மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

இவர்களுக்கு அவர் கிடைத்துவிட்டார்!

கண்.சிவகுமார், திருமருகல்.

 நயன்தாராவின் கண்கள் சொல்லும் ரகசியம், அனுஷ்காவின் கண்கள் சொல்லும் ரகசியம்,  சினேகா வின் கண்கள் சொல்லும் ரகசியம் என்ன?

ஹாய் மதன் கேள்வி - பதில்

மூவர் கண்களும் சொல்லும் ஒரே ரகசியம் - 'என் மனதைக் கவர்ந்த 'அவர்’ எனக்குக் கிடைத்துவிட்டார் தெரியுமோ?!’ என்பதாக இருக்கலாம்!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

  கிளி சரி... அதென்ன பைங்கிளி?

என்னங்க இது? 'பை’ என்றால் பச்சை! அதாவது, நம்ம ஆளு பச்சைப் புடவை, பச்சை ப்ளவுஸ், ப.ஸ்டிக்கர், ப.ப்ரூச், ப.செருப்புடன் வரும்போதுதான் அப்படி அழைக்கலாம். ஆரஞ்சுப் புடவையில் வரும்போது 'பைங்கிளியே!’ என்று அழைத்தால் 'ஆளு கலர் ப்ளைண்ட்’ (Colour Blind) என்று தப்பா நினைச்சுடுவாங்க!

சிவகுமார், காரைக்கால்.

சோகம்கூட சுகமாவது எப்போது?

கல்லூரிக்குப் போய் நோட்டீஸ் போர்டில் ரிசல்ட் பார்க்கிறீர்கள்... நீங்க ஃபெயில். சோகம்!

அப்போது நீங்கள் ஆசை வைத்த - அதுவரை உங்களிடம் பேசியிராத - அந்த அழகுப் பெண் வந்து 'ஸாரி... கவலைப்படாதீங்க... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!’ என்கிறாள் திடீரென்று. சோகம் உடனே... சுகமாகிறது!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

'உதடு’ (முத்தத்துக்கு ஏற்ற!) என்ற சிறப்புத் தகுதி யைப் பெறுவது நம் வாயின் மேல் பகுதியா... கீழ்ப் பகுதியா?

கீழ்ப் பகுதிதான். முகத்தில் மேலும் கீழும் பக்கவாட்டிலும் நகரக் கூடியது தாடைப் பகுதிதான். தலைப் பகுதியில் இருக்கும் மேல் உதடு தானாக நகராது. கீழ் உதட்டால் புகுந்து விளையாடலாம். மேல் உதடு - பிடித் துக்கொள்ள மட்டுமே! மேல் உதடு ஐஸ்க்ரீம் கப், கீழ் உதடு ஸ்பூன்! 'அப்ப ஐஸ்க்ரீம் எது?’ என்று பதில் தெரிஞ்சுக்கிட்டே கேட்கக் கூடாது!

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

என்னதான் நெருங்கிய நண்பன் என்றாலும் கொஞ்சம் முன்னேறும்போது பொறாமைப்படுகிறார்களே, ஏன்?

அவர்களைவிட்டு நீங்கள் விலகிப் போய் விடுவீர்களோ என்கிற கவலையால்தான்! நண்பர்களிடையே ஒருவிதமான 'சோஷலிசம்’ நிலவும்போது எல்லாமே நன்றாக இருக்கும். உதாரணமாக, நான்கு நண்பர்களும் ஆளுக்கு ஒரு சைக்கிள் வைத்திருந்தால் ஓ.கே! ஒருவர் மட்டும் திடீரென்று மோட்டார் சைக்கிள் வாங்கி னால், மற்றவர்கள் கொஞ்சம் கவலைப் படுவார்கள். இது இளம் பருவத்தில் ஏற்படும் அபத்தமான, தற்காலிகமான உணர்வு, மூளைப் பக்குவம் அடைந்தால் சரியாகிவிடும்!  (சரியாகாமலும் போகலாம்!)

சித்திரவேலு, கருப்பம்புலம்.

பரோட்டாவை குருமா மீது விரல் படாமல் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுள்ளீர்களா?

சாப்பாட்டு விஷயத்தில் நான் மென்மையாக சாமரம் வீசுகிற சேவகன் அல்ல; பரோட்டாவே பயப்படும் செங்கிஸ்கான்! (ஆனால், பெண் களோடு அமர்ந்து சாப்பிடும்போது மட்டும் அப்படி ஒரு மென்மை எனக்கு வந்துவிடும்!)

ச.ஆ.கேசவன், கோவில்பட்டி

சில பெண்களைப் பேய்களோடு ஒப்பிடுதல் நியாயமாகுமா?

பேய்களுக்கு நியாயமாகுமா என்று கேட் கிறீர்களா?! (ஐயோ... சும்மா தமாஸுங்க!)

யோகஸ்ரீராஜ், மும்பை.

கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா... இவற்றில் எந்தத் துவையல் உங்களுக்குப் பிடிக்கும்?

எனக்குப் பிடித்ததை நீங்களே கரெக்டாக வரிசைப்படுத்திவிட்டீர்கள்! என்றாலும், எனக்கு ரொம்பப் பிடித்தது 'எம்.ஜி.ஆர். சட்னி’தான்! எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய ஒரு மூத்த நிருபர் என்னிடம் சொன்னார் - 'எம்.ஜி.ஆர். பொங்கல் வரவழைத்தால் தட்டில் பக்கத்துப் பக்கத்தில் ரெண்டு பொங்கல் இருக்கும். உற்றுப்பார்த்தால் தெரியும், அதில் ஒன்று பொங்கல் அல்ல, தேங்காய் சட்னி என்று. தலைவருக்கு ரொம்பப் பிடித்த சட்னி அது!

சுசீலா, திருநாகேஸ்வரம்.

எப்போதெல்லாம் புதிதாய்ப் பிறக்கிறீர்கள் தலைவரே?

அருமையான ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன்!