
ஜெயமோகன் , ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
முன்கதை:
இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்படும் புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் யார் என்ற மர்மத்தைக் கண்டுபிடிப்பதற்காக கேப்டன் பாண்டியன் அங்கே கிளம்புகிறார். இனி...

ஸ்பிடி சமவெளியில் இமயமலையின் வளைந்த சரிவுகளில் மலைப்பாதை சுற்றிச் சுற்றி இறங்கும். சாலையை மட்டும் பார்த்தால், அது ஊதுவத்தியின் புகை வளையம் போல இருக்கும். அதில், இந்திய ராணுவத்தின் கார் சென்றுகொண்டிருந்தது. உள்ளே பாண்டியனும் கர்னல் மகேந்திரனும் இருந்தனர். முன்னிருக்கையில் ஒரு வீரர் இயந்திரத் துப்பாக்கியுடன் இருந்தார்.
ஆஷி என்னும் பெண்மணியின் சிறிய விடுதிக்கு முன்னால் கார் நின்றது. துப்பாக்கி ஏந்திய காவலர் இறங்கி, எச்சரிக்கையுடன் சுற்றும்முற்றும் பார்த்தார். அவர் சைகை காட்டியதும் கர்னல் மகேந்திரனும் பாண்டியனும் இறங்கினர்.
அந்த வீட்டின் முன் ஏற்கெனவே ஒரு ராணுவ கார் நின்றிருந்தது. இரண்டு வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் உள்ளே சென்று செய்தியைச் சொன்னார். வீட்டுக்குள் இருந்து கேப்டன் கரன் சின்ஹா வெளியே வந்தார். மகேந்திரனைப் பார்த்ததும் வி்றைப்பாக நின்று சல்யூட் அடித்தார்.
மகேந்திரன், “இவர் பாண்டியன்” என்று அறிமுகம் செய்தார்.
கரன் சின்ஹா, “உங்கள் சாகசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் சார்” என்றார்.
பாண்டியன் புன்னகையுடன், “சாகசங்களை நான் விரும்புவதில்லை” என்றான்.
‘‘ஏன்?”
‘‘ஏனென்றால், எந்த சாகச வீரனும் தற்செயலாக கொல்லப்பட வாய்ப்புண்டு” என்று சிரித்தான் பாண்டியன். கேப்டன் கரன் சின்ஹாவும் கர்னல் மகேந்திரனும் சிரித்தனர்.

‘‘நாம் உள்ளே சென்று பார்ப்போம்” என்றார் கர்னல் மகேந்திரன்.
அவர்கள் உள்ளே சென்றார்கள். கேப்டன் கரன் சின்ஹா, “அவர்கள் இங்கே மதியம் முதல் மறுநாள் அதிகாலை வரையே தங்கியிருந்தார்கள். மொத்தம் ஐந்து பேர். அவர்களில் நான்கு பேர் மம்மியைத் திருடுவதற்காக மடாலயத்துக்குச் சென்றார்கள். ஒருவர் இங்கேயே காத்திருந்தார். அவர்தான் லீ பெங் ஸூ” என்று சொன்னார்.
“அறைகளை நன்றாகப் பார்த்தீர்களா?” என்று பாண்டியன் கேட்டான்.
“ஏழு வெவ்வேறு தடய நிபுணர்கள் வந்து பார்த்துவிட்டார்கள். எந்த தடயமும் அவர்களால் விடப்படவில்லை” என்றார் கேப்டன் கரன் சின்ஹா.
“ஏதாவது கைரேகைகள் கிடைத்தனவா?” என்று பாண்டியன் கேட்டான்.
“ஐந்து பேருமே எப்போதுமே கையுறை அணிந்திருக்கிறார்கள். புறப்படும் அவசரத்திலும் அவர்கள் கொண்டுவந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்” என்றார் கேப்டன் கரன் சின்ஹா.
“ஆம்! அவர்கள் உளவு அறிவதில் நிபுணர்கள். தடையங்களை விட்டுச்செல்லாமல் இருப்பதற்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும்” என்றான் பாண்டியன்.

“ஆனால், அவர்கள் இங்கே உள்ள இரண்டு கண்கள் அவர்களைக் கவனிப்பதை அறியவில்லை. அவை கேமரா போல அவர்களின் தலைவரைப் பதிவுசெய்துகொண்டிருந்தன” என்று கர்னல் மகேந்திரன் சிரித்தார்.
“ஆம், அந்தப் பையன் படம் வரையவில்லை என்றால் நாம் இந்த தேடலை ஆரம்பித்திருக்கவே மாட்டோம். அவனை வரச்சொல்லுங்கள். நாம் அவனிடம் மட்டும் விசாரித்தால் போதும்” என்றான் பாண்டியன்.
கேப்டன் கரன் சின்ஹா உள்ளே சென்று, நோர்பு என்னும் சிறுவனை அழைத்து வந்தார். அவன் அம்மாவும் அக்காவும் வந்து கவலையுடன் பார்த்து நின்றனர்.
நோர்பு, இமையமலைகளில் வாழும் ஷெர்பா இனத்தைச் சேர்ந்தவன். ஷெர்பாக்கள், மஞ்சள் இனத்தைச் சேர்ந்தவர்கள். சிறிய உடலமைப்பு கொண்டவர்கள். ஆனால், அவர்களின் நுரையீரலும் கெண்டைக்கால் தசைகளும் மிகப்பெரியவை. மற்றவர்களைவிட விரைவாக மலைகளில் ஏறமுடியும். தன் எடையைவிட அதிக எடையைத் தூக்கிக்கொண்டு மலையேறவும் அவர்களால் முடியும்.
நோர்பாவுக்கு ஏழு வயதானாலும் நான்கு வயது சிறுவன்போலவே தோன்றினான். அவன் பௌத்த முறைப்படி கைகளை மார்பில் கட்டி அவர்களை வணங்கினான்.
பாண்டியன் அவனிடம் அவனுடைய மொழியிலேயே பேச ஆரம்பித்தான். “நோர்பா, நீ வரைந்த ஓவியத்தைப் பார்த்தேன். அற்புதமாக இருந்தது.”
நோர்பா புன்னகைத்தான். அவன் கண்கள் சிறியவை. அவை, நீர்த்துளிகள் போல இருந்தன.
“நீ மற்றவர்களையும் பார்த்தாய் அல்லவா?” என்றான் பாண்டியன்.
“ஆமாம் பார்த்தேன்” என்றான் நோர்பா.
“அவர்களை உன்னால் வரைந்து தரமுடியுமா?” என்று பாண்டியன் கேட்டான்.
“ஆம், வரைந்து தருகிறேன்.”
“அவர்கள் அனைவரையும் நீ பார்த்தாயா?” என்று பாண்டியன் கேட்டான்.
“இல்லை, நான் ஐந்து பேரைத்தான் பார்த்தேன்” என்று நோர்பா சொன்னான்.
பாண்டியன் புருவங்களைச் சுருக்கி, “ஐந்து பேர்தானே வந்தார்கள்?” என்று கேட்டான்.
“இல்லை. ஏழு பேர். வேறு இரண்டு பேர் காரில் இருந்தார்கள். இவர்களை இறக்கிவிட்டுவிட்டு அந்த கார் சென்றுவிட்டது. நான், அவர்களில் ஒருவரின் குரலைக் கேட்டேன். இன்னொருவர் காரோட்டி. அவர்கள் இருட்டில் இருந்தனர். ஆகவே, பார்க்க முடியவில்லை” என்றான் நோர்பா.
“அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்?” என்று பாண்டியன் கேட்டான்.
“எனக்கு அந்த மொழி தெரியவில்லை. ஆனால், அந்த ஒலியை என்னால் அப்படியே திருப்பிச் சொல்ல முடியும்” என்றான் நோர்பா.
“சொல்” என்றான் பாண்டியன்.
நோர்பா அந்தச் சொற்களை அப்படியே சொன்னான். மந்திரம்போல அது ஒலித்தது.
“சீன மொழி!” என்றார் கர்னல் மகேந்திரன் ஆச்சர்யத்துடன்.
“ஆம், சீன மொழிதான். அந்தச் சொற்களின் அர்த்தம் இதுதான். நான் காத்திருப்பேன். பணி முடிந்ததும் எனக்குச் செய்தி வந்தாக வேண்டும்.”
கர்னல் மகேந்திரன், “அப்படியென்றால் காரில் இருந்தவர் இவர்களைவிட முக்கியமானவர்” என்றார்.
“ஆம்” என்றான் பாண்டியன்.
“ஆனால், அவரைப் பற்றிய எந்த தடயமும் இல்லையே” என்றார் கேப்டன் கரன் சின்ஹா.
“இருக்கிறது. இந்தப் பையன் மிகச்சிறந்த தடயம். இவன், அவர் குரலை இனி எப்போது கேட்டாலும் அடையாளம் கண்டுகொள்வான்” என்றான் பாண்டியன்.
“மிகக்கூர்மையான கண்ணும் காதும் இவனிடம் உள்ளது. இவன் நம் ராணுவத்தில் இருக்கவேண்டியவன். இவனை நம்முடன் கூட்டிச்செல்வோம்” என்றார் மகேந்திரன்.
“நான், அவன் பெற்றோரிடம் பேசி ஒப்புதல் பெறுகிறேன்” என்றார் கேப்டன் கரன் சின்ஹா.
விசாரணையை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பியபோது, நோர்பாவும் அவர்களுடன் காரில் ஏறிக்கொண்டான். அவன் உற்சாகமாக இருந்தான். ஆனால், அவன் அம்மாவும் அக்காவும் வருத்ததுடன் வந்து கையசைத்தார்கள். அவன், அவர்களிடம் கையசைத்து விடைபெற்றுக்கொண்டான்.
அவர்கள் மம்மி கண்டெடுக்கப்பட்ட ஸ்கிஜின் ஸ்போ ஊருக்கு மதியம் சென்று சேர்ந்தார்கள். அவர்களின் கார் ஊருக்குள் நுழைந்ததுமே, உரக்கக் குரைத்தபடி கரிய நிற நாய் ஓடிவந்தது. செம்புப் பாத்திரத்தில் தட்டுவதுபோல அதன் குரைப்பு ஒலித்தது.
‘‘இந்த நாய்தான் கொள்ளையடிக்க வந்தவர்களைத் துரத்தியது. இதன் பெயர் நாக்போ” என்றார் கர்னல் மகேந்திரன்.
“லாப்ரடார் இன நாய். மிகவும் புத்திசாலி” என்று பாண்டியன் சொன்னான்.
அவர்கள் காரில் இருந்து இறங்கியதும், நாக்போ மேலும் பயங்கரமாகக் குரைத்தபடி துள்ளத் தொடங்கியது.
கர்னல் மகேந்திரன், “அது கொஞ்சநாளாகவே வெறிபிடித்ததுபோல இருக்கிறது. இங்கே யார் வந்தாலும் கொள்ளையடிக்க வந்தவர்கள் என நினைக்கிறது. கொள்ளையர்கள் அதன் உரிமையாளரைத் தலையில் அடித்துவிட்டார்கள். அவர் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். வயதான மனிதர். சோடாக் என்று பெயர். அவர்தான் இந்த மம்மியை அடையாளம் காட்டியவர்” என்றார்.
ஆனால், நோர்பா நாயை நோக்கி கையை நீட்டியபடி மெல்லிய குரலில் ஏதோ சொன்னான். அது உடனே காதுகளை மடித்துக்கொண்டு அதைக் கேட்டது. வாலை ஆட்டியபடி அருகே வந்து நின்றது. தலையை நன்றாகத் தாழ்த்தி மூக்கை நீட்டி மங் மங் என்று ஒலி எழுப்பியது.
“நீ அதனிடம் என்ன சொன்னாய்?” என்றான் பாண்டியன்.
“நான் உன் நண்பன் என்று சொன்னேன்.” என்றான் நோர்பா.
“உனக்கு நாயிடம் பேச எப்படித் தெரியும்?” என்று கர்னல் மகேந்திரன் கேட்டார்.
“நான் ஒரு லாப்ரடார் நாயை வளர்த்தேன். அது சென்ற வருடம் இறந்துவிட்டது. இதேபோன்ற கரிய நாய்தான் அதுவும்” என்றான் நோர்பா.
அவர்கள் ஸ்கிஜின் கோன்பா மடாலயத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கே 20 பேர்கொண்ட ராணுவப் படை காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தது. 10 பேர் விரைவுத் துப்பாக்கிகளுடன் மடாலயத்தைச் சூழ்ந்து காவலுக்கு நின்றிருந்தார்கள். மீதி 10 பேர் அருகே கட்டப்பட்ட கூடாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். ராணுவப் பிரிவின் தலைவரான ஜமேதார் வந்து, கர்னல் மகேந்திரனுக்கு சல்யூட் அடித்தார்.
கர்னல் மகேந்திரனிடம் மடாலயத்தை திறப்பதற்கான சாவி இருந்தது. ஓரளவு சீரமைக்கப்பட்ட ஒரு சிறிய அறைக்குள் மம்மி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்தனர். மம்மிக்கு மேல் பூசப்பட்டிருந்த தைலத்தின் வாடை அறைக்குள் நிறைந்திருந்தது. கூடவே, அங்கு இருந்த புழுதியின் மணமும் கலந்திருந்தது.
“நல்லவேளை இங்கே மழை பெய்வதில்லை. பெய்தால் ஒரு மழையிலேயே இந்த அறை நீரில் ஊறிவிடும்” என்றார் கேப்டன் கரன் சின்ஹா.
பாண்டியன் அந்த மம்மியைப் பல கோணங்களில் கூர்ந்து நோக்கினான். ‘‘இந்த மம்மியைப் பற்றி இதுவரை நம் ஆராய்ச்சியாளர்கள் அளித்த எல்லா தகவல்களும் எனக்குத் தேவை” என்றான்.
“அனைத்தையும் ஒரே கோப்பாக ஆக்கி உங்களிடமே தந்துவிடுகிறேன்” என்றார் கர்னல் மகேந்திரன்.
பாண்டியன் அந்த மம்மியைத் தொட்டுப் பார்த்தான். “500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மனிதர் என்று நம்புவதற்கே கடினமாக உள்ளது” என்றான். சட்டென்று அவன் முகம் மாறியது. “என்ன இது?” என்றான். கூர்ந்து மம்மியின் கையை நோக்கினான்.
மம்மியின் கை மடித்து வைக்கப்பட்டிருந்ததால் கைமடிப்பு தெரியவில்லை. மெல்ல கையைத் தூக்கிப் பார்த்தான். கைமடிப்பில் இரு சிறிய எழுத்துகள் பச்சை குத்தப்பட்டிருந்தன.
கர்னல் மகேந்திரன் குனிந்து உற்றுப்பார்த்தார். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. மம்மியின் உடலில் தோல் மிகவும் சுருங்கி இருந்தது. அந்தச் சுருக்கங்கள்தான் அப்படித் தெரிவதாக அவர் நினைத்தார்.
பாண்டியன் அந்த எழுத்துகளைத் தன் கைபேசியின் கேமிராவால் படம் எடுத்துக்கொண்டான்.
“இவை எந்த மொழி எழுத்துகள்?” என்றார் கர்னல் மகேந்திரன்.
“இவை தொன்மையான சீன சித்திர எழுத்துகள்” என்று பாண்டியன் சொன்னான். “நான் எல்லையில் உளவுப்பணிக்காக பயிற்சி எடுத்துக்கொண்டபோது சீன எழுத்துகளை வாசிக்க கற்றுக்கொண்டேன். ஆனால், இவற்றை என்னால் வாசிக்க முடியவில்லை.”
“ஏன்?” என்று கர்னல் மகேந்திரன் கேட்டார்.
“இது குறைந்தது 5,000 வருடம் பழைமையான சீன எழுத்து வடிவம். மனித வரலாற்றிலேயே மிகத் தொன்மையான எழுத்துகள் இவைதான். அக்காலத்தில் ஒவ்வொரு பொருளையும் சிறிய படங்களாக வரைந்து, அந்தப் படங்களையே எழுத்துகளாகப் பயன்படுத்தினார்கள். 2,000 வருடங்களுக்குப் பிறகுதான் அவற்றை எளிமைப்படுத்தி எழுத்துகளைப்போல ஆக்கினார்கள். அதன் பிறகு, ஏழு முறை சீன எழுத்துகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இன்று நாம் காணும் சீன எழுத்துகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு எளிமையாக்கப்பட்டவை. ஆனாலும், இன்று உலகில் உள்ள மிகச் சிக்கலான எழுத்துகள், சீன எழுத்துகள்தான்.”
“இந்த எழுத்துகள் எப்படிப்பட்டவை என நினைக்கிறீர்கள்?” என்றார் கர்னல் மகேந்திரன்.
“இதோ பாருங்கள். இது ஒரு மலை. இதன் மேல் இருப்பது நிலவு. அதற்கு மேல் சூரியன். இது ஒரு எழுத்து. மலைசந்திரசூரியன் என்று இந்த ஒரு எழுத்துக்கு அர்த்தம்” என்றான்.
“இது வெறும் படமாக இருக்கலாம் அல்லவா?” என்றார் கர்னல் மகேந்திரன்.
“இதோ அடுத்த எழுத்து. இது ஒரு மரம். இந்த இரண்டு எழுத்துகளும் சேர்ந்து ஒரு சொற்றொடர் ஆகின்றன” என்றான் பாண்டியன்.
“ஆச்சர்யம்!” என்றார் கர்னல் மகேந்திரன்.
‘‘இந்த எழுத்துகள் மறைந்து மேலும் 2,000 ஆண்டுகள் கழித்துதான் புத்தரே பிறந்தார். அப்படியென்றால், ஒரு புத்த பிட்சுவின் உடலில் இவ்வெழுத்துகள் எப்படி வந்தன?” என்றான் பாண்டியன்.

“ஆம்!” என்று கர்னல் மகேந்திரன் வியப்புடன் சொன்னார்.
“அதைவிட மத்திய சீனாவைச் சேர்ந்த இந்த எழுத்துகள் எப்படி இங்குள்ள திபெத்திய புத்தமதத்தைச் சேர்ந்த பிட்சுவின் உடலில் வந்தன?”
“மர்மம் கூடிக்கொண்டே செல்கிறது. இந்த மம்மி ஒரு சாதாரண பௌத்த பிட்சுவுடையது அல்ல” என்றார் கர்னல் மகேந்திரன்.
“சீன மொழியிலும் வரலாற்றிலும் தேர்ச்சி உடைய எவரையாவது நான் சந்திக்கவேண்டும். இந்த எழுத்துகளின் முழு அர்த்தத்தையும் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றான் பாண்டியன்.
“டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் என்று ஓர் ஆய்வாளர் இருக்கிறார். சீன மொழி ஆய்வில் பெரிய நிபுணர். இப்போது லடாக்கில் இருக்கிறார். நீங்கள் அவரைச் சந்திக்கலாம். அவர் உங்களுக்கு உதவுவார்” என்றார் கர்னல் மகேந்திரன்.
“நான் உடனே கிளம்புகிறேன்” என்று பாண்டியன் சொன்னான்.
மடாலயத்துக்கு வெளியே நோர்பா, நாக்போ என்னும் நாயுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“என்ன பேசுகிறாய்?” என்றான் பாண்டியன்.
“அது தனிமையில் இருக்கிறது. நீ என்னுடன் இரு என்று சொன்னேன்” என்றான் நோர்பா.
“நாம் கிளம்புவோம். நேராக லடாக் செல்கிறோம்” என்றான் பாண்டியன். “அந்த நாயும் நம்முடன் வரட்டும். அதற்கு இங்கு வந்த அந்தக் கொள்ளையர்களின் மணம் தெரியும். அது நமக்கு அவர்களைப் பிடிக்க உதவும் என நினைக்கிறேன்.”
நோர்பா அதனிடம் பேசிவிட்டு, “அது வருகிறேன் என்கிறது” என்றான்.
அவர்கள் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். நாக்போ வாலை சுழற்றியபடி காரில் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்தது. அதன் அருகே நோர்பா அமர்ந்தான். வண்டி புழுதி பறக்க மலைப்பாதையில் ஓடத்தொடங்கியது. நாக்போ தன் ஊரை திரும்பி நோக்கி, துயரத்துடன் முனகியபடியே வந்தது. நார்போ அதன் பிடரியை தடவி ஆறுதல் சொன்னான்.
பிடரியை தடவுவது நாய்களுக்கு மிகவும் பிடிக்கும். நாக்போ நோர்பாவின் மடியில் படுத்துக்கொண்டது. கார் விரைந்து சென்றது.
(தொடரும்...)

சீன எழுத்துருக்கள்
எழுத்துகள் என்றால் என்ன? அவை சில அடையாளங்கள். ஒவ்வொரு அடையாளமும் ஒர் ஒலியைக் குறிக்கிறது. ஒரு வார்த்தையைப் பல ஒலிகளாக பிரித்து, ஒவ்வொரு ஒலிக்கும் ஓர் எழுத்தைப் பயன்படுத்துகிறோம். ஆகவே, மிகச்சில எழுத்துகளிலேயே அனைத்தையும் எழுதிவிட முடிகிறது.
ஆங்கில எழுத்துக்கள் 24 மட்டுமே. ஆனால், சீன எழுத்துகள் ஒரு வார்த்தைக்கு ஓர் எழுத்து. ஆகவே, பல லட்சம் எழுத்துகள் அந்த மொழியில் உள்ளன. மரம் என்றால், மரத்தையே கோடுகளாக வரைந்துவிடுவார்கள். மனிதன் என்றால், மனிதனைப் போல ஒரு வடிவமே எழுத்தாக இருக்கும். மரத்தின் மேல் மனிதன் இருக்கிறான் என்றால், இரண்டையும் சேர்த்துவிடுவார்கள். அப்போது, ஒரு சொற்றொடரே ஒரு எழுத்தாக இருக்கும். கற்கால மனிதன் இப்படித்தான் அடையாளங்களை எழுத்துகளாக எழுதினான். பின்னர், ஒலிகளாக எழுதுவது எளிது என கண்டுகொண்டான். ஆனால், சீன மொழி அப்படி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் சித்திரங்களையே எழுத்துகளாகப் பயன்படுத்தியது.
மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களில் கிடைத்த மண்பானைகளில் உள்ளவை ஒரு வகை சித்திர எழுத்துகள்தான். அவையெல்லாம் இன்று மறைந்துவிட்டன. சீன மொழியின் சித்திர எழுத்துமுறையே கொரியா, ஜப்பான் ஆகிய மொழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலே உள்ள எழுத்துகளைப் பாருங்கள்... மனிதன் என்ற எழுத்து, ஒரு சீனப்படை வீரன் போல இருக்கிறது. மரம் ஒரு தேவதாரு மரம்போலவே உள்ளது இல்லையா?