
பேஸ்புக் கவரிமான் ராஜாக்கள்!

நாம சின்னப்புள்ளையா இருந்தப்போ, `எதிர்காலத்துல லைக்குனு ஒரு பட்டன் இருக்கும், அதை அழுத்துறதுக்கு மனித இனம் கௌரவம் பார்க்கும்'னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனா இன்னைக்கு அது உண்மையாகிடுச்சு. `ஒரு ஆள் எத்தனை லைக் வாங்குகிறார்?' என்பதில் ஆரம்பித்து ஒருத்தருக்கு `லைக் போடலாமா வேண்டாமா'னு யோசிக்கிறதுவரை மக்கள் கௌரவம் பார்க்கிறது ஒருவகையில பார்த்தோம்னா செம்ம காமெடியா தோன்றும். இப்பேர்ப்பட்ட ஃபேஸ்புக் கௌரவ சாம்ராஜ்யத்தில் சாதாரண குடிமகனாகிய உங்க நட்பை ஒருத்தர் மதிக்கிறாரா இல்லையா என்பதை இப்படிலாம் தெரிஞ்சுக்கலாம் பாஸ்...

ஒருத்தரோட பதிவுகளால ஈர்க்கப்பட்டோ அல்லது உங்க ஃப்ரெண்டுனு நீங்க நினைச்சுக்கிட்டிருக்கிற நபருக்கோ ரிக்வெஸ்ட் அனுப்பினா, நீங்க ஒரு டம்மிபீஸ்னு நினைக்கிறவங்க பார்த்திட்டு உடனடியா டெலிட் பண்ணிடுவாங்க. இதைக்கூட ஒரு வகையில் சேர்த்துக்கலாம். ரிக்வெஸ்ட்ட கிடப்புல போட்டுவிட்டு இன்னைக்கோ நாளைக்கோ அக்செப்ட் பண்ணிக்குவாங்க என்கிற நம்பிக்கையிலயே வருஷக்கணக்கா தொங்கல்ல விடுறதெல்லாம் எதுல சேர்க்கிறது... ஹய்யோ ஹய்யோ!
சரி போனா போகுதுன்னு சிலர் அக்செப்ட் பண்ணிப்பாங்க. `நட்பில் இணைத்தமைக்கு நன்றிகள்!'னு நவில்ந்திட்டு நல்லபிள்ளையா லைக் போட ஆரம்பிப்பீங்க. அவர் காலைல `ஹாய்' சொல்ற பதவுகளிலிருந்து, `இன்னைக்கு மேய்ந்த டின்னர் இதுதான்'னு கடைசியா படுக்கப்போறதுவரைக்கும் போடுற சுமார் பத்து சுமார் பதிவுகளுக்கு லைக் லைக்கா அப்படியே கர்ணப்பிரபுவா அள்ளிக் கொட்டியிருப்பீங்க. ஆனா நீங்க கண்முழிச்சு ரிசர்ச் பண்ணிப் போடுற சூப்பர் பதிவுகளுக்கு அங்கே இருந்து துளி ரியாக்ஷன் வராது.
கொஞ்சநாள் லைக் போட்டு போட்டு போரடிச்சு ஒரு பொம்மைப் பட கமென்ட் போடுவீங்க. கண்டுக்கிட மாட்டாங்க. அப்புறமா பதிவிட்ட நல்ல கவிதை, கட்டுரையை பயங்கரமா விதவிதமா பாராட்டி ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பின்னூட்டம் போடுவீங்க. வரிசையா எல்லாத்துக்கும் லைக் போடுறவங்க, உங்க கமென்ட் வந்ததும் ஒரு லாங்க் ஜம்ப் பண்ணி கீழே ஒருத்தி `Hey why you always Writing in tamilya'னு போட்டிருக்கிறதுக்கு லைக் போட்டு கடகடனு ரிப்ளேயும் போட்ருப்பாய்ங்க.

சரி நீளமா போட்டதுனால லைக் பண்ணல போலிருக்கு, ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா போடுவோம்னு, `தங்கள் நகைச்சுவைக்கு எனது இந்த ஒரு லைக்கையே நூறு லைக்காகக் கொள்ளவும்'னு அறிவிஜீவியா கமென்ட் போட்ட கையோட சமணக்கால் போட்டு ரிப்ளேக்காகக் காத்திருப்பீங்க. டிக் டிக் டிக்... கமென்ட்டோட உங்களையும் ஒரேயடியா தூக்கி அடிச்சு ப்ளாக் பண்ணிடுவாய்ங்க. பின்னே கவிதைனு நினைச்சு அவங்க போட்டதுக்குப் போய் இப்படி கமென்ட் பண்ணுனா எப்படி பாஸ்?

அவங்க சார்ந்த மதத்தின் பண்டிகையின் போதோ பிறந்தநாளின்போதோ பொம்மை பொக்கேயோட வாழ்த்து அனுப்புவீங்க. அதுபோய் மெசஞ்சர் வாசல்லயே முட்டி நின்றும், உள்ளே விடாமலேயே துரத்திவிட்டிருப்பாய்ங்க. உங்களைக் கண்டுக்க வைக்க கடைசி முயற்சியா, `இது நண்பரின் அற்புதமான கவிதை. இது அன்பரின் அட்டகாசமான ஆர்ட்டிகள்'னு வரிசையா ஷேர் பண்ண ஆரம்பிப்பீங்க. ம்ஹூம். `நமக்கு வாய்த்த அடிமைகளில் ஒன்று நமது பெயரை நல்லா பிரபலப்படுத்துது'ங்கிற லெவல்லதான் அவங்க நினைச்சுக்கிட்டிருப்பாங்க..

இப்படி நீங்க ஆசையா பழகிப்பார்க்கிறதுக்காக பண்ணின வித்தை எல்லாத்தையும் கேர் பண்ணாதவங்க தான், திடீர்னு ஒருநாள், `ஹாய் ப்ரெண்ட்ஸ் திஸ் இஸ் மை ஷார்ட்ஃப்லிம்.காட் நேஷனல் அவார்ட். மகிழ்ச்சி'னு நீங்க ஸ்டேட்டஸ் போட்டதும், முதல் முறையாக போறபோக்குல ஒரு லைக்கை லைட்டா தட்டிட்டு போவாங்க. இனிமே உங்களையும் ஒரு ஆளா கவனிப்பாங்க அப்படீங்கறதுக்கான முதற்கட்ட சிக்னல் இது.
கொஞ்சநாள் கழிச்சு, `ஜாய்ண்ட் அஸ் ஆன் அசிஸ்டென்ட் டைரக்டர். தாங்யூ மணி சார்!'னு அப்லோடு செய்த போட்டோவுக்கு ஓடி வந்து ஹார்ட்டினை தட்டிட்டு ஓடியிருப்பாய்ங்க. அடுத்த நாளிலிருந்து உங்க ஸ்டேடஸ்க்கு அப்பப்போ அவிய்ங்ககிட்ட இருந்து லைக் விழும்னு எதிர்பார்க்கலாம்.

பொழுது இப்படியே போய்க்கிட்டு இருக்குறப்போ ஒரு பொன்மாலைப்பொழுதில், `இதான் என்னோட டெப்யூட் ஃபிலிம் போஸ்டர்'னு டெரரா ஒண்ணைப் போடுவீங்க. `கங்கிராட்ஸ் ப்ரோ'னு ஃபர்ஸ்ட் கமென்ட் பறந்து வரும். அப்புறம் ஒருநாள், `நாளை என்னோட படம் `மதியை மதி' ரிலீஸாகுது. எல்லோரும் தியேட்டர்ல போய்ப் பாருங்க ப்ளீஸ்'னு சொல்லியிருப்பீங்க. டோலர் அதை ஷேர் பண்ணுவாப்ல.

அடுத்த நாள் `குட் ரெஸ்பான்ஸ் கம்மிங்... தாங்ஸ் டூ மை டீம்'னு ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த செகண்டே மெசஞ்சர் க்ளிக் சவுண்ட் கொடுக்கும். `ஹாய்’ அனுப்பிருப்பாப்ல டோலர். பதில் `ஹாய்' அனுப்புற நீங்க, இதுவரை அவங்க உங்களுக்கு செஞ்சதை நீங்க இன்னொரு ஆளுக்குச் செய்ய ஆரம்பிப்பீங்க. அவங்க உங்க அளவுக்கு வளர்கிறவரை. எப்பூடி..!
- யூஜின்