Published:Updated:

ரியல் மாட்ரிட் ஹாட்ரிக் சாம்பியன்... சப்ஸ்டிட்யூட்டாக வந்து சாதித்த கேரத் பேல்! #UCLfinal

ரியல் மாட்ரிட் ஹாட்ரிக் சாம்பியன்... சப்ஸ்டிட்யூட்டாக வந்து சாதித்த கேரத் பேல்! #UCLfinal

அதிரடி, கண்ணீர், போராட்டம், வலி... கடைசியில் வென்றது ரசிகர்களே.

Published:Updated:

ரியல் மாட்ரிட் ஹாட்ரிக் சாம்பியன்... சப்ஸ்டிட்யூட்டாக வந்து சாதித்த கேரத் பேல்! #UCLfinal

அதிரடி, கண்ணீர், போராட்டம், வலி... கடைசியில் வென்றது ரசிகர்களே.

ரியல் மாட்ரிட் ஹாட்ரிக் சாம்பியன்... சப்ஸ்டிட்யூட்டாக வந்து சாதித்த கேரத் பேல்! #UCLfinal

சாம்பியன்ஸ் லீக் என்றாலே கால்பந்து ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஐரோப்பாவின் எல்லா சிறந்த டீமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் இந்த ஆட்டத்தின் ஃபைனலை பார்க்க மொத்தம் 30,000 ரசிகர்கள் உக்ரைனின் கீவ் ஸ்டேடியத்தில் கூடியிருந்தனர். சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க ரியல் மாட்ரிட்டும், 2005-ம் ஆண்டு நடந்த மேஜிக் வெற்றியை மீண்டும் கொண்டுவர லிவர்பூலும் போட்டிபோட்டுக்கொண்டன.

இந்தமுறை லிவர்பூல் ஜெயிக்க சலா, ஃபிர்மினோ, மனே என மூன்று டிரம்ப் கார்டுகள் இருந்தன. ரியல் மாட்ரிட் ஜெயிக்க ரொனால்டோ என்ற ஒரே ஒரு கார்டு போதும் என்றுதான் நினைத்தோம். ஏனென்றால், இந்த சீசனில் ரொனால்டோ மட்டுமே 15 கோல்களை அடித்திருந்தார். ஆனால், ரியல் மாட்ரிட்டின் கார்டை தனது தடுப்பாட்டத்தால் டம்மியாக்கி வைத்திருந்தது லிவர்பூல். சுவராக இருந்து நான்கு டிஃபன்டர்களும் ரொனால்டோ, பென்சிமா, மார்செலோ, இஸ்கோ என்று முன்னேறிய எல்லோருக்குமே பெப்பே காட்ட, ஒரு பக்கம் லிவர்பூலின் டிரம்ப் கார்டுகள் மீண்டும் மீண்டும் தாக்க, ஆட்டம் கொஞ்சம் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. 

ரியல் மாட்ரிட்டின் தடுப்பாட்டம் நொறுங்கிக் கொண்டிருக்க, வேங்கையன் மவன் போல ஒத்தையா நின்னு மொத்த கோலையும் தடுத்துக்கொண்டிருந்தார் மாட்ரிட்டின் கோல்கீப்பர் கீலோர் நவாஸ். 30-வது நிமிடத்தில் சலாவிடம் இருந்த பந்தை வாங்க மாட்ரிட்டின் ரமோஸ் போட்டிபோட இருவரும் கீழே உருண்டு, இடது தோள்பட்டையில் அடிபட்டு ஃபீல்டை விட்டு வெளியேறினார் எகிப்தின் உலகக்கோப்பை கனவு நாயகன் சலா. அவருக்குப் பதிலாக வந்த ஆடம் லலானா பெரிதாக அதிரடி காட்டவில்லை. லிவர்பூலின் அட்டாக் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டு மேட்ச் மந்தமானது. ரசிகர்கள் விடவில்லை, எங்கு பார்த்தாலும் சிவப்பு. லிவர்பூல் என்ற கோஷம். யூரோ கப் ஃபைனலில் ரொனால்டோ ஃபீல்டை விட்டு வெளியேறிய மொமன்ட்டை நினைவுபடுத்தினார் வர்ணனையாளர். ஆட்டத்தில் மீண்டும் ஒரு வெளியேற்றம். 35-வது நிமிடம், 2016-ம் ஆண்டில் எப்படி சாம்பியன்ஸ் லீக் ஃபினலில் வெளியேறினாரோ அதேபோல இந்த முறையும் ஹாம்ஸ்ட்ரிங் இன்ஜுரியால் வெளியேறினார் மாட்ரிட்டின் தடுப்பாட்டக்காரர் டேனி கர்வஹால். 

இரண்டு கூட்டணியிலுமே ஒரு விக்கெட் அவுட். ஆர்வமாக ஆரம்பித்த போட்டியில் தொய்வோ தொய்வு. முதல் பாதி முடியும் வரை ரியல் மாட்ரிட் விடாமல் அட்டாக் செய்துகொண்டுதான் இருந்தது. பலன் இல்லை. கோல்கள் இல்லாமல் ஸ்கோர்கார்டு வெறிச்சோடியிருக்க, இரண்டாம் பாதியில் மாட்ரிட்டின் கால்கள் ஓங்கின. ஆனாலும், ரொனால்டோவின் ஆட்டம் பலிக்கவில்லை. பென்சிமா கோல்போட முயற்சிசெய்து கொண்டிருந்தார். வழக்கம்போல இஸ்கோவும் உதவிசெய்து கொண்டிருந்தார். 51 நிமிட காத்திருப்புக்குப் பிறகு பென்சிமாவின் முதல் கோல் விழுந்தது. உண்மையிலேயே, கோல் பென்சிமாவின் பவரில் விழவில்லை. கோல்கீப்பர் காரியஸின் தவறில்தான் விழுந்தது. அப்படி ஓர் அபத்தமான தவறு செய்தார் காரியஸ்.

4 நிமிடம் கழித்து லிவர்பூலுக்காக ஒரு அதிரடி கோலை அடித்தார் மனே. 1-1 என இருந்த ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் இஸ்கோவுக்கு மாற்றாக வந்தார் காரத் பேல். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஃபைனல் காட்ரிஃப் சிட்டியில் நடைபெற்றது. காட்ரிஃப் சிட்டியில் வளர்ந்து அதன் அடையாளமாக இருந்த காரத் பேலை மேட்ச்சிலேயே சேர்க்கவில்லை மாட்ரிட் மேனேஜர் ஜிடேன். அதற்கு பதிலடியாகத்தானோ என்னவோ இந்தமுறை 2 கோல்களை அடித்து மாட்ரிட்டை ஜெயிக்கவைத்துவிட்டார். 64-வது நிமிடம், மார்செலோவின் பந்தை வாங்கி, ரொனால்டோவுக்கே சவால்விடும் ஒரு பைசைக்கிள் கிக்கில் அடித்த கோலை ஃபுட்பால் உலகம் நிச்சயம் மறக்காது. மீண்டும் 83-வது நிமிடத்தில் லாங் ஷாட் மூலம் காரியஸை கலங்கவைத்தது இன்னொரு கோல். 

ஒரே ஒரு கோல்தான் கிடைத்தது என்றாலும் தன் அழகான ஆட்டத்தின் மூலம் கால்பந்து ரசிகர்களை ஜெயிக்கவைத்து, கோப்பை எனும் அங்கீகாரம் கிடைக்காமல் தோற்றுவிட்டது லிவர்பூல். இப்போது எல்லா வீரர்களுமே உலகக்கோப்பையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சலா வெளியேறியபோது அவர் முகத்தில் இருந்த அந்தப் பதற்றம், கர்வஹால் வெளியேறியபோது இருந்த அந்தக் கண்ணீர் எல்லாமே கால்பந்து ரசிகர்களை உலகக்கோப்பைக்கு தயார்படுத்திக் கொண்டிருக்க, சாம்பியன்ஸ் கோப்பையை தொடர்ந்து 3-வது முறை ஜெயித்தது ரியர் மாட்ரிட்!