மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

பாடம்ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200, ஓவியங்கள்: ராமமூர்த்தி

குழந்தைகள் ஷூ... ஓர் எச்சரிக்கை!

அனுபவங்கள் பேசுகின்றன!

என் தங்கை மகள் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அன்று பள்ளிக்குச் செல்ல நேரம் ஆனதால், அவசரத்தில் ஷூவை சுத்தம் செய்யாமல் அப்படியே குழந்தைக்கு மாட்டி அனுப்பிவிட்டாள் என் தங்கை. பள்ளிக்கூடம் சென்ற குழந்தை திடீரென கால் வலிக்கிறது என்று காலைத் தூக்கியபடி சத்தம் போட்டு அழுதிருக்கிறாள். உடனே, அங்கிருந்த ஆசிரியைகள் அவள் அணிந்திருந்த ஷூவைக் கழற்றிப் பார்த்தபோது, ஷூவுக்குள் தேள் இருந்தது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தேளை அடித்துப்போட்டு விட்டு, குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சைக்குப் பிறகு குழந்தை தேறிவிட்டாள். ஆகவே, தாய்மார்களே, உங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் ஷூ, சாக்ஸ் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்த்துவிட்டு அனுப்புங்கள். குழந்தையின் உயிருக்கு நாமே எமனாகிவிடக் கூடாது.

- ச.லட்சுமி, ராயனூர்

எதையும் வீணாக்க வேண்டாமே!

அனுபவங்கள் பேசுகின்றன!

என் பையனைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தோம். அப்போது ஒரு குழந்தையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு என்னையும் அழைத்து சென்றார் என் மருமகள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து, எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு நிறைய சாப்பாடு மிகுந்துவிட்டது. பார்ட்டி நடத்தியவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்கள் வராததால், வந்தவர்களை, அவரவர்களுக்கு தேவையான உணவுகளை ஜிப்லாக் கவரில் போட்டு எடுத்துச் செல்லும்படி கூற, நாங்களும் ஜிப்லாக் கவரில் அன்று இரவுக்கு தேவையான உணவுகளை எடுத்து வந்து பயன்படுத்திக் கொண்டோம். இப்படி வந்திருந்தவர்கள் எல்லோரும் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டதால், உணவு வீணாகவில்லை. நம் நாட்டிலும் இதே முறையை விசேஷங்களின்போது கடைபிடிக்கலாமே!

- லக்ஷ்மி ராமச்சந்திரன், சேலம்

ஆட்டோவில்... போதை ஆசாமி!

அனுபவங்கள் பேசுகின்றன!

நானும் என் தோழியும் சிதம்பரத்திலிருந்து அண்ணா மலைநகருக்கு ஆட்டோவில் சென்றோம். சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே ஓர் இளைஞர் கைக்காட்டி நிறுத்தினார். அவர் டிரைவரின் நண்பர் என்பதால், அவரை தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். ஆனால், அந்த இளைஞர் மது அருந்தி இருந்ததால், துர்நாற்றம் எங்களைப் பாடாய்ப்படுத்தியது. உடனே நான் டிரைவரிடம், `வண்டியை நிறுத்துங்க... முதல்ல அந்த ஆளை கீழே இறக்குங்க; மது நாத்தம் தாங்க முடியலை’ என்றோம். ஆட்டோ டிரைவரோ, `முடியாது மேடம்’ என்று அலட்சியப்படுத்தியதுடன், `நீங்க பின் ஸீட்டுக்குதான் வாடகை தர்றீங்க... தெரியும்ல?’ என்றார். நான் உடனே, `உங்க ஆட்டோவுல எழுதி இருக்கிற அவசர உதவி நம்பருக்கு கால் பண்ணி உங்க மேலே புகார் சொல்வேன்’ என்றதும், `மேடம், இதோ இறக்கிடுறேன், போன் பண்ணாதீங்க...’ என்றவர் பாதி வழியில் அந்த போதை ஆசாமியை கீழே இறக்கிவிட்டார். இதுபோல் போதை ஆசாமிகள் ஆட்டோவில் பயணித்தால், நமக்கு அசௌகரியம் ஏற்படும்சூழலில் உடனே 18004285430 என்ற எண்ணை அழையுங்கள்.

- பி.கவிதா, கோவிலாம்பூண்டி