
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி

வருத்தமும் மகிழ்ச்சியும்!
கோயிலில் நிறுத்தப்பட்டிருந்த எங்கள் கார் மீது இன்னொரு கார் மோதிய சத்தம் கேட்டு என் கணவர் ஓடிப்போனார். ‘என்ன நடந்தது? கணவர் என்ன செய்யப்போகிறார்?’ என்று பதறியபடி நான் ஓடினேன். அங்கே, கார்மீது இடித்தவர் அவராக முன்வந்து மன்னிப்பு கேட்டு, அதற்கான செலவை தந்துவிடுவதாகச் சொன்னார். `மன்னிப்பு, செல வெல்லாம் இருக்கட்டும், கல்யாண நாளும் அதுவுமா, இப்படி ஆயிடுச் சேன்னுதான் வருத்தமா இருக்கு' என்று கணவர் சொல்ல, ‘எனக்கும் வருத்தம்தான்... இன்று எனக்கு பிறந்த நாள். இன்னிக்கு இப்படி ஆயிடுச்சேன்னு இருக்கு' என்று அவர் சொல்ல, அடுத்த நிமிடமே ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி கைகுலுக்கிக் கொண்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
- பி.கோமதி, கோவை

வேலை... பரபரப்பு... சர்க்கரை நோய்!
சர்க்கரை நோய்க்காக டாக்டரைப் பார்க்க வந்த என் தோழியை தற்செயலாக சந்தித்தேன். அவளிடம் பேசியபோது தன் நிலை குறித்து மிகவும் வருத்தப்பட்டுப் பேசினாள். அதாவது, அவளும் கணவரும் சேர்ந்தே வேலைக்குப் புறப்படு வார்களாம். கணவர் பைக்கில் அழைத்துச்சென்று, அவளை அலுவலக வாசலில் இறக்கிவிடுவாராம். காலையில் சீக்கிரமாக தயாராகிவிடும் அவள் கணவர் பைக்கில் அமர்ந்தபடியே, `சீக்கிரம் வா...' என்றபடி ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பாராம். என் தோழி அவசர அவசரமாக சாப்பிட்டு, உடை மாற்றிக்கொண்டு பதற்றமாகவே செல்வாளாம். பல நேரங்களில் சாப்பிடாமலேயே செல்வதுண்டாம். காலையில் எழுந்து சமைப்பது முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது வரை எல்லாவற்றையும் தோழி மட்டுமே செய்வாளாம். கணவர் துளிகூட உதவ மாட்டாராம். இப்படியாக பரபரப்புடன் வேலைக்குப்போவதாலேயே தனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டதாகச் சொன்னாள் அவள். கணவன்மார்கள் உணர்ந்தால் மட்டுமே என் தோழி போன்றவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
- கே.தமிழரசி, சென்னை

தேர்வு மையங்களில் சில சிரமங்கள்!
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் கண்ட சம்பவம் இது. கோடை வெயிலில் மின்விசிறிகூட இல்லாததால் தேர்வு அறையில் மாணவர்கள் கொட்டிய வியர்வைத்துளிகள் விழுந்து பரீட்சைத்தாளே வீணாகிவிடுமோ என்று பயந்துகொண்டே, வியர்வையைத் துடைத்தபடி தேர்வு எழுதினார்கள். பிழையாக எழுதியதை அழிக்கும்போது பெஞ்ச் ஆடுவதால் பக்கத்தில் (ஒரே பெஞ்சில்) இருப்பவர் எழுத முடியாத அளவுக்கு உடைந்திருக்கிறது பெஞ்ச். ஒரு கோடு போட வேண்டுமானாலும்கூட மற்றவர் எழுதுவதை நிறுத்தியே ஆக வேண்டும். ஏற்கெனவே, தாங்கள் படித்த பள்ளியை விட்டுவிட்டு வேறு ஒரு மையத்துக்குச் சென்று தேர்வு எழுதுவதே அவர்களுக்கு ஒருவித பயத்தைக் கொடுக்கும். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளால் அவர்களின் நேரம் வீணாகிறது. இதனால் மதிப்பெண் குறையவும் கூடும். மாணவர்கள் தேர்வு எழுதும்போது அங்கே வரும் அதிகாரிகள் தேர்வு மையத்தையும், அங்கிருக்கும் குறைகளையும் சரிசெய்ய வேண்டியது அவசியம்.
கடந்த ஆண்டு என் மகள் உள்பட பல மாணவர்கள்பட்ட கஷ்டங்கள்தான் இவையெல்லாம்! 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு நெருங்கும் இந்தச் சூழலில், உடனடியாக கல்வித்துறை ஆய்வாளர்கள் கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- சாந்தகுமாரி ஜெயராஜ், மேலசிந்தாமணி

பயணம் தந்த பாடம்!
நான் ஒரு வேலையாக அம்பத்தூர் போனேன். வேலை முடிய இரவு 9 மணி ஆகிவிட்டது. கையில் இருபது ரூபாய் மட்டுமே இருந்தது. அங்கிருந்து அண்ணாநகர் போக வேண்டும். பஸ் ஏறிய சிறிது நேரத்தில் நடத்துநர் வர, கையிலிருந்த 20 ரூபாய் நோட்டை நீட்டினேன். ரூபாயின் பின்புறம் சாயம் பூசி இருப்பதாகக்கூறி, `நோட்டு செல்லாது, வேறு கொடுங்கள்' என்று கேட்டார். என்னிடம் வேறு காசு இல்லை என்றதும் என்னைப் பாதிவழியில் இறக்கி விட்டுவிட்டார். நான் எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தேன்.
எனக்கு 60 வயது என்பதால் பரவா யில்லை. இதுவே இளம் பெண்ணாக இருந்தால்..? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. ஆகவே, எங்கே கிளம்பி னாலும், சற்றுக்கூடுதலாகவே பணம் வைத்துக்கொள்வது நல்லது.
- எஸ்.ஜெயலஷ்மி, சென்னை