மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 10

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வனர்களின் `சொலாண்டியா' கப்பல், வழக்கம்போல் அரபுத் துறைமுகங்களில் தங்காமல், ஓசிலிஸ்

வீரயுக நாயகன் வேள்பாரி - 10

வழியாக சிந்துநதியின் முகத்துவாரத்தில் இருக்கும் பாப்பரிக்கோன் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கப்பலின் மாலுமி எபிரஸ், நீண்டகால கடல் அனுபவம் பெற்றவன். கடற்காற்றின் குறிப்பு அறிந்து கப்பலைச் செலுத்துவதில் கைதேர்ந்தவன். அதனால்தான் மிகப்பெரிய கப்பலான `சொலாண்டியா’வின் பயணம் இவன் வசமே பல ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கப்பலின் பாதுகாப்புத் தளபதி திரேஷியன். தனி ஒருவனே கப்பலை நகர்த்திவிடுவது போன்ற உடல் அமைப்பு ​கொண்டவன். கடற்கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்து, `சொலாண்டியா’வின் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய, இவனே முதற்காரணம். இவனது படைவீரர்களும் அபாரத் திறமைகொண்டவர்கள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 10

பாப்பரிக்கோன் துறைமுகம், சரக்கு வர்த்தகத்தில் முக்கியமானது எனச் சொல்ல முடியாது. ஆனாலும் கப்பல்கள் பல நாட்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம். காரணம், இந்த நிலப்பரப்பின் தனித்த அடையாளமாக விளங்கும் யவன - இந்திய வம்சக் கலப்பால் உருவான அழகிகள். ஒரு சாயலில் யவனத் தேவதைகளாகவும் மறு சாயலில் இந்தியப் பதுமைகளாகவும் காட்சிதருபவர்கள். அவர்களின் படுக்கையைவிட்டு, கப்பல் மாலுமிகள் அவ்வளவு எளிதில் விலகுவது இல்லை.
நீலம் பூத்த கண்களையும் செழித்த கொங்கைகளையும் ஒருசேரப் பார்க்கும் எந்த ஆணும் அணைத்த கையைப் பிரித்து எடுக்க மாட்டான்.  வேறு வழியே இல்லாமல்தான் எபிரஸ் வெளியேறி கப்பலுக்கு வந்துசேர்வான். ஆனால், திரேஷியன் வந்துசேர அதன்பின் ஒரு வாரம்கூட ஆகலாம். 

`உடலே ஒரு மர்மக்குகைபோல் இருக்கிறது எபிரஸ். வெளிர்மஞ்சள் நிறங்கொண்ட யவன அழகிக்குள் நுழைந்து, கருமஞ்சள் நிறங்கொண்ட இந்தியப் பதுமையின் வழியே கரை சேர்ந்தேன்’ எனச் சொல்லியபடி கப்பலுக்கு வருவான்.  அவனைக் கோபம்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்தப் பயணத்தின் மிக ஆபத்தான பகுதி இனிமேல்தான் இருக்கிறது.

கச் வளைகுடா, ஆழமற்றது மட்டும் அல்ல... கூர்மையான பாறைகள் நிரம்பியதும்கூட. எந்த நேரத்திலும் கப்பலின் அடிப்பாகம் நொறுங்கும் ஆபத்து உண்டு. மிகக் கவனமாக அதைக் கடந்து சுபாகரா வந்து சேர வேண்டும்.  கரையை ஒட்டிப் பயணிக்கும் இந்தப் போக்குவரத்துதான், துருவங்களைக் கடந்த வணிகத்துக்கு அச்சாணியாக இருக்கிறது. ஆனால், அவற்றின் மிக ஆபத்தான பகுதிகளான மேலிமேடுவும் மங்களகிரியும் அடுத்தடுத்து உள்ளன. இதைக் கடற் கொள்ளையர்களின் நாடாக யவனர்கள் குறித்துவைத்துள்ளனர். இதைக் கடப்பதுதான் மொத்தப் பயணத்திலும் மிகச் சவாலான காரியம். இதை வெற்றிகரமாகக் கடந்துவிட்டால், அதன் பிறகு தீண்டிஸுக்கு வந்துவிடலாம். யவனர்கள் தொண்டியைத்தான், `தீண்டிஸ்’ என அழைத்தார்கள். அவர்கள் இந்த நிலப்பரப்புக்கு, சம்புத்தீவு அதாவது `நாவலந்தீவு' எனப் பெயர் இட்டிருந்தார்கள். நாவல் மரங்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் இந்தப் பெயர். இந்த நிலப்பரப்பு நாற்சதுர வடிவில் உள்ளது என்றும், இதில் அறுபத்தைந்து நதிகளும் நூற்றிப்பதினெட்டு நாடுகளும் உள்ளன எனவும் அவர்கள் குறிப்பு எடுத்துவைத்திருந்தனர். இந்த நாற்சதுரத்தின் ஒருமுனை திரும்பும் இடமே தொண்டி. 

இங்கு வந்துவிட்டால் அதன் பிறகு மிகப் பாதுகாப்பான பயணம் ஆரம்பம் ஆகும். அதுமட்டும் அல்ல, இந்த நெடும் பயணத்தின் முக்கிய வணிகமே இனிமேல்தான் உள்ளது. நாற்சதுரத்தின் முதல்முனையான தொண்டியை விட்டுத் திரும்பும் கப்பல்கள், அடுத்து முசிறியை அடையும். அதன் பிறகு சற்றுப் பயணித்து மறு திருப்பத்தில் குமரியை அடையும். அங்கு இருந்து கொற்கைக்குச் செல்லும். பின்னர் புகார் வந்துசேரும். கப்பலின் பெரும்பாலான பொருட்கள் இறக்கி - ஏற்றப்பட்டு, கப்பல்கள் மீண்டும் யவனத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 10

`சொலாண்டியா’ கப்பல், நற்பகலில் தொண்டி துறைமுகத்துக்குள் நுழைந்தது. பிரமாண்டமான கப்பலின் வருகை மிகத் தொலைவிலேயே கண்டறியப்பட்டுவிடும். பாய்மரத்தின் உப்பிய வயிற்றில் விலைமதிப்பற்ற வணிகத்தைச் சூல்கொண்டுவரும் யவனத் தேவதையைப்போல, `சொலாண்டியா’ வந்து நிற்கும். கடற் காகங்களின் கரைச்சல் அலையின் சத்தத்தையும் மிஞ்சிக்கொண்டிருக்க, எபிரஸ் நங்கூரத்தை இறக்க உத்தர விட்டான்.

சேரர் குலம், இரு வம்சாவழியாகப் பிரிந்து நாளாகிவிட்டது. முன்னவன் உதியன் பரம்பரை என அழைக்கப்பட்டான். வஞ்சியைத் தலைநகராகக்கொண்டு, முசிறியைத் துறைமுகப்பட்டணமாக அமைத்து அவன் ஆட்சி நடத்தினான். அவனது நாடு `குட்ட நாடு’ என அழைக்கப் பட்டது. பின்னவன் அந்துவன் பரம்பரை என அழைக்கப்பட்டான். மாந்தையைத் தலைநகராகக்கொண்டு, தொண்டியைத் துறைமுகப்பட்டணமாக அமைத்து அவன் ஆட்சி நடத்தினான். அவனது நாடு `குடநாடு' என அழைக்கப்பட்டது. இருவரும் சேரனின் வம்சக்கொடி தாங்களே என்று உரிமைகொள்வர்.  ஆனாலும் முன்தலைமுடி வைத்துக்கொள்ளும் உரிமை முன்னவனான உதியன் பரம்பரைக்கே இருந்தது.  

கடற்கரை மாளிகையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான் எபிரஸ். வழக்கம்போல் பவளக்கற்களும் ரசக்கண்ணாடிகளும் மதுப்புட்டிகளும் இறங்கிக்கொண்டிருந்தன. பதிலுக்கு அந்தத் துறைமுகத்தில் இருந்து ஏற்றப்படவேண்டிய பொருட்கள்... மிளகும் உதிரவேங்கை மரத்தின் பட்டைகளும்தான். குடநாட்டில் மிளகு விளையும் பகுதி அளவில் சிறியதே. அதனால், அந்தக் கடற்கரையில் சில திறளிமரப் படகுகளே நின்றன. உதிரவேங்கைப்பட்டை மிகுந்த மருத்துவக் குணம்கொண்டது. அதை யவனர்கள் முக்கியமாக வாங்குவர். இரு பொருட்களைச் சேர்த்தாலும் இங்கு நடக்கும் வர்த்தக மதிப்பு மிகக் குறைவுதான். எனவே, வேகமாக சரக்கை இறக்கிவிட்டுச் செல்வதிலேயே மாலுமிகளும் உடன் வந்துள்ள வியாபாரிகளும் தீவிரமாக இருப்பர். ஏற்றவேண்டிய பொருட்களை, திரும்பி வரும்போதுதான் ஏற்றுவர்.

பொருட்கள் எல்லாம் இறக்கப்பட்டுவிட்ட தகவல் கிடைத்ததும் எபிரஸ், மாளிகையில் இருந்து புறப்படத் தயார் ஆனான். அப்போது மாளிகைக்கு வந்தான் குடநாட்டு அமைச்சன் கோளூர்சாத்தன். தளபதிக்குரிய உடலமைப்பும், அமைச்சனுக்குரிய அறிவுக்கூர்மையும் ஒருங்கே அமையப்பெற்றவன். யவனத்துடனான குடநாட்டு வர்த்தகத்தை முதல்நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தீவிரமாக முயல்பவன். அவனுடன் இரு வணிகர்களும் வந்திருந்தனர்.

திரேஷியன், தனது கப்பலை நோக்கி வந்தான். அவன் வீரர்கள், தளபதிக்கு உரிய ஆயுத மரியாதையைச் செய்து அவனை கப்பலுக்குள் வரவேற்றார்கள். உள்ளே வந்த பிறகுதான் அவனுக்குத் தெரிந்தது எபிரஸ் இன்னும் வரவில்லை என்பது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 10

“எப்போதும் எனக்கு முன்னமே வந்துவிடுவானே, ஏன் தாமதம்?” எனக் கேட்டான். யாருக்கும் தெரியவில்லை. குடநாட்டு அழகிகளால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லையே என யோசித்தபடி, அவனது மாளிகையை நோக்கி திரேஷியன் நடந்து போனான். வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

காவலாளி கதவைத் திறக்க, மாளிகையின் உள்ளே நுழைந்தான் திரேஷியன். ஆச்சர்யம் நீங்காத நிலையில் எபிரஸ் உட்கார்ந்து இருந்ததைக் கண்டான். அவனது எதிர் இருக்கையில் கோளூர்சாத்தனும் வணிகர்கள் இருவரும் உட்கார்ந்து இருந்தனர். நடுவில் இருந்த பலகையின் மேல் தங்கத்தாலான வட்டத்தட்டில் `கொல்லிக்காட்டு விதைகள்’ வைக்கப்பட்டிருந்தன.

“புகார் சென்று திரும்புவதற்குள் நீங்கள் சேகரித்துவையுங்கள். இதற்கு என்ன விலை கொடுக்கவும் நான் தயார்!” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு எழுந்தான் எபிரஸ். கப்பல் நோக்கி அவனும் திரேஷியனும் பேசிக்கொண்டே வந்தனர்.

எபிரஸ் சொன்னான்... “ஒருவேளை இந்த வியாபாரம் கைகூடினால் தொண்டி துறைமுகம் பிற மூன்று துறைமுகங் களையும் வணிகத்தில் விஞ்சிவிடும். அதுமட்டும் அல்ல, நாம்தான் யவனத்தின் அதிசக்தியுள்ள மந்திர மனிதர்களாக மாறுவோம்.”

டம்ப மரத்தில் இருக்கும் முருகனை வழிபட்டுத் திரும்பும் பாரியிடம், “குடநாட்டு அமைச்சன் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டது. அவன் காத்திருந்த மாளிகையை நோக்கிச் சென்றான் பாரி. உடன் முடியனும் பெரியவர் தேக்கனும் வந்தனர். சேரகுலத்தின் அந்துவன் பரம்பரையின் மீது மட்டும் சிறுமதிப்பு, பறம்பு நாட்டுக்கு உண்டு. அதனால்தான் அவர்கள் அழைத்துவர அனுமதிக்கப்பட்டனர். கபிலர் வந்ததால் எவ்வியூரே கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்த நேரம் இது. பாரியின் மனம் பூத்துக் கனிந்திருந்தது. அறுபதாங்கோழி இன்னும் கிடைக்கவில்லை என்ற கவலை மட்டுமே மனதின் ஓரத்தில் இருந்தது. அதுவும் எந்த நேரத்திலும் சரியாகிவிடக்கூடியதுதான்.

மாளிகைக்குள் நுழையும் பாரியின் முகமலர்ச்சியைப் பார்த்த அமைச்சன், கோளூர்சாத்தன் அகமகிழ்வுகொண்டான். தான் வந்த காரியம் நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு ஆழமானது. அவன் கொண்டுவந்த பரிசுப்பொருட்களை பாரி அமரும் இருக்கைக்கு முன்பாகப் பரப்பி வைத்திருந்தனர். யவனத்தில் இருந்து வாங்கப்பட்ட ரசக்கண்ணாடி, நடுவில் வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியின் மேல் இரண்டு யவன அழகிகளின் உருவங்களைக் கொண்ட மரவேலைப்பாடுகள் இருந்தன. இருக்கையில் அமரும் பாரியின் முகத்தைப் பிரதிபலிப்பதைப்போல அந்தக் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சன் ஆரம்பித்தான்...

“பறம்பின் மாமன்னரை வணங்குகிறோம். குடநாட்டு வேந்தன், `குடவர்கோ’வின் அன்புப் பரிசை நீங்கள் ஏற்க வேண்டும்” என்று முன்னால் பரப்பி வைக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்துச் சொன்னான்.
பாரியின் உதட்டோரம் தொடங்கிய மெல்லிய சிரிப்பு, முழுமைகொள்ளாமல் வேகமாக முடிந்தது.

“வந்ததன் நோக்கம்?”

காணிக்கையை ஏற்பதைப் பற்றி எந்தவித பதிலும் சொல்லாமல், பாரி கேள்விக்குள் போனது சற்றே ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அமைச்சன் சொன்னான், “குடநாட்டு வேந்தர், வணிகப்பேச்சு ஒன்றுக்காக என்னை அனுப்பிவைத்தார்.”

“வணிகம், இயற்கைக்கு விரோதமானதே! அதை ஏன் என்னிடம் பேசவந்தீர்கள்?”

அமைச்சன் எச்சில் விழுங்கினான்.

``வணிகம்தானே ஓர் அரசின் அச்சாணி. வணிகம் செழித்தால்தானே அரசு செழிக்கும். அரசு செழித்தால்தானே மக்கள் செழிப்பர்.”

“வணிகமே இல்லாததால்தான் நாங்கள் செழித்திருக்கிறோம்” என்று சொன்ன பாரி, சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான், “எந்த மன்னனின் காலடியிலும் பறம்பின் தட்டுக்கள் பணிந்துவைக்கப்பட்டது இல்லை என்பதை அறிவீரா?”
அமைச்சன், அதிர்ச்சி அடைந்தான். பாரி தொடர்ந்தான்...

“இயற்கை வழங்குகிறது; நாம் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?’’

“கொள்ளாமலும் கொடுக்காமலும் எப்படி வாழ முடியும் மன்னா? பறம்பு நாட்டுக்குத் தேவையான உப்பை உமணர்களிடம் இருந்து நீங்கள் வாங்கத்தானே செய்கிறீர்கள்?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 10

“எங்களுக்குத் தேவையானதையும் அவர் களுக்குத் தேவையானதையும் பரிமாறிக்கொள்​கிறோம். பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும், இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்தவை.”

“அதுதானே வணிகமும்.”

“இல்லை... பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது.  ஆதாயம் மனிதத்தன்மையற்றது; மாண்புகளைச் சிதைப்பது. யவன அழகிகளை எனது காலடியில் வந்து பரப்ப உங்களைத் தயார்செய்வது. இதனினும் கீழ்மை அடையத் தூண்டுவது” எனச் சொன்ன பாரி, சற்றே குரல் உயர்த்திச் சொன்னான்... “நான் சொல்வது விளங்கவில்லையா? எனது காலடியில் யவன அழகிகளின் சிற்பத்தைப் பரப்புகிற உன் மன்னன், இதைவிட பெரிய ஆதாயத்துக்காக வேறு யாருடைய காலடியில் எவற்றை எல்லாம் பரப்புவான்?”

அமைச்சனின் நாடி நரம்புகள் ஒடுங்கின.

“நாட்டை ஆள்பவர்கள் நீங்கள். அமைச்சர் களாகிய நாங்கள் உங்களின் சொற்கேட்டுப் பணியாற்றுபவர்கள்” - தற்காத்துப் பதில் சொன்னான் அமைச்சன்.

“நாங்கள் ஆள்பவர்கள் அல்லர்; ஆளப்படு கிறவர்கள். இயற்கைதான் எங்களை ஆள்கிறது.”

சற்று மெளனத்துக்குப் பிறகு அமைச்சன் சொன்னான், “உங்களையும் பறம்பு நாட்டையும் எந்தக் கணமும் அழிக்கத் துடித்துக்கொண்டிருக்​கிறான் குட்டநாட்டு அரசன் உதியஞ்சேரல். அவனே இப்போது யவன வணிகத்தில் உச்சத்தில் இருக்கிறான். அவனிடம் சேரும் ஒவ்வொரு செல்வமும் பறம்பு நாட்டுக்கு எதிரான போர் ஆயுதமே. வணிகத்தில் அவனை விஞ்ச குடநாட்டுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் எங்களுக்கு உதவினால், எங்களால் அதைச் சாதிக்க முடியும். உதியஞ்சேரலைப் பின்னுக்குத் தள்ள முடியும். நாங்கள் பறம்பின் நண்பர்கள். என்றும் உங்​களுக்குத் துணை நிற்போம்.”

“எங்களை நீங்கள் எதிர்க்க முடியாததனால், நண்பர்கள் எனச் சொல்லிக்கொள்வதை ஏற்க மாட்டோம். நட்பின் பொருள் மிக ஆழமானது. உதியஞ்சேரலைப்போல வணிகத்தில் நீங்களும் பெரும்செல்வம் ஈட்டுவீர்களானால், இவ்வளவு பணிவுடன் பேசுமாறு உங்கள் மன்னன் சொல்லி அனுப்ப மாட்டான்.”

“அப்படி என்றால் எங்களுக்கும் குட்டநாட்டு அரசுக்கும் வேறுபாடு இல்லை என்று கருதுகிறீர்களா?”

“உண்டு... உதியஞ்சேரலின் தந்தை, என்னால் கொல்லப்பட்டவன்; உங்கள் மன்னனின் தந்தை என்னால் வாழ அனுமதிக்கப்பட்டவன். அதுமட்டுமே உங்கள் இருவரின் அணுகுமுறை வேறுபாட்டுக்குக் காரணம். வேறு அடிப்படைக் காரணங்கள் இல்லை.”

புறப்படவேண்டிய நேரம் வந்துவிட்டதை அமைச்சன் உணர்ந்தான்.

“ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. சொல்ல அனுமதிப்பீர்களா?”

“என்ன?”

“உட்கார்ந்த கணத்தில் மூன்று முறை இந்த ரசக்கண்ணாடியை நீங்கள் பார்த்தீர்கள். உங்களை அறியாமலேயே உங்களின் கை, மீசையைச் சரிபடுத்திக்கொண்டது.  இந்த வேளையில் நீங்கள் தனித்து இருந்தால் அது உங்களை முன்னூறு முறை பார்க்கவைத்திருக்கும். உங்களின் தேவையாக அது மாறும். எது ஒன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம். வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது. அதை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை.”

“இதுவரை நீ எங்களைப் பார்த்தது இல்லை. இப்போது பார்த்துவிட்டாய் அல்லவா? இதை வெல்லும் ஆற்றல்கொண்டவர்கள் இருக்கிறார்கள் என உலகுக்குச் சொல்.  நீ போகலாம்” - சொல்லிவிட்டு எழுந்தான் பாரி.

வீரயுக நாயகன் வேள்பாரி - 10

பாரியின் வருகையை, அவன் குடும்பமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. மாளிகையின் மூன்றாம் கதவு திறக்க, அவன் உள்நுழைந்தான். ஆவலோடு எதிர் நின்ற அங்கவை கேட்டாள், “என்ன தந்தையே இவ்வளவு நேரம்?”

“வணிகம் பேச குடநாட்டு மன்னன் ஆள் அனுப்பியிருந்தான்”.

அருகில் இருந்த ஆதினி சற்றே பதற்றமாகி பாரியின் முகத்தைப் பார்த்தாள். அங்கவை அம்மாவின் கரம் பற்றி சொன்னாள், “கபிலர் வந்திருப்பதால் தந்தை கோபம்கொண்டிருக்க மாட்டார். இல்லையா தந்தையே!”

“ஆம் மகளே... வணிகம் பேசித் திரும்பும் ஒருவனுக்கு, கை கால்கள் இருப்பதைப் பார்க்க எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.”

“என்ன வணிகம் பேச வந்தான்?”

“அதை நான் கேட்கவில்லையே மகளே.”

“அதனால்தான் அவன் தப்பிப் போயிருக்கிறான்.”  

பாரி, மாளிகையின் மையத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவன் அருகில் வந்து அமர்ந்த இளையவள் சங்கவை, தந்தையின் கையை தனது மடியின் மேல் வைத்து சேவல் இறகால் மெள்ள வருடினாள். பாரி கேட்டான், “ஆவலோடு எதிர்பார்த்ததாகச் சொன்னீர்களே எதற்காக?”

மூவருக்குமே பாரியின் கேள்வி ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது.

“என்ன தந்தையே... வந்தவன் உங்களின் மனநிலையைத் தொந்தரவு செய்வதைப்போல் எதையும் கேட்டானா?”

“அப்படி எதுவும் இல்லை மகளே.”

“எங்களின் தந்தையை நாங்கள் அறிவோம். மறைக்க முயலாதீர்கள்?”

“இவ்வளவு தொலைவு மேல் ஏறிவந்து வணிகம் பேசுகிறான் என்றால், அவனது துணிவுக்குக் காரணம் அவனுடைய வலிமையாக இருக்காது.  அவன் பெற விளையும் ஆதாயமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. என்ன பொருளுக்காக வந்தான் என்பதைக் கேட்டிருக்க வேண்டும்.”

“அதற்காகக் கவலைகொள்ளாதீர்கள். வந்தவர்களைத் திருப்பி அனுப்ப, எல்லை வரை முடியனும் போயிருக்கிறான் அல்லவா... நிச்சயமாக அறிந்துவருவான்” என்றாள் ஆதினி.
சங்கவை, பாரியின் கைகளை இறகால் வருடியபடியே இருந்தாள்.

“என்ன மகளே, தந்தைக்கு வருடிக்கொடுக்கிறாய்?”

“ஆம் தந்தையே... சேவல் இறகால் வருடினால் சுகமாக இருக்கும் அல்லவா! அதனால்தான்...” 

“மயில் இறகுதான் வருடுவதற்கு ஏற்றது.”

“ஆனால் இந்த இறகுதானே உங்களுக்குப் பிடிக்கும்” எனச் சொன்னவள் தந்தையின் முகம் பார்த்துச் சொன்னாள், “இது சேவலின் இறகு. ஆனால், கோழியினுடையது.”
அப்போதுதான் பாரிக்குப் புரிந்தது.

“அறுபதாங்கோழி கிடைத்துவிட்டதா?” எனக் கத்தியபடி மகள்களை வாரி அணைத்தான் பாரி.

ல்லையைக் கடக்க, சிறிது தொலைவே இருந்தது. கோளூர்சாத்தன் குழுவினருடன் முடியனும் பறம்பின் வீரர்கள் சிலரும் வந்துகொண்டிருந்தனர். முன்னால் செல்லும் முடியனின் இடுப்பின் ஒருபக்கம் வாளும் மறுபக்கம் கொம்பும் தொங்கிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான் கோளூர்சாத்தன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 10`விரி ஈட்டி, கேடயம், சூரிவாள் என எவ்வளவோ ஆயுதங்களை உருவாக்கி பிற நாடுகள் முன்னேறி விட்டன. இன்னும் இடுப்பில் கொம்பைக் கட்டிக்கொண்டு அலைகிற இந்த மலைவாசிக் கூட்டத்துக்கு வணிகத்தின் பயனை எப்படிப் புரியவைப்பது?’ என்ற எண்ணமே கோளூர் சாத்தனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

முன்னால் போய்க்கொண்டிருந்த முடியன் கேட்டான், “எந்தப் பொருளுக்காக வணிகம் பேச வந்தீர்கள்?”

கோளூர்சாத்தனின் முகம்  மலரத் தொடங்கியது. தனக்குள் ஓடியதுபோலவே வணிகம் சார்ந்த எண்ணமே இவனுக்குள்ளும் ஓடியிருக்கிறது. அந்த ஆர்வத்தில்தான் கேட்கிறான். அதை ஊதிப் பெரிதாக்கிவிடலாம். இன்று இல்லாவிட்டாலும் நாளை உதவும் என எண்ணினான். உடன்வந்த வணிகனைப் பார்த்துக் கை அசைத்தான். அதில் ஒருவன் தனது இடுப்பில் முடிச்சிட்டிருந்த கொல்லிக்காட்டு விதையை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கிய முடியனின் கை நடுங்கியது. கண்கள் நம்ப மறுத்து அந்த விதையைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தன. உயிரற்ற குரலில் கேட்டான், “என்ன விலை கொடுத்திருந்தாலும் மதங்கன் இதை விற்றிருக்க மாட்டான். அவனை என்ன செய்தீர்கள்?”

கோளூர்சாத்தன் அசட்டுச் சிரிப்போடு கேட்டான், “உனக்கு என்ன வேண்டும் கேள்?”

த்திமதுவும் அறுபதாம்கோழியின் கறியும்  கபிலருக்கு விருந்தாக்கப்பட்டன. அவருக்கு அரண்மனையில் நடக்கும் முதல் விருந்து. பாரி மனைவி ஆதினியும் மகள்கள் அங்கவையும் சங்கவையும் கபிலரை இன்றுதான் சந்திக்கின்றனர். இந்த நாளுக்காகத்தான் அவர்கள் தவியாய்த் தவித்திருந்தனர்.

அரண்மனையின் மேல்வட்ட அறையில் இரவு எல்லாம் ஆட்டமும் கூத்துமாக இருந்தது. வேட்டூர் பழையனுக்கும் நீலனுக்கும் அறுபதாங்​கோழியின் கறித்துண்டு ஆளுக்கு ஒன்று கிடைத்தது. பாரிக்குத்தான் அதுவும் இல்லை. கபிலர் சொன்னார், “உன்னோடு சேர்ந்து கள் அருந்தும் நாள்தான் வாழ்வின் திருநாள் என்று நீலன் சொன்னான்” என்றார். பெருங்குவளை நிறையக் கள்ளினை ஊற்றி, அதை நீலனுக்குக் கொடுத்தபடி பாரி சொன்னான், “உனக்கு கள் ஊற்றிக் கொடுக்கும் இந்த நாள்தான் என் வாழ்வின் திருநாள்.”

நீலன் மெய்சிலிர்த்து நின்றான். பெரியவர் தேக்கன் சொன்னார், “கபிலருக்குத் தோள்கொடுத்த பாரி உனக்குத்தானடா கள் கொடுத்தான்.”

எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர்.

“முடியன் ஏன் இன்னும் வரவில்லை?’’ எனக் கேட்டான் பாரி.

றம்பு நாட்டின் வட எல்லையில், குடநாட்டுக்கு உள்நுழையும் இடத்தில் தோளில் இருந்து பொங்கும் குருதியை மறுகையால் பொத்தியவாறு கதறிக்கொண்டே ஓடினர் கோளூர்சாத்தனும் இரு வணிகர்களும். அங்கு இருந்த பனைமரத்தில் வெட்டப்பட்ட மூவரின் கைகளையும் தொங்கவிட்டுக்​கொண்டிருந்தான் முடியன்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...