மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 15

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

உண்மையில் அபத்தக் காமெடிகளால்தான் நிறைந்திருக்கிறது நம் வாழ்க்கை. கண்ணீருக்கும் சிரிப்புக்கும் நடுவே நெளியும் ஒரு மின்னலென மாயம் செய்கிறது மனித மனம்.

னித வாழ்க்கையைத் 'துயரங்களின் நகைச்சுவை’ என்றார் சாப்ளின்.

 படித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த பஞ்ச் இதுதான். நிஜமாகவே இந்த உலகம், எவ்வளவு பெரிய காமெடிக் கழகம்!

எப்போதுமே துயரத்துக்கும் நகைச்சுவைக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டு இருப்பது ஒற்றைக் கணம்தான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஓர் இரவு... புலியூர் ஹவுஸிங் போர்டில் மூன்றாவது தளத்தில் உள்ள எனது அறைக்குள் நுழைந்தேன். நடுக்கூடத்தில் நெஞ்சில் 'நெஞ்சுக்கு நீதி’யை விரித்துவைத்துப் படுத்திருந்தார் சரவணன் அண்ணன்.

செருப்பைக் கழற்றிவிட்டு ஓர் அடி எடுத்துவைத்தபோது, காலடியில் தரை இட வலமாக நகர்வதை உணர்ந்தேன். அடுத்த ஸ்டெப்பில் கட்டடமே ஒரு குலுக்கல் போட, பொசுக்கென்று மூளை அலறியது. ''அண்ணே... பூகம்பம்ணே... எர்த்க்வாக்...'' என அலறியபடி வெளியே தவ்வினேன். எனக்கு முன்னால் சிதறிப் பறந்து வந்து விழுந்தது 'நெஞ்சுக்கு நீதி’. அதற்குள் மாடிப் படிகளில் தபதபவென ஓடத் தொடங்கியது கூட்டம்.

வட்டியும் முதலும் - 15

எனக்கு எல்லாமே அவுட் ஆஃப் போகஸ் ஆகிவிட்டது. அத்தனை பேரையும் தாண்டி, சைடு ஸ்லாப்பில் சறுக்கியபடி மின்னல் நொடிகளில் தரைத் தளத்தை அடைந்தேன். வெளியே வந்து மூச்சுவாங்கியபோதுதான், தன்னிலை அடைந்து சட்டெனக் கூச்சம் மண்டியது. இரண்டாவது தளத்தில் இருந்த மலையாளக் குடும்பத்தில் மூன்று மோகினிகள் இருந்தனர். மேல் தளத்து பிரம்மச்சாரிகள் போகும்போதும் வரும்போதும் பார்வைகளிலேயே அந்தப் பெண்களோடு வாழ்ந்துவந்தோம். எனக்கு கடைசிப் பெண்ணோடு ஒரு கெமிஸ்ட்ரி ப்ராசஸில் இருந்தது. இந்தப் பூகம்பப் பொழுதில் வீர தீர இளைஞனாக அவர்களை வழி நடத்திஇருக்க வேண்டியவன், இப்படி உயிருக்குப் பயந்து அந்தரத்தில் பறந்து வந்தது எவ்வளவு பெரிய அவமானம்? மனசு பிசைந்தது. படக்கென்று பக்கத்தில் விழித்துக்கொண்டு இருந்த ஒரு குழந்தையைத் தூக்கிவைத்துக்கொண்டேன். கீழே இறங்கி வந்த அந்தப் பெண்களின் அம்மா என்னைப் பார்த்து, ''எந்தா முருகா... உயிருக்கு அவ்வளவு பயமா?'' எனச் சிரித்தார். ''இல்லைங்க... கிரவுண்ட் ஃப்ளோர்ல இந்தக் குழந்தை தனியா நின்னுட்டு இருந்துச்சு... இதைத் தூக்கத்தான்...'' எனச் சொன்னபோது எனக்கே தொண்டை அடைத்தது. மூன்று பெண்களும் கோரஸாகப் பெருஞ்சிரிப்புச் சிரித்தார்கள்!

டி.வி, மிக்ஸி, கம்ப்யூட்டர் என்று கையில் கிடைத்த பொருட்களை அள்ளிக்கொண்டு முக்கால் நிமிடத்தில் மொத்த ஹவுஸிங் போர்டும் கீழே நின்றது. ஒரு ஆபீஸர் ஜட்டியோடு நின்றார். தெருவெல்லாம் மக்கள் மரண பயத்தில் நசநசத்தனர். பக்கத்து ஃப்ளாட் ரிப்போர்ட்டர் தன் மொபைலில், ''என்னது... இந்தோனேஷியாவுல 1,000 பேர் செத்துட்டாங்களா? 6.2 ரிக்டரா...'' என அப்டேட் கேட்டுத் தன் பங்குங்குப் பீதி கிளப்பினார். ''யாரும் உள்ளே போகாதீங்க... திரும்ப எர்த்க்வாக் வருமாம். ப்ளீஸ் ஸ்டே அவுட் சைட்...'' என அசோஸியேஷன் தலைவர் கத்தினார். அப்போது ஃபுல் மப்பில் வந்த என் ரூம்மேட் சந்திரமோகன், அவன் பாட்டுக்குப் படி ஏறி பால்கனிக்குப் போய், எல்லோருக்கும் கை காட்டிக்கொண்டே ரூமுக்குப் போய்த் தூங்கிவிட்டான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் வெட்ட வெளியில் செட்டிலானோம். ஒருவர் டி.வி. பெட்டிக்கு கனெக்ஷன் கொடுக்க, சீரியல் ஓட ஆரம்பித்தது. பக்கத்தில் ரம்மி கச்சேரி. வாட்ச்மேன் என்னிடம் வந்து, ''ஆறு மாசமா சம்பளம் ஏத்திக் கேக்கறேன் சார்... எவனும் கண்டுக்கலை. சும்மா மீந்ததைப் போட்டா போச்சா... அதான் பூமி மாதா போட்டுப் பாக்குறா...'' எனத் தன்னளவில் ஒரு கேயாஸ் தியரி சொல்கிறார். விடிய விடிய விழித்துக்கிடந்து, அதிகாலையில் அவரவரும் வீடு மீண்டனர். ''என்ன மாமா... நேத்து நிலநடுக்கம்னதும் டவுச ரோட நின்ன...'' என மறு நாள் அத்தனையும் காமெடியாகிவிட்டது. முன் தினம் பூமி கொஞ்சம் கூடுதலாக அசைந்திருந் தால்... இந்த நகைச்சுவை எவ்வளவு பெரிய துயரம்!

உண்மையில் அபத்தக் காமெடிகளால்தான் நிறைந்திருக்கிறது நம் வாழ்க்கை. கண்ணீருக்கும் சிரிப்புக்கும் நடுவே நெளியும் ஒரு மின்னலென மாயம் செய்கிறது மனித மனம்.

சமீபத் தில் டைஃபாய்டு வந்து ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஓரமாகப் படுக்கப்போட்டு, சலைன் சொருகிவிட்டார்கள். நாலைந்து மணி நேரம் வருகிற போகிற நோயாளிகளை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அப்போது கைக்குழந்தையோடு ஒரு குடும்பம் கதறிக்கொண்டுவந்தது. அந்த அம்மாவுக்கு ஓட்டுப் போடுகிற வயசுதான் இருக்கும். கைலி சட்டையில் கெச்சலாக இருந்த அப்பனுக்கு வயது 20-25 இருக்கும். ஏழைப்பட்ட குடும் பம். குழந்தைக்கு வாணி ஒழுக ஃபிட்ஸ் வந்து இழுத்துக்கொண்டு இருந்தது. ''ஏங்க அறிவிருக்கா..? இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க... வெரி சீரியஸ். இப்போதைக்கு மருந்து தர்றேன்... உடனே சைல்டு ஹாஸ்பிட்டல் கொண்டுபோனாத் தான் ஏதாவது பண்ணுவாங்க. பிள்ளை யைத் தூக்கிப் பிடிங்க...'' என்றபடி டாக்டர் குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது, அந்த அப்பனின் பாக்கெட்டில் இருந்த மொபைல் அலறியது. 'சிங்கத்தை போட்டோல பார்த்திருப்ப, சினிமால பார்த்திருப்ப, டி.வி-ல பார்த்திருப்ப...’ என ரிங்டோனில் சத்தமாக சூர்யா

வட்டியும் முதலும் - 15

கதறினார். பையன் தடுமாறி போனை ஆஃப் பண்ணும்போது, அந்தப் பெண் அவனை ஒரு முறை முறைத்தாள். அந்தக் காட்சி வாழ்வின் ஆகப்பெரிய துயர நகைச்சுவை. இன்னொரு நாள் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தபோது, அவருக்கு போன் வந்தது. 'குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்றது ரிங்டோன். அவர் எடுத்து, ''ஒரு மீட்டிங்ல இருக்கேன்மா... கூப்பிடுறேம்ப்பா'' என வைத்துவிட்டு என்னிடம், ''ரிங்டோனைக் கேட்டதும் கண்டுபிடிச்சு இருப்பீங்களே... என் வொய்ஃப்தான்னு'' எனச் சிரித்தார். அது சரி... வாழ்க்கையைக் காமெடியாகப் பார்க்காவிட்டால், நம்மில் பல பேர் ஐ.சி.யூ. க்ளைமாக்ஸில்தான் கிடப்போம்!

'சமூகம்’ என்கிற வார்த்தைதான் இருப்பதிலேயே சூப்பர் காமெடி என்பது என் தாழ்மையான அபிப்ராயம். இந்தச் சமூகத்தால் எதுவெல்லாம் மிக சீரியஸாகக் கொண்டாடப்படுகிறதோ... அது எல்லாமே மிகப் பெரிய காமெடிதான். இப்போது உங்கள் ஏரியாவில் யாராவது அப்படியே எம்.ஜி.ஆர். மேனரிஸங்களோடு வாழ்ந்தால், அவரை நீங்கள் எவ்வளவு பெரிய காமெடியனாகப் பார்க்கிறீர்கள்! நண்பர்களில் எவனாவது 'திருமலை’ விஜய் மாதிரி காலரில் இருந்து சிகரெட் உருவினால், அவன்தானே உங்கள் செட்டில் கோமாளி. நாலு பேர் பின்னால் நடக்க, கோட்டு போட்டுக்கொண்டு நீங்கள் அஜீத் மாதிரி ரோட்டில் நடந்துவந்தால் அரெஸ்ட் ஆகி, 'என் விகடன்’ செய்தியாகிவிட மாட்டீர் களா? உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி ஹிட்லரின் உருவம்தானே காமெடிக்கும் மிகப் பெரிய சிம்பல். மம்மர் கடாஃபியின் ஆடை அலங்காரங்கள் செம காமெடிதானே?

''சார்... ஓப்பன் பண்ணா கல்வி அமைச்சர் சார். ஆனா, அவர் பத்தாவது ஃபெயில் சார். கட் பண்ணா... ஆள் மாறாட்டம் பண்ணி பத்தாவது பரீட்சை எழுதும்போது அமைச்சர் மாட்டிக்கிறார் சார்...'' என யாருக்காவது கதை சொன்னால், ''என்னங்க... ஒரு லாஜிக் வேணாமா?'' எனச் சிரிப்பார்கள்தானே... ஆனால், அந்த லாஜிக் இல்லாத காமெடி யைச் சமூகம் எவ்வளவு எளிதாக நடத்திக் காட்டுகிறது? சுப்ரமணியன் சுவாமி, தங்கபாலு, ஜே.கே.ரித்தீஷ் எல்லாம் பயங்கரக் காமெடியன்களாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் காமெடியன்கள் அல்ல... காரியவாதிகள். கோடிகளில் புரளும் அரசியல் முதலைகள். இவர்களைப்போன்ற அரசியல்வாதிகளைக் காமெடியன்களாகப் புரிந்துவைத்திருக்கும் சமூகம்தான், எப்போதும் காமெடி பீஸு. விதவிதமான இலவசங்கள், அறிக்கைகள், லட்டுக்குள் மூக்குத்தி, பால் பாக்கெட்டில் பணம், இட்லிக் கடையில் கரன்ஸிக் கத்தை, சினிமா ஸ்டார்களின் பிரசாரங்கள், பிரியாணி, சரக்கு என   ஒவ்வொரு முறையும் தேர்தல்தானே ஜன நாயகத்தின் ஈடு இணை இல்லாத காமெடி யாக இருக்கிறது.

வட்டியும் முதலும் - 15

விலைவாசியும் லஞ்ச ஊழலும்தானே பத்திரிகைகளில் நாம் அதிகமாக ரசித்துச் சிரிக்கும் ஜோக்குகள்? பெட்ரோல் விலை உயரும்போதும் கலைஞரைச் சந்திக்கும்போதும் மன்மோகன் சிங் எத்தனை காமெடியனாகத் தெரிகிறார். பச்சை கலர், யாகம், ஜோசியம், பூமி பூஜை எனக் கழகங்கள் நடத்தும் காமெடி களை எத்தனை சீரியஸாகப் பார்க்க வேண்டிய கட்டாயம் இந்தச் சமூகத்துக்கு? ஒரே இரவில் சூப்பர் மேனாகிவிட முடியுமா இந்தச் சமூகம்? பறந்து பறந்து அரசியல்வாதிகளின் வீடுகளிலும் சுவிஸ் வங்கியிலும் இருக்கிற மொத்தக் கறுப்புப் பணத்தையும் அள்ளிக்கொண்டு வந்து போட்டால் எப்படி இருக்கும்? இந்த மாதிரியான சமூகக் கனவுகள் எல்லாமே இங்கு காமெடியாக மட்டுமே இருக்க முடியும்!  

வடபழனி ரஹத் ப்ளாஸாவில் டி-ஷர்ட்ஸ் தேடிக்கொண்டு இருந் தேன். புது டிசைனில் இருந்த     சே குவேரா டி-ஷர்ட்டைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அந்தக் கடைக்காரர் என்னிடம் வந்து, ''சார்... எடுத்துக்கங்க சார். இவரைத்தான் இப்போ எல்லாரும் தேடுறாங்க. மைக்கேல் ஜாக்சனுக்கு அப்புறம் ஹாலிவுட்ல இவர்தான் ஸ்டாரு. ஜேம்ஸ்பாண்ட்லாம் இந்தாளுக்கு அப்புறம்தான்... ம்ம்ம்...'' என்றார். ஒரு கணம் சீமான் அண்ணனுக்கு சேதி சொல்லி, முற்றுகைப் போராட்டம் நடத்தலாமா என யோசித்தேன். கீழே வந்தபோது தரைத் தளத்தில் ஒரு பையன் சே டி-ஷர்ட்டோடு நின்று இயர் போனில் பேசிக்கொண்டு இருந்தான், ''டிஸ்கோன்னா அம்பிகா எம்பயர்தான் சீப்பஸ்ட்... சரி, அவ நிஜமா வர்றேன்னாளாடா?''

ஐயகோ... இந்தச் சமூகத்துக்கு சே குவேரா ஹாலிவுட் நடிகனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!

எனக்குத் தெரிந்து, இல்லாதப்பட்டவர்கள்தான் சிரிக்கிறார்கள். காமெடியை அனுபவிக்கிறார்கள். இரவுகளில் பிளாட்ஃபார்மில் எஃப்.எம். கேட்டுக்கொண்டு, கறிக் குழம்பு ஆக்கிக்கொண்டு, குடும்பமாகக் கூடிச் சிரிக்கிறார்கள். பர்மா பஜாரில் அம்பதுக்கும் நூறுக்கும் உடல் விற்று, பொக்னா சோறு வாங்கித் தின்னும் மங்கைகளும் திருநங்கைகளும் இந்தச் சமூகத்தை எவ்வளவு காமெடி பண்ணிச் சிரிக்கிறார்கள் தெரியுமா?

எப்போதும் வந்த உடனே பொண்டாட்டிக்கு போன் பண்ணிப்பேசி விட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, 'வேலை’யை ஆரம்பிக்கும் ஆபீஸர் களை, வரும்போதெல்லாம் 'ஒரு தலை ராகம்’ பாட்டைப் பாடச் சொல்லி நச்சரிக்கும் எழுத்தாளனை, 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித் துளியும்’ எனக் கவிதை படிக்கும் கவுன்சிலரை, வெளியே வாங்கினா செலவு எனக் கறி எடுத்துவந்து சமைக்கச் சொல்லும் அண்ணாச்சியை... எவ்வளவு காமெடியாக்கிக் கடந்துவிடுகிறார்கள் அவர்கள். பாரில் வந்துபோவோரிடம் எல்லாம் ஓசிச் சரக்கு கேட்டுப் பிச்சையெடுக்கும் மனிதர், எல்லோரும் போய்விட்ட நள்ளிரவில், தெரு விளக்கின் அடியில் உட்கார்ந்து தனியே எதை நினைத்துச் சிரிக்கிறார்?

ஒரு காலத்தில், நாம் துயரங்களோடு கடந்து வந்த ஃபீலிங்குகள் எல்லாமே ஒரு கட்டத்தில் காமெடியாகிவிடுகின்றன. காதலிக்காக கையைக் கிழித்துக்கொண்டது, தூக்க மாத்திரை தின்றது, நண்பனுக்காகச் சண்டை போட்டது, உறவுகளிடம் மல்லுக்கு நின்றது, அலுவலகத்தில் கொந்தளித்தது, எவனுக்கோ சூனியம் வைத்தது... பழி வாங்கத் துடித்தது எல்லாமே காலத்தால் காமெடியாகி நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன!

எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிற தோழர் ஒருவரிடம் எரிச்சலாக ஒரு முறை கேட்டேன், ''உனக்கு எதையும் சீரியஸாவே பார்க்கத் தெரியாதா? எதுக்கு எப்போ பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கே. இங்கே எல்லாமே உனக்குக் காமெடியா?'' அதற்கும் அவர் சிரித்தபடியே சொன்னார், ''சீரியஸாப் பார்க்க ஆரம்பிச்சா... செத்துருவேன்டா!''

அது நம் சமூகத்தின் குரலாகக் கேட்டது!

(போட்டு வாங்குவோம்)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan