மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

வண்ணை சிவா

“கடினமான எந்த தானியத்தையும் பக்குவமாக உடைத்துத் தூளாக்கும் ஓர் அரவைத் தொழிலாளியாகத்தான் நான் இலக்கியத்தில் இயங்குகிறேன். எனக்கென்று தனி மொழிக்கட்டோ அடையாளங்களோ இல்லை. இந்தப் பூவுலகில் சக ஜீவிதங்களோடு இணக்கமாக வாழ்ந்து மடியவிருக்கிற சக உயிரி நான். என் வாழ்தலை என் குருதிகொண்டு எழுதிவைக்கிறேன். வளைவுகளோடும் நெளிவுகளோடும் நவீனச் சித்திரமாக நான் வரைகிற குறிப்புகள் எவருடைய சாயலையும் கொண்டிருக்காது.”

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்சமூகச் சிக்கல்களையும் நவீன வாழ்க்கைக்கூறுகளையும் புதிய மொழிநுட்பத்தோடு படைப்பாக்கும் வண்ணை சிவா, சென்னை மாதவரம் பகுதியில் மாவு அரவை மில் நடத்துகிறார். `நதியின் பயணம்’, `உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும்’, `ஒற்றைக்கல் சிற்பம்’, `உதிரநிறப் பொட்டு’, `வண்ணை வீதியில் திரியும் பொம்மைக் கிறுக்கன்’ போன்றவை இவர் எழுதிய நூல்கள். வழக்குரைஞராகவும் சிலகாலம் பணிபுரிந்திருக்கிறார். இடப்பெயர்வின் துயரங்களையும் சிக்கல்களையும் களமாகக்கொண்ட நாவல் எழுதிவருகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

குகை மா.புகழேந்தி

“சினிமாவை இலக்கு வைத்துச் சிறகடிக்கும் பலநூறு பறவைகளில் வலுவான சிறகுடைய ஒரு சிறுபறவை நான். நம்பிக்கையும் கனவுகளும்தாம் என்னை நகர்த்துகின்றன. என் வெறுமையின் வெளிகளில், வறண்ட நிலத்தில் உயிர்தூவும் பனித்துளியாய் வந்து நிறைகின்றன கவிதைகள். என் ரத்தநாளங்களை உறையவிடாமல், இயங்கு சக்தியையும் தீவிரத்தையும் சுரந்துகொண்டே இருக்கிறது கவிதை. அது தரும் வெம்மையில்தான் என் உயிர்ப்பு நிலைத்திருக்கிறது. இந்த உலகின் மேனியில் ஆகச்சிறந்த அழகுடைய ஒரு பாடலை அணிகலனாக்கிவிட்டு இறப்பதற்காக வாழ்கிறேன் நான்.”      

சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசிக்கும் குகை.மா.புகழேந்தி, பெயின்டராக வேலை செய்கிறார். சேலத்தைச் சேர்ந்தவர். `வானம் என் அலமாரி’, `பிரியங்களின் குப்பைத்தொட்டி’, `பறவைகள் அலைகிற உயரம்’ போன்ற நூல்களால் அறியப்பட்டவர். இதுவரை ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சில திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். எந்தப் பின்புலமும் இல்லாமல் சென்னைக்கு வந்து களமும் சுயமும் மாறி குழப்பம் சூழ வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் எளிய மனிதனின் கதையை நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

உமா மோகன்

“என் பணி, என் எழுத்து... எதன் வழியாகவும் நான் பற்ற விரும்புவது, சக மனிதர்களின் விரல்களைத்தான். மானுட விடுதலைக்குத் தடையாகும் எதையும் உடைக்க ஒரு சுத்திகொண்டு புறப்படும் எழுத்தாக என்னுடைய படைப்புகளை வளர்க்கவே விரும்புகிறேன். நமது தமிழ்ச் சமூக வாழ்வில் நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்வு, வெகுவேகமாக மாறுவதான பிரமை இருக்கிறது. மாறுதலைவிட மறத்தலே அதிகமாகத் தோன்றுகிறது. நான் கடந்த, என்னைச் சுற்றிலும் நிகழ்ந்த வாழ்வின் சில கூறுகளை எனது எழுத்து பதிவுசெய்ய வேண்டும்.”

திருவாரூரைப் பூர்வீகமாகக்கொண்ட உமா மோகன், கவிதை, மேடை நாடகம், குறும்படத் தயாரிப்பு, வானொலி நாடகம் எனப் பல தளங்களில் இயங்குபவர். புதுச்சேரி, அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரிகிறார். சிற்றிதழ்களில் தொடங்கிய எழுத்து, வானொலியில் வளர்ந்தது. `டார்வின் படிக்காத குருவி’, `ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, `துயரங்களின் பின்வாசல்’  `நீங்கள் உங்களைப்போல் இல்லை’ கவிதை நூல்களையும், `வெயில் புராணம்’ என்ற பயண நூலையும் எழுதியிருக்கிறார். கிராமத்துக் காதலையும், கால மாற்றங்களையும் முன்வைத்து `ஒரு துண்டு வானவில்’ என்ற நாவலை எழுதிவருகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ஏ.இராஜலட்சுமி

“பெண்ணை இந்தச் சமூகம் எவ்வாறாக எதிர்கொள்கிறது, சமூகத்தினுடனான ஊடாடல் பெண்ணின் மனதில் எப்படியான வலியினை ஏற்படுத்துகிறது என்பதே என் படைப்புகளுக்கான திறவுகோல். பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், நெருக்கடிகள், கனவுகளை நுட்பமாகப் படைப்புக்குள் கொண்டுவர எத்தனிக்கிறேன். கடற்பரப்பாக மிக நீண்டு விரிந்துகிடக்கும் வாழ்வின் துளிகளை அதன் உயிர்ப்போடு சுவைக்கவும் அதில் பயணிக்கவும் முற்படுகின்றன என் கவிதைகள். மனித உறவுகளில் ஏற்படும் வலிகளையும் முதிர்ச்சிகளையும் எளிதில் கடந்துவிட முடியாது. அவற்றின் இழைகளை நேர்மையாகப் படைப்பாக்குவதன் வழியே என்னை மீட்டெடுத்துக்கொள்கிறேன்.”

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்பெண்ணியத் தளத்தில் தனித்த அடையாளத்தோடு இயங்கிவரும் ஏ.இராஜலட்சுமி காரைக்கால், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பூடகமற்ற எதார்த்த மொழியில் கவிதைகள் எழுதிவருகிறார்.  `எனக்கான காற்று’, `நீயும், நானும், நாமும்’ என இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. சங்கம் தொடங்கி சமகாலம் வரையிலான பெண் படைப்பாளுமைகளின் இயக்கத்தை உள்ளடக்கி `ஆக்கமும் பெண்ணாலே’, `சங்கப் பெண் புலவர்களின் பாடல்களில் பெண்’ ஆகிய இரண்டு ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.