மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி

அம்பை
News
அம்பை

படங்கள் : யோகி

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி

ங்கைகொண்டசோழபுரத்தை நாங்கள் அடைந்தபோது, மாலைப் பொழுது. வானம் லேசாக இருட்டிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திலேயே பூப்போல மழைத்துளிகள் உதிரத் தொடங்கின. பதினொன்றாம் நூற்றாண்டில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட சோழீசுவரர் ஆலயம். மழைத்தூறல் விழுந்த ஈரப்புல்வெளியும் கண் முன்னால் உயர்ந்திருக்கும் சோழர் காலக் கட்டடக் கலையும் அந்தச் சூழலுக்கு ஒருவித செவ்வியல் தன்மையை வழங்கியிருந்தது. நீல வண்ணப் பருத்திச் சேலை அணிந்திருந்த அம்பை, சுண்ணாம்புக் கல்லாலான பெரிய நந்தியை ஒரு குழந்தையைப்போல ரசித்துக் கொண்டிருந்தார். அவரது ஒவ்வொரு வியப்பையும் எனது கணவரும் மகனும் தங்கள் அலைபேசியால் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அந்தப் புகைப்படங்களை அவ்வப்போது வாங்கிப் பார்த்தவர், ‘இதை எனது போனுக்கும் ஷேர்பண்ணு கார்க்கி’ என்றார் ஆர்வத்துடன். ஸ்பேரோ விருதினைப் பெற கார்க்கி என்னுடன் மும்பை வந்திருந்தான். அப்போதிலிருந்தே அம்பையின் மீது மரியாதை கலந்த அன்பு அவனுக்கு. இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமை. அந்த எந்தச் சுமைகளையும் ஏற்றிவைத்துக்கொள்ளாமல் ஒரு கிராமத்துச் சிறுமிபோல நூற்றாண்டுப் பழமையான ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார் அம்பை.

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி


ஒரு மழைக்காலத்தில் நூலகத்திலிருந்து எங்கள் மாமா எடுத்துவந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்தேன். (வயதுக்கு வந்தால், பெண்பிள்ளைகள் தங்களது அத்தனை சுதந்திரத்தையும் கல்வியையும் இழந்திருந்த காலம் அது.) கதையில் சிறுமி ஒருத்தி வயதுக்கு வந்துவிடுகிறாள். அன்று அவள் அம்மா வீட்டில் இ்ல்லை. அவளை தேவதைபோலக் கொண்டாடும் அம்மா. இயற்கையாகப் பருவம் உடலில் ஏற்படுத்தும் மாற்றத்தை ஒட்டி சமூகமும் உறவும் அவளுக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள் அவளைக் கலவரமடையச் செய்கிறது. தன் தாய் எல்லாவற்றையும் சரியாக்கிவிடுவாள் என்று நம்புகிறாள். தனக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதாகச் சொல்லியிருந்த தாய் அவள். அம்மாவின் அரவணைப்பில்தான் இன்னும் வசதியாக, பாதுகாப்பாக உணர முடியுமென அந்தச் சிறுமி கருதுகிறாள். ஆனால், அந்தத் தாய் வந்ததும் ‘இந்த எழவுக்கு இப்ப என்ன அவசரம்’ என்கிறாள். ‘அம்மா ஒரு கொலைசெய்தாள்’ எனும் அந்தக் கதை அதுவரை நான் படித்திருந்த கதைகளிலிருந்து விலகி இருந்தது. இவர் நமக்காக எழுத வந்த தேவதை என எண்ணினேன். ஒரு கிராமத்துச் சிறுமியான எனக்கு பெண்ணியம் போன்ற தத்துவங்களெல்லாம் அப்போது தெரியாது.ஆனால், பண்பாடு என்கிற பேரில், நடைமுறை எனும் பேரில், யதார்த்தம் எனும் பேரில், நல்லபெண் எனும் பேரில், இந்த சமூகம் பெண்ணின் சிந்தனையில் பூட்டியிருந்த தளைகளை உணர முடிந்தது.

சுயமரியாதையும் கட்டற்ற விடுதலை உணர்ச்சியும் கொண்டிருந்த எனக்கு, அம்பை ஏதோ நெருக்கமான உறவு போலத் தோன்றினார். அவரை அவரது கதைகள் வழியாகப் பின்தொடர்ந்தேன். இப்படி என் சிறுவயது நாளில் நான் படித்து வியந்த கதைசொல்லியோடு, சமகாலப் பெண்களுக்கு சுதந்திரத்தின் மீது, தற்சார்பு உணர்வின் மீது, சுயமரியாதையின் மீது வேட்கை ஏற்படுத்திய எனது பண்பாட்டு ஆசிரியையோடு, பின்நாட்களில் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைக்குமென நான் எண்ணியது இல்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, அம்பை முதன்முதலாக விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நான் எழுத ஆரம்பிக்கவில்லை. எனது கணவரும் கவிஞருமான கரிகாலனைப் பார்க்கவே அந்த வருகை. அவருக்குக் கதா விருதைப் பரிந்துரை செய்ததும் அம்பைதான். அப்போது ஒரு வாசகியாக அவரது கதைகள் எனக்கு ஏற்படுத்தியிருந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். பிறகு குழந்தைகள், அவர்களது கல்வி எனப் பேச்சு நீண்டது. அப்போது இலக்கிய உலகம் குறித்துப் பேசவும் என்னிடம் அதிக விஷயங்கள் இல்லை. அவர் வந்து சென்ற சில தினங்களில் மீண்டும் அவரது கதைகளைப் படிக்கத் தொடங்கினேன். அவர் வந்து சென்றதன் தாக்கமோ என்னவோ, ஏதாவது எழுதலாம்போலத் தோன்றியது. ஒரு சில நாட்கள் கழித்து எழுதத் தொடங்கியிருந்தேன். எல்லாம் அற்புதம்போலவே நிகழ்ந்தன. பிறகு எனக்கு அவ்வப்போது அம்பையோடு நேரிலோ, தொலைபேசியிலோ பேச சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறை அவரிடம் பேசும்போதும் எனது சக்தி அதிகரித்தது. தமிழில் எழுத வரும் இளைஞர்களை பொறுப்போடு தட்டிக்கொடுத்து வளர்க்கும் பண்பு அவரிடம் இருந்தது. எனது நாவல்கள் குறித்து விலாவாரியாகப் பேசி அதன் அவசியங்களை எடுத்துக்கூறி எனது சோர்வைப் போக்கினார்.தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கம் மிகுந்த சொற்களை அளித்தார். அ.மங்கை, வ.கீதா என எனது நட்பு வட்டத்தை விரிவுபடுத்தினார். ஸ்பேரோ சார்பாக விருது கொடுக்க அந்த நிறுவனம் முடிவெடுத்தபோது அவர் என்னைத் தெரிவு செய்து எனது இசைவைக் கேட்டார்.

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி

அம்பை எனது இலக்கிய வாழ்வின் முக்கியமானதொரு பகுதி என்பேன். அம்பையை அவரது இயக்கத்தை நினைவுகொள்கிற போதெல்லாம், அவரது மனஉறுதி, போராட்ட குணம், சமரசப்படுத்திக்கொள்ளாத தன்மை, உழைப்பு, அழகியல் உணர்வு போன்றவை ஞாபகத்தில் மேலெழும்பி வருகிறது. ஆணாதிக்கம் நிரம்பிய சமூகவெளியில் எழுதவரும் பெண்ணை எப்படியெல்லாம் அச்சுறுத்தி, அவதூறு கிளப்பி அவளை முடங்கவைக்க முடியுமோ, அத்தனை வழிமுறைகளும் அம்பையின் மீதும் பிரயோகிக்கப்பட்டன. ஆனால், அவர் சோர்வடையாமல் தனது படைப்புகளின் வழியாக இந்தச் சமூகத்தோடு தொடர்ந்து வினையாற்றிக்கொண்டே இருந்தார்.

நமது குடும்பம், கல்வி, இதர பண்பாட்டு அமைப்புகள் உருவாக்கிவைத்திருக்கும் பெண்ணின் விடுதலைக்குத் தடையான மதிப்பீடுகளைக் கவிழ்க்கும் கலகக் குரலொன்று அம்பையின் கதைகள் நெடுகிலும் அவற்றின் உள்ளார்ந்த தொனியாக ஒலிக்கும். அம்பையின் புனைவு அழகியல் மிகவும் நுணுக்கமானது. அவர் எழுதியவை பெரும்பாலும் யதார்த்தவாதப் படைப்புகளே. இருப்பினும் அவை நாம் காணும் யதார்த்தங்கள் அன்று. அதிகார சமூகத்தின் யதார்த்தத்தில் குறுக்கீட்டை நிகழ்த்தும் அம்பையின் யதார்த்தங்கள்.அவை நாம் அனைவரும் கனவுகாணும் யதார்த்தத்துக்கு நம்மை வழிநடத்துபவை. நாம் எவற்றையெல்லாம் யதார்த்தம் என நினைத்துக்கொண்டிருந்தோமோ, அவையெல்லாமே திட்டமிட்டு உருவாக்கிய புனைவுகள் என்பதை, அம்பையின் ஒவ்வொரு கதையும் நமக்கு உணர்த்துபவை. நமது மரபு வழியாகக் கூறப்பட்டு வந்த இதிகாசங்களின் பெண்கள் மகாபொறுமை சாலிகளாக, அப்பாவிகளாக, கற்புக்கரசி களாக  இருந்தனர்.  அவர்கள் ஆண்களால் காதலிக்கப்படுவதற்காகவே பிறவி எடுத்திருந்தார்கள். அவர்களுக்குத் தொண்டூழியம் செய்து கிடந்தார்கள். ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ எனப் பின் தொடர்ந்தார்கள். உலகத்துக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாதெனத் தீக்குளித்து நிரூபித்தார்கள். இத்தகைய எல்லா பெருங்கதையாடல்களையும் பெண்ணின் பார்வையிலிருந்து கொட்டிக் கவிழ்த்தவையே அம்பையின் கதைகள். அடவி கதையில்  ‘செந்திரு’ எனும் பெண், சீதைக்கு ஈடுபாட்டுடன் இசை கற்றுத்தரும் ராவணனைக் காட்டுகிறாள். கண்ணன் கடித்துத் தரும் கனிகளில் ஆரோக்கியம் இல்லை எனும் எதிர்க்குரலே அம்பையுடையது. இத்தகைய போக்குகளை ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, ‘காட்டில் ஒரு மான்’, ‘சிறகுகள் முறியும்’, ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ என அம்பையின் தொகுப்புகள் எங்கும் நாம் காண முடியும்.

அம்பையின் உள்ளடக்கம் தாண்டி அவரது கதைகளின் அழகியலும் முக்கியத்துவமுடையது. அவரது கதைகள் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என வழக்கமான நேர்கோட்டுத் தன்மையில் அமைந்தவையன்று. அவை காலத்தின் ஒரு பகுதியாக, சமூகத்தின் ஒரு பகுதியாக, வாழ்வின் ஒரு பகுதியாக, வளர்ச்சியை நோக்கி நிற்பவை. படித்த பிறகும் வாசக மனதில் வளர்ந்துகொண்டிருப்பவை. சலனங்களை, வினாக்
களை, கோபங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும் இயக்கநிலை படைத்தவை.அம்பையின் படைப்புகளை யோசித்துக்கொண்டே வந்த வேளையில், மழை நின்றிருந்தது. இப்போது எங்கள் கார் வடலூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வள்ளல் பெருமானை தரிசிப்பதாகத் திட்டம். அம்பையின் நிகழ்சிநிரல் நீண்டது, விரிவானது, ஆனால் திட்டமிடப்பட்டது. நேற்று பெருமாள்முருகன் இல்லத்தில் இருந்தார். இங்கு எங்களோடு இரு நாட்கள் இருந்துவிட்டு, சென்னை செல்ல முன்பதிவு செய்திருக்கிறார். இவற்றை அவர் மூன்று மாதங்களுக்கு முந்தைய ஏப்ரல் மாதத்திலேயே என்னிடம் தெரிவித்திருந்தார். வழியில் ஒரு கிராமத்துக்கடையில் சூடாகக் கேழ்வரகு  வடை சுட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் இறங்கி வடை சாப்பிட்டுவிட்டு மழை ஏற்படுத்தியிருந்த குளிர்ச்சியை அனுபவித்தபடி தேநீரைச் சுவைத்தோம். அந்தச் சிறிய கடையை, அங்கிருந்த எளிய கிராமத்து மனிதர்களை, அம்பை மிகவும்

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி

ரசித்துக்கொண்டிருந்தார். இம்முறை அம்பை இரு நாட்கள் தங்குவதாகக் கூறியதும் எனது கணவர் அவர் தங்கப்போகும் அறையில் ஓர் ஏர் கூலரைப் பொருத்தினார். எங்கள் வீட்டில் ஏ.சி வசதி ஏதும் இல்லை. அவர் சௌகரியமாக இருக்கவேண்டுமே என்கிற அக்கறையில் படுக்க ஒரு புதிய மெத்தை வாங்கிவந்தார். மிகவும் சோம்பேறியான அவர் குளியலறையைச் சுத்தம் செய்தார். அவர் எளிமையானவர் ஆயிற்றே என்றேன். அதற்காக நாம் அப்படியே விட்டுவிடலாமா. ஒரு முக்கியமான எழுத்தாளர் நம் வீட்டுக்கு வரும்போது அவரை சிறப்பான விதத்தில் கவனித்துக்கொள்ள வேண்டாமா என்றார்.நானும் கார்க்கியும் ஸ்பேரோ விருது வாங்க மும்பை சென்றிருந்தபோது, எங்களை சிறப்பான வகையில் விருந்தோம்பினார். அவரது கணவர் விஷ்ணு ஓர் ஆவணப்பட இயக்குநர் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். அம்பை மூன்று நேபாளிக் குழந்தைகளுக்குத் தாயானவர். பெரியவள்  ‘கிண்டு’ கல்லூரிப்படிப்பை முடித்திருக்கிறாள். இன்னொரு பையனும் சின்னவன் சோனுவும் பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெற்றோர் அம்பையின் வீட்டுக்குச் சிறிது தூரத்தில்தான் வசிக்கிறார்கள். பிள்ளைகள் அவ்வப்போது அவர்களிடமும் சென்று வருவார்கள். இத்தகைய ஒரு பரந்த வாழ்க்கைமுறையைக் கொண்டவரே அம்பை. அவருடைய இயக்கம் பன்முகம் கொண்டது. சென்னை, ஹைதராபாத், டெல்லி, மும்பை என வாழ்நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருப்பவர். இந்த அனுபவத் திரட்சியே அவரது படைப்பின் கனிகளில் சத்தைப் பொதிந்துவைத்திருக்கிறது.

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி

அவரது SPARROW (Sound and archives for research on women) பெண்களுக்கான அரிய பணிகளைச் செய்து வருகிறது. பெண்களுடைய பல்துறைச்சாதனைகளை, அவர்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை ஆவணப்படுத்துகிறது. ஓவியம், நாடகம், நடனம், பாரம்பரியக் கலைகள் என அனைத்திலும் பெண்களின் பங்களிப்புகளை வரலாறாக மாற்றுவதில் ஸ்பாரோவின் பணி மகத்தானது. அநுத்தமா, ஆர்.சூடாமணி, ராஜம்கிருஷ்ணன் என மனம் கவர்ந்த பெண் எழுத்தாளர்களின் தொடர்ச்சியாக விளங்கும் அம்பையின் சாதனைகளை நாளெல்லாம் பேசிக்கொண்டேயிருக்கலாம். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு A purple sea எனும் தலைப்பில் வெளிவந்தது. அம்பை தொடர்ந்து பணிசெய்வதில் மட்டுமே ஆர்வம் உடையவர். வேறெந்த எதிர்பார்ப்புகளும் அவருக்கு இருந்தது இல்லை. ஏமாற்றமும் அடைந்ததில்லை.

நாங்கள் வடலூரில் சத்தியஞான தரும சாலையை வந்தடைந்திருந்தோம். வள்ளலாரின் மனுமுறைகண்ட வாசகம் அவரது ஞானம், கனிந்திருந்த நிலையில் எழுதப்பட்ட முற்போக்கான இலக்கியம் என  நிறைய அவரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். அந்த இரவு அபூர்வமானது. பிடித்தவர்களோடு பிடித்த இடங்களுக்கு சுற்றித்திரிவது அருமையான அனுபவம்.மறுநாள் அவர் நான் பணிபுரியும் பள்ளிக்கு வந்திருந்தார். ஒவ்வொரு குழந்தையையும் அன்பொழுக விசாரித்தார். ஒரு தலைமையாசிரியராக அந்தப் பள்ளியில் செய்திருந்த மாற்றங்களை, அக்கறையோடு ஆசிரியைகளிடம் பகிர்ந்துகொண்டார். குழந்தைகளுக்குப் பாடல்கள், கதைகள், விளையாட்டு எல்லாம் மிக அவசியம். அவர்களது ஒருங்கிணைந்த ஆளுமையை வளர்க்க, படைப்பூக்கத்தைச் செழுமைப் படுத்த அவை உதவும் என்றார். செல்லும் இடமெல்லாம் இதயங்களை வெல்பவர் அம்பை. பள்ளி ஆசிரியைகள் மறுநாள் அவரது கதைப் புத்தகங்களை என்னிடம் கேட்டார்கள்.

தமிழில் எழுதுபவர்களுக்கு பெரிதாய் அங்கீகாரங்கள் இல்லை.அம்பையால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுத முடியும். இன்னும்கூட விரிவான அளவில் கவனத்தை ஈர்த்திருக்க முடியும். ஆனால் அவரிடம் செயல்படுவது தமிழ் மனோபாவம். அது தனது உள்ளுணர்விலிருந்து கிடைத்த ஆற்றலின் வழியாகவும், வாசித்தும் கட்டுடைத்தும் பெற்ற அறிவின் மூலமாகவும், முகிழ்த்த மனோபாவம். தமிழில் தாம் செய்யத் தேவைகள் இருப்பதாக அவர் கருதுவதால்தான், தொடர்ந்து தமிழில் இயங்குகிறார். இவ்வளவு பரந்துபட்ட ஆளுமைக்குக் கிடைத்திருக்கக்கூடிய கௌரவங்களை நினைத்துப் பார்த்தால், எரிச்சலாகத்தான் இருக்கிறது. ‘விளக்கு விருது’ மட்டுமே அவரை அலங்கரித்த மயிலிறகு. ‘சாகித்ய அகாதமி’ போன்ற விருதுகள் அவருக்குக் கிடைக்காததால், அவரது இலக்கிய மதிப்பு ஒன்றும் குறைந்துவிடவில்லை.  ஒரு பார்வையாளராக எனக்குத் தோன்றும் ஏமாற்றமே இவை.மற்றபடி அம்பைக்குச் செய்ய ஏராளமான பணிகள் இருக்கின்றன. பாலினப் பாகுபாடு என்பது அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தேசத்தில் அம்பைகளின் தேவைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. அம்பை, இந்தப் பிரச்னையைப் பண்பாட்டுரீதியாக

தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி

அணுகியவர்.  கலை,  அரசியல் இரண்டையும் ஒரு சேரக் கையாள்பவர்கள் சிலரே. அவரது கதை ஒரே சமயத்தில் கதையாகவும் பெண்களுக்கான இருளைப் போக்கும் விளக்காகவும் இருக்கிறது. அம்பை தனது அடுத்த பயணத்திற்குத் தயாராகிறார். தொடர்வண்டியில் ஏற்றிவிட்டுக் கையசைக்கிறேன். கண்களில் நீர் கோக்கிறது. ஒரு சகோதரியாய், தாயாய், தோழியாய் என் நெஞ்சில் பதிந்திருக்கிறார் அம்பை. இரவு  மொட்டை மாடியில்  நட்சத்திரங்களைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும்போது, சிறு வயது ஞாபகம் வருகிறது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிளிலிருந்து தவறி விழுந்து கையை உடைத்துக்கொள்கிறேன்.  ‘கைகால் நொண்டியானால், யாரும் கட்டிக்க வர மாட்டாங்களே’ என உறவுகள் அறிவுரை சொல்கின்றன. எவ்வளவு காயம்பட்டாலும் உனது ‘வாகனம்’ உன்னை புதிய இடம் கொண்டுபோகும் என்கிறார் அம்பை. சிலரை நாம் சந்திக்கிறோம். கைகுலுக்குகிறோம். அப்போது நம் நாடிநரம்புகளில் மின்சாரத்தைப் பாய்ச்சிவிட்டுக் கடந்துபோகிறார்கள் அவர்கள். அப்படி ஒருவர் அம்பை. எல்லா இருளையும் அழிக்கும் ஒளியைத் தரக்கூடியது அவர் அளிக்கும் சக்தி. நிச்சயம் இன்னும் நிறைய சந்திப்புகள், பயணங்கள், பகிர்தல்கள் இருக்கின்றன அம்பையோடு. அவை எனது பொழுதுகளை, என்னைப் புதுப்பிப்பதாகவும் இருக்கும்.