மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்

அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்

அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்

அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்

ரலாற்றில் பெண்களுக்கான இடம் என்ன என்று யோசித்தால் மிகப்பெரிய இடைவெளியே நம் முன் விரிகிறது. துயரமும் தியாகமும் நிறைந்த பெண்களின் வரலாற்றை எப்போதாவது அறிவியலோடு பொருத்திப் பார்த்திருக்கிறோமா? எத்தனை பெண் விஞ்ஞானிகளின் பெயர்கள் நமக்குத் தெரியும்? இயல்பாகவே மத நம்பிக்கைகளில் ஊறிப்போன பெண்களிடம் விஞ்ஞான மனப்பான்மை வளர்வது சாத்தியமா? அறிவியல் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் பெண்களுக்கான இடம் என்ன? விஞ்ஞானிகளிலும் ஆண், பெண் வேறுபாடுகள் காட்டப்படுகின்றதா? அரசியல் தத்துவங்களுக்கும் அறிவியலுக்குமான உறவு என்ன? இப்படிப் பல கேள்விகளைப் பரிசீலிக்கத் தொடங்குவதுதான் சிந்தனையின் வெற்றி.

முதலில் அறிவியல் என்ற சொல்லே நம் வாழ்வின் சுவாரஸ்யத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. பாடப்புத்தகங்களின் கடினமான சுமைகளால் அவதியுற்ற காரணத்தால் அறிவியல் என்பது நம் ஆழ்மனதில் ஒவ்வாமைக்குரிய இடத்தையே அடைந்திருக்கிறது. ஆனால், நம் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை அறிவியல் மாற்றியமைத்திருக்கிறது. அரசியல் தொடங்கி மதத்தலைவர்கள் வரை அறிவியல் ஊடுருவாத, தாக்கம் செலுத்தாத இடமே இல்லை. நம் வாழ்நாளில் நாம் கேட்டறிந்த, நமக்கு நினைவுள்ள அறிவியல் அறிஞர்கள் என்று ஒரு பட்டியலிட்டால், அது பெரும்பாலும் ஆண் அறிவியல் அறிஞர்களாகவே இருக்கும். மேடம் கியூரியைப் போல ஒரு சில பெண் பெயர்களே அரிதினும் அரிதாய் நினைவுக்கு வரும். இந்த நிலையில் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள ‘அறிவியலில் பெண்கள் - ஒரு சமூக வரலாற்றுப் பார்வை’ என்ற புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்

‘அறிவியலில் பெண்கள்’ என்ற தலைப்பைப் பார்த்ததுமே, பெண் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கைக்குறிப்புகளை அடுக்கி நம் முன் வைக்கும் புத்தகம் என்ற எண்ணமே ஏற்படும். ஆனால், சில பக்கங்களிலேயே அந்த எண்ணத்தை உடைத்தெறிகிறது புத்தகம். அறிவியல் வரலாறு, அரசியல் மற்றும் தத்துவப் பின்னணி, சமூகவியல் பார்வைகள் குறித்து விரிவாகப் பேசுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் இயந்திரங்களின் வருகையிலிருந்து அறிவியலின் வரலாற்றைத் தொடங்காமல் காலங்காலமாக உலகம் முழுவதுமுள்ள சிந்தனை மரபுகளில் காணப்பட்ட அறிவியல் சிந்தனைகள், அறிவியல் முயற்சிகள், பரிசோதனைகள் ஆகியவற்றையும் விளக்குவது சிறப்பு. அறிவியலை பெண்களின் அன்றாட வாழ்க்கைக்கு வெளியே வைத்து அணுகாமல், பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேசும் பகுதிகள் முக்கியமானவை. உணவுப் பாதுகாப்பு, உயிரின வளப் பாதுகாப்பு, சமையல், பாரம்பரிய மருத்துவம், நகர்சார் வேளாண்மை ஆகியவற்றில் காணப்படும் அறிவியல் பார்வைகளை விளக்குவதன் மூலம் புதிய சிந்தனைத் திறப்புகளை ஏற்படுத்துகிறது.

பித்தகோரஸின் முதல் மாணவியான தியானோ, வரலாற்றில் முதன்முதலில் அறியப்பட்ட பெண் மருத்துவர் மெரிட்டா, அக்காடிய வானிலை அறிஞர் என் ஹேடு அன்னா, வட ஆப்பிரிக்க இயற்கைத் தத்துவ அறிஞர் அரீட், நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் டயோட்டிமா எனப் பல பழங்காலப் பெண் அறிவியல் அறிஞர்கள் நாம் அறியாதவர்கள். இன்றைக்கு வேண்டுமானால் அறிவியல் முயற்சிகள் என்பவை அங்கீகாரமும் விருதுகளும் கொண்டவையாக இருக்கலாம். ஆனால், மத நம்பிக்கைகளும் தீவிரமான பழமைவாதமும் கரடுதட்டிப்போயிருந்த அன்றைய காலகட்டத்தில் ஓர் அறிவியல் அறிஞராக இருப்பது என்பதற்கு வாழ்வைத் தியாகம் செய்வதற்கான மனநிலையும் போராட்டக்குணமும் அவசியம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஹைபாஷியா. பிளாட்டோனியத் தத்துவ அறிஞரான இவர், தத்துவவியலாளரும்கூட. இவரது தொடர்ச்சியான செயற்பாடுகள் மதநம்பிக்கைகளுக்கு விரோதமானவை என்று கருதப்பட்டு, அடிப்படைவாதக் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டார். கலிலியோ அளவுக்கு வரலாற்றில் ஹைபாஷியா நினைவுகூரப்படாதது அவலம்தான்.

அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்

வானியல், இயற்பியல், கணிதவியல், வேதியியல், உயிரியல், மகப்பேற்றியல், செவிலியர் இயல் என அறிவியலின் எல்லாத் துறைகளிலும் பெண்கள் பங்களித்திருக் கின்றனர் என்பதைத் தரவுகளுடன் விளக்கிச் சொல்லும் இந்த நூல், இந்த வகையில் தமிழின் முதல் பதிவு. முதன்முதலில் கம்ப்யூட்டரை உருவாக்கிய சார்லஜ் பாப்பேஜுக்கு உதவும் வகையில் கணினிக்கான விவரிப்பை எழுதியதாகக் கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த அகஸ்டா அடா லவ்லேஸ். புகழ்பெற்ற கவிஞர் பைரனின் மகளான இவர் கணிதவியலில் ஆழமான அறிவு கொண்டவர். வைக்கோல் தொப்பி தயாரிக்கும்

அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்

தொழில்நுட்பத்துக்காக முதன்முதலில் காப்புரிமை பெற்ற பெண் என்ற சிறப்பு கொண்ட மேரி டிக்சன் கீஸ், மிசிசிபி பள்ளத் தாக்குகளில் அமெரிக்க, இந்திய நாகரிக எச்சங்கள் குறித்து ஆய்வு செய்த இனவரைவியல் அறிஞர் ஆலிஸ் கன்னிங்காம் ஃபிளெட்சர், இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வானியல் ஆய்வுகளை மேற்கொண்ட செசிலியா பெய்னே - கபோஸ்கின், நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரக் கூட்டங்களின் சுழற்சித் தகைவேகம் பற்றிய முன்னோடி ஆய்வுகளைச் செய்த வீரா ரூபின் என உலகமெங்கும் நவீன அறிவியலை வளர்த்தெடுத்த பெண்கள் குறித்த குறிப்புகள் நூல்தோறும் விரவிக்கிடக்கின்றன.

மேலும் ஆண் அறிவியல் அறிஞர்களுக்குத் துணை நின்ற பெண்கள், அறிவியல் குறித்த நூல்களை எழுதி விஞ்ஞானம் குறித்து மக்களிடம் கவனம் குவித்துப் பரவலாக்கம் செய்த ஆளுமைகள் குறித்த செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் அலைப் பெண்ணியவாதிகளின் சிந்தனைகள், பின்நவீனக் கருத்தாக்கங்கள் போன்ற நவீனச் சிந்தனைகளின்வழி பெண் அறிவியல் அறிஞர்களின் மன, உடல் திறன்கள் மற்றும் நடத்தைகள் குறித்த ஆய்வுகளும் தமிழுக்குப் புதியவை. பால் அடிப்படையிலான பாரபட்சம் என்பதற்கு அறிவியல் துறைகளும் விதிவிலக்கு அல்ல. பெண் என்பதற்காகவே அறிவியல் அறிஞர்களில் காட்டப்பட்ட பால் வேறுபாடுகள் குறித்த விரிவான வரலாற்றுத்தகவல்கள் அலசப்பட்டுள்ளன. ஹைபாஷியா கிறிஸ்தவ மத அடிப்படை வாதத்தால் பாதிக்கப்பட்டார் என்றால், மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற ரீட்டா லெவி மோன்டால்சினி யூத மத அடிப்படை வாதத்தால் பாதிக்கப்பட்டார். ‘யூத மதத்தவர் கல்விப் பணியில் சேரக் கூடாது’ என்ற முஸோலினியின் சட்டத்தால் அவரது வாழ்க்கைப் பணி இத்தாலியில் தடைசெய்யப்பட்டது. மார்க்சியப் பெண்ணியம், முற்போக்குப் பெண்ணியம், புரட்சிகரப் பெண்ணியம், சமவுடைமைப் பெண்ணியம், சூழலியல் பெண்ணியம் ஆகிய அரசியல் பெண்ணிய வகைகள் அறிவியலை அணுகிய விதங்கள் குறித்து விமர்சனபூர்வமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்

பெண்கள் விடுதலை பெற்ற தன்னிலைகளாக உருப்பெறுவதற்கும் அறிவியல் பார்வையை உள்வாங்கிக்கொள்வதற்கும் தொடர்பு உண்டு. ஆணாதிக்கம், குடும்பம் என்னும் அமைப்பு, தனிச்சொத்துமுறை, மதப் பழமைவாதம் ஆகியவற்றிலிருந்து பெண்கள் தங்களைத்  தாங்களே விடுவித்துக்கொள்ளவும் அதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கவும் அறிவியல் மனப்பான்மை அவசியம். மேலும் வைதீக மனநிலையை வளர்த்தெடுக்கும் கூட்டுக்குடும்ப முறை, ஜனநாயகமற்ற குடும்ப அமைப்பைப் பேணும் ஆணாதிக்க மனநிலை ஆகியவை பெண்களின் மீது சுமத்திய கடுமையான உடல் உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுவித்துக்கொள்ள நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் எந்திரங்களும் உதவியுள்ளன. இயல்பாகவே அறிவியலுக்கும் பெண்ணுரிமைக்குமான உறவு பொருத்தமானது. இன்றைய நவீன அறிவியல் என்பது வர்த்தகத்தையும் சந்தையையும் அரசதிகாரத்தையும் மையப்படுத்தி இருப்பதையும் புரிந்துகொண்டு இந்த நூலை இன்னும் நுட்பமாக வாசிக்கத் தொடங்கலாம்.

அறிவியலில் பெண்கள் & ஒரு சமூக வரலாற்றுப் பார்வை
கு.வி.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு : அடையாளம் பதிப்பகம்
பக்கங்கள் : 340, விலை : 280 ரூபாய்