மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்

புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்

படங்கள்: உ.கிரண்குமார்

புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்

வீட்டின் பெயர் ‘கல்மரம்’. இந்த வீடு செங்கற்களால் கட்டப்பட்டதா, புத்தகங்களால் கட்டப்பட்டதா என்ற மயக்கத்தையும் ஆச்சரியத்தையும் நமக்குள் உருவாக்குகிறது. தமிழின் முக்கியமான ஆய்வாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான வீ.அரசு, நாடகவியலாளர் அ.மங்கை இணையர் வசிக்கும் வீடுதான் கல்மரம்! தமிழகத்தில் தனி மனிதர்களின் வீட்டு நூலகங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது பேராசிரியர்

வீ.அரசு அவர்களின் நூலகம்.

“நான் பார்த்தவரை மனிதர்களில் 75 சதவிகிதத்தினர் புத்தகங்கள் வாசிக்க விருப்பப்படுகிறவர்களாகவும், வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். புத்தகங்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களை அரிதினும் அரிதாகவே சந்தித்துள்ளேன். இந்த வீட்டைக் கட்டிமுடிக்கும் முன் புத்தகங்கள் ஆங்காங்கே அட்டைப்பெட்டிகளில் அடைபட்டுக் கிடந்தன. என் பணி ஓய்வுக்குப் பிறகு பெட்டிகளில் இருந்த புத்தகங்களுக்கு விடுதலை அளித்து, இந்த நூலகத்தினை உருவாக்கிவிட்டோம். இதுவரை, என் வாழ்வு நெடுகிலும் புத்தகங்களோடேதான் இயங்கியபடி வந்துள்ளேன்.

சென்னைக்கு படிப்பு நிமித்தமாகவோ, வேலை நிமித்தமாகவோ வருகிற புத்தக ஆர்வலர்களுக்குப் பழைய புத்தகக்கடைகள் எனும் சொர்க்கம் இருந்தது. குறிப்பாக, திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருக்கக்கூடிய பழைய புத்தகக் கடைகள், லஸ் கார்னரில் இருக்கும் ஒரு கடை மற்றும் பழைய மூர்மார்க்கெட் போன்றவற்றைச் சொல்லலாம். அடிக்கடி பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்வதாலும் நான் தமிழ் ஆசிரியராக இருந்ததாலும் அங்கு வந்து விழும் நல்ல நூல்களை உடனே கண்டுபிடித்துவிடுவேன். எந்தப் பழைய பேப்பர் வியாபாரி இதுபோன்ற சிறந்த புத்தகங்களைக் கொண்டுவந்து விற்கிறார் எனத் தெரிந்துகொண்டு, அவர் எப்போது வருவார் எனத் தேடி அவர் வரும் நாளில் போய் புத்தகங்களைக் கைப்பற்றி வருவேன்.

சில புத்தகச் சேகரிப்பாளர்கள் இறந்துவிட்டார்கள் என்று தெரிந்தால், அவர்களின் வீட்டில் புத்தகங்களைப் பரமாரிக்க விரும்பவில்லை என்று தெரிந்தால், போய் வாங்கிவருவேன். ஒருமுறை கோணங்கி வந்திருந்தபோது ‘காஞ்சிபுரத்தில் நடேச நாராயணன் என்று ஒரு தமிழாசிரியர் தன்னிடம் உள்ள புத்தகங்களைப் பராமரிக்க முடியாததால் தருகிறேன் என்று சொல்லியுள்ளார்... நாளை மாலையில் போய் வாங்கி வருவோம்’ என சொல்லி யிருந்தேன். அடுத்தநாள் மாலை நான் கோணங்கி  வரக் காத்திருந்தேன், ஆள் வரவில்லை. சரி வழக்கம் போல் ‘எங்கோ’ போய்விட்டார் என எண்ணியபடி நான் போய் காஞ்சிபுரத்தில் இறங்கினால், காலையிலேயே கோணங்கி அங்கு சென்று அந்தத் தமிழாசிரியரின் சேகரிப்பில் சிறந்தவற்றை எல்லாம் அள்ளிச் சென்றுள்ளார். எங்களுக்குள் இப்போது வரையிலும் இந்தத் தொழில் போட்டி தொடர்கிறது” என்று சிரித்தபடியே நூலகம் இருக்கும் மாடிக்கு அழைத்தார். அப்போதுதான் தெரிந்தது நாங்கள் நூலகம் என்று நம்பியபடி பேசிக்கொண்டிருந்த  இடம் வீட்டின் முன் அறைதான் என்று.

மாடிக்குப் போகும் வழியெல்லாம் புத்தகங்கள். பகலில் எந்த வேளையிலும் நிறைந்த வெளிச்சமும் அற்புதமான காற்றோட்டமும் வரக்கூடிய கட்டடப் பொறியியல் வனைவில் நூலகம் பளிச்சென இருந்தது. அரசு தொடர்ந்து பேசினார்...

புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்

“வாசிக்கும் பழக்கம் பெற்றோரிடம் இருந்தால் இலகுவாகப் பிள்ளைகளுக்கு ஒட்டிக்கொள்ளும். எனக்கு என் அப்பாவிடம் இருந்து வந்துசேர்ந்தது. புத்தகங்கள் கேட்கும்போது தடை சொல்லாது வாங்கிக்கொடுத்தாலே பிள்ளைகளுக்கு வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிடும். முதன்முதலாக என் அப்பா வாங்கிகொடுத்த ‘லிப்கோ டிக்‌ஷ்னரி’ இன்றும் நினைவில் இருக்கிறது. எங்கள் ஊரில் இருந்து தஞ்சைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு போய் வாழ்க்கையில் முதல்முறையாய் வாங்கிய ‘தீப்பெட்டி திருக்குறள்’ புத்தகம் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. கல்லூரிக்குப் போனவுடன் பெரியார் அறிமுகமாகிவிட்டார். அதன் பின்னர் இடதுசாரிகளின் கருத்துகள், முன்னேற்றப் பதிப்பகத்தின் வெளியீடுகள் வழி அறிமுகமாயின. இவையிரண்டின் அறிமுகத்தால் வாசிக்கும் ஆர்வம் பன்மடங்கு வளர்ந்தது. காரணம், கல்லூரிகளில் நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள். வாதங்களில் வெல்ல வேண்டுமானால், வாசிப்பு இருக்கவேண்டும். அதற்கு, நியூ செஞ்சுரி புத்தகத்தின் சிவப்பு அட்டை மலிவுவிலைப் புத்தகங்கள் பெரிய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தன.

புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்


வெகுஜன வாசிப்புத்தளத்தில் 1930-களில் உருவான ‘ஆனந்த விகடன்’ மரபு , 1940-களில் உருவான ‘தினத்தந்தி’ மரபு, 1950-களில் உருவான ‘குமுதம்’ போன்ற வாசிப்பு குழுமங்கள் ஒரு பக்கமாகவும், சிரத்தையான வாசிப்பைத் தேடும் சின்னக் குழுக்கள் மற்றொரு பக்கமாகவும் இயங்கின. நான் இரண்டாவது பக்கத்தில் இருந்தேன்.

1960-களில் ஏற்பட்ட பின்காலனியச் சூழலில், பல்வேறு அரசியல் சித்தாந்தங்கள் ஊடும்பாவுமாய் வாசிப்புத்தளத்தில் வந்துசேர்ந்தன. அவை இன்னும் இன்னும் வாசிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தின. அதற்குப் பிறகு 1970-களில் இருந்து இப்போது வரை சராசரி வாசிப்பைத் தாண்டி, தீவிர வாசிப்புக்கு எனச் சுமார் 800 முதல் 900 சிறுபத்திரிக்கைகள் வெளியாகி உள்ளன.

என் நூலகத்தில் அதிகம் இருப்பவை சிறுபத்திரிகைகளே. இவை சுமார் 2000 பௌண்டட் வால்யூம்களாக நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

மார்க்சிய அமைப்புகளுக்குள்ளான கோட்பாட்டு விமர்சனங்கள், சோவியத் வீழ்ச்சியின் காரணங்கள், அதன் பின்னர்  பெரியார் குறித்த மறுவாசிப்பு செய்து இன்னும் புதிதாகப் பெறப்பட்ட பார்வைகள், அம்பேத்கர் நூற்றாண்டைத் தொடர்ந்து உருவான தலித் எழுச்சி சிந்தனைகள், பெண்கள் தங்கள் அடையாளம் சார்ந்த எழுத்துக்களைத் தேர்வு செய்த போக்குகள் எனச் சிறுபத்திரிகைகள் சமூகம் நோக்கிச் சிந்தித்ததை; இயங்கியதைத் தொடர்ந்து ஆவணப்படுத்தினேன்.

85-ன் தொடக்கத்தில் எனக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிடைத்த ஆசிரியர் வேலை, பொருளாதார விடுதலையை அளித்தது. ஆசிரியராக இருப்பதால், புதிதாக வருகிற புத்தகங்களைப் படிக்கவேண்டி  இருந்தது. படிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் அந்த நூல் குறித்த சிறு அறிதல் இருந்தால்தான் மாணவர்களிடையே பிழைப்பை ஓட்ட முடியும்.

என்னுடைய இந்தப் பத்திரிகைகளைச் சேமித்து காப்பாற்றிக் கொடுத்தவர் கோவிந்தன் என்கிற திருவல்லிக்கேணி பைண்டர். ஆண்டு முழுவதும் வாங்கும் சிறு பத்திரிகைகளை அவரிடம் கொடுத்தால் அவர் அழகாக பைண்ட் செய்து கொடுத்துவிடுவார். தற்போது என் மாணவர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பஞ்சாட்சரம் என்பவர் தன் விடுமுறை நாட்களில் என் சிறுபத்திரிக்கைச் சேமிப்பை, தன் கடமையாகக் கருதி பைண்ட் செய்து வருகிறார். இந்த வேலையை வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று அன்புக் கட்டளையும் இட்டிருக்கிறார்.

புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்

இந்த நூலகத்தை உருவாக்கும் எண்ணத்தை என் வீட்டில் எங்கெங்கும் நிறைந்திருந்த புத்தகங்களே உருவாக்கின. என் பணி ஓய்வின்போது எனக்குக் கிடைத்த பணத்தில் 15 லட்சம் கொண்டு நூலகம் உருவாக்க என் குடும்பத்தினருடன் சேர்ந்து முடிவுசெய்தேன். அதன் பின்னர் பொறியாளர் மகேஷ் அவர்களைச் சந்தித்து இந்த நூலகம் குறித்துப் பேசினோம். அவர் ஜெர்மானியக் கட்டடக் கலைக் கோட்பாட்டு அடிப்படையிலான ‘ஃபார்ம் அன்ட் ஃபங்ஷன்’ (Form and Function) என்கிற முறையில் ‘எவ்வளவு வெளிச்சமும் காற்றோட்டமும் புத்தகங்களை அதிக நாட்கள் உயிர்ப்புடன் வைக்கும்’ என்கிற அளவீடுகளுடன் கூடிய முறையில் வடிவமைத்தார்.  புத்தகத்தைத் தேடும்போது ஒருவித வாஞ்சையை இந்தப் பாணி மனதுக்குள் ஏற்படுத்தும்.

இங்கு மொத்தம் இருக்கும் நூல்களின் எண்ணிக்கை 20,000 முதல் 25,000 வரை இருக்கும். அவற்றில் 2,000-க்கும் மேல் இதழ் தொகுப்புகள், 600 மலர் தொகுப்புகள்,  2,000-க்கும் மேல் ஈழத்தமிழ் நூல்கள், தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான அகராதிகள், தமிழகத் தொல்லியல் துறை நூல்கள், தமிழிசை மற்றும் கட்டடக்கலை தொடர்பான நூல்கள், தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழறிஞர்களின் தொகுப்பு நூல்கள் ஆகியவை உள்ளன. இதில் எந்த ஒரு புத்தகத்தையும் அதற்குச் சின்ன பாதிப்புகூட இல்லாமல் சுலபமாக எடுக்கவும் படிக்கவும் இந்தக் கட்டடமுறை உதவுகிறது. இந்த நூலகம் எதிர்காலத்தில் டிஜிட்டலாக ஆகலாம். ஆனாலும், கையில் எடுத்துப் படிக்கும் மனநிறைவு அதில் கிடைக்காது என்பது என் எண்ணம். என்னால் முடிகிற வரையில் கையில் எடுத்துப் படிக்கவே விரும்புகிறேன்.

அடிப்படையில் தமிழாசிரியனாக இருப்பதாலோ என்னவோ, என் சேகரத்தில் தமிழ் இலக்கண இலக்கிய மூல இலக்கிய நூல்கள் அனைத்தும் உள்ளன. 1960-களுக்குப் பிறகு வெளிவந்த துறைசார் விமர்சனப் புத்தகங்கள் உள்ளன. அதேபோல் வள்ளலார் தொடங்கி ஆறுமுகநாவலர், மனோன்மணியம் சுந்தரனார்,  ச.வையாபுரிப்பிள்ளை, கைலாசபதி, சிவத்தம்பி, தனிநாயகம் அடிகள், எஸ்.வி.ஆர், கோ.கேசவன்,           அ.மார்க்ஸ், என அனைத்து தமிழ் ஆளுமைகளின் அனைத்து நூல்களும் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய நூல்களாக நான் குறிப்பிடுவது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் ‘சங்க இலக்கியம்’ என்கிற புத்தகம், பசு.கவுதமன் தொகுத்துள்ள ‘ஈ.வே.ராமசாமி என்கிற நான்’ என்கிற புத்தகம், பாபா சாகேப் அம்பேத்கரின் முதல் தொகுதி, எஸ்.வி.ஆர் அவர்களின் மொழி பெயர்ப்பில் வந்துள்ள  ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ ‘எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கமான ‘பிம்பச்சிறை’. ‘20-ம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் நூறு’ என்று பக்கச் சார்பின்றி நான் தொகுத்துள்ள நூல் ஆகியவைகளைப் படித்திடவும் பரிந்துரைக்கிறேன்.” என்றார்.

புத்தகங்களாகப் பூத்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது கல்மரம்.