ராஜ்குமார் ஸ்தபதி யூமா வாசுகி
##~## |
சந்திரனில் நின்றபடி... ஒரு முதியவர் கீழே பார்த்தார். பூமியில் ஒரு காடு தெரிந்தது. காட்டில் ஒரு முயலும் ஒரு குரங்கும் ஒரு நரியும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன. அவை மூன்றும் ஒரே இடத்தில் வசித்தன. இதைப் பார்த்து மனம் மகிழ்ந்தார் அந்த முதியவர்.
இந்த மூன்று மிருகங்களில் எது மிகவும் கருணையுடையது என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்தார் முதியவர்.
பூமியை நோக்கி அவர் ஒரு பறக்கும்தட்டில் புறப்பட்டார். பறக்கும்தட்டு, காட்டில் ஓர் இடத்தில் வந்து இறங்கியது. அடர்ந்த புதர்ப் பகுதியில் பறக்கும்தட்டை ஒளித்துவைத்துவிட்டு, அந்த முதியவர் ஒரு பிச்சைக்காரனின் வேடம் அணிந்துகொண்டார். ஒரு தடியை ஊன்றியபடி நாய், குரங்கு, முயல் வசிக்கும் இடத்திற்கு நொண்டிநொண்டிச் சென்றார்.
''உதவி செய்யுங்கள், பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்... பசிக்கிறது!'' என்றார் முதியவர். குரங்கு உடனே, ஓர் உயரமான மரத்தில் இருந்து கொஞ்சம் பழங்களைக் கொண்டுவந்து முதியவரிடம் கொடுத்தது. நரி, ஆற்றில் இருந்து கொஞ்சம் மீன்களைப் பிடித்து வந்து கொடுத்தது. அவை இரண்டும் தங்களால் இயன்றதைச் செய்தபோது, முயல் மிகவும் வருந்தியது.
'இனி நான் எதைக் கொடுத்து இந்தப் பிச்சைக்காரரைத் திருப்திப்படுத்துவது? அவர் மிகவும் பசியுடன் இருக்கிறாரே! எதுவும் கொடுக்காமல் இருப்பது சரியல்லவே!’ என்று நினைத்துக் குழம்பியது முயல்.

முயலுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அது, குரங்கிடம் கொஞ்சம் விறகு கொண்டுவரும்படி சொன்னது. நரியிடம் கொஞ்சம் தீ கொண்டுவரும்படி சொன்னது. குரங்கு விறகையும், நரி நெருப்பையும் கொண்டுவந்தன. பிறகு, அங்கே ஓர் இடத்தில் நன்றாகத் தீ மூட்டிய முயல், முதியவரிடம் சொன்னது:
''பெரியவரே, உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. நான் இப்போது இந்தத் தீயில் குதிக்கப்போகிறேன். நான் நன்றாக வெந்ததும் என்னைத் தின்று ப்பசியாறுங்கள்.'' என்றது.
முயல் தீயை நோக்கித் தாவ முற்பட்டபோது, முதியவர் தன் உண்மையான உருவத்தில் தோன்றினார். அவர் சொன்னார்...
''மூன்று விலங்குகளில் மிகவும் கருணையுடையது முயல்தான். உன்னை நான் எனக்குத் துணையாக சந்திரனுக்கு அழைத்துச் செல் கிறேன்.''
அப்படியே... முயலை சந்திரனுக்கு அழைத்துச் சென்றார். அந்த முயல் இன்றும் சந்திரனில் மிக மிக உயர்ந்த பதவியில் இருக்கிறது.