மற்ற எபிசோடுகள்
Published:Updated:

காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்

காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்
News
காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்

கியூபாவில் 1926-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தார்

காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்

“மகத்துவத்தின்
முழுமையான உருவம் நீ,
கியூபாவின் நெற்றியை
எவராவது தொட முயன்றால்,
மக்களின் முஷ்டி உயர்ந்து
அதைத் தடுக்கும்.

- பாப்லோ நெருதா

ஃபிடல் காஸ்ட்ரோ என்ற வரலாற்று நாயகனைப்பற்றி எப்போது நினைக்கும்போதும் மனதில் எழும் பிம்பம், ஒரு கையில் புத்தகமும் மறுகையில் துப்பாக்கியும் ஏந்தி நிற்கும் உருவமே.

ஆயுதப்புரட்சியின் மூலம் கியூபாவைக் கைப்பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முடிவுகட்டியது காஸ்ட்ரோவின் ஒரு முகம். மறுமுகமோ, மகத்தான இலக்கியவாதிகளான ஹோசே மார்த்தி, ஹெமிங்வே, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், பாப்லோ நெருதா போன்றோரின் எழுத்தை நேசிக்கும் ஆளுமையின் அடையாளமாக விளங்கியது. உலகில் வேறு எந்தத் தேசத்தின் அதிபரை விடவும் அதிகம் எழுத்தாளர்களை, கலைஞர்களை நேசித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

பாடிஸ்ட்டா அரசால் காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டு நீதிவிசாரணை செய்யப்பட்ட போது ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அதில், ‘‘நீங்கள் என்னைத் தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை, வரலாறு என்னை விடுதலை செய்யும்’’ என்றார். அது வெறும் வீரவசனம் இல்லை. காலத்தின் குரலையே காஸ்ட்ரோ ஒலித்திருக்கிறார். ஃபிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் புரட்சியின் கதாநாயகர்களாக இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறார்கள்.

காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்



கியூபாவில் 1926-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தார். இயேசு சபையினர் நடத்திய பள்ளியிலும், ஹவானா பல்கலைக்கழத்திலும் பயின்ற அவர், சட்டம் மற்றும் சமூக அறிவியலைக் கற்றார். கல்லூரி நாட்களில் கம்யூனிஸக் கருத்துகள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.

அமெரிக்கக் கைக்கூலியான பாடிஸ்ட்டா கியூபாவில் ஆட்சியைக் கைப்பற்றினார். அவரது சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் காஸ்ட்ரோ தீவிர
மாகச் செயல்பட்டார். இரவில் தொடர்ந்து வேலை செய்வதும் குறைவான தூக்கமுமே அவரது பழக்கம்.

லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்கு முதற்காரணமாக விளங்கிய ஹோசே மார்த்தியின் கவிதைகளும் அவரது போராட்ட வாழ்வுமே காஸ்ட்ரோ உருவாக முக்கியக் காரணமாக இருந்தன. மார்த்தியின் 28 தொகுதிகளையும் தனது படுக்கை அறையிலே வைத்திருந்தார் காஸ்ட்ரோ. “ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்குக் காற்றும் வெளிச்சமும் போலவே கவிதையும் தேவைப்படுகிறது” என்றவர் மார்த்தி.

பாடிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக, காஸ்ட்ரோ 1953-ம் ஆண்டு மன்காடா ராணுவ முகாம் மீது தனது கூட்டாளிகளுடன் தாக்குதல் நிகழ்த்தினார். இம்முயற்சி தோல்வி அடைந்தது. அவரது கூட்டாளிகள் களத்திலேயே கொல்லப்பட்டனர். காஸ்ட்ரோவும் அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவும் கைதுசெய்யப்பட்டார்கள். நீதிவிசாரணை நடைபெற்றது. ஓராண்டுக்குப் பிறகு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்


கியூபாவிலிருந்து தப்பி மெக்ஸிகோவுக்குச் சென்றார் காஸ்ட்ரோ. அங்கே இருந்தபடியே இளைஞர்களைத் திரட்டி புரட்சிப் படையை உருவாக்கி, 1956-ஆம் ஆண்டு கியூபா திரும்பினார். புரட்சிகரப் பணியில் அவரோடு இணைந்துகொண்டவர்தான் புரட்சியாளர் சேகுவேரா. அர்ஜென்டினாவைச் சேர்ந்த மருத்துவரான சே, கியூபப் புரட்சிக்குத் தனது பங்களிப்பை வழங்க போராளியாக உருமாறினார்.

மெக்ஸிகோ வளைகுடா வழியாகப் படகில் கியூபாவுக்குள் நுழைந்த ஃபிடல் காஸ்ட்ரோ ராணுவத்தை எதிர்த்து சண்டையிடத் தொடங்கினார். அவர் தரப்பில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனாலும் போராட்டத்தைக் கைவிடவில்லை. மெள்ள மக்கள் மத்தியில் காஸ்ட்ரோவுக்கான ஆதரவு பெருகியது. மூன்று ஆண்டுகள் மக்களைப் புரட்சிக்கு தயார்ப்படுத்தினார்.

1959-ஆம் ஆண்டு தலைநகர் ஹவானா வீதிகளுக்குள் காஸ்ட்ரோவின் புரட்சிப்படை நுழைந்தது. பாடிஸ்ட்டா தோற்றோடிப் போனார். அத்துடன் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புதிய அரசு உருவாக்கப்பட்டது. கியூபாவுக்குச் சொந்தமான எல்லா வளங்களும் கியூப மக்களுக்கே சொந்தம் என அறிவித்தார் ஃபிடல். தொழிற்சாலைகள் யாவும் நாட்டுடைமையாக்கப்பட்டன. அமெரிக்காவின் சூதாட்டக்கூடங்கள், கேளிக்கை அமைப்புகளை ஒழித்தது காஸ்ட்ரோவின் அரசு. இலவசக்கல்வி, மருத்துவம் எனத் தனது பொதுவுடமைச் சிந்தனைகளால் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார் காஸ்ட்ரோ. அதைச் சகித்துக்கொள்ள முடியாத அமெரிக்கா, கியூபாமீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அத்தோடு கியூபாவுடனான தூதரக உறவையும் துண்டித்துக்கொண்டது. இதனால், கியூபாவில் உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் தேக்கம் கொண்டன.

இந்த இக்கட்டான சூழலில் கியூபாவுக்கு ரஷ்ய அரசு கைகொடுக்க முன்வந்தது. கியூபப் பொருட்களை ரஷ்யா வாங்கிக் கொண்டது. இதனால் கியூபாவிற்கும் ரஷ்யாவிற்குமான நட்புறவு வலிமையாகியது. தன்னை ஒரு கம்யூனிஸ நாடாக அறிவித்துக் கொண்டது கியூபா. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் கியூபா ஆயுதம் ஏந்திப் போராடி வென்ற நிகழ்வு உலகிற்கே புதுவெளிச்சத்தைக் காட்டியது. ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய தாக்கத்திற்கு நிகரானது காஸ்ட்ரோவின் வெற்றி. காஸ்ட்ரோவின் வளர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத அமெரிக்கா, ஃபிடலைக் கொல்லத் திட்டம் தீட்டியது. சி.ஐ.ஏ - ஆல் 650- க்கும் அதிகமான கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தனையும் தோல்வியடைந்து போனதே வரலாறு.

காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்

1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் அதன் பின் 1976-லிருந்து அதிபராகவும் திகழ்ந்து வந்த ஃபிடல் 2008-ம் ஆண்டு தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்துவந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட காஸ்ட்ரோ, நவம்பர் 25-ல் மரணம் அடைந்தார். கியூபா அவரது மறைவை பேரிழப்பாக துக்கம் அனுஷ்டிக்கிறது.

பொதுவாக காஸ்ட்ரோ சிரிப்பது போன்ற புகைப்படங்களைப் பார்க்க முடியாது. அபூர்வமாக ஒன்றிரண்டு புகைப்படங்களில் தான் காஸ்ட்ரோ சிரித்துக் கொண்டிருக்கிறார். ‘ஆடவும் பாடவும் தெரியாத ஒரே கியூபன் காஸ்ட்ரோ மட்டுமே’ எனக் கேலியாகக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் மார்க்வெஸ். காரணம் ஆயுதம் ஏந்திப் புரட்சியை வழிநடத்தி தேசத்தின் எதிர்காலம் மற்றும் ஆற்றவேண்டிய பணிகளில் மட்டுமே காஸ்ட்ரோவுக்கு கவனம் குவிந்திருந்தது. தனிப்பட்ட உரையாடல்களில் அவரிடம் பீறிடும் நகைச்சுவை உணர்வை, அவரது பொது உரைகளில் காண முடியாது. காஸ்ட்ரோவைப் போல உணர்ச்சி பூர்வமாகப் பேசக்கூடிய ஒருவரைக் காண முடியாது. அவரது ஒரு சொற்பொழிவு ஏழு மணி பத்து நிமிட நேரம் நீண்டது. இது ஒரு கின்னஸ் சாதனை.

ஏழு மணி நேரச் சொற்பொழிவையும் மக்கள் ஆரவாரத்துடன் கேட்டார்கள். அரசியல்சொற்பொழிவு ஒன்று மக்களை எவ்வளவு உத்வேகப்படுத்த முடியும் என்பதற்கு அது உதாரணம். ‘‘பேசிப்பேசி களைத்துப்போகும் காஸ்ட்ரோ, ஓய்வு கொள்வதற்கும் பேச்சையே துணைகொள்கிறார் என்கிறார்’’ மார்க்வெஸ்.

காஸ்ட்ரோவைப் பற்றி நினைக்கும்போது கூடவே நினைவில் இருப்பவர் புரட்சியாளர் சேகுவேரா. அவர்களின் நட்பு அபூர்வமானது. லட்சியத்தால் ஒன்றிணைந்தது. ஆயுதம் ஏந்திப் போரிட்ட நாட்களிலும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்ட நாட்களிலும் இருவரும் இணைபிரியாத நெருக்கத்துடனே இருந்தார்கள். கொரில்லா போர்ப்பயிற்சியில் இணைந்து செயல்படத்துவங்கியபோது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. இருவரும் இணைந்தே கியூபாவில் புரட்சியைச் சாத்தியப்படுத்தினார்கள். சேகுவேரா இறந்தபோது, அவருக்கு வயது 40. கியூப தேசமே அவரது மரணத்திற்காகக் கண்ணீர் வடித்தது. காஸ்ட்ரோ மிகவும் உணர்ச்சிபூர்வமான அஞ்சலி உரையாற்றினார்.

காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்



களத்தில் போரிட்ட நிலையிலும் காஸ்ட்ரோ தனது நேரத்தைப் படிப்பதற்கும் இசை கேட்பதற்கும் ஒதுக்கிக்கொள்ளக்கூடியவர். பாடிஸ்ட்டாவை எதிர்த்து நிறைய எழுதியிருக்கிறார். லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை விரும்பிப் படித்திருக்கிறார். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் உடனான அவரது நட்பு அலாதியானது.

அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி நிறுவனங்கள் கியூபாவைப் பற்றிப் பொய்யும் புரட்டுமான செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதைத் தடுத்து நிறுத்த கியூப அரசு செய்தி நிறுவனம் ஒன்றை உருவாக்கியது. கியூபா பற்றிய உண்மைகளை உலகுக்கு அறியச் செய்ய அதை வழிநடத்தும்படியாக மார்க்வெஸைக் கேட்டுக்கொண்டார் ஃபிடல். அவரும் கியூபாவுக்கு ஆதரவாகப் பணியாற்றினார். மார்க்வெஸின் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’ நாவலை வாசித்து மகிழ்ந்த ஃபிடல்காஸ்ட்ரோ அவருக்காக ஒரு விருந்து கொடுத்தார். நோபல் பரிசு பெற்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்ட போது மார்க்வெஸ் ஹவானாவில் இருந்தார். உடனே கியூப அரசு அவரைக் கௌரவிக்கும் விதமாக கியூபாவின் மிக முக்கிய விருதான Felix Varela Medal -ஐ அறிவித்துக் கொண்டாடியது. அன்றே மெக்ஸிக அரசும் தனது உயரிய விருதை மார்க்வெஸிற்கு அறிவித்தது.

மார்க்வெஸ் நோபல் பரிசு பெற்ற தினத்தில் அதைக் கொண்டாடும்படி காஸ்ட்ரோ, 1500 கியூப ரம் பாட்டில்களை ஸ்டாக்ஹோமிற்கு அனுப்பியிருந்தார். அத்துடன் கியூபாவில் தனது மாளிகைக்கு அருகிலேயே அவருக்குப் பெரிய மாளிகை ஒன்றையும் விலை உயர்ந்த மெர்சிடீஸ் பென்ஸ் கார் ஒன்றையும் பரிசாக அளித்தார். காஸ்ட்ரோவுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்ற காரணத்தாலே மார்க்வெஸிற்கு அமெரிக்க அரசு, விசா தர மறுத்தது. மார்க்வெஸின் புகழ்பெற்ற குறுநாவலான  ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ எழுதி முடிக்கப்பட்டவுடனே அதைக் காஸ்ட்ரோ வாசிப்பதற்காக அனுப்பிவைத்தார் மார்க்வெஸ். அதைக் கவனமாக வாசித்த காஸ்ட்ரோ கதையில் குறிப்பிடப்பட்ட வேட்டைத் துப்பாக்கி பற்றிய தகவல் சரியானது இல்லை. அதை மாற்றவும் எனக் குறிப்பு எழுதி அனுப்பிவைத்தார். அந்த அளவிற்கு மார்க்வெஸின் படைப்புகளின் முதல் வாசகராக இருந்தார் காஸ்ட்ரோ.

காஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்

காஸ்ட்ரோ, சேகுவேரா இருவருக்கும் நிகராகப் புகழ்பெற்றுள்ள மற்றொருவர் கியூபாவில் உண்டு. அவர் அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.

1940-ல் ஹெமிங்வே தனது மூன்றாவது மனைவி மார்த்தாவுடன் ஹவானாவுக்குப் பத்து மைல் தொலைவில் ஒரு பண்ணையை விலைக்கு வாங்கி அங்கே குடியிருக்கத் தொடங்கினார். அங்கிருந்தபடியேதான் கிழவனும் கடலும் என்ற அவரது புகழ்பெற்ற நாவலை எழுதினார். அதில் நாயகனாக வரும் சாண்டியாகோ ஒரு கியூப மீனவரே.

1960-ல் ஹெமிங்வே கியூபாவை விட்டு வெளியேறினார். ஆனாலும் கியூபாவில் ஹெமிங்வேவுக்கு நிறைய வாசகர்கள் இருந்தார்கள். தேசமெங்கும் அவரைக் கொண்டாடினார்கள். இளைஞராக இருந்த காஸ்ட்ரோவும் ஹெமிங்வேயின் எழுத்துகளை வாசித்துப் பிரமித்திருக்கிறார், 1960-ல் காஸ்ட்ரோ ஒரு மீன்பிடிப் போட்டி ஒன்றின்போது ஒரேயொரு முறை ஹெமிங்வேயை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஹெமிங்வேயின் ‘யாருக்காக மணி ஒலிக்கிறது’ அவருக்கு மிகவும் விருப்பமான நாவல். தனது நோபல் பரிசை கியூபாவிற்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் ஹெமிங்வே. அவர் குடியிருந்த வீட்டை தற்போது மியூசியமாக மாற்றியுள்ளது கியூப அரசு.

நோபல் பரிசு பெற்ற கவிஞரான பாப்லோ நெருதா, கியூபாவை மிகவும் நேசித்தார். அது போலவே நெருதாவின் கவிதையைக் காஸ்ட்ரோ, விரும்பிப் படித்திருக்கிறார். 1971-ம் ஆண்டு சிலிக்குச் சென்றிருந்த காஸ்ட்ரோ நெருதாவைச் சந்தித்தார். சர்வாதிகார ஆட்சியால் நெருதா உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று காஸ்ட்ரோ கவலை தெரிவித்திருக்கிறார். காஸ்ட்ரோவைப் பாராட்டி பாப்லோ நெருதா ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் “மகத்துவத்தின் முழுமையான உருவம் நீ, கியூபாவின் நெற்றியை எவராவது தொட முயன்றால், மக்களின் முஷ்டி உயர்ந்து அதைத் தடுக்கும். கியூபாவைப் பாதுகாப்பது எங்கள் கடமை” எனப் பாராட்டு மழை பொழிந்திருக்கிறார் கியூபாவில் கல்வி முற்றிலும் இலவசம். கியூபா தனது பட்ஜெட்டில் 10 சதவீதத்தைக் கல்விக்கு ஒதுக்குகிறது. அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்துடன் ஒப்பிடும்போது இது மிக அதிகம் என்கிறது யுனெஸ்கோ.13 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடியும் வரை தொடர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பாடத்துடன் கைத்தொழில்களும் கற்றுக்கொள்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்காக 545 சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன.