Published:Updated:

வெள்ளி நிலம் - 3

வெள்ளி நிலம் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 3

ஜெயமோகன், ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி

முன்கதை:

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ‘ஸ்கிஜின் ஸ்போ’ என்ற மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்படும் ஒரு புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலை, நள்ளிரவில் திருடிச்செல்ல வந்த ஒரு கும்பல் விரட்டியடிக்கப்படுகிறது. பிறகு...

வெள்ளி நிலம் - 3

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள உயரமான இடங்களில் ஒன்று, வாகமண். இது, கேரள மாநிலத்தில் உள்ளது. கேரளத்தில் மிக அதிகமாக மழை பொழியும் இடமும் இதுதான். மலை உச்சி ஆதலால், இந்தப் பகுதி எப்போதும் மேகம் நிறைந்திருக்கும்.

பொதுவாக மலை உச்சிகளில் நாம் இருக்கும்போது, மலை மேல் இருக்கிறோம் என்பதே தெரியாது. நம்மைச் சுற்றி சின்னச் சின்ன குன்றுகள்தான் தெரியும். உண்மையில் அவை மிகப்பெரிய மலைகளின் உச்சிகள்.

நெடுங்காலமாக மழை விழுவதால் மலை உச்சிகளில் உள்ள மண் கரைந்து கீழே சென்றிருக்கும். பெரும்பாலான இடங்களில் மூன்றடி, நான்கடி ஆழத்துக்குத்தான் மண் இருக்கும். அதற்கடியில் கடுமையான பாறைதான். எனவே, மலை உச்சிகளில் மரங்கள் வளராது. அவை பசும்புல் மூடியவையாக இருக்கும். மலைகளின் மடிப்புகளில் மட்டும்தான் குட்டையான மரங்கள் இருக்கும்.

நவம்பர் மாதம் என்பதால் நல்ல மழை. வானில் இருந்து ஒரு பெரிய திரையைக் கட்டி தொங்கவிட்டது போல மழை தெரிந்தது. ஊதல் காற்றில் அந்தத் திரை ஆடியது. அந்தத் திரையைக் கிழித்தபடி ஒரு லேண்ட்ரோவர் கார் சென்றது. ராணுவ வண்டிகளுக்கு உரிய பச்சைநிற கார்.

காரின் வெளிச்சம் மழைத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்தது. கண்ணாடிக்கு மேல் துடைப்பான் ஓடிக்கொண்டே இருந்தது. மழை காரணமாக அந்தி போல இருட்டு. காருக்குள் 40 வயதில் ஒருவர் இருந்தார். ராணுவ அதிகாரிகளுக்குரிய வகையில் முடியை குட்டையாக வெட்டி இருந்தார். கூர்மையான மீசை. அது, பகத்சிங் மீசை போலத் தெரிந்தது. ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே வந்தவர், “இங்குதான்” என்றார்.

அங்கே ‘வாகமண் ராணுவப் பயிற்சி நிலையம்’ என்ற சிறிய பலகை இருந்தது. முள்கம்பி வேலி போடப்பட்டு, ஒரு பெரிய மலையே வளைக்கப்பட்டிருந்தது. ஓட்டுநர் இறங்கி, அங்கிருந்த வாசலை நோக்கிச் சென்றார்.

அந்த வாசல் நீண்ட மூங்கிலால் தடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் மட்டுமே அமரக்கூடிய சிறிய தகரக் கொட்டகைக்குள் ஒரு காவலர் இருந்தார். வந்திருப்பவர் ராணுவ அதிகாரி என்று தெரிந்ததும், சல்யூட் அடித்து  கதவைத் திறந்தார். கார் உள்ளே சென்றது.

பச்சைக் குவியல்களாக புல் நிறைந்து தெரிந்தன சிறிய குன்றுகள். அவற்றின் நடுவே வண்டிகளின் இரு சக்கரங்களால் உருவான தடம், சிவந்த தண்டவாளம்போல இருந்தது. கார், அலைகளில் ஆடும் படகுபோல மேலேறிச் சென்றது.
எங்கும் பச்சை நிறம். அதன் மேல் அலை அலையாக மழை பெய்தது. மழைக்குள் மஞ்சள் நிறத்தில் மிகப்பெரிய நாய்க்குடை போல ஒன்று தெரிந்தது. “அங்குதான்” என்றார் அந்த ராணுவ அதிகாரி. கார் மழையைக் கிழித்துச் சென்று நின்றது.

ராணுவ அதிகாரி பெரிய மழைக்கோட்டை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறந்து வெளிவந்தார். அவரது மழைக்கோட்டின் மீது மழை, மணலை வாரி வீசியது போல சத்தத்துடன் பெய்தது. தொப்பியைச் சற்றுத் தாழ்த்திவிட்டு, கைகளை சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு நடந்தார்.

அந்தப் பெரிய மஞ்சள் நாய்க்குடை தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. அது ஒரு கூடாரம். மழையுடன் வீசிய காற்றில், அது பழுத்த இலை போல ஆடிக்கொண்டிருந்தது. அங்கிருந்து ஓர் இளைஞன் ஓடிவந்தான். அவன் ராணுவ உடை அணிந்திருந்தான். மழையில் அந்த உடை நனைந்து ஒட்டிக்கொண்டிருந்தது.

அவன் அருகே வந்து, “மன்னிக்கவும். இது ராணுவ பயிற்சிக் களம்” என்றான். அதிகாரி தனது அடையாள அட்டையைக் காட்டியதும் விறைப்பாக நின்று சல்யூட் அடித்தான்.

‘‘பயிற்சியாளர் பாண்டியன் இருக்கிறாரா?” என்று அந்த அதிகாரி கேட்டார்.

“ஆம்” என்றான் அந்த இளைஞன்.

“அவரிடம் அழைத்துச் செல்” என்றார்.

மழைக்குள் அவர்கள் இருவரும் நடந்தனர். மஞ்சள் நிறக் கூடாரம் அருகே சென்றதும், இளைஞன் ஓடிச்சென்று உள்ளே நுழைந்தான். முழந்தாளிட்டு மட்டுமே நுழையும் அளவுக்குதான் அந்த கூடாரத்தின் உயரம். ஆனால், அதற்குள் ஏழெட்டு பேர் வசதியாக அமரும் அளவு இடம் இருந்தது.

கூடாரத்துக்குள் ஆறு பேர் கால் மடித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் நடுவே ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு எரிந்ததுக்கொண்டிருந்தது. அதில், சூடான டீ கொதித்ததுக்கொண்டிருந்தது. அவர்களில் ஒருவன் 30 வயதானவன். அவன்தான் கமாண்டர் பாண்டியன். மற்றவர்கள் அவனிடம் பயிற்சி பெறும் மாணவர்கள்.

உள்ளே சென்ற இளைஞன், ராணுவ உயரதிகாரி வந்திருப்பதைச் சொன்னான். பாண்டியன் குனிந்து வெளியே வந்து, சல்யூட் அடித்தான். சிரித்தபடி, “நலமாக இருக்கிறீர்களா கர்னல்?” என்று கேட்டான்.

கர்னல் மகேந்திரன், “இதுவரைக்கும் நலமாகவே இருக்கிறேன்” என்றபின், குனிந்து உள்ளே பார்த்து, “என்ன டீயா?” என்றார்.

“ஆமாம்! டீ சாப்பிடுகிறீர்களா?” என்று பாண்டியன் கேட்டான்.

“இல்லை, நாம் சற்றுப் பேச வேண்டும்” என்றார் கர்னல் மகேந்திரன்.

அவர் முக்கியமாக எதற்கோ வந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட பாண்டியன், ‘‘ஒரு பயிற்சி தொடங்கவிருக்கிறது. அதை முடித்துவிட்டு கிளம்புவோம்” என்றான்.

வெள்ளி நிலம் - 3

“சரி” என்றார் கர்னல் மகேந்திரன்.

பாண்டியன் விசிலை ஊதினான். டீ குடித்தபின் ஆறு இளைஞர்களும் தங்கள் கோப்பைகளை வைத்துவிட்டு எழுந்தார்கள். வரிசையாக புல்வெளியில் நின்றனர்.

அவர்களுக்கு முன்னால் மிகப்பெரிய வாளால், அந்த மலையைத் துண்டாக வெட்டியது போல செங்குத்தான பள்ளம் இருந்தது. குனிந்து பார்த்தால், கை கால் நடுங்கும். மழை பெய்த தண்ணீர், மலையின் இடுக்கு வழியாக வந்து, பத்து, பன்னிரண்டு சிறிய அருவிகளாக அந்தப் பள்ளத்துக்குள் விழுந்துகொண்டிருந்தது.மிக ஆழத்தில் நின்றிருந்த மரங்களின் மேல் தண்ணீர் விழுந்து, மிகப்பெரிய இரைச்சல் மேலே வந்தது.

‘‘பறக்கப்போகிறார்களா?” என்றார் கர்னல் மகேந்திரன்.

‘‘ஆம்” என்றான் பாண்டியன்.

“பறப்பதற்கு மிக மோசமான பருவநிலை!”

“மோசமான பருவநிலைகளில் பறப்பதற்கான பயிற்சி இது” என்று பாண்டியன் சொன்னான்.

பாண்டியன் ஆணைகளைப் பிறப்பித்தான். பத்து, ஒன்பது என்று எண்ணி... ஒன்று, பூஜ்ஜியம் என்று முடித்தான்.

அங்கு நின்றிருந்த ஆறு பேரும் விரைவாக ஓடிச்சென்று, அந்தப் பள்ளத்தில் தாவினர். கூடவே,  தங்கள் வலது பக்கம் இடுப்பு அருகே இருந்த கயிற்றை இழுத்தனர். அவர்களின் உடலுடன் கட்டப்பட்டிருந்த அலுமினிய குழாய் ஒன்று சிவந்த ஒளியுடன் வெடித்தது. அதிலிருந்து நீலநிறமான புகை பீறிட்டு, பின்னால் சுருண்டு வந்தது. அது ஒரு ராக்கெட்.

அந்த ராக்கெட்டின் விசையால் அவர்கள் முன்னோக்கித் தள்ளப்பட்டார்கள். இரு கைகளையும் நீட்டியபடி வானில் எழுந்தார்கள். பறவைகள் போல வளைந்து கீழிறங்க ஆரம்பித்ததும், தங்கள் இடது கையால் இடுப்பில் இருந்த ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்தார்கள். அவர்கள் உடலுடன் கட்டப்பட்டிருந்த பை திறந்து, உள்ளிருந்து பாரசூட்டுகள் விரிந்தன.

அவை உயர்தர நைலானால் செய்யப்பட்டவை. மிகவும் எடை குறைந்தவை. காற்றின் அழுத்தத்தால், அவை குமிழிகள் போல விரிந்து விரிந்து மிகப்பெரிதாக மாறின. அவற்றின் மேல் மழை அறைந்தபோதும் அவை சுருங்கவில்லை.
மஞ்சள், இளம்சிவப்பு போன்ற பளிச்சிடும் வண்ணங்களில் அவை இருந்தன. கீழிருந்த பச்சைக் காட்டுக்குள் அவர்கள் விழுந்து மறைந்தாலும்கூட கண்டுபிடிப்பதற்கு அந்த பளிச்சென்ற நிறங்கள் தேவை. அவை பெரிய பூக்களைப் போல விரிவதாக கர்னல் மகேந்திரன் நினைத்தார். ஆறு பெரிய பூக்களும் காற்றில் சுழன்று மெதுவாக கீழிறங்க ஆரம்பித்தன.

“நாம் செல்வோம். அவர்கள் கீழே பன்னிமடை என்னும் ஊரில் இறங்குவார்கள்” என்றான் பாண்டியன்.

வெள்ளி நிலம் - 3

‘‘உங்கள் பயிற்சிகளை முடித்துக் கொள்ளவேண்டிய காலம் வந்துவிட்டது கேப்டன்” என்றார் மகேந்திரன்.

‘‘நீங்கள் வந்தபோதே புரிந்தது!”

கர்னல் மகேந்திரன் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். “இமாச்சலபிரதேசத்தில் ஸ்பிட்டி சமவெளியில் ஒரு சிறிய நிகழ்ச்சி...”

“சிறிய நிகழ்ச்சியில் இருந்துதான் எல்லாம் தொடங்குகின்றன” என்றான் பாண்டியன் சிரித்தபடி.

“ஆம், அங்கே ஒரு பழைய மடாலயம் இருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன் ஒரு பூகம்பத்தில் அது அழிந்துவிட்டது. இப்போதுதான் சீரமைக்க ஆரம்பித்தார்கள். பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது ஒரு மம்மி கிடைத்தது.”

“மம்மியா… பௌத்தர்களுக்கு மம்மி செய்யும் வழக்கம் இல்லையே” என்றான் பாண்டியன்.

“சாதாரணமாக செய்வது இல்லை. இந்த மம்மி, ஆயிரம் வருடம் பழமையானது. அதன் தோலில் ஒரு சிறு துளியை கொண்டுவந்து வேதியியல் ஆய்வகத்தில் ஆராய்ந்தோம். அதைப் புதைத்தது கி.பி. பத்தாம் நூற்றாண்டில் என்று தெரியவந்தது” என்றார் கர்னல் மகேந்திரன்.

“ஆச்சர்யம்தான்” என்றார் பாண்டியன்.

‘‘அந்த மம்மியை உடனடியாக டெல்லிக்குக் கொண்டுவர முயற்சி செய்தோம். ஆனால், அது மதம் சார்ந்தது. அங்கிருந்து விலக்கக் கூடாது என்று மதத் தலைவர்கள் தடுக்கிறார்கள்.”

“ஆம்! வழிபாட்டுக்குரிய பொருட்கள் விஷயத்தில் அரசு தலையிட முடியாது” என்றான் பாண்டியன்.

“அது ஒரு சாதாரண விஷயம் என்றுதான் நினைத்தோம். ஆனால், அந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்ட அன்றே அதைத் திருடிச்செல்ல ஒரு முயற்சி நடந்தது.”

“எல்லா தொல்பொருட்களுக்கும் ஐரோப்பாவில் மிகப்பெரிய விலை இருக்கிறது” என்றான் பாண்டியன்.

“அந்த மம்மியைத் திருட வந்தவர்கள் சாதாரணத் திருடர்கள் அல்ல!”

பாண்டியன் ‘என்ன?’ என்பது போல பார்த்தான்.

“மம்மி கிடைத்த அன்றே வந்திருக்கிறார்கள். அதுதான் ஆச்சர் யமாக இருக்கிறது. சாதாரண திருடர்களுக்கு மம்மி கிடைத்த தகவல் தெரிவதற்கே ஆறு மாதங்கள் ஆகும். மிகப்பெரிய உளவு வலை  உள்ளவர்களால்தான் அன்றே அந்தத் தகவலை தெரிந்துகொள்ள முடியும்” என்றார் மகேந்திரன்.

“அப்படியென்றால் அது யார்?” என்றான் பாண்டியன்.

மகேந்திரன் பையிலிருந்து தனது கைபேசியை எடுத்து, தொட்டு இயக்கினார். அதில் ஒரு படம் தெரிந்தது. சுமார் 60 வயதான ஒரு சீன ராணுவ அதிகாரியின் முகம். “இவரைத் தெரிகிறதா?” என்றார்.

பாண்டியன் பார்த்துவிட்டு, “இல்லை” என்றான்.

‘‘இவர் பெயர் லீ பெங் ஸூ” என்றபடி மகேந்திரன், ஆங்கில எழுத்துக்களில் அந்தப் பெயரைக் காட்டினார் [li peng xue]. “சீனாவின் முதன்மை உளவுத் துறை விற்பன்னர்களில் ஒருவர்” என்றார்.

வெள்ளி நிலம் - 3

பாண்டியன் தலையசைத்தான். மகேந்திரன் சொன்னார். “இவரைப் பற்றிய தகவல்கள் குறைவாகவே கிடைக்கின்றன. சீனாவில் இருக்கும் நமது உளவாளிகள், அங்கிருக்கும் ஒரு கோப்பில் இருந்து அனுப்பிய படம். இவர் இந்தியாவுக்குள் இருக்கிறார் என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.''

அவர் சொல்லப்போவதை பாண்டியன் கூர்ந்து நோக்கினான்.

“அந்த மம்மியைக் கடத்த வந்தவர்கள் எங்கு ஓடிச்சென்றார்கள் என்று கண்காணித்தோம். ஸ்பிட்டி சமவெளியில் மழை பெய்யாது. எனவே, புழுதி அதிகம். ஆகவே, அவர்களின் மோட்டார் சைக்கிளின் தடம் தெளிவாகவே இருந்தது. அதைப் பின்தொடர்ந்து சென்றோம். அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் அவர்கள் தங்கியிருந்தார்கள்.”

மகேந்திரன் தொடர்ந்து சொன்னார்: “அந்த விடுதி ஆஷி என்னும் பெண்மணியால் நடத்தப்படுவது. அவளுடைய 18 வயது மகளும், 7 வயது மகனும் அங்கே இருக்கிறார்கள். அன்று மதியம் ஐந்து பேர் அங்கே வந்து தங்கியிருக்கிறார்கள். மறுநாள் விடிவதற்குள்ளாகவே கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அந்தச் சிறுவன் பெயர் நோர்பு. அவன் மிகச் சிறப்பாகப் படம் வரைபவன். அவன் வீட்டுச் சுவரில் இந்தப் படத்தை வரைந்திருக்கிறான்.”

அவர் செல்பேசியில் காட்டிய புகைப்படத்தை பாண்டியன் பார்த்தான். கரியால் வரையப்பட்ட ஓவியம். ஆனால், தேர்ந்த ஓவியன் வரைவது போல இருந்தது. ‘‘ஆம்! இது அவர் மாதிரிதான் இருக்கிறது. லீ பெங்” என்றான்.

“இவ்வளவு பெரிய உளவுத் துறைத் தலைவர் இந்த மம்மியைக் கடத்துவதற்கு ஏன் நேரில் வரவேண்டும்? அந்த மம்மியில் என்ன இருக்கிறது?” என்றார் மகேந்திரன்.

“சீனாவுக்கு மிகத்தேவையான ஒரு ரகசியம் அதில் உள்ளது” என்றான் பாண்டியன்.

“அதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உங்களை அனுப்பபோகிறோம். அதைச் சொல்லத்தான் நேரில் வந்தேன்” என்றார் கர்னல்.

 (தொடரும்)

வெள்ளி நிலம் - 3

அந்த்ரே ழாக் கார்னே (André-Jacques Garnerin)

நாம் இன்றும் பயன்படுத்தும் பாரசூட்டைக் கண்டுபிடித்தவர், அந்த்ரே ழாக் கார்னே. பிரான்ஸில் 1769-ம் ஆண்டு பிறந்தார். கார்னேவின் வாழ்க்கை, போருடன் பின்னிப் பிணைந்தது. 1792-ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சியில் பிரிட்டிஷ் படைகள் அவரைச் சிறைப்பிடித்தன. அப்போது அவருக்கு 23 வயது. மூன்று வருடங்கள் கைதியாக இருந்தார். அன்று சூடான காற்று நிறைத்த பைகளைப் பயன்படுத்தி வான ஊர்திகளை உருவாக்கும் முயற்சிகள் நிறைய நடந்தன. கார்னே புகழ்பெற்ற காற்றுப்பை நிபுணர்களிடம் உதவியாளராகச் சேர்ந்தார். காற்றுப்பைகளை வானத்தில் ஓட்டுபவராகப் பணியாற்றினார். அப்போதுதான் பாரசூட்களை உருவாக்கும் எண்ணம் அவருக்கு வந்தது. முதலில் கம்பிகள் வைத்து குடைபோன்ற பாரசூட்களை உருவாக்கினார். பின்னர் எந்தச் சட்டகமும் இல்லாமல் காற்றிலேயே விரியும் தோல்பைகளை வடிவமைத்தார். 1797 அக்டோபர் 22-ம் தேதி, பாரிஸில் முதன்முதலாக பாரசூட்டில் இருந்து குதித்தார். 3,200 அடி உயரத்தில் பறந்த ஒரு பலூனில் இருந்து அவர் கீழே பத்திரமாக வந்துசேர்ந்தார். கார்னேவைப் புகழ்ந்து நிறைய கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. 1823-ம் ஆண்டு  அவர் மறைந்தார். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கழித்து 1902-ம் ஆண்டில், ரைட் சகோதரர்கள் உருவாக்கிய முதல் இயந்திர விமானம் பறக்கவிடப்பட்டது.