிச்சென்றார்.
அவர்களில் ஒருவன் ஓடிவந்து, அவர் தலையில் ஒரு மரக்கட்டையால் ஓங்கி அடித்தான். சோடாக், தலையைப் பிடித்தபடி மெல்லிய முனகல் ஓசையுடன் கீழே விழுந்தார்.
நாக்போ ஓடிச்சென்று அவன் காலைக் கவ்வியது. அவன் அலறினான். கழியால் அவன் அடிப்பதற்குள் விலகி ஓடியது. மீண்டும் அவனைக் கவ்வியது. உரக்க ஊரை நோக்கிச் சத்தம் போட்டது.
அவர்களில் ஒருவன், ‘‘அந்த நாயைக் கொல்” என்றான். இருவர் கழிகளுடன் நாயை நோக்கி ஓடிவந்தனர்.
நாக்போ அவர்களின் பிடிக்குச் சிக்காமல் இறங்கி ஓடியது. அது கறுப்பாக இருந்ததனால், இருட்டுக்குள் அதைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
நாக்போ ஊருக்குள் ஓடிச்சென்று, ஒவ்வொரு வீட்டு முன்னால் நின்றும், துள்ளித் துள்ளிக் குரைத்தது. வாலைச் சுழற்றியபடி ஆவேசமாக முனகி ஊளையிட்டது. அதைக்கேட்டு மற்ற ஊர் நாய்களும் குரைத்தன.
‘‘என்ன நாய் இப்படிக் குரைக்கிறது!” என்று சொன்னபடி, ஒரு வீட்டில் இருந்து ஒருவன் வெளியே வந்தான். அவன் கையில் டார்ச் விளக்கு இருந்தது. நாக்போ மீண்டும் மடாலயத்தை நோக்கி ஓடியபடியே குரைத்தது.
அவன் மடாலயத்தை நோக்கி வெளிச்சத்தை வீசித் தேடியபோது, அங்கு நின்றவர்களைப் பார்த்துவிட்டான். ‘‘ஓடிவாருங்கள்... திருடர்கள் திருடர்கள்” என்று அவன் கூவினான்.
எல்லா வீடுகளில் இருந்தும் மக்கள் கதவைத் திறந்து, விளக்குடன் வெளியே வந்தனர். அவர்கள் மடாலயம் நோக்கி ஓடினர்.
மம்மியை அந்தக் கொட்டகையில் இருந்து வெளியே எடுத்துக்கொண்டிருந்த நால்வரும், கையில் விளக்குடன் பலர் மடாலயத்தை நோக்கி வருவதைப் பார்த்தனர்.
‘‘வேண்டாம். இப்போது நாம் இதைக் கொண்டுபோக முடியாது” என்று ஒருவன் சொன்னான்.

‘‘கிளம்பு” என்று இன்னொருவன் கூவினான். அவர்கள் மறுபக்கமாக இறங்கி ஓடினார்கள்.
ஊர்க்காரர்கள் மேலே வரும்போது, கொட்டகை உடைக்கப்பட்டு மம்மி வெளியே கிடந்தது. சிலர், மறுபக்கம் சென்று பார்த்தபோது மலைச்சரிவில் மூன்று மோட்டார் பைக்குகள் நின்றிருப்பதைக் கண்டனர்.
திருடர்கள் ஓடிச்சென்று அவற்றில் ஏறி உதைத்துக் கிளப்பினர். விளக்குகள் எரிந்து, வெளிச்சம் நீண்டு மலைப்பாதை மேல் விழுந்தது. அவர்கள் மிக விரைவாக அவற்றை ஓட்டிச் சென்றனர். அவர்கள் உடல் முழுக்க கரிய ஆடை அணிந்திருந்தனர். முகத்தை மூடியபடி கம்பளித் தொப்பியை அணிந்திருந்தனர். அதனால், யாரென்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
நாக்போ ஓடிச்சென்று சோடாக்கை நக்கியபடி குரைத்தது. வாலை சுழற்றியபடி துள்ளியது. அவர்கள் ஓடிப்போய் சோடாக்கைத் தூக்கினர்.
சோடாக் நினைவு திரும்பினார். “பிடியுங்கள். அவர்கள் நம் பிட்சுவை திருட வந்தவர்கள்” என்று கூவினார்.
‘‘மம்மியை ஏன் திருடவேண்டும்?” என்று ஒருவன் கேட்டான்.
அதற்கு எவருக்கும் விடை தெரியவில்லை.
(தொடரும்)
லாப்ரடார் ரெட்ரீவர்

நாய்களிலேயே புத்திசாலியானது லாப்ரடார் நாய்தான். ‘ரெட்ரீவர்’ என்றால், மீட்பவன் என்று அர்த்தம். ஆடு, மாடு மேய்ப்பவர்கள், தொலைந்துபோன ஆடு, மாடுகளை மீட்க இந்த நாயைப் பயன்படுத்துவார்கள். ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளின் மணங்களை இது நினைவில் வைத்திருக்கும். வழிதவறி உறைபனியில் புதைந்துபோய்விட்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் இந்த நாய்தான் பயன்படுத்தப்படும். பனிக்குள் புதைந்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும்.
மிககூர்மையான மோப்பசக்தி உள்ள நாய் இது. ஆகவே, இதுதான் பெரும்பாலும் போலீஸ் நாயாகப் பயன்படுகிறது. கண்தெரியாதவர்களுக்கு இந்த நாயைத்தான் துணையாக பழக்குகிறார்கள். எப்போதும் அவர்களின் கூடவே இருந்து வேண்டியதை எல்லாம் செய்யும். மிக அன்பான நாய் இது. குழந்தைகளுடன் விரும்பி விளையாடும். வீட்டில் வளர்க்க ஏற்றது. ஆனால், மிக அதிகமாகச் சாப்பிட்டு குண்டாகிவிடும். நிறைய உடற்பயிற்சி அளிக்கவேண்டும்.
செயின்ட் ஜான்ஸ் நீர்நாய் என்னும் நாய் வகையில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டது. கனடாவில் உள்ள லாப்ரடார் என்னும் ஊரில் இதை உருவாக்கினார்கள்.