மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி

அனுபவங்கள் பேசுகின்றன!

பேராசை... பெருநஷ்டம்

நான் ஷாப்பிங் போனபோது பிளாட்பாரம் வியாபாரி ஒருவர், ஷர்ட் வெறும் 50 ரூபாய், பல டிசைன்ல இருக்கு...' என்று கூவிக் கூவி விற்றார். என் ஹஸ்பண்ட் 'வேண்டாம் வாங்காதே' என்று சொல்லியும், 250 ரூபாய்க்கு ஐந்து சட்டைகள் வாங்கினேன். வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தால் சட்டைகள் ஆங்காங்கே கிழிந்தும், சைஸ் 42 என்று வாங்கியது, 38 ஆகவும் இருந்தது.

ஒரு புதிய ஷர்ட்டின் விலை குறைந்தபட்சம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்திருந்தும், அதீத ஆசையில் ஏமாந்து போனேன்; 250 ரூபாய் தண்டம் அழுது இதை புரிந்து கொண்டேன்.

- எஸ்.புனிதா, புதுச்சேரி

அனுபவங்கள் பேசுகின்றன!

கதவைத்திறந்தேன்... அழுகை பறந்தது!

சமீபத்தில் தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்தேன். நவீன பேருந்து என்பதால் பயணம் ரம்மியமாகத் தொடங்கியது. சிறிது தூரம் சென்றதும், பேருந்தில் இருந்த குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தது. சிலர், குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு அம்மாவிடம் கூறினர். அந்தக் குழந்தையின் தாயோ, `இப்போதுதான் கொடுத்தேன்...' என்றார். ஆக, குழந்தையின் அழுகைக்கான காரணம், யாருக்கும் புரிய வில்லை.

அப்போது பேருந்தில் இருந்த ஒரு பெரியவர், `ஜன்னல் எல்லாம் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கிறது. இதனால் பெரியவர்களான நமக்கே மூச்சு முட்டும்போது, குழந்தை தவிக்கத்தானே செய்யும்!' என்றார். உடனே, ஜன்னல்களைத் திறக்க முயன்றோம். ஆனால், முடிய வில்லை. ஒருவழியாக அந்தக் குழந்தை இருந்த இருக்கையின் ஜன்னலை மட்டும் சிரமப்பட்டு திறந்தோம். அதன்பிறகே அழுகை நின்றது. நவீனம் என்பது நம்மை அவதிக்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டும்.

-ஆர்.பஞ்சவர்ணம், போளூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

பஸ்ஸில் இடம் பிடிக்கையில், உஷார்!

கையில் இருக்கும் பை, கைக்குட்டை போன்றவற்றை ஜன்னல் வழியாக பேருந்து இருக்கைகளில் போட்டு பலர் இடம் பிடிப்பதுண்டு. சிலர் குழந்தைகளைக்கூட ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பி பேருந்தில் இடம் பிடிப்பார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர் பேருந்தில் இடம்பிடிக்க கையில் வைத்திருந்த செல்போனை இருக்கையில் போட்டார். படிக்கட்டு வழியாக உள்ளே சென்று பார்த்தபோது, இருக்கையில் செல்போனும் இல்லை... ஸீட்டும் கிடைக்கவில்லை. பேருந்து முழுவதும் தேடிப்பார்த்தும் செல்போன் கிடைக்காமல், வேதனையுடன் வீட்டுக்கு வந்தார்.

பேருந்தில் கூட்டமாக இருந்தால், அடுத்த பேருந்தில் போகலாம். அவசரம் என்றால், சிறிது நேரம் பேருந்தில் நின்றபடி பயணம் செய்யலாம். இடம்பிடிப்பதற்காக முண்டியடித்து, விலையுயர்ந்த பொருட்களை இழக்காதீர்கள்.

- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

அனுபவங்கள் பேசுகின்றன!

ஆயிரம் காலத்துப் பயிர்!

என் உறவினர் ஒருவரின் மகளை அத்தைப் பையனுக்கு திருமணம் செய்துவைக்க பேசினார்கள். பையனுக்கு நல்ல வசதி இருப்பதால், மகளைக் கேட்காமலேயே பெண்ணின் பெற்றோர் நிச்சயம் செய்ய முடிவெடுத்தனர்.

பையன் பெரிய ‘குடிமகன்’ என்பது தெரிந்தவுடன், அந்தப் பெண் `எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை. அவரை எனக்கு கட்டி வைத்தால் எது நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு' என்று உறுதியாகச் சொன்னாள்.

இதைக் கேட்ட உறவினர்கள் ஒன்று கூடி திருமணத்தைத் தடுத்துவிட்டனர். பையனின் பெற்றோரோ, ‘கல்யாணம் முடிந்தால் திருந்திவிடுவான்' என்று சப்பைக்கட்டு கட்டினர். ஆனால், எடுபடவில்லை. இப்போது என் உறவினர் மகளுக்கு வேறு மாப்பிள்ளை தேடுகின்றனர்.

பெற்றோர்களே, பையனிடம் கெட்ட பழக்க வழக்கங்கள் இருந்தால் அவனைத் திருத்தி சமுதாயத்துக்குக் காட்டுங்கள். மாறாக, ஒரு பெண்ணின் வாழ்க்கையை அடகு வைக்காதீர் கள். ஆயிரம் காலத்துப் பயிரை ஆறு மாதத்தில் அழித்து விடாதீர்கள்.

- ஆர்.திவ்யா, மதுரை