
ஜெயமோகன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி - படங்கள்: தி.விஜய்
முன்கதை:
இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்படும் புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் யார் என்ற மர்மத்தைக் கண்டுபிடிக்க கேப்டன் பாண்டியன் வருகிறான். அந்த மர்ம நபர்களை நேரில் பார்த்த சிறுவன் நோர்பா, பாண்டியனுக்கு உதவ முன்வருகிறான். இனி...

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பெரிய சுற்றுலா மையம், மணாலி. அங்கே இரண்டு பருவ காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கோடைகாலமாகிய ஏப்ரல், மே மாதங்களில் சாதாரணமான பயணிகள் வருவார்கள். குளிர்காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியில் விளையாடும் பயணிகள், இருசக்கர வண்டிகளில் மலையேறிச் செல்வதை விரும்புவார்கள்.
பாண்டியனும் நோர்பாவும் மணாலியில் ஒரு விடுதியில் இரவு தங்கியிருந்தார்கள். காலையில் லடாக்கின் தலைநகரமான லே நகருக்குச் செல்வதாக திட்டம். அவர்களுடன் நாக்போவும் இருந்தது. காலையிலேயே இருசக்கரவண்டிகளை ஓட்டிய இளைஞர்கள் சாலையில் சாரிசாரியாகச் சென்றுகொண்டிருந்தனர். நாக்போ சாலையைப் பார்த்து கோபத்துடன் தாவித்தாவிக் குரைத்தது.
“நாக்போ, என்ன செய்கிறாய்?” என்று நோர்பா கேட்டான்.
‘‘இவர்கள் தடிமனாக இருக்கிறார்கள். இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை’’ என்று நாக்போ கோபமாகச் சொன்னது.
“அவர்கள் பனி ஆடை அணிந்திருக்கிறார்கள்” என்றான் நோர்பா.
‘‘அது எனக்கும் தெரியும். நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை’’ என்று நாக்போ முனகியது.
விடுதிக்குள் இருந்து பாண்டியன் வெளியே வந்தான். வேலைக்காரர்கள் பெட்டிகளை எடுத்து வண்டியில் வைத்தார்கள். கர்னல் மகேந்திரன் பாண்டியனிடம் கைகுலுக்கினார்.

“இந்த விஷயத்தை இப்போதைக்கு தனிப்பட்ட முறையில்தான் ஆராய்ந்துகொண்டிருக்கிறேன் பாண்டியன். ஆகவே, உனக்கு ராணுவ உதவியெல்லாம் கிடைக்காது. நீ சொந்த வேலையாகச் செல்வதாகத்தான் யார் கேட்டாலும் சொல்ல வேண்டும்” என்று கர்னல் மகேந்திரன் சொன்னார்.
‘‘நான் யாருக்கும் தெரியாமல் விஷயத்தை விசாரிக்கிறேன் சார்” என்றான் பாண்டியன்.
“இன்று நம்மிடம் இருப்பது சில ஊகங்கள் மட்டும்தான். இந்தப் பையன் வரைந்த படத்தை ஆதாரமாகச் சொல்ல முடியாது. சீனா இந்த விஷயத்தில் ஈடுபட்டிருப்பதற்கான சில வலுவான ஆதாரங்கள் இருந்தால், நாம் இதை மேலதிகாரிகளிடம் கொண்டுசெல்லலாம். ஏதாவது ஆதாரம் கிடைத்ததும் எனக்குத் தெரிவி” என்றார் கர்னல் மகேந்திரன்.
“சரி” என்ற பாண்டியன், காரின் முன் இருக்கையில் ஏறிக்கொண்டான். நோர்பா பின்னிருக்கையில் ஏறினான். கதவைத் திறந்து, “நாக்போ, ஏறிக்கொள்” என்றான்.
‘‘நான் முன்னிருக்கையில்தான் ஏறுவேன்’’ என்றது நாக்போ.
“ஏன்?” என்றான் நோர்பா.
“அங்கே அமர்ந்தால்தான் சாலையைப் பார்த்து நன்றாகக் குரைக்க முடியும்” என்றது.
“அங்கே நமக்கு மேலே உள்ளவர்கள்தான் அமர வேண்டும். அவர்தான் மேலதிகாரி” என்றான் நோர்பா.
“அவர் சாதாரணமான மனிதன் அல்லவா? நாய்தானே மனிதனைவிட மேலானது?” என்று நாக்போ சந்தேகத்துடன் கேட்டது.

“ஆமாம், நாம் பின்னால் அமர்ந்து அவரைப் பாதுகாப்போம்” என்றான் நோர்பா.
“அப்படியென்றால் சரி” என்று வாலை ஆட்டியபடி நாக்போ ஏறிக்கொண்டது.
கார் கிளம்பியதும் நாக்போ, ‘ஏன் இப்படி சாலைகளில் நெரிசலாக நிற்கிறார்கள்? மனிதர்களுக்கு அறிவே இல்லை' என்று நினைத்துக்கொண்டது.
மணாலியில் இருந்து லே நகருக்குச் செல்லும் பாதை மிகமிக அழகானது. உலகிலேயே ஆபத்தான சாலை என்றும் சொல்வதுண்டு. மணாலியில் இருந்து கிளம்பும்போது பச்சை நிறமான காடு, சாலையின் இருபக்கமும் நிறைந்திருந்தது. செங்குத்தான கரிய பாறைகளில் இருந்து சிறிய அருவிகள், சாலையிலேயே விழுந்தன.
இருசக்கரவண்டிகளில் சென்ற இளைஞர்கள் அந்த அருவிகளில் நனைந்தபடி சென்றபோது, கூச்சலிட்டுச் சிரித்தார்கள். அவர்களை நோக்கி நாக்போ, “ஏன் சத்தம் போடுகிறார்கள்? சரியான முட்டாள்கள்” என்று முனகியது.
மேலும் மலை ஏறிச்சென்றபோது, இமயமலையின் மரங்கள் இல்லாத பகுதி, பாலைவனம் போலவே தெரிந்தது. மிகப்பெரிய டைனோசர்கள் படுத்திருப்பதுபோல மண்ணால் ஆன மலைகள் தெரிந்தன. திமிங்கலங்கள் போல சில மலைகள் இருந்தன.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடுகளாக இருந்தவை இறுகி பாறைகளாக மாறியிருந்தன. அந்த மணல்பாறைகளை காற்று அரித்து, விசித்திரமான வடிவங்களை உருவாக்கியிருந்தது. சிறிய கோபுரங்கள் போல சில குன்றுகள் தெரிந்தன. வீடுகள் போல சில குன்றுகள் இருந்தன. சில குன்றுகள் வரிசையாக மனிதர்கள் நிற்பதைப்போலவே தோன்றின.
ஆழமான பள்ளத்தில் வளைந்து ஓடியது ‘பியாஸ் ஆறு’. அது, காலை வெளிச்சத்தில் வெள்ளியாலான ஒரு ரிப்பன் போல மின்னியது. மலையில் இருந்து உருண்டுவந்த வெள்ளை நிறமான கற்கள் அதில் நிறைந்திருந்தன. அந்தக் கற்கள் வழியாக அது ஓடியபோது நுரைபோலத் தோன்றியது.
மேலே செல்லச்செல்ல குளிர் ஏறிவந்தது. நோர்பா, நாக்போவை இறுக்கிக் கட்டிக்கொண்டான். இருந்தாலும் நடுங்கியது. காருக்குள் வெப்பக் காற்றை இயந்திரம் நிறைத்தும் குளிர் அடங்கவில்லை.
சாலையின் இருபக்கமும் பனிக் குவியல்கள் தெரியத் தொடங்கின. முதலில், அவை கடல் அலையின் நுரைபோலத் தெரிந்தன. பின்னர், உப்பைக் குவித்துப்போட்டதுபோல இருந்தன. பிறகு, கண்ணாடியாலான சுவர் போல மாறின.
பனியைப் பிளந்து சாலையை செப்பனிட்டு இருந்தார்கள். பனியை அகற்றும் வண்டிகள் உறுமியபடி வேலை செய்துகொண்டிருந்தன.
அவர்கள் மாலையில் ரோட்டங் கணவாயைச் சென்று அடைந்தார்கள். ‘பிணமலை' என்று அதற்குப் பொருள். லடாக்குக்குச் செல்லும் பழைமையான பாதை அது. அதில் ஏராளமானவர்கள் முன்பு பனியில் சிக்கி உயிர் இழந்திருக்கிறார்கள்.
கடல்மட்டத்தில் இருந்து 13,000 அடி உயரத்தில் இருக்கும் ரோட்டங் கணவாய் வழியாகத்தான் லடாக்குக்குள் நுழைய வேண்டும். ரோட்டங் கணவாயின் மேலே பௌத்த மதமும், கீழே இந்து மதமும் இருப்பதாகச் சொல்வதுண்டு. அவர்கள் சென்றபோது, கணவாய் முழுக்க வெண்மையான மூடுபனி போர்த்தி இருந்தது. சாலையோ, மலைகளோ எதுவுமே தெரியவில்லை. காரின் முகவிளக்கின் வெளிச்சம் பனியில் பட்டு சிவப்பாகத் தெரிந்தது.
‘‘இங்கே ராணுவத்தினர் இலவசமாக டீ கொடுக்கிறார்கள். அதைக் குடித்துவிட்டுச் செல்வோம்” என்றான் பாண்டியன். அவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தனர்.
ராணுவ முகாமின் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. வெண்ணிற வேட்டிக்கு அப்பால் ஒரு விளக்கு எரிவதைப்போல இருந்தது அது.
நாக்போ திடீரென்று குரைக்க ஆரம்பித்தது. “என்ன? என்ன?” என்று நோர்பா கேட்டான். நாக்போ வாலை வீசியபடி குரைத்துக்கொண்டே ஓடியது.
அப்போதுதான் அங்கே ஒரு கார் விளக்கு இல்லாமல் நின்றிருப்பதை பாண்டியன் கண்டான். ‘‘பனியில் விளக்கு இல்லாமல் காரை நிறுத்தியிருப்பது யார்?” என்றான்.
நாய் குரைப்பதைக் கண்டதும் அந்த கார் உறுமியபடி கிளம்பியது. பாண்டியன், “வாருங்கள்… அந்த காரை தொடர்ந்து செல்வோம்” என்று கூவியபடி ஓடினான். அவர்கள் காரில் ஏறிக்கொண்டார்கள்.
“அந்த காரில் நாக்போவுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அநேகமாக அந்த மம்மியைத் திருடவந்தவர்கள்” என்று பாண்டியன் சொன்னான். காரை விரைந்து ஓட்டினான்.
முன்னால் சென்ற காரின் சிவந்த பின்விளக்குகள், நீருக்குள் தெரிவதுபோல கலங்கித் தெரிந்தன. அதை அடையாளமாகக்கொண்டு பாண்டியன் காரை ஓட்டினான்.
உலகிலேயே அபாயகரமான பாதை என்று அது ஏன் சொல்லப்படுகிறது என்றால், அதன் ஒரு பக்கம் செங்குத்தான மலைப்பாறை இருக்கும். மறுபக்கம் பல கிலோமீட்டர் ஆழத்துக்கு பள்ளம் இருக்கும். ஒரு கார் செல்லும் அளவுக்கே அகலம் இருக்கும். அத்துடன் மேலிருந்து பெரிய பாறைகள் அவ்வப்போது பாதையில் விழும். பல இடங்களில் மண் சரிந்து, பாதையில் குவிந்தும் கிடக்கும். அதோடு எதிரில் வண்டிகளும் வரும்.
பாண்டியனின் காரின் சக்கரங்கள் பட்ட சில பாறைகள், உருண்டு பள்ளத்தில் விழுந்து மறைந்தன. அவை விழுந்த ஒலிகூட கேட்கவில்லை. அவ்வளவு ஆழம்.
‘டிங்' என்ற ஒலியுடன் மேலே மலையில் இருந்து உருண்டுவந்த ஒரு கல், பாண்டியனின் கார் மீது விழுந்து தெறித்தது. எதிரே ஒரு லாரி வரும் வெளிச்சம் தெரிந்தது. பாண்டியன் காரை வேகமாக ஒதுக்கினான். காரின் இரண்டு சக்கரங்கள் அந்தரத்தில் நின்றன. இருசக்கரங்களில் கார் நின்று ஆடியது. எதிரே வந்த லாரி கடந்துசென்றது.
நோர்பா பெருமூச்சு விட்டான். நாக்போ, “இந்த கார் கீழே விழுந்தால், இவர்கள் என்ன செய்வார்கள்? பாவம்” என்று நாக்போ எண்ணிக்கொண்டது.
அவர்களின் கார் முன்னால் சென்ற காரை விடாமல் பின்தொடர்ந்தது. கார் வெளிச்சம் பனி பரவிய சாலையோரங்களில் பட்டு கண்ணாடிபோல எதிரொளித்தது.
“நம்மை அடையாளம் கண்டுவிட்டார்கள். இல்லாவிட்டால் இத்தனை வேகமாக தப்பிச்செல்ல மாட்டார்கள்” என்று பாண்டியன் சொன்னான்.
திடீரென்று முன்னால் சென்ற கார், பனிப்பாறை மேல் மோதியது. அதன் முகப்பு விளக்கு உடையும் ஓசை கேட்டது. அந்த காரின் பின்கதவு உடைந்து திறந்து ஒருவன் சாலையில் விழுந்தான். அவன் மேல் காரை ஏற்றாமல் இருக்க, பாண்டியன் காரின் நிறுத்தியை மிதித்து நிறுத்தினான். அதற்குள் அவர்கள், தங்கள் காரை பின்னால் இழுத்து மீண்டும் முன்னால் சென்றனர். அந்தப் பனிப்பாறையைச் சுற்றிக்கொண்டு சென்றனர்.
பாண்டியன் தன் காரை வளைத்து அவர்களைத் துரத்த முயன்றான். அதற்குள் முன்னால் சென்ற அந்த கார், முட்டிய பனிப்பாறை பிளந்து விழுந்தது. அதன் மேலிருந்த இன்னொரு பனிப்பாறையும் விழுந்து சாலையை மூடியது.

“தப்பிவிட்டார்கள்” என்றான் நோர்பா.
பாண்டியன், “ஒருவன் கிடைத்துவிட்டான்” என்று காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினான். அவனைத் தொடர்ந்து நாக்போவும் நோர்பாவும் ஓடினர்.
அவர்கள் அணுகுவதற்குள் பன்றி உறுமுவதுபோல ஒலி கேட்டது. மேலே இருந்த பனிப்பாளம் உடைவதன் ஒலி அது. ஒரு பனிப்பாளம் உடைந்தால் மேலும் மேலும் பனிப்பாளங்கள் உடைந்து சரியும். கீழே விழுந்தவன் மேல் பனிப்பாறை ஒன்று பெரிய ஓசையுடன் விழுந்தது. அவன் அலறினான். அவன் இடுப்பில் பனிப்பாறை விழுந்தது. மேலும் ஒரு பாறை கால்மேல் விழுந்தது.
“வாருங்கள் ஓடிவிடுவோம். மேலும் பனிப்பாறைகள் விழும்” என்றான் நோர்பா.
“இரு” என்ற பாண்டியன், கீழே விழுந்திருந்தவனைப் பிடித்துத் தூக்கினான். அவன் உடலில் இருந்து வழிந்த ரத்தம் சூடாக இருந்தது. அதிலிருந்து ஆவி எழுந்தது.
“நான் கேப்டன் பாண்டியன். சொல்… யார் நீ? எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.
“நான்… என் பெயர் ஸ்டான்ஸின்… ஸ்டான்ஸின் நாம்கியால் என்பது முழுப் பெயர். என்னை அவர்கள் கூலிக்கு கூட்டிக்கொண்டார்கள். நிறைய பணம் தந்தார்கள்” - அவன் முனகலாகச் சொன்னான்.
“அவர்கள் யார்? எங்கே செல்கிறார்கள்?” என்றான் பாண்டியன்.
“தயவுசெய்து என் பையில் இருக்கும் பணத்தை என் மனைவியிடம் கொடுங்கள்” என்றவன் உடல், வலிப்பு வந்து துடிக்க ஆரம்பித்தது.
“சொல், யார் அவர்கள்?” என்று பாண்டியன் கேட்டான்.
“எனக்குத் தெரியாது. அவர்கள் இப்போது ஓர் ஆய்வாளரைக் கொல்லச் செல்கிறார்கள்” என்றான் அவன்.
“ஆய்வாளரா? அவர் பெயர் என்ன?” என்று பாண்டியன் கேட்டான்.
“டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். இங்கே ஒரு மடாலயத்தில் ஆய்வுசெய்கிறார்.”
பாண்டியன் பாய்ந்து எழுந்து ஓடிச்சென்று தன் செல்பேசியை எடுத்தான். ஆனால், அதில் அலைத்தொடர்பு இருக்கவில்லை.
“நாம் உடனே சென்றாக வேண்டும். அவர்கள் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸை கொல்லப்போகிறார்கள்” என்றான் பாண்டியன்.
அவர்கள் ஓடிச்சென்று காரில் ஏறிக்கொண்டார்கள். பாண்டியன் காரை வேகமாக வளைத்து திருப்பினான். ஸ்டான்ஸின் சாலையில் வலிப்பு வந்து இழுத்துக்கொண்டிருந்தான்.
“இவனை என்ன செய்வது?” என்றான் நோர்பா.
‘‘இவனை நம்மால் இனி காப்பாற்ற முடியாது. உடனே கிளம்புவோம்.”
“எங்கே செல்கிறோம்?” என்றான் நோர்பா.
“அந்த ராணுவ முகாமுக்கே செல்வோம். அங்கே அவர்களிடம் செயற்கைக்கோள் தொலைபேசி இருக்கும். நாம் உடனே டாக்டருக்குப் பாதுகாப்பு கொடுத்தாக வேண்டும்” என்று பாண்டியன் சொன்னான்.
அவர்களின் கார் பனியில் ஒளிவீசியபடி உறுமிக்கொண்டே சென்றது.
(தொடரும்...)
உலகின் மிக உயரமான சாலை!

உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலை என்று ‘கார்துங்லா கணவாய்’ [Khardung La Pass] அழைக்கப்படுகிறது. இது, லடாக் பகுதியில் அமைந்துள்ளது. 17,582 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த மலைக்கணவாய். இதன் வழியாகத்தான் லடாக்கின் உட்பகுதிகளுக்குச் செல்லமுடியும். ஏறத்தாழ 1,000 ஆண்டுகளாக இந்த மலைப்பாதை வணிகர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக கழுதைகளிலும் குதிரைகளிலும் பொருட்களை ஏற்றிக்கொண்டு லடாக்கின் பல மலைப்பள்ளத்தாக்குகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்வார்கள். ஆனால், கோடைகாலத்தில் மட்டுமே இது திறந்திருக்கும். இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்கிறார்கள்.