ஸ்பெஷல்
Published:Updated:

கொக்கும் Duckகும்...

ஹரன் பாவண்ணன்

##~##

ஓட்டிவந்த வாத்துகளை குட்டை ஓரமாக மேயவிட்ட பிறகு, மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான் வாத்துக்காரன். ஆற்றின் கரைதான் குட்டையாகச் சுருங்கித் தேங்கி இருந்தது. சூளைக்காரர்கள் மண்ணுக்காகத் தோண்டிய பள்ளம், பெரிய குட்டையாக உருமாறி இருந்தது. குட்டை ஓரமாக நாணல் புதர்கள் அடர்ந்திருந்தன. இரண்டு பெரிய நாவல் மரங்கள். புதருக்கு அடியில், குட்டை நீர் குளுமையாக இருந்தது. தண்ணீரைக் கண்ட ஆனந்தத்தில் 'வக் வக்’ என்று உல்லாசமாகக் கூவியபடி, இறக்கைகளை அடித்தபடி ஒவ்வோர் வாத்தும் ஒவ்வோர் இடத்தை நோக்கி ஓடி விளையாடின.

பசியைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம்... இந்த வெப்பத்தைத் தாங்கவே முடிய வில்லை. வாத்துக்காரன் வெகு தொலைவுக்கு விரட்டிவந்ததில் மயக்கமே வந்துவிடும்போல இருந்தது. குட்டையில் இறங்கி... கழுத்து வரை தண்ணீரில் அமிழ்ந்து, சில கணங்களுக்குப் பிறகுதான் உடல் வெப்பம் அடங்கியது.

வேருக்கு அடியில் மெதுவாக அலகை விட்டுத் துழாவி, புழுக்களை இழுத்துத் தின்றன வாத்துகள். நெருங்கி வரும் அலகைப் பார்க்கும்போது... தன்னை நோக்கி ஒரு பெரிய பாறை உருண்டு வருவது  போல, புழுக்கள் பதறிச் சுருண்டன. அச்சத் தால் ஒவ்வொரு புழுவும் உடல் நடுங்கி, ஒளிந்துகொள்ளப் பார்த்தன. ஆனால், வாத்துகளின் பார்வையில் இருந்து தப்பவில்லை.

பசி மயக்கமும் உடல் வெப்பமும் தணிந்த பிறகுதான் வாத்துகள் ஒரு நிதானத்துக்கு வந்தன. ஒவ்வொன்றும் குட்டையிலே... ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்தை நோக்கி நீந்தி, பொழுதைப் போக்கின. தண்ணீரின் குளுமை இதமாக இருந்தது. அமைதியாக அந்தக் குளுமையில் லயித்தபடி... கண்களை மூடி உட்கார்ந்திருந்தது ஒரு வாத்து.

கொக்கும் Duckகும்...

எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியவில்லை... விசித்திரமான ஓர் ஒலியைக் கேட்டு சுய நினைவுக்குத் திரும்பியது. அக்கம் பக்கம் பார்வையைச் சுழற்றியது. புதரின் நிழல் ஓரமாக கொக்கு ஒன்று நின்றிருந்தது.

''என்ன, மீன்கள் ஏதாவது கிடைத்ததா?'' எனக் கொக்கைப் பார்த்துக் கேட்டது வாத்து.

''பரவாயில்லை, நான்கு சின்ன மீன்கள் கிடைத்தன.'' என்ற கொக்கின் குரலில் மனக்குறை தென்பட்டது.

''வயிறு நிறையவில்லையா? ஏன் வாட்டமாகக் காணப்படுகிறாய்?'' அசைந்து அசைந்து கொக்கின் பக்கமாக நெருங்கிச் சென்று கேட்டது வாத்து.

''ஆனந்தமாக இருப்பதற்கு, மீன்கள் மட்டும் கிடைத்தால் போதுமா, நீயே சொல்?''

கொக்கு இப்படித் தன்னைத் திருப்பிக் கேட்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை வாத்து. ஆச்சரியத்தில் கழுத்தை வளைத்துப் பார்த்தது. ''வேறு என்ன வேண்டும்?''

''நீ சேற்றில் அமிழ்ந்துகிடக்கிறாயே, அதுபோல ஒரு ஆனந்தம் எங்கேயாவது கிடைக்குமா சொல்?'' கொக்கின் குரலில் ஆற்றாமை வெளிப்பட்டது. தன் அலகால் நாணல் செடியைத் தள்ளியது.

''நீயும் அப்படி இருக்கலாமே... உனக்குத் தெரியாத குளமா... ஏரியா... குட்டையா? எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக இருக்கலாமே'' என்றது வாத்து.

''என்ன சுதந்திரமோ, போ! அடிக்கிற வெயிலில் உலகத்திலே எங்கும் தண்ணீரே இல்லாதபோது... எங்கே போய் நிற்க முடியும், யோசித்துப் பார்! பறந்து பறந்து தேடி, உடலே அலுத்துப்போய்விட்டது எனக்கு.''

கொக்கைப் பார்க்கப் பார்க்கப் பாவமாக இருந்தது. தன் மீது உள்ள இரக்கத்தாலும், தம் தேவையை உணர்ந்திருந்ததாலும்தான் வாத்துக்காரன் இவ்வளவு தொலைவு அழைத்து வந்துள்ளான் என்பதை அப்போது வாத்து புரிந்துகொண்டது.

கொக்கும் Duckகும்...

''வாயேன், இங்கே என் பக்கத்தில் வந்து நீயும் உட்கார்ந்துகொள்!'' - அசைந்து, நகர்ந்து கொக்குக்கு வழிவிட்டது வாத்து.

''காலை மடித்தும் வளைத்தும் நீ உட்காருகிற மாதிரி என்னால் உட்கார முடியாதே'' - வாத்தை ஏக்கமாகப் பார்த்தது கொக்கு.

''உன்னைப் போலப் பறக்க முடியவில்லையே என்று நான் ஏங்காத நாளே இல்லை. நீ என்னைப் போல காலை மடக்க முடியவில்லை என்கிறாய், நல்ல விசித்திரம்தான், போ. முடிகிறதோ இல்லையோ, முயற்சி செய்து பார்க்கலாமே'' இறக்கையைத் தண்ணீரில் அடித்தபடி சொன்னது வாத்து.

அதைக் கேட்க கேட்க, கொக்குக்கும் ஆசை பீறிட்டு வந்தது. சகித்துக்கொள்ள முடியாத வெப்பம் சட்டென்று முடிவெடுக்கத் தூண்டியது. ''அப்படியா சொல்கிறாய், சரி'' என்றபடி குட்டையில் இறங்கியது.

அரையடித் தண்ணீர்கூட இல்லை. அதுவும், ஒரே சேறும் சகதியுமாக இருந்தது. கால் பங்கு கால்கூட நனையவில்லை. ஏமாற்றத்தில் நெஞ்சம் வெடித்துவிடும் போல இருந்தது. இவ்வளவு குறைவான தண்ணீரில் கழுத்தளவு வரை உடலைக் குறுக்கிக்கொண்டு நிற்கிற வாத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.

''அப்படியே காலை மடக்கி உட்கார முடியுமா பார்!'' வாத்து சொன்ன ஆலோசனைப்படி, குட்டையில் இன்னும் ஆழமான இடம் இருக்குமா என்று தேடியது கொக்கு. மெதுவாக கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து, ஓர் இடத்தை நோக்கி நகர்ந்தது. சேற்றில் அமிழ்ந்துபோகும் கால்களை, ஒவ்வொரு முறையும் உருவி எடுக்கும்போது அச்சம் கவ்வியது. குளுமையில் உடலைக் கிடத்த வேண்டும் என்கிற வேகம்தான் அதைத் தூண்டியபடி இருந்தது.

ஓரளவு பரவாயில்லை என்கிற இடமாகப் பார்த்து கால்களை ஊன்றிக்கொண்டு, உடலை வளைத்துத் தண்ணீரில் அமிழ்த்தியது. இறகுகளைத் தாண்டி, அடிவயிற்றிலும் உடலிலும் ஈரம் பரவியபோது, அதன் உடல் சிலிர்த்தது. அந்தச் சிலிர்ப்பை ஒரு கணம் கண்களை மூடி அனுபவித்தது.

கொக்கும் Duckகும்...

''என்ன, எப்படி இருக்கிறது?'' - வாத்தின் கேள்வி அதன் காதிலே விழுந்ததாகவே தெரியவில்லை. அரை மயக்கத்தில் கண்களைத் திறந்து, வாத்தைப் பார்த்து ஒரு கணம் புன்னகைத்தது.

வெகு நேரத்துக்குப் பிறகு, வாத்துக்காரனின் குரலைக் கேட்டதுமே... வாத்து, குட்டையைவிட்டு வெளியேறியது. ''வரட்டுமா... வரட்டுமா...'' என்று பல முறை சத்தம் போட்டும்கூட கொக்கு தன் கண்களைத் திறக்கவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக வாத்து கிளம்பிச் சென்று விட்டது.

கொக்கு கண் விழித்தபோது... பொழுது சாய்ந்திருந்தது. சுற்றிலும் யாரும் தென்படவில்லை. இப்படி சுயநினைவே இல்லாமல் இருந்து விட்டோமே என்று நினைத்து கூச்சத்தில் நெளிந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தன் உடலில் படர்ந்த குளுமையால் பரவசமாக எழுந்தது. சேற்றில் அமிழ்ந்த காலை விடுவித்துக்கொள்ள முடிய வில்லை.

மிகவும் சிரமப்பட்டு ஒரு காலை வெளியே எடுத்தால், இன்னொரு கால் சேற்றில் அமிழ்ந்தது. ஒரு கணம் கொக்கு அச்சத்தில் மூழ்கியது. வாத்து இருந்தாலாவது ஏதாவது ஆலோசனை சொல்லும் என்று நினைத்தது. இறங் கியபோது வராத சிக்கல், ஏறும்போது எப்படி வந்தது என்று புரியாமல் குழம்பியது. எப்படியோ முயற்சிசெய்து ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து குட்டையைவிட்டு வெளியே வந்ததும், புதரிலே சாய்ந்து மூச்சு வாங்கியது. வாத்து எங்காவது தென்படுகிறதா என்று சுற்றிச்சுற்றிப் பார்த்தது. பிறகு, தள்ளாடியபடியே எழுந்து புதரைவிட்டு வெளியேறியது.