
இங்கேயும்... இப்போதும்...படம்: எம்.விஜயகுமார், வீ.சதிஷ்குமார், ம.அரவிந்த், பா.காளிமுத்து, வீ.சிவக்குமார்

குமாரநந்தன்
“பூமியில் சிதறிக்கிடக்கும் ஏராளமான வாழ்க்கை முறைகளை கதைகளின் வழியாக வாழ்ந்து களிக்கிறேன். இந்த டீக்கடையும், பலகார அடுப்பும் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என்னைப்

பிணைத்துக்கொண்டுவிட்டன. உணவு மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பது, கதைகள் எழுதுவதற்கு இணையான ஆனந்தத்தைத் தருகிறது.”
முதலில் பாலமுருகன் என்ற இயற்பெயரிலேயே எழுதினார். தற்போது குமாரநந்தன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ‘பதிமூன்று மீன்கள்’, ‘பூமியெங்கும் பூரணியின் நிழல்’ இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், ‘பகற்கனவுகளின் நடனம்’ கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. கடையை நிர்வகித்துக்கொண்டு, ஒரு செய்தித்தாளில் உதவி ஆசிரியராகவும் பணிபுரிகிறார். சிறுவர் கதைகள் என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் சிறுவர்களுக்கான மந்திரஜாலக் கதைகளை எழுதி வருகிறார்.

ரோஜாகுமார்
“வாழ்வின் ஒவ்வோர் அசைவையும் கவிதையாகப் பார்க்கிற வினோதமான மனிதன் நான். மென்சிறகைக் காற்றில் அசைத்து, வானைப் புரட்டிப்போடத் துடிக்கிற சிறு பறவையாய் என் நம்பிக்கை எப்போதும் அசைகிறது. முன்முடிவுகள் ஏதுமின்றி என் கனவு நகரும் திசையில் என் எழுத்தும் நகர்ந்துகொண்டிருக்கிறது.”

மதுரை, மேலூரைச் சேர்ந்த ரோஜாகுமார், பேருந்து நிலையம் அருகில் பழரசக்கடை நடத்துகிறார். ‘மொசக்குட்டி’, ‘உள்வீட்டில் இருந்து நிலா முற்றம் வரை’, ‘சித்திரக்குகை’ ஆகிய மூன்று சிறுகதை நூல்களை எழுதியிருக்கிறார். மனித மாண்புகளையும் மத நல்லிணக்கத்தையும் களமாகக்கொண்டு இஸ்லாமிய சமூகத்தின் கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகளை அழகியல்பூர்வமாக அணுகுகிறது ரோஜாகுமாரின் எழுத்து. இவரின் இயற்பெயர் காதர் மைதீன். இஸ்லாமியப் பெண்களின் உணர்வுகளை முன் நிறுத்தி நாவல் ஒன்றை எழுதி வருகிறார்.

செம்பை மணவாளன்
“பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத ஒரு மனுஷன், வாழ்க்கையைத் தவிர வேற எதை எழுத முடியும். கண்டதையும் கேட்டதையும் வாழ்ந்ததையும் வார்த்தைகளுக்குள்ள அடக்கி வரிசைப்படுத்துற எளிய வேலையைத்தான் நான் செஞ்சுட்டிருக்கேன். மண்ணையும் உழைப்பையும் நம்பி வாழுற ஒவ்வொரு கிராமத்தான் வாழ்க்கையிலயும் ஒரு நாவல் இருக்கு. அதை மொழியாகப் பெயர்த்து அடுக்கிக் கட்டுற கொத்தனாரு நான்.”

புதுகையின் வெம்மை ததும்பும் செம்மண் மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரான செம்பை மணவாளன், கட்டட மேஸ்திரியாக வேலை செய்கிறார். புதுக்கோட்டை அருகில் உள்ள செம்பாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ‘தவம்’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு, பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக இருக்கிறது. ஜனவரி புத்தகத் திருவிழாவில், ஒரு சிறுகதைத் தொகுப்பும், இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ஒரு நாட்டுப்புற பாடல் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவரது இயற்பெயர் பிச்சைமுத்து.

சம்யுக்தா மாயா
“என் இருத்தலை நிரந்தரமாக்கும் பொருட்டே நான் எழுதுகிறேன். பெரும்பாலும் அகப்பாடல்களையே எழுதுபவள் நான். அகத்தின் சிக்கல்கள், விடுபடல்கள், கற்பிதங்கள், உயரப் பறத்தல்கள் இவற்றைக் காட்சிப் படிமங்களாக கவிதைப்படுத்துவதன் வழி கிடைக்கப்பெறும் விடுதலைக்காகவே எழுதுகிறேன்...

”
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். சென்னையில் தனியார் வங்கி ஒன்றில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றுகிறார். தற்போது, வங்கியின் பகுதித் திட்டமான, எளிய வருவாய் படைத்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கான கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளார். ‘டல்ஹௌசியின் ஆரஞ்சு இரவு’ என்ற கவிதைத் தொகுப்பு பரவலான கவனம் பெற்றது. சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவரது இயற்பெயர் உமா மகேஸ்வரி.

கவியோவியத் தமிழன்
“சகல பலவீனங்களோடும் விளிம்பு நிலையில் வாழும் ஓர் எளிய மனிதனின் ஓலம் என்றே என் படைப்புகளை நான் சுயவிமர்சனம் செய்வேன். இந்தச் சமூகத்தில் நான் எதிர்கொள்ளும்

புறக்கணிப்புகளுக்கான எதிர்வினைதான் என் எழுத்து. மனித மனங்களின் வக்கிரங்களை பூடகமில்லாமல் வெளிப்படுத்தும் ஓர் உளவியல் தன்மையை என் எழுத்தில் நான் உள்ளடக்க முயல்கிறேன்.”
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த கவியோவியத் தமிழன், சுவரெழுத்து ஓவியராக வேலை செய்கிறார். விளம்பர போர்டுகள் எழுதுவார். கோவில் ஓவியங்களும் வரைவதுண்டு. ‘ஊடாடும் வாழ்வு’ சிறுகதைத் தொகுப்பும், ‘சாம்பலாடை’ கவிதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. ‘மூங்கில் சுமக்கும் புல்லாங்குழல்கள்’ ஹைக்கூ தொகுப்பும், ‘விதைத்த காடும் பசித்த பறவைகளும்’ கவிதைத் தொகுப்பும் விரைவில் வெளிவர இருக்கின்றன. இவரது இயற்பெயர் சுப்பிரமணி.