
“ஐ நோ குக்கிங் யா!”
அம்மா, ஊருக்குப் போவது கொடுமை, அதனினும் கொடுமை நம்மை நம்பி இருவரை விட்டுச் செல்வது! டைனிங் டேபிளும் பெட்டும் மட்டுமே அறிந்த நமக்கு, கிச்சன் எந்த திசையில் இருக்கிறது என்பதே பக்கத்து வீட்டுக்காரர்களைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். வெள்ளைக் கலரெல்லாம் உப்பு, சிவப்புக் கலரெல்லாம் மிளகாய்ப் பொடி என்ற அபார அறிவு இருந்தாலே போதும் களத்தில் குதித்துவிடலாம். இறங்கிய பின்தான் தெரியும் அடுப்பைப் பற்ற வைக்க லைட்டர் வேண்டுமென்று!

அப்பவே அப்பா குறுக்கேவந்து நிற்பார். `நீ என்னோட இளவரசி. இந்த வேலைலாம் உனக்கெதுக்கு? நாம பீட்சா சொல்லிடலாம்'னு பக்குவமாய்த் தப்பிக்க முழம் போடுவார்.அதுக்கெல்லாம் அசரக்கூடாது. முந்தாநாள் சாப்பிட்ட உப்பு அதிகமா இருந்த புளிசோறு இப்போ வேலை செய்யணும். அதே ரோஷத்தோட, `டாட், நான் இன்னிக்கு சமைப்பேன். அதிலும் என் ஃபேவரைட் தயிர் சேமியாதான் பண்ணுவேன்'னு சத்தம் போட்டு அவர் வாயை அடைச்சுட்டு சமைக்க ஆரம்பிக்கணும்.
`தயிர் சேமியாவிற்கு தயிர் போடணுமா இல்ல பால் போடணுமா?'ல தொடங்கி, `சர்க்கரை போடணுமா இல்ல உப்பு போடணுமா?' வரைக்கும் சின்னச்சின்ன சந்தேகமெல்லாம் மூளைக்குள்ள கில்லி விளையாடும். விளையாடணும்!
உடனே நினைவுக்கு வரவேண்டிய நபர், இருக்கும் தோழிகளிலே வேற்று கிரகவாசியான... சுமாரான சமையல் அறிவுள்ள ஆல் இன் ஆல் அழகு ராணி. அன்னைக்குனு பார்த்துதான் பாழாய்ப்போன அவ போன் சுவிட்ச்டு ஆஃப், நாட் ரீச்சபிள்னு டிசைன் டிசைனா துதிபாடும். உடனே சோர்ந்துவிடக் கூடாது. அடுத்தபடியா இருக்கும் அரைகுறைக்கும் ட்ரை செய்யலாம்.
`அதிகாலையில ஏண்டி கால் பண்ற?'னு பத்துமணிக்கு மனசாட்சியே இல்லாம அவ சொல்றதையும் தாங்கிட்டு, `மச்சி, அடுத்த முறை மூவிக்கு நானே ஸ்பான்சர் பண்ணுறேன். இந்தத் தயிர் சேமியா எப்படி பண்ணனும்னு சொல்லேன்!'னு பல்லை இளிச்சுட்டு கேட்கணும்.
தயிர் சேமியா செய்ய அரிசி தேவையில்லங்கிற காமன் சென்ஸும் அவளுக்கு இல்லைங்கிறது அவ ரெஸிப்பி சொன்னதுக்கப்புறம்தான் தெரியும். யூ-டியூப், ப்ரௌசர்னு நாலா பக்கமும் ஐடியா தேடி, அலமாரில எல்லா இடத்திலும் பொருளைத் தேடி, கடைசியில் குண்டாவுல தயிர் சேமியாவைத் தேடுற நிலைமை வரணும். அப்பதான் நம்ம சமையல் முழுமை பெற்றிருக்குனு அர்த்தம். கடைசியில் எடுத்து, எந்த உயிரினத்திற்கும் பாதிப்பு வராத வகையில் ஃபிளஷரில் ஃபிளஷ் செய்துவிட்டு பிரிட்டானியா பிஸ்கட்டை எடுத்து அழகாக தட்டில் அலங்கரித்து அதனைப் பரிமாறவும். இளவரசியின் ரெஸிப்பி தயார்..!
டாடி பாவம் பொல்லாதது!
- செ.சங்கீதா