மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி

அனுபவங்கள் பேசுகின்றன!

குழந்தைகளுக்கு விவசாயம்!

தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது என் தோழி பாடம் படித்துக்கொண்டிருந்த தனது இரண்டு குழந்தைகளையும் உட்காரவைத்து எப்படி விதை விதைப்பது, செடிகள் நடுவது, உரம் இடுவது எவ்வாறு என்று விவசாயம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள். குழந்தைகளும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆச்சர்யத்துடன் இதைக் கவனித்த என்னிடம், ``இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீதான ஈடுபாடு மெள்ள மெள்ளக் குறைந்து வருகிறது. இது நீடித்தால் உணவுக்காக நாம் அண்டை நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான், என் குழந்தைகளிடம் விவசாயத்தின் மீதான ஈடுபாடு உண்டாக இவ்வாறு செய்கிறேன். தினமும் இதற்காக அரை மணி நேரம் ஒதுக்குகிறேன்...” என்றாள். அருமையான விஷயம்தானே?

- எஸ்.சந்திரா, சென்னை

அனுபவங்கள் பேசுகின்றன!

இதுவும் நல்ல யுக்திதானே!

என் பெரியப்பா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதனால் பெரியப்பா மகளுக்கு என் தந்தையே முன்னின்று வரன் தேடி வருகிறார். சமீபத்தில் ஒரு தரகரை அழைத்து போட்டோவைக் கொடுத்துப் பேசியபோது, நானும் அருகில் இருந்தேன். அப்போது என் அப்பா சொன்னார்...

“இங்கே பாருங்க தரகரே... இந்த போட்டோ போன வாரம் எடுத்ததுதான். இதுல உள்ள மாதிரியேதான் பொண்ணு இருப்பா. எங்களால பத்து பவுன் மட்டும்தான் போட முடியும். அதன் பிறகு எந்தக் காலத்திலும் வரதட்சணை பற்றிப் பேசவே கூடாது. கல்யாணச் செலவுல பாதியை ஏத்துக்கிறோம். அப்புறம் முக்கியமான விஷயம், பொண்ணு பார்க்கிற சம்பிரதாயம் எல்லாம் சரிபட்டு வராது. பொண்ணு வேலை செய்யற இடத்துக்குப் போய் பாருங்க. இல்லைன்னா, கோயிலுக்குக் கூட்டிட்டு வர்றோம் பாருங்க. நாலு பேர்கிட்ட விசாரியுங்க. தாமதம் ஆனாலும் பரவாயில்லை. பொண்ணு பிடிச்சா பூ வெச்சு, நிச்சயம் பண்ற மாதிரிதான் இருக்கணும். பொண்ணைப் பார்த்துட்டு, ‘பிடிக்கலை... போய் சொல்லி விடுறோம்’கிற கதையெல்லாம் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லுங்க” என்றார்.

அப்பாவின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதோடு, அவர் பேச்சில் முற்போக்கு குணமும் முன்னெச்சரிக்கையும் இருந்தது கண்டும் வியந்தேன்!

- கவிதாராஜன், மதுரை

அனுபவங்கள் பேசுகின்றன!

இப்படியும் சில ஜென்மங்கள்!

நாங்கள் வசிக்கும் வீட்டின் பக்கத்து போர்ஷனுக்கு புதிதாகக் குடிவந்தது ஒரு குடும்பம். இரவானால், யாரையோ திட்டியபடி அடித்து உதைக்கும் சத்தம் கேட்கும். விசாரித்தபோது, குடித்துவிட்டு வரும் குடும்பத்தலைவர் மனைவியை அடித்து உதைப்பதும், இதைக்கண்டு குழந்தைகள் ‘அம்மாவை அடிக்காதே...’ எனக் கெஞ்சுவதும் கேட்டு அதிர்ந்தோம். சுவரைத் தாண்டியும் எங்களுக்கு சத்தம் கேட்டதால் பயத்தில் தூக்கம் வரவில்லை. இது தொடர்கதையானதால் அவர்களைத் தட்டிக்கேட்பது என்ற முடிவுக்கு வந்தோம். அங்கோ, பள்ளி செல்லும் வயதில் உள்ள மூன்று பெண் குழந்தைகள் எங்களைக் கண்டதும் ஓடினார்கள். பெரியவர்கள் வெளியே வரவே இல்லை.

இப்படியிருக்க, ஒருநாள்... அந்த வீட்டுப்பெண் உடலில் தீப்பிடித்தபடி, மரண ஓலத்துடன் வெளியே வந்தாள். அதிர்ச்சியில் உறைந்த நாங்கள் சிறிதும் தாமதிக்காமல், தரையில் அவளை உருட்டி தீயை அணைத்து, மருத்துவமனையில் சேர்த்தோம். போலீஸ் வந்து விசாரித்தபோது, தற்கொலை முயற்சி எனச் சொன்னால் கணவனுக்குப் பிரச்னை வருமென்று நினைத்து, தன் கவனக்குறைவால் புடவையில் தீப்பிடித்ததென வாக்குமூலம் கொடுத்தாள். இதைப்பார்த்த அவளது கணவன், அவளை கையெடுத்துக் கும்பிட்டு... `இனி குடிக்க மாட்டேன்' என எங்கள் முன் சத்தியம் செய்தான்.

உடல்நலம் தேறிய அவள் தன் சோகக்கதையைச் சொன்னாள். கிராமத்தில் பெண் சிசுக்கொலை செய்வதில் கைதேர்ந்தவராம் அவரது மாமியார். இவருக்கு மூன்றும் பெண் குழந்தைகளாகப் பிறந்தது அவர்களுக்குப் பிடிக்காமல் போனதாம். பிரசவத்துக்காகப் பிறந்த வீடு சென்றதால்தான் குழந்தைகள் பிழைத்தார்களாம். இவரது கணவருக்கும் தாயின் குணங்கள் ஊறிப் போயிருக்கிறது. பெண்களைப் பெற்ற இவர்மீதும் குழந்தைகள்மீதும் ஏற்பட்ட வெறுப்பினால் குடித்துவிட்டு வந்து வெறிபிடித்தவரைப்போல அடித்து உதைத்துவிட்டு தூங்கி விடுவாராம். ‘கணவனிடம் அடி வாங்கி, தினசரி சாவதைவிட ஒரேயடியாக சாக முடிவெடுத்தவளை ஏன் காப்பாற்றினீர்கள்?’ என அவள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கிறார்கள்.

- லலிதா நாராயணசாமி, பெங்களூரு