
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

இரவில் ஏற்பட்ட மனக்கலக்கம் பகல் முழுவதும் பரவிக்கிடந்தது. பாரி தனது அறைக்கு வரும் வரை கபிலர் செயலற்றே கிடந்தார். பாரிதான் அவரை அழைத்துச் சென்று உணவு அருந்தவைத்தான். பிறகு இருவரும் தேர் ஏறி பாழியூருக்குச் செல்லும் பாதையில் சென்றனர். கபிலர் எதுவும் கேட்காமல் வந்துகொண்டிருந்தார்.
புன்னைமர அடிவாரத்தில் தேரை நிறுத்தச் சொன்னான் பாரி. வளவன், குதிரைகளின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இருவரும் இறங்கி காட்டுக்குள் நடந்தனர்.

“பறம்பில் காலடி எடுத்துவைத்த கணத்தில் இருந்து நீலனோடு பயணிக்கிறேன். தன்னைப் பற்றி ஒரு சொல்கூட அவன் சொல்லவில்லை” என்றார் கபிலர்.
பாரி அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்தான்.
சட்டென நினைவு வந்தவுடன், “இல்லை...இல்லை...” என தான் சொன்ன சொல்லை மறுத்த கபிலர், “வேட்டுவன் பாறையில் வரும்போது அவனது குலப்பாடல் பற்றி அவன் சொல்ல வந்தான். `அது இருக்கட்டும்’ என அதைப் புறந்தள்ளிவிட்டேன். எனது அந்தக் கொடும் செயலுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்” என்றார்.
``பறம்பில் தண்டனை கிடையாது.”
பாரியின் சொல், குற்றவுணர்வில் இருந்து வியப்பின் பரப்புக்குத் தூக்கி வந்தது கபிலரை. வழக்கம்போல் சொல்லால் தாக்குண்ட புலவன், மறுசொல்லின்றி பாரியின் குரலுக்காகக் காத்திருந்தான்.
பாரி சொன்னான், “ஒருவகையில் அதுதான் கொடும் தண்டனை.”
கபிலர் மெள்ளத் தலையசைத்து, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றார்.
இவர்கள் பேசிக்கொண்டு நடந்த அதே பொழுதில், எவ்வியூரின் தென்புறக்காட்டில் மருதமர அடிவாரம் ஒன்றில் மயிலாவின் மடியில் தலைசாய்த்துக்கிடந்தான் நீலன். இரவில் எருமையின் தலையை வெட்டி, பொங்கும் குருதியோடு நீலன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தவர்கள், இன்னும் நடுக்கம் மீளாமல்தான் இருக்கின்றனர். தான் பார்த்து அறியாத நீலனை நேற்றுதான் கண்டுணர்ந்தாள் மயிலா.
தனது மடியில் தலைசாய்த்துக்கிடக்கும் அவனை, கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முதல்முறையாக கொற்றவைக்கூத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறாள். நீலனோடு இருவார காலம் எவ்வியூரில் மகிழ்ந்திருக்கலாம் என்பதற்காகத்தான் வந்தாள். ஆனால், வைகையில் ஓடிய குருதி அவனது உடலில் தேங்கிக்கிடக்கிறது என்பது இங்கு வந்த பிறகுதான் அவளுக்குத் தெரியும். வாளோடும் வலியோடும் ஒட்டிப்பிறந்த ஒருவன், அவள் மடிமீது தலைவைத்துத் துயில்கிறான்.

இரவில் நீலன் ஆடியது, ஆட்டம் அல்ல; ஒரு போர்க்களத்தின் இறுதிப்பாய்ச்சல். வெட்டிய காட்டு எருமையின் குருதியை உடல் முழுவதும் பூசியபடி நிலம் அதிர ஆடினான். நிலத்தில் பட்டும் வானில் சுழன்றும் திரிந்த நீலனின் கால் அசைவுகளுக்கு ஈடுகொடுக்க முயன்று, திம்... திம்...திம்... திம்... எனப் பறையைக் கொட்டிய பாணர்களின் கைகள் நொந்ததுதான் மிச்சம். அவனது காலடி அசைவுகளுக்கு, பறையொலியால் இறுதிவரை ஈடுகொடுக்க இயலவில்லை. பறை அடிக்கும் கோல்கள் நார் நாராகப் பிரிந்தன. கிணைப்பறையின் கண் கிழிந்த பிறகும் நீலனின் ஆட்டம் நிற்கவில்லை. கூட்டத்தின் குலவை ஒலி மலை எங்கும் எதிரொலித்த ஒரு கணத்தில், உடலின் ஆவேசம் உச்சம் அடைந்து மயக்கநிலை கொண்டான் நீலன். அவன் சரிந்துவிழப் போகிறான் என யூகித்த பாரி, தன் இருக்கையைவிட்டு எழுந்து அவனை நோக்கி ஓடினான். ஆவேசத்தோடு நிலத்தைச் சுற்றிய வேகத்தில், ஒடிந்த கொம்புபோல் சரிந்தான் நீலன். சரியும் அவனது உடல் மண்ணைத் தொடும் முன் தாங்கிப்பிடித்தன குலநாகினியின் கரங்கள்.
உக்கிரம் ஏறிய குலநாகினி, நீலனை இரு கைகள் ஏந்தி எதிர்க்களமாடினாள். போர்க்களத்தில் சினம்கொண்டு ஆடும் கொற்றவையின் ஆட்டம் அது. தாவர வேர்கள் உடல் எல்லாம் சரசரக்க, கூகைக்குஞ்சுகள் எங்கும் சிதறி விழ, நாகப்பச்சை நாயகி, வேளீர்குல நாகினி, நீலனை ஏந்தி களம் முழுவதும் வலம்வந்தாள். குலவை ஒலிகளும் பறையொலியும் விண்ணை முட்டின. ஆடுகளம், ஆவேசத்தால் குலுங்கியது. நாகினியின் முன் மண்டியிட்டு இரு கைகள் ஏந்தி நின்றான் பாரி. கண்களில் இருந்து நீர் சரிவதைப்போல, அவளது கரங்களில் இருந்து சரிந்த நீலனைத் தாங்கின பாரியின் கரங்கள்.

அந்த உடல்தான் தளர்ந்து மயிலாவின் மடியில் சாய்ந்துகிடக்கிறது. அவளால் அவனைத் தொட முடியவில்லை. காதல்கொண்டு நெருங்க முடியாத ஒரு மானுடனை என்ன செய்வது எனத் தெரியாமல் அவள் திகைத்துக்கிடந்தாள். பெரும் வனத்தை சிறு பூ ஒன்று காதல்கொள்வதைப் போல் அவளுக்குத் தோன்றியது.
திகைப்பில் இருந்து மீள முடியாமல்தான் இருவரும் நடந்தனர். ஆனால், எந்த ஓர் உரையாடலை நடத்தினாலும், அது மேலும் திகைப்பைக் கூட்டவேசெய்யும் என்பது இருவருக்கும் தெரியும். ஏனென்றால், அகுதையின் குலக்கதை இந்த மண்ணில் எல்லோரும் அறிந்ததே. எல்லோரும் அறிந்த கதையை அறிஞர்கள் இன்னும் அடியாழத்தில் இருந்து அள்ளித்தருவர். கபிலரின் சொற்கேட்க ஆவலோடு இருந்தான் பாரி.
கபிலர் சொன்னார், ``மருத நிலத்தில் ஒரு பறவை இருந்தது. அதன் பெயர் `அசுணமா’. இசைக்கு மயங்கும் பறவை அது. கூடல்வாசிகள் வைகைக் கரையில் அமர்ந்து, மாலைப்பொழுதில் சிறு யாழ் மீட்டி மகிழ்ந்திருப்பர். அசுணமா சிற்றொலி எழுப்பியபடி நாணல்களுக்குள் இருந்து ஒவ்வொன்றாகப் பறந்து வரும். யாழ் இசைக்கப்பட்டுக்கொண்டே இருக்க, இசைப்பவனைச் சுற்றி அசுணமா வந்து இறங்கும். கொன்றை மரக் கிளையால் செய்யப்பட்ட யாழையே கூடல்வாசிகள் மீட்டுவர். அசுணமா, கொன்றை மரத்தில் மட்டுமே அடையக்கூடிய பறவை. யாழின் இசை செவியிலும் கொன்றையின் வாசனை நாசியிலும் ஏற, அசுணமா கிறங்கி, அந்த இடத்திலேயே அடையத் தவிக்கும். நேரம் ஆக ஆக அது இசைப்பவனை நெருங்கும். பின்னர் அவன் மேலே ஏறத் தொடங்கும். அவனது தோள், கால், கை என எங்கும் சிற்றீசல்போல் மொய்க்கத் தொடங்கும். மயங்கிய அசுணமா, இசைப்பவனோடு கொஞ்சும்; தனது சிறு அலகால் அவனது கூந்தலைக் கோதும்.

மலரின் இதழ் விரிவதற்காக, அவற்றுக்கு எதிரே பறந்தபடியே காத்திருக்கும் தேனீக்கள் போல, இசைப்பவனின் இமைக்கு நேரே இறக்கைகளை அசைத்தபடி அது தள்ளாடித் தள்ளாடி மிதக்கும். இசைப்பவன் அதைக் கண்டு சிரித்துக்கொண்டே யாழ் மீட்டுவான். அந்தச் சிரிப்பை தனது அலகால் கொத்த அவனது இதழை முட்டும். அதன் கொஞ்சலில் இருந்து விடுபட முடியா இசைஞன், இரவு எல்லாம் யாழ் மீட்டிக்கிடப்பான்” எனச் சொல்லும்போதே கபிலரின் குரல் உடையத் தொடங்கியது.
“கூடல்வாசிகளுக்கு அசுணமாதான் குலப்பறவை. இசை கேட்டுத் தலையாட்டும் அசுணமா, இன்று இந்த நிலவுலகில் எங்கும் இல்லை. அந்தப் பறவை இனம் எங்கே போனது, எப்படி அழிந்தது என யாருக்கும் தெரியவில்லை. `குட்டூர் முடவனார்’தான் ஒரு கவிதை பாடினார், அகுதையின் குலம் அழிந்த மறுநாள், யாழ் நரம்பில் வந்து மோதி மோதி, தங்களின் கழுத்தை அறுத்துக்கொண்டு அசுணமாக்களும் அழிந்தன என்று.”
விரல்களால் அவனது தலைமுடியை மெள்ளக் கோதினாள். ஆற்றல் இன்றி அயர்ந்துகிடந்த நீலன், கண்விழிக்க முயன்றான். அவள் கன்னம் தொட்டு, தூங்குமாறு இமை மூடினாள். அவனுக்குள் இரவின் ஆவேசம் மேலே எழும்பியபடியே இருந்தது. கிணைப்பாணனின் குரல் செவிப்பறைக்குள் மீண்டும் மீண்டும் வந்து மோதியது. நினைவுகள் அவனது கழுத்தை நெரித்தன. எல்லாவற்றையும் சட்டென மறுத்து கண் விழித்தான். அவள் சற்றே அச்சம்கொண்டாள். அவளது விரல்கள் கன்னம் தொட அஞ்சின.
அவன் கழுத்தைத் தூக்கி எழ முயலும்போது, அவள் நெஞ்சில் கைவைத்து அழுத்தி, அவனைப் படுக்கச் செய்தாள். அவன் மனம் இரவில் இருந்து மீள முயன்றது. அவள் விரல்களால் அவனது உடல் முகர்ந்து, வெளிவர வழி அமைத்துக்கொண்டிருந்தாள்.

பாரி கேட்டான், “கூடல்வாசிகளுக்கு மட்டும் உழவு சிறப்பாக வசப்பட்டது எப்படி?'’
“எல்லோரும் காட்டை அழித்து விளைநிலமாக்கியபோது, காட்டை அறிந்துகொண்டு நிலத்தை விளையவைத்தவர்கள் அவர்கள்.”
ஆர்வத்தோடு பாரி வினவினான், ``எப்படி?”
``பன்றி அகழ்ந்த நிலத்தில் பயிர் நட்ட மலை அனுபவம்தான், சமதளத்தில் பயிர் நடுமுன் மண்ணை ஏர்கொண்டு கிளறச் சொல்லியது. பன்றியின் முன் உதடு பூமியின் தன்மையை உணரும். அதுபோல பூமியை உணரவும், அதைக் கிழித்து இறங்கும் மரத்தை உணரவும் முயன்றனர் கூடல்வாசிகள்.
வண்டல் மண்ணுக்கு, இறுகிய மண்ணுக்கு, இளமண்ணுக்கு என உழுபடைகளை வகைப்படுத்தி உருவாக்கினர். தாளி மரமும் வேலா மரமும் வெக்காளி மரமும்கொண்டு கலப்பைகள் செய்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தினர். உழு மரங்கள் மண்ணுக்கு ஏற்ற ஆழம்கொண்டு உழுதன. எல்லோரும் நிலத்தை உழ வேண்டும் என அறிந்திருந்தனர். ஆனால், உழும் நிலத்தை உணர வேண்டும் என்று அறிந்தவர்கள் அவர்களே.”
உணர முடியா இடத்தில் கிடந்த நீலனை உணரத் தலைப்பட்டாள் மயிலா. இடதுகையால் கழுத்தோடு அணைத்து அவனைத் தூக்கினாள்.அவனது முகம் முழுவதும் அவளது கூந்தல் உழுது இறங்கியது. மேல் உதடு கிளறி உள்ளிறங்கத் துடித்தன அவளது இதழ்கள். ஆனால், அவன் சோர்வில் இருந்து விடுபடாமல் இருந்தான். மூடி வைத்திருந்த சிறு கலயத்தை எடுத்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவன் கைகள் மிகவும் துவண்டிருந்தன. அவளது வலதுகை, கலயத்தைத் தாங்கியிருக்க... அவன் குடித்தான்.
நினைவுகளை உதிர்த்துவிட்டு வெளிவரத் துடிக்கும் அவனது வேட்கை, கண்களில் தெரிந்தது. நீராகாரம் உள்ளுக்குள் இறங்கி மயக்கம் கலைக்கத் தொடங்கியது. நீலன் நினைவின் ஆழத்தில் இருந்து மேலேறி மேலேறி, அவளது மார்பின் சரிவுக்கு வந்து சேர்ந்தான்.
கபிலர், தான் கேள்விப்பட்ட அந்தப் பூர்வகதையை வியப்பு குறையாமலே சொன்னார்...
``அது மட்டும் அல்ல. ஏர்க்கலப்பையை மாடு இழுக்க, அதன் கழுத்தில் போடும் குறுக்கு ஆரத்தை (நேக்கா) எல்லா மரங்களிலும் செய்து மாட்டின் கழுத்தில் மாட்டி இழுக்கவைத்தனர். அகுதையின் குலம்தான் முதலில் கண்டறிந்தது, அத்தி மரம்தான் ஆவினத்தின் சேர்மானம் என்று. குறுக்கு ஆரத்தை அத்திமரத்தில் செய்தனர். அதுதான் கனம் குறைவாக இருக்கும். எவ்வளவு இழுத்தாலும் மாட்டின் கழுத்துத் தோலில் வடு பிடிக்காது. அதன் கழுத்து நரம்புக்கு எண்ணெய் நீவியதுபோல், சிறு நெளிவுக்குக்கூட சரிந்துகொடுத்துச் செல்லும்.”
பாரி வியப்போடு கேட்டான், “கால்நடைகளை மரங்களோடு இணைத்துப் பொருத்த மதிநுட்பம் தேவை. காடும் கால்நடைகளும் அதிசய உறவுகொண்டவை.”
‘ஆம்’ என்று தலையாட்டிய கபிலர் சொன்னார், “மரத்தையும் மாட்டையும் இணைத்தது மட்டும் அல்லாமல், தாவரத்தையும் மண்ணையும் இணைத்தனர். ஆவார இலையை அடிமண்ணில் போட்டபோது அவர்கள் சொல்வதை யாரும் நம்பவில்லை. அறுவடை நாளில் அம்பாரமாகக் குவிந்த விளைச்சல் கண்டு வாய் பிளந்தவர்கள், அந்தத் தாவரத்தின் பெயர் என்ன என மீண்டும் மீண்டும் வந்து கேட்டுப் போயினர்.”
``எதற்கும் ஆகார்” எனக் கேலி பேசிச் சிரித்த அவர்களின் பெருங்கிழவன் ஒருவன்தான், அந்த இலையைக் கண்டறிந்து நிலத்தில் போட்டு அமுக்கியவன். `பயிர்களுக்கு நல்ல ஆகாரம் இந்த இலை’ என அவன் சொன்னதை இரண்டு விளைச்சலுக்குப் பிறகே உண்மை என கூடல்வாசிகள் ஏற்றனர். `ஆகார இலை' என்று அந்த இலைக்குப் பெயர் சூட்டினர். அவர்களே அறியாமல் அது ஆவார இலையாக வளைந்துகொண்டது.”
அவன் நீராகாரத்தைக் குடித்து முடித்தான். அவனது முகம் சற்றே அமைதிகொண்டது. மயிலா அவனை எப்படி உள்வாங்குவது எனத் தெரியாமல் தவித்தாள். அவனது முகத்தை மார்போடு அணைத்தபோது அவளது கைகள் நடுங்கின. தன்னை எத்தனையோ முறை தழுவிக்கிடந்த நீலன்தான் இவன். ஆனால், குலநாகினி கையில் ஏந்த நின்ற அந்தக் காட்சியைப் பார்த்தப் பிறகு, அவனைத் தொடவே ஆழ்மனம் அஞ்சுகிறது.

“நேற்றைய இரவில் நான் பார்த்த நீலன் நீதானா?” என்று அவனைப் பார்த்துக் கேட்கவே, அவள் தலை குனிந்தாள். அந்தச் சமயம் அவனது தலை நிமிர்ந்தது. உதடுகள் உணர நிலம் கிளறி உள்ளிறங்கினான். இதழ்கள் இணைந்தபோதும் அவள் கொண்டுவந்ததை அவன் குடித்துக்கொண்டுதான் இருந்தான்.
சிறிதுநேரம் கழித்து, இதழ்கள் விலக்கி பெருமூச்சு வாங்கியபடி தன்நிலைக்கு வந்தாள்.
``நீ ஏன் உன்னைப் பற்றி என்னிடம் இதுவரை சொல்லவில்லை?’’
மயிலாவின் கேள்விக்கு, அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. அவளது இமைகள் துடித்து ஆடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். அடிமண்ணில் ஆகாரமாகச் சேர்ந்துகிடக்கும் குலக்கதைகள் வெளிப்பார்வைக்குச் சட்டெனத் தெரியாதே!
“உனது தோள்கள் எனது அணைப்புக்கு அப்பாற்பட்டவையாக மாறியுள்ளன என உணர்கிறேன். உனக்குள் இருக்கும் நெருப்புக்கு முன் நம் காதல் நிலைகொள்ள மறுக்கிறது” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளது கண்களில் இருந்து நீர் வழிந்தது. ஒரு கணம் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தினாள்.
பறம்பின் எல்லா பெண்களையும்போல அவளுக்கும் அந்தச் சமயம் வள்ளியே நினைவுக்கு வந்தாள். வள்ளியின் உறுதிப்பாட்டுக்கு இணை சொல்ல யாரும் இல்லை. பெண்ணின் வீரிய வடிவம் அவள். மயிலாவின் மனம் வள்ளியை நினைத்துக்கொண்டிருந்தபோது தன்னைத் தூக்கிக்கொண்டு செல்வதுபோல உணர்ந்தாள். வள்ளியின் நினைவு எந்தத் துயரத்தில் இருந்தும் வெளியேற்றும். நினைவின் சுகத்தை உடல் உணர்ந்துகொண்டிருந்தது.
சட்டென கண்விழித்துப் பார்த்தாள் மயிலா. நீலன் தன் இரு கைகளால் அவளைத் தூக்கியபடி மர நிழல்விட்டு வெயில் இறங்கும் நிலம் நோக்கி வந்து நின்றான்.
சூரிய ஒளி இருவர் மீதும் பொழிந்து இறங்கியது. அவளின் கண்களைப் பார்த்து நீலன் சொன்னான், “நான் அகுதை, நீ அசுணமா. வாழ்ந்தாலும் அழிந்தாலும் பிரிவில்லை நமக்கு.”
``மலையில் இருந்தவர்கள், காட்டில் இருந்தவர்கள், கடற்கரையில் இருந்தவர்கள் எல்லோரும் வெட்டிச் சாய்க்கும் வாள்முனையின் பின்னும் பாய்ந்து இறங்கும் அம்புமுனையின் பின்புமே அலைந்துகொண்டிருந்தனர். ஆனால், கூடல்வாசிகள்தான் எந்நேரமும் ஊர்ந்து நகரும் மண்புழுவின் பின்னும், சிறு துவாரம் உருவாக்கி மறுகணம் சிறகு விரிக்கும் ஈசலின் பின்னும் அலைந்துகொண்டிருந்தனர்” என்றார் கபிலர்
“உண்மைதான். ஆனால், வாள்முனைதானே வெற்றிகொண்டது. எந்த மண்ணிலும் விளைய வைக்கத் தெரிந்தவர்களை, விதைநெல்லே அறியாதவர்கள் வீழ்த்திவிட்டனரே. காலம் வைகையின் சாட்சியாகச் சொல்லும் செய்தி ஒன்றுதான். எந்தக் கணமும் நீ தாக்கப்படலாம். ஆனால், அதற்கு முந்தைய கணம் உன்னுடையது. அதில் நீ கையறுநிலையில் நின்றால் ஆறோடு உன் குலம் போகும்” என்றான் பாரி.
கபிலர் தலையசைத்து ஆமோதித்தார். ``அகுதை மாவீரன்தான். ஆனால், திருநாளின் அதிகாலையில் கொலைவாள் கொண்டு சூழப்படுவோம் என்பதை எதிர்பார்க்கும் அளவுக்கு அவன் மனம் சீர்கெடவில்லை.”
``தீயவர்களின் வீழ்ச்சி, மகிழ்வைக் கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சியோ, துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும். அகுதையின் தோல்விதான் இந்த மண்ணின் சமநிலை சரியக் காரணமானது. வளமான பூமி தன் கை வந்ததும் வென்றவன் பெரும் வலிமைகொண்டவன் ஆனான். அதே போன்ற ஒரு கொலைவெறித் தாக்குதலை எதிர்பாராத பொழுதில் நிகழ்த்தினால், நாமும் பெரும்வளம் பெற்றவர்களாக மாறுவோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரத் தொடங்கியது. அதைவிடப் பெரும் தாக்குதலை நிகழ்த்தி அடுத்தடுத்து மூன்று குலங்களை அழித்ததனால், சேர குலம் முதல்நிலை பெற்றது. போர் என்பது அறை கூவி நிகழ்த்துவது என்ற மரபை உடைத்தான் கொற்கைப்பாண்டியன். அகுதையின் மீது தொடுக்கப்பட்டது போர் அல்ல.”
பாரி பேசிக்கொண்டிருக்கும்போது இடதுபுறம் இருந்த புதருக்குள் இருந்து செந்நாய் ஒன்று பாய்ந்து ஓடியது. அது ஓடிய திசைநோக்கி விரைந்தான் பாரி. அது அடுத்தடுத்த புதர்களுக்குள் நுழைந்து வேகம்கொண்டது. அதன் திசையைக் கூர்ந்து கவனித்தபடி தனது கையில் இருந்த ஈட்டியை இழுத்து வீசினான். செடிகொடிகளைக் கிழித்துக்கொண்டு அதன் விலாவிலே இறங்கியது ஈட்டி.
பாரியை நோக்கி ஓடிவந்து நின்ற கபிலர், மூச்சிரைத்தபடியே கேட்டார், ``அது இறந்துவிட்டதா?”
“ஆம்” என்றான் பாரி.
தன்போக்கில் போகும் விலங்கை ஈட்டி எரிந்து கொல்லும் செயல், கபிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. `பாரிதானா இது?!' எனப் பதறியபடி பார்த்தார்.
புதருக்குள் போன பாரி, தான் எறிந்த ஈட்டியை அதன் உடலில் இருந்து பிடுங்கி எடுத்து வந்தான். கபிலரின் முகத்தில் இருந்த வெறுப்பைப் பார்த்தபடி இலைகளால் ஈட்டியில் இருந்த குருதியைத் துடைத்துக்கொண்டே சொன்னான், “விலங்குகள் தமது உணவுக்காக பிற விலங்குகளை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், தனது உணவுக்காகவும் தேவைக்காகவும் மட்டும் அல்லாமல், கண்ணில் படும் எல்லா விலங்குகளையும் கொன்றுபோடும் இயல்புடைய விலங்கு இது மட்டும்தான். கண்ணில் படும் நாடுகளை எல்லாம் விழுங்கப்பார்க்கும் வேந்தர்களைப்போல.”
கபிலர் அதிர்ந்து பார்த்தார்.
“காட்டு உயிர்களின் அழிவுச்சக்தி இதுவே. அழிவுச்சக்திகளை எந்த இடத்தில் கண்டாலும் பறம்பின் ஈட்டி பாயும்.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...