மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு

என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு
பிரீமியம் ஸ்டோரி
News
என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு

படங்கள்: தி.குமரகுருபரன்

என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு

சென்ற திசம்பர் இரண்டாம் நாள் மழை கொட்டிக்கொண்டிருந்த முன்னிரவு நேரம். முதல் நாள் மறைந்த கவிஞர் இன்குலாபுக்கு இறுதி வணக்கம் செலுத்த மகள் சுதா காந்தி, பேரன் வேலு லெனினோடு பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். தெற்கு நெடும்பெருஞ்சாலையில் ஊரப்பாக்கத்திலிருந்து எங்கள் வண்டி இடப்பக்கம் திரும்பி, இன்குலாபின் இறுதி வாழ்விடமான ஐயஞ்சேரி நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. 

இராயப்பேட்டை ஜானிஜான்கான் தெரு, கதவிலக்கம் 54 மாடிப் பொந்தில், அவர் வசித்துக்கொண்டிருந்த வரை அடிக்கடி சந்திப்பது உண்டு. அவர் ஊரப்பாக்கம் சென்ற பின், ஒருமுறைகூட நான் அங்கே போனது இல்லை. “தோழர், உங்களைப் பார்க்க வருகிறேன்” என்று கேட்கும்போதெல்லாம் உறுதியாகக் கட்டளைத் தொனியில் மறுத்துவிடுவார்.அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை வந்து கொண்டுதான் இருந்தார்; பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். நீரிழிவு நோய் முற்றி, கால் ஒன்று எடுத்த பின்னும்கூட தோழர் அரணமுறுவல் இறுதி நிகழ்வுக்கு தாம்பரம் வந்திருந்தார்.

இதோ வந்துவிட்டது இடம். கண்ணாடிப் பேழைக்குள் இறுதித் துயிலில் ஆழ்ந்திருந்த என் தோழரை கடைசி முறையாகப் பார்த்து வணங்கிவிட்டு வெளியே வருகிறேன். அவர் மகன்கள் செல்வம், இன்குலாப், மகள் மருத்துவர் ஆமினா, பேரன் கவின், அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் விடியல் வேணுகோபால், காஞ்சி பாரதிவிசயன் இன்னும் சிலர்... எல்லாரிடமும்  துக்கம் விசாரித்துவிட்டு, அஞ்சலிக் குறிப்பேட்டில் எழுதிவிட்டுப் புறப்படுகிறேன். சென்னை திரும்பும் வழியில் ஒவ்வொன்றாக அவர் நினைவுகள் கரைதொடும் அலைகள்போல் நெஞ்சைப் பூசி ஈரமாக்கி மீள்கின்றன.

ன்குலாபை முதலில் பார்த்தது 1985 நவம்பரில் நான் சிறையிலிருந்து விடுதலையான பிறகுதான்... எப்போது என்று சரியாக நினைவில் இல்லை. அநேகமாய் வைகறையின் இராசகிளி அச்சகத்திலாக இருக்கலாம். நாங்கள் நண்பர்களாக, செந்தோழர்களாக, பகுத்தறிவாளர்களாக, தமிழீழ ஆதரவாளர்களாக... எல்லா வகையிலும் கருத்தொருமித்திருந்தோம். வேறுபாடு என்று சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. 1990 செப்டம்பரில் நான் திலீபன் மன்றம் தொடங்கி சிபிஎம் கட்சி என்னை வெளியேற்றிய பின், களத்திலும் நாங்கள் கைசேர்த்து நின்றோம் – இறுதி வரை. ஆனால், எங்கள் தோழமைக்கு அகவை வெறும் கால் நூற்றாண்டு அன்று, அதற்கும் மேலே.

இன்குலாபும் நானும் வெண்மணியின் குழந்தைகள் என்று பெருமையோடு சொல்வேன். அதற்கு முன் நாங்கள் வெவ்வேறு புள்ளிகளிலிருந்து புறப்பட்டிருந்தோம். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவனாகக் களமிறங்கியவர் அவர். நானோ, அப்போது அப்போராட்டத்துக்கு எதிராக இருந்தவன். 1968 திசம்பர் 25-ம் தேதி, கீழவெண்மணியில் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமாக 44 உயிர்கள் எரிக்கப்பட்ட கொடுமை என்னை செவ்வியக்கத்தின் பக்கம், அதிலும் உடனடி ஆயுதப் போராட்டத்தின் பக்கம் உந்தியது; இன்குலாபைத் திராவிட இயக்கச் சார்பிலிருந்து பொதுமை இயக்கத்தின் பக்கம் ஈர்த்தது. அந்நேரம் புலவர் ஆதி (இராசியண்ணன்) எழுதிய வெண்மணிக் கவிதை நெஞ்சில் கனல் மூட்டியது மட்டுமல்ல, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு வழியும் காட்டியது:

‘வெண்மணி மக்களை
வெட்டிப் பொசுக்கையில்
வேடிக்கை பார்த்தாயே அடே

என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு

வீணே கிடந்தாயே!
குள்ள நரிகளைக்
குத்திக் கிழிக்கிற
கோபத்தில் முன்னேறு!
அடே, கொன்ற பின் நின்றாடு!’ 


இன்குலாபின் கவிதைகளிலேயே பெரும்புகழ் ஈட்டிய, ‘மனுசங்கடா’வுக்கும் பொறி தந்தது வெண்மணித் தீதான்!

இன்குலாப் முதலில் மார்க்சியக் கட்சியிலும், பிற்பாடு மார்க்சிய-லெனினியக் கட்சியிலும் ஈடுபாடுகொண்டிருந்தார். அகலச் சிறகு விரித்த ஒரு புயற்பறவையைக்  கட்சி அல்லது அமைப்புச் சிமிழுக்குள் அடைத்துவைக்க முடியவில்லை.

ஆனால் கவிதை, நாடகம், கட்டுரை, சொற்பொழிவு, போராட்டங்கள், கூட்டியக்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள் என்று எல்லாத் தளங்களிலும் அவரே இன்குலாப் என்றோர் இயக்கமாக ஓங்கி நின்றார். தமிழீழ விடுதலை, தமிழ்த் தேசியம், சமூக நீதி, அடக்குமுறைச் சட்ட எதிர்ப்பு என்று எல்லாக் களங்களிலும் எங்களோடு இருந்தார்.

அம்பத்தூரில் 1993-ம் ஆண்டு தமிழகத்தின் முதல் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியை நானும் தோழர்களும் நிறுவிய போது, இன்குலாபின் வாழ்த்துச் செய்தி ஓர் அஞ்சலட்டையில் வந்தது:

‘தாயின் மடிபோல் ஒரு பள்ளி
தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளி.’


இந்த இன்குலாபின் வரிகளை முதலில் அம்பத்தூர் எங்கும், பிறகு தமிழகத்தில் தாய்த் தமிழ்ப் பள்ளி தொடங்கிய ஊர்களெங்கும் பல வடிவில் பரப்பினோம். இந்தச் செய்தியை விரிவுபடுத்தி நான் ஊருக்கு ஊர் பேசியுள்ளேன்: “ஒரு குழந்தை இருக்க விரும்பும் இடங்களிலேயே முதன் மையானது எது? தாயின் மடிதான். அதே போல் குழந்தை பெரிதும் இருக்க விரும்பும் இடமாகத் தாய்த் தமிழ் பள்ளி இருக்கும்”என்று விளக்குவேன். இன்குலாபிடம் இதைச் சொல்லி, “குழந்தைகள் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு சீக்கிரம் வரவும், பள்ளி நேரத்துக்குப் பிறகும் வீட்டுக்குப் போகாமலிருக்கவும் ஆசைப்படுகிறார்கள்” என்று நான் குறிப்பிட்டபோது, ‘‘அப்படியா?’’ என்று வியந்து மகிழ்ந்து, தானே ஒரு தாய்த் தமிழ்க் குழந்தையைப் போல் சிரித்தார்.

ன்குலாபின் பகுத்தறிவும் சமய மறுப்பும் மார்க்சிய அறிவியலின் பாற்பட்டவையே தவிர, வறட்டுத் தனமானவை அல்ல. நாங்கள் நாத்திகர்கள்; ஆனால், வறட்டு நாத்திகர்கள் அல்ல. நாங்கள் பகுத்தறிவாளர்கள்; ஆனால், மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல் பகுத்தறிவையே கடவுளாக்கிவிடும் கருத்துமுதல் பகுத்தறிவுவாதிகள் அல்ல. இன்குலாபின் பகுத்தறிவு - இஸ்லாம் உள்ளிட்ட எந்தச் சமயத்தையும் விட்டு வைக்காத ஒன்று. அவர் இந்து மதத்தைச் சாடினார்; மற்றவற்றை விட்டு விட்டார் என்பது பிழை. 

என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு

இன்குலாபை இசுலாமிய மத அடையாளத்தோடு யாரும் கண்டிருக்க முடியாது. இசுலாமிய சமுதாயத்தில் பிறந்து சமய மறுப்பு வாழ்க்கை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர் களுக்கு, இந்த வகையில் இன்குலாப் கிட்டத்தட்ட ஓர் அதிசயம் என்பது விளங்கும்.  

சமூக வாழ்விலும் குடும்ப வாழ்விலும் விட்டுக்கொடுப்பது வேறு; விட்டேவிடுவது வேறு. அவர் தனக்கு மாறானவற்றையும் மதித்து விட்டுக்கொடுத்து வாழ்ந்தவரே தவிர, உயிர்மூச்சான கொள்கைகளை விட்டுவிட்டவரோ, விற்றுப் பிழைத்தவரோ அல்ல என்பதற்கு, அவர் எழுத்து மட்டுமன்று, வாழ்க்கையே உயிர்ச்சான்று.

ன்குலாபின் கவிதைகளில் தலைசிறந்தது ‘ஒவ்வொரு புல்லையும்...’ என்று தொடங்குவது. அவரது உலகக் கண்ணோட்டப் பட்டயமான இந்தக் கவிதையில் சொல்வார்:

‘கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!’


இன்குலாபுக்கு இசுலாமியக் குல்லாய் மாட்டி, அவர் தன்-சமயக் குற்றாய்வு தவிர்த்ததாகக் கூறுவோர் இந்தக் கவிதையைப் படிக்கட்டும்.

உணர்வு சார்ந்து எங்களை இறுகப் பிணைத்த முதன்மைக் காரணி, ஈழம். இந்தியவாதக் கம்யூனிஸ்ட்களோடு எங்களுக்கு இறுதியான மனமுறிவு ஏற்படச் செய்ததும் ஈழம்தான். ஈழத்தில் இந்தியப் படையெடுப்பை அவர்கள் ஆதரித்தது எங்களுக்குச் சகிக்கவில்லை. இன்குலாபின் சீற்றம் நமக்குப் பல நெருப்புக் கவிதைகளைத்  தந்தது. எனக்குப் பிடித்த ஒரு கவிதை:

‘பெருமரம் சாய்ந்த
அதிர்வில்
புதையுண்டுபோன
உயிர் மூச்சுகள்
இன்னும் சுற்றித் திரிகின்றன
தலைநகர் வீதிகளில்
புறாச் சிறகு போர்த்திய பருந்துகள்
கொத்திக் கிழித்த
குருவிகளின் ஓலம்
இன்னும் கேட்கிறது அலைகளில்...

என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு

இன்னும் குருதிப்பலி கேட்டு
முழங்குகின்றன
அசோகச் சிங்கங்கள்
தூசுபடிந்த இராட்டையில்
இன்று
நூற்கப்படும் கதரில்
திரிக்கப்படுகின்றன
புதியபுதிய
கொலைக் கயிறுகள்
அகிம்சா பரமோதர்ம.’


அண்மைக் கால வரலாறு தெரிந்தவர்களுக்கு இக்கவிதை எளிதில் விளங்கும். ‘புறாச் சிறகு போர்த்திய பருந்துகள்’ என்ற அந்த ஒப்புமை என்னைப் பெரிதும் ஈர்த்தது. இதுபோன்ற சூழலில் தமிழில் என்ன சொல்வோம்? ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்போம். ஆங்கிலத்தில் ‘a tiger in sheep’s skin’ என்பார்கள். இந்தச் சொல் மரபையே இன்குலாபும் கையாண்டிருக்கலாம். ஆனால், ஒப்புமைக்காகக்கூட புலிகளைக் குற்றப்படுத்த அவர் விரும்பவில்லை போலும். புலிகள் என்றாலே விடுதலைப் புலிகள் நினைவுக்கு வரக்கூடிய இடம் பொருள் ஏவலில், அவர்களை நம்மையறியாமலே எதிர்மறைப் படிமத்தில் காட்டிவிடக் கூடாது என்ற இன்குலாபின் எச்சரிக்கை உணர்வு, இந்தப் புறாச் சிறகில் மறைந்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

இன்னொரு காரணமும் இருக்கலாம். கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாக வளர்ந்து வெளிப்படும் மாற்றத்தை, கார்ல் மார்க்ஸ் பல நேரம் சமூக நிகழ்வுகளை விளக்கும் ஒப்புமைக்குப் பயன்படுத்துவார். அதேபோல், இன்குலாபுக்குப் பிடித்தமான ஒப்புமைப் படிமம் சிறகு விரித்தல். அவர் கவிதைகளில் எத்தனை முறை சிறகுகள் விரிகின்றன என்று எண்ணி மாளாது.

‘வானுக்கும் பூமிக்கும் சிறகை விரிக்கும்     
மானுடப் பறவைகள் பாடுகின்றோம்.’


‘எந்த மூலையில் விசும்பல் என்றாலும்     
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!’


இறுதியாண்டுகளில் இன்குலாப் மனத்தை வாட்டிய பெருந்துயரம், முள்ளிவாய்க்கால் பேரவலம்தான். இனவழிப்புக்குத் துணைபோன இரண்டகத்தை எதிர்க்கும் குறியீடாகக் கலைமாமணி விருதைத் திருப்பியனுப்பியதை விடவும் அவரது ஆறாத் துயரத்தையும் அடங்காச் சீற்றத்தையும் வெளிப்படுத்திய வரிகள்:

‘முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்துகொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி                                     
குருதி கொட்டும் செம்மொழியாய்.’


இன்குலாப் எழுதுவதைக் கவிதை என்றே ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மேதாவிகளோடு, அவர் ஒருபோதும் மல்லுக்கு நின்றது இல்லை. இப்போதும் இன்குலாபின் தோழர்கள் நாங்கள் இவர்களைப் பொருட்படுத்துவதாய் இல்லை. இன்குலாப், கவிதைக்காகக் கவிதை எழுதியவரல்லர். மக்களுக்காக, மக்கள் புரட்சிக்காக, விடுதலைக்காக எழுதியவர். ஆனால், எழுதியவர் மட்டுமல்லர் என்னும் போதுதான் அவர் தனித்து நிற்கிறார். கவிதை நுட்பத்தில் அவருக்கு நிகரானவர்கள், ஏன், அவரை விஞ்சியவர்கள்கூட, இருக்கலாம். ஆனால் எண்ணம், சொல், செயல் மூவகையிலும் மக்களுக்காகத் தன்னளிப்புச் செய்துகொண்ட பாவலர் என்றால், இன்குலாப் போல் இன்னொருவர் கிடைப்பதரிது.

அவர் பெயர் சொல்லி அழைக்க ஆசைப்பட்ட ஒவ்வொரு புல்லும் இந்த உண்மையை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும்.