டைரக்டர் தரணி... தமிழ் சினிமாவில் `தில்’, `தூள்’, `கில்லி’ என மூன்று மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர். ஏற்கெனவே `எதிரும் புதிரும்’ என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில் பெரிய விபத்தில் சிக்கி, அதிலிருந்து மீண்ட பிறகே இந்த வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். விபத்துக்குள்ளாகி, மன அழுத்தம் தந்த அந்த மிக நெருக்கடியான நாள்களிலிருந்து அவர் மீண்டது எப்படி என்பதை இங்கே விளக்குகிறார்...
``மன அழுத்தம் நமக்கு ஏற்படாம இருக்கணும்னா, ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கணும். அதனாலதான், `நம்ம தேவைகளை கடவுள் நிச்சயம் பூர்த்திசெய்வார். ஆனா, நம்ம பேராசைகளைத்தான் அவரால பூர்த்திசெய்ய முடியாது’னு சொல்வாங்க. ஒரு மனுஷன் எதை வேணும்னாலும் இழக்கலாம். ஆனா, நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது.
நம்பிக்கை மட்டும் இருந்துச்சுனா போதும்... எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலயிருந்தும் நம்மால் மீண்டுவர முடியும்.
அப்போ என்னோட `எதிரும் புதிரும்’ படம் வெளிவந்திருந்த நேரம். அடுத்த படத்துக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். பெருசா ஒண்ணும் செட் ஆகலை.
ஒரு நாள் காலையில ஏழு மணியிருக்கும். நல்லா மழை பேய்ஞ்சு ரோடெல்லாம் தண்ணி நிக்குது. அப்போ ஏதோ ஒரு வேலையா தியாகராய நகர்லருந்து ஜெமினி ஃப்ளை ஓவர் நோக்கி போய்க்கிட்டிருந்தேன். ரோட்ல இருந்த மேன் ஹோல் ஒண்ணு மூடாமக் கிடந்திருக்கு. தண்ணி நின்னதுல அது வெளியில தெரியலை. அதுல விழுந்துட்டேன்.
சரியான அடி... ரெண்டு காலையும் அசைக்கக்கூட முடியலை. ஏற்கெனவே போலியோ தாக்கின கால். அந்த இடத்துலயே மறுபடியும் அடி பட்டிருந்துச்சு. சரியான வலி. மரண வேதனை தந்த அந்த வலியைத் தாங்கிக்கிட்டு எந்திரிச்சேன். வண்டியை ஒருத்தர் தூக்கி நிறுத்த, அவருக்கு `தேங்க்ஸ்' சொல்லிட்டு நானே டிரைவ் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன். டாக்டருக்கு ஆச்சர்யம். `யாருக்கு சார் ஆக்ஸிடென்ட்?'னு என்னைக் கேட்டார். `எனக்குதான் சார்’னு நான் சொன்னதை அவர் நம்பவே இல்லை. காயங்களுக்கு மருந்து போட்டதோட கட்டும் போட்டுவிட்டார்.
காலை அசைக்கக்கூட முடியலை. பெட்லயே சுருண்டு கிடந்தேன். ஆனா, மனசு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. `இப்படியே இருக்கக் கூடாது. இனி, அலோபதி மருத்துவத்தை மட்டும் நம்பிக்கிட்டு இருக்கக் கூடாது’னு புத்தூர் கட்டு கட்டிக்கிட்டேன். ஓரளவுக்கு முன்னேற்றம் கிடைச்சுது.
அந்தச் சமயத்துலதான் `ஆனந்த விகடன்' மூலமா மைசூர்ல இருக்கிற டாக்டர் ஜெகதீஸின் ஜேக் பிஸிக்கல் தெரபி பற்றி கேள்விப்பட்டேன். உடனே ஆனந்த விகடன் ஆசிரியருக்கு போன் பண்ணி அவரைப் பத்தின விவரங்களையெல்லாம் கேட்டு வாங்கிக்கிட்டு உடனே புறப்பட்டுப் போனேன்.
அங்கே வெறும் 500 ரூபாய்தான் கட்டச் சொன்னாங்க. சில மூலிகை மருந்துகளைக் கொடுத்து தடவச் சொன்னாங்க. அதுலருந்து நல்ல முன்னேற்றம்! ஆபரேஷன் பண்றதையே அந்த டாக்டர் தடுத்துட்டார். ஆறு வாரத்துல நடக்கிற மாதிரி பண்ணிட்டார். ஊன்றுகோல் (Crutches) உதவியோட நடக்க ஆரம்பிச்சிட்டேன்.
எனக்கு ஏற்பட்ட விபத்துலருந்து மீண்டு வந்தேன். உலகம் புதுசாத் தெரிஞ்சுது. மறுபடியும் வேலை, ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுனு பரபரனு இயங்க ஆரம்பிச்சிட்டேன். அப்போ என் அசிஸ்டென்ட் மகராசன் விஜயகாந்தை வெச்சு `வல்லரசு’ படம் பண்ணிக்கிட்டு இருந்தார். அவர்கிட்டவேலை பார்த்தேன். க்ரட்சஸோடதான் படப்பிடிப்புல வேலை செஞ்சேன்.
அந்தச் சமயத்துலதான் அஜய்குமார், டி.ராமராவ், பூர்ண சந்திரராவ் ஆகிய மூன்று மனித தெய்வங்களையும் சந்திச்சு க்ரட்சஸோடயே போய் கதை சொன்னேன். `இவரால படம் டைரக்ட் பண்ண முடியுமா?’னு அவங்க நினைக்கலை. என் மனவலிமையின் மீது நம்பிக்கைவெச்சு அந்த வாய்ப்பைத் தந்தாங்க. அதுக்குக் காரணமா இருந்த சுஜாதா யூனிட் இன்ஜினீயர் ரவியை எந்த நேரத்துலயும் நான் மறக்க மாட்டேன்.
என்னோட உடல்வலி, மன தைரியம் இதையெல்லாம் கலந்துதான் `தில்’ படத்தின் கதையைச் சொன்னேன். விக்ரம் சாரும் ஒரு விபத்திலிருந்து என்னைப்போலவே மீண்டவர். அவர் அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாகச் செய்ய படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து `தூள்’, `கில்லி' ஆகிய படங்களின் வெற்றியெல்லாம் எல்லோருக்கும் தெரியும். `கில்லி’ பட டைட்டில் முடிவானதும், அதைச் சொல்லலாம்னு விஜய் சாரைப் பார்க்கப் போனேன்.
ஜெமினி காம்ப்ளக்ஸ்ல ஷூட்டிங். லிஃப்ட் கிடையாது. அந்தக் கட்டடம் பாதிதான் கட்டி முடிச்சிருந்தாங்க. 12 மாடி ஏறித்தான் போகணும். நானே க்ரட்சஸோட ஏறிப் போய் சொன்னேன். விஜய் சார் பார்த்துட்டு, `என்ன சார் நீங்க? இங்கே வந்துட்டீங்க?’னு கேட்டார்.
எல்லாத்துக்கும் லைஃப்ல தீர்வுனு ஒண்ணு இருக்கு. அதைத் தேடிப் போகாம சோர்ந்து உட்கார்ந்திருக்கிற நேரத்துக்கு, தீர்வைத் தேடிப்போனோம்னாலே மன அழுத்தத்துலருந்து தப்பிச்சிடலாம். நம்பிக்கையும் பதிலும்தான் தேவை. தேடிக்கிட்டே இருந்தோம்னா நிச்சயம் கிடைக்கும். அதையும் நேர்மறை எண்ணங்களோட தேடினோம்னா, அது உடனே கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களோட தேடினோம்னா, அது நம்மகிட்ட கண்ணாமூச்சி விளையாடும். நம்பிக்கைதான் வாழ்க்கை. சின்ன சின்ன விஷயத்துக்குக்கூட நன்றி சொல்லிப் பழகணும். அது ரொம்ப முக்கியம். எந்தச் சூழ்நிலையிலும் நம்ம மன வலிமையை இழக்கக் கூடாது. ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சேனு உட்கார்ந்திருந்தா அவ்வளவுதான்.
இன்னிக்கு சினிமா, டி.வி., யூ-டியூப் சேனல், ஷார்ட் ஃபிலிம், வெப் சீரிஸ், டாக்குமென்டரினு என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். தினமும் தியானம் பண்ணுவேன். உடம்புக்கு நன்றி சொல்வேன். எல்லா விஷயத்துக்கும் நாம நன்றி சொல்றோம். நம்ம உடம்புக்கு நன்றி சொல்றதே இல்லை. அதையும் ஆராதிக்கணும். தேவையில்லாம வெட்டியா ஆதங்கப்படக் கூடாது.
கவிஞர் கண்ணதாசன் சொன்ன `உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ வரிகளைத்தாம் நான் எப்பவும் நினைச்சுக்குவேன். எனக்கு ஏற்படுற மன அழுத்தம், மனக் கவலையெல்லாம் எங்கோ ஓடி மறைஞ்சுடும்’’ மன வலிமை வார்த்தைகளில் தெறிக்கச் சொல்கிறார் தரணி!