உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

யுவி திருமணம்!

நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகை கஸல் கீச் உடன் மணவாழ்க்கையில் இணைந்தார். இந்து முறைப்படியும், சீக்கிய முறைப்படியும் இருமுறை இவர்களது திருமணம் நடைபெற்றது. கபில்தேவ், பார்த்திவ் படேல், முரளி விஜய், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், நெக்ரா, முகமது கைஃப் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் மணமக்களை நேரில் வாழ்த்தினர். ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்துகளால் ஒரு வார காலத்திற்கு #YuvarajSingh பெயர் ட்ரெண்ட்டில் இடம்பிடித்து சாதனை படைத்தது. #நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்...

‘ட்ரெண்ட்’பெட்டி!

சதுரங்க ராஜா!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், ரஷ்யாவின் செர்ஜி கர்யாகினை வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கார்ல்சன் தொடர்ந்து 3-வது முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கார்ல்சனுக்குப் பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் 3.6 கோடியும், இரண்டாவது இடத்தைப் பிடித்த செர்ஜி கர்யாகினுக்கு ரூ. 3.2 கோடியும் வழங்கப்பட்டது. சம பலம் கொண்ட வீரர்கள் கலந்துகொண்டதால் இறுதியாட்டம் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. வெற்றிபெற்ற சிறிது நேரத்தில் #carlsen பெயர் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. #ராஜாதி ராஜன் இந்த ராஜா!

‘ட்ரெண்ட்’பெட்டி!

சச்சினின் இரண்டாவது இன்னிங்ஸ்!

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எழுதிய சுயசரிதை ‘Playing it my Way’ என்ற பெயரில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. விற்பனையில் லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்ததோடு, உலக அளவிலும் சாதனை படைத்திருந்த இந்தப் புத்தகம், மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது. 14-வது ரேமண்ட் குறுக்கெழுத்துப் புத்தக விருதில், சுயசரிதைப் பிரிவில் இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. “வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸிலும், ரசிகர்கள் எனக்கு ஆதரவளித்து வருகின்றனர்” என இது குறித்து சச்சின் நன்றி தெரிவித்துள்ளார். Playing it my Way மற்றும் சச்சின் பெயர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ட்ரெண்ட்டில் முதலிடம் பிடித்தன. #நீ ஆடு தல!

‘ட்ரெண்ட்’பெட்டி!

யோகாவைக் கௌரவித்த யுனெஸ்கோ!

ஐ.நா சபையின் முக்கிய அங்கமான யுனெஸ்கோ கடந்த வாரம் இந்தியக் கலையான யோகாவை, பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய பொக்கிஷங்கள் (Intangible world heritage) பட்டியலில் இணைத்து கெளரவித்துள்ளது. `ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கடைப்பிடிக்கப்படும்' என ஐ.நா சபை ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று க்யூபா மற்றும் பெரு நாட்டின் பாரம்பரிய நடனங்களும் கலாசாரப் பொக்கிஷங்கள் பட்டியலில் இந்த ஆண்டு இணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் உலக அளவிலான ட்விட்டர் ட்ரெண்ட்டில் #Yoga இடம்பெற்றது. #மகிழ்ச்சி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

மில்லியன் லைக்ஸ் அழகி!

சோசியல் மீடியாக்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அதிக லைக்குகள் வாங்கிய புகைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பட்டியலில் பாப் பாடகி, பாடலாசிரியர் மற்றும் நடிகை எனப் பல துறைகளில் சாதனை படைத்துவரும் செலினா கோம்ஸ் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். டாப்-10 புகைப்படங்களில் முதல் ஐந்து இடங்களை இவர் பிடித்ததோடு, மொத்தம் இவரது எட்டுப் புகைப்படங்கள் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படங்களாகத் தேர்வாகியுள்ளன. மீதி இரு இடங்களை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த செலினாவின் புகைப்படத்திற்குக் கிடைத்த லைக்ஸ் எவ்வளவு தெரியுமா? 5.9 மில்லியன் லைக்ஸ். #அம்மாடியோவ்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

சிறந்த நபர் பட்டியலில் மோடி!

உலகப் புகழ்பெற்ற இதழான ‘டைம்’ ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டிற்கான சிறந்த நபரைத் தேர்ந்தெடுக்கும். 2016-ம் ஆண்டிற்கான சிறந்த நபரைத் தேர்ந்தெடுக்க அந்த இதழ் நடத்திய வாக்கெடுப்பில், இந்தியப் பிரதமர் மோடி அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், ட்ரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகியோரைவிட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து அனைவரையும் வியக்க வைத்தார். இறுதி நிலவரப்படி மோடி 18% வாக்குகளும், ஒபாமா, ட்ரம்ப் ஆகியோர் 7% வாக்குகளையும் பெற்றிருந்தனர். ‘டைம்’ இதழாசிரியர்கள் இறுதி அறிவிப்பை வெளியிடுவர். இதன் காரணமாக உலக ட்ரெண்ட்டிலும் #Modi பெயர் இடம்பிடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. #மோடிடாவ்வ்வ்வ்வ்வ்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

இரும்பு மனுஷிக்கு இரங்கல்கள்!

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கட்சி பேதமின்றி இந்தியத் தலைவர்கள் நேரிலும், அறிக்கைகள் மூலமாகவும் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர். ஜெ. மறைவை அடுத்து குவிந்த லட்சக்கணக்கான ட்வீட்களால், இந்திய அளவிலான ட்ரெண்ட்டில் #puratchithalaivi #ironladyoftn #ammaforever உள்பட 15 டேக்குகள் இடம்பெற்றன. ஆழ்ந்த இரங்கல்கள்!

- ட்ரெண்டிங் பாண்டி