மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி

அனுபவங்கள் பேசுகின்றன!

பில்லில் எச்சரிக்கை!

நான் வசிக்கும் பகுதியில் உள்ள பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்தேன். தேவையான பொருட்களை எடுத்தபோது, 'பிரியாணி அரிசி ஒரு பாக்கெட் வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம்' என்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும், இரண்டு பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு சேல்ஸ் கவுன்ட்டருக்குச் சென்றேன். பில் போடுபவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, பொருளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். பில்லை சரிபார்த்தபோது ஒரு பாக்கெட் அரிசிக்கு பணம் எடுப்பதற்குப் பதில் இரண்டு பாக்கெட்டுகளுக்கும் பில் போட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன்.
மறுநாள் அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குச் சென்று பில்லைக் காட்டி ஒரு பாக்கெட் அரிசிக்கான பணத்தை திரும்பப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இப்போதெல்லாம் இதுபோன்ற கடைகளில் பொருள் வாங்கிவிட்டு பில் போடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.

- ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி

அனுபவங்கள் பேசுகின்றன!

வெடியில் வியப்பு!

என் கணவரின் நண்பர் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமணம் முடிந்ததும் மணமக்களின் தலைக்கு மேலே வெடி வெடித்தனர். அப்போது பளபளக்கும் ஜிகினா பேப்பர்கள் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், பதப்படுத்தப்பட்ட மல்லிகை, முல்லை, ரோஜா போன்ற பூக்கள் சிதறி விழுந்தன. கூடவே, அவற்றில் சேர்க்கப்பட்ட வாசனை திரவியம் அந்த இடம் முழுவதையும் ரம்மியமான சூழலுக்கு அழைத்துச்சென்றது. சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கச் செய்ததோடு பூக்களை வெடிக்கச் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. திருமணம் மற்றும் பிறந்த நாள் கொண்டாடுவோர் இதுபோல வித்தியாசமான முறைகளைப் பின்பற்றலாமே!

- என்.குர்ஷித், பணகுடி

அனுபவங்கள் பேசுகின்றன!

வங்கியில் ஜாக்கிரதை!

அண்மையில் வங்கி சென்று பணம் பெறுவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, இளைஞன் ஒருவன் பக்கத்தில் நின்ற பெரியவரிடம் பேனா கேட்டான். பெரியவரும் பேனா கொடுத்தார். சிறிதுநேரத்தில் வங்கி கேஷியரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட பெரியவர் பணத்தை சரிபார்த்து பையில் பத்திரமாக வைத்து வங்கியை விட்டு வெளியே சென்றார். அப்போதுதான் தனது பேனாவை அந்த இளைஞனுக்கு கொடுத்த ஞாபகம் வந்தது.

அப்போது அங்கே சென்ற அந்த இளைஞன் பெரியவரிடம், `ஸாரி...’ சொல்லிவிட்டு பேனாவை சரியாக மூடாமல் கொடுத்தான். இதனால் பேனா கீழே விழ, அதை எடுப்பதற்காக பெரியவர் கீழே குனிந்தார். அந்த நேரம் பார்த்து பெரியவர் வைத்திருந்த பணப்பையை பிடுங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த தனது நண்பனுடன் சிட்டாக பறந்து சென்றுவிட்டான் அந்த இளைஞன். பெரியவர் அதிர்ச்சியில் கூச்சல் போட்டபடி மயக்கமாகிவிட்டார். அங்கே இருந்தவர்கள் பெரியவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்து காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க அழைத்துச் சென்றனர்.

வங்கிக்குச் சென்று பணம் எடுப்போரும், ஏ.டி.எம் சென்று பணம் எடுப்போரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். `சட்டையில் பூச்சி இருக்கிறது', `உங்கள் பணம் கீழே கிடக்கிறது' என்று சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள். இதுபோன்ற நூதன திருடர்களிடம் ஏமாந்துவிட வேண்டாம்.

- எஸ்.சித்ரா, சென்னை - 64

அனுபவங்கள் பேசுகின்றன!

பயணத்தில் கவனம்!

சென்னைக்கு 3 வயது குழந்தையுடன் சுற்றுலா சென்றோம். அங்கு கடற்கரை செல்வதற்காக டவுன்பஸ்ஸில் ஏறினோம். அப்போது சிக்னல் ஒன்றில் பஸ் நிற்க, என் கணவர் என்னை `இறங்கு' என்று சொல்லிவிட்டு சடாரென இறங்கிவிட்டார். என் கையில் குழந்தை இருந்ததால், நான் இறங்குவதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. `பஸ்ஸை நிறுத்துங்கள்’ என்று எவ்வளவோ சொல்லியும், கண்டக்டர், `அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கும்மா’ என்று சொல்லி சத்தம் போட்டார். கண்டக்டரிடம் வாதாடுவதற்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் பஸ் சென்றுவிட்டது. பிறகு ஒருவழியாக பஸ்ஸை நிறுத்த, இடுப்பில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. என் கையில் பணமும் இல்லை, செல்போனும் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல், மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, பஸ் வந்த வழியே நடந்தேன். கொஞ்ச தூரத்தில் என் கணவர் ஆட்டோவில் வந்து சேர்ந்தார். என்னைப் பார்த்து முறைத்தார்!

இந்தச் சம்பவம் நடந்தபிறகு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறேன். அதோடு, பயணங்களின்போது கணவன் - மனைவி இருவரிடமும் பணம், போன் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்துகொண்டேன்.

- எஸ்.மீனா, சேலம்