மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

ந்த உலகத்தில் எனக்குப் பிடித்த இடம் எதுவெனக் கேட்டால், ஞானியின் வீடு என்பேன். ஆயிரம் புத்தகங்களுக்கு நடுவே ஆலமர்ச்செல்வன்போல் அவர் அமர்ந்திருக்க, எதிரில் அமர்ந்து இலக்கியமும் வரலாறும் தத்துவமும் அரசியலும் கேட்டுக்கொண்டிருப்பதுவும், பேசிக்கொண்டிருப்பதுவும் ஒரு பேரனுபவம். அது எனக்கு வாய்த்திருக்கிறது. ஒருமுறை இருமுறை அல்ல. பற்பல முறை, பற்பல நாட்கள், பற்பல ஆண்டுகள். ஒரு காலத்தில் என் மாலை நேரங்கள் அனைத்தும் ஞானியின் வீட்டில்தான் கழிந்தன. சில சமயங்களில் காலையிலேயே சென்றுவிடுவேன். இரவு வரை பேசிக்கொண்டிருப்போம். என்னென்ன பேசினோம் என்பதற்கு அளவே இல்லை. வானத்துக்குக் கீழ் உள்ள எல்லா விஷயங்கள் குறித்தும் பேசுவோம். எவ்வளவு பேசிவிட்டு வந்தாலும் பலநாள் பேசாதவன்போல மறுநாள் செல்வேன். அவரும் சளைக்காமல் பேசுவார். எங்கள் இருவருக்கும் பொதுவான விஷயங்கள் நிறைய இருந்தன. குறிப்பாக, இலக்கியம், வரலாறு, அரசியல், தத்துவம்.

அது 2000-ம் வருடத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை. கோவை, கொடிசியா அரங்கில் ஒரு கூட்டம். மேடையில் அ.மார்க்ஸ் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேசப் பேச ஒரு சலசலப்பு. அரங்குக்குள் நுழைகிறார் ஞானி. அவரைக் கைப்பிடித்து அழைத்துவருகிறார் பாலைநிலவன். ஓர நாற்காலிகளில் அமர்ந்திருந்த பலரும் எழுந்து வணக்கம் சொல்லி, தங்கள் பெயரைச் சொல்லிக் கைகொடுக்கிறார்கள். அப்போதுதான் அவரை முதன்முதலாகப் பார்க்கிறேன். அதற்கு முன்பே அவரின் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சிற்றிதழ்களில் அவர் பெயர் அடிக்கடி புழங்கும். மதிப்பிற்குரிய மனிதர் என்பதாகவே அந்தச் சித்திரங்கள் இருக்கும். ஆனால், அவரை நெருங்க மெல்லியத் தயக்கம் இருந்தது. ‘நமக்கெல்லாம் என்ன தெரியும்னு அவர்கூட பேசறது’ என்று நினைத்துக்கொள்வேன். பிறகு ஒரு காலம் வந்தது. என் வாசிப்பின் மீது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டபோது, நானே அவரைத் தேடிச் சென்றேன். ஞானி மிக எளிமையாக இருந்தார். விஷயஞானம் உள்ளவர்கள், அல்லாதவர்கள் என யாரும் அவரைத் தேடிச் செல்ல முடியும் என்பதை அப்போது உணர்ந்தேன். அவரவர் ஆழங்களுக்கு ஏற்ப அவரிடம் உரையாட விஷயமும் சொற்களும்

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

இருந்தன. 

இதுதான் ஞானியின் பலமே. தன்னைத் தேடி வரும் எந்த ஒரு மனிதரோடும் உரையாடக்கூடியவராய் இருந்தார். ராமச்சந்திர குஹா, காந்தியை ‘மாபெரும் விவாதங்களின் தாய்’ என வர்ணிக்கிறார். இது ஒருவகையில் ஞானிக்கும் பொருந்தும். எவ்வளவு மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களோடும் அவரால் உரையாட முடிந்திருக்கிறது. அவரின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமலும் வந்தவரைக் காயப்படுத்தாமலும் தன் கருத்துகளைத் தெளிவாக, திட்டவட்டமாக எடுத்துவைப்பார். அவர் பேசும் கருத்துகள் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அவர் உரையாடும் தொனி தவிர்க்க இயலாததாக இருக்கும். ஆங்கிலத்தில் ‘டிஸ்கோர்ஸ்மென்ட்’ என்று ஒரு சொல் உண்டு. ஞானியின்   உரையாடல்கள் அதற்கு இலக்கணமானவை. அவர் பேசும் பாங்கு தனிச் சிறப்பானது. முதலில் வந்தவரைப் பேசச் செய்வார். அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்பார். இடையிடையே சில கேள்விகள் இருக்கும். அந்தக் கேள்விகளால் உரையாடலை வழிநடத்துவார். ஒரு கட்டத்தில் நாம் எந்தப் புள்ளியில் இருந்து பேசிக்கொண்டிருந்தோமோ, அங்கிருந்து விலகி வேறு ஓர் இடத்துக்கு வந்திருப்போம். சில சமயங்களில் அபத்தமாக நேர் எதிரான இடத்தில் இருப்போம். உரையாடலின் ஒரு பெரிய திருப்பத்தில் அந்தரத்தில் நம்மைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டுப் புன்னகைப்பார். நாம் திகைப்பில் ஆழ்ந்திருப்போம். ஒரு நல்ல உரையாடலில் இது நிகழ வேண்டும். ஞானியுடன் பேசும் ஒரு நுட்பமான மனதுக்கு அடிக்கடி இது நிகழும். உண்மையில், ஞானி கேள்வி மட்டுமே கேட்பது இல்லை. அந்தக் கேள்விகளின் வழியாகத் தன்னையும் தொகுத்துக்கொள்வார். நம்மையும் தொகுத்துக்கொள்ளச் செய்வார்.

வரலாற்றில் இதற்கு முன்பு இப்படிக் கேள்விகளால் தன்னைத் தொகுத்துக்கொண்ட மேதை ஒருவர் இருந்தார். அவர் பெயர் சாக்ரடீஸ். இதைச் சற்றும் மிகையின்றிச் சொல்கிறேன். ஞானியின் இயங்கியல் சாக்ரடீஸைப்போல உரையாடல்களால் ஆனது. குளிர்ச்சியும், மெல்லிருளும் அடர்ந்த அவரின்  ‘தமிழ்நேயம்’ இல்லத்தில் அமர்ந்து, அவரிடம் இலக்கியம் பேசாத, கற்காத ஒரு இளம் படைப்பாளி தன் வாழ்வின் பெரும் செல்வம் ஒன்றை இழந்தவன் ஆகிறான். ஞானிக்கு மிகவும் பிடித்த குறள் ஒன்றுண்டு, ‘பேரறிவாளன் திரு’ எனும் குறள். ஊருணியில் நீர் நிறைந்தால் அது ஊருக்கே சொந்தம். அதுபோல பேரறிவு கொண்டவனின் செல்வம் அனைவருக்கும் சொந்தம். அறிவு ஒரு செல்வம் என்றால், ஞானி ஒரு பேரறிவாளன். ஆனால், அவரிடம் சென்றவர் குறைவு. பெற்றவர் அதனினும் குறைவு. அது அவர் பிழை அல்ல. மனதையும் அறிவையும் ஆழப்படுத்திக்கொண்டே செல்வது ஒரு பித்துநிலை. அது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை.

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

ஒருமுறை நான் ஞானி வீட்டுக்கு மாலையில் சென்றேன். உள்ளே நுழையும்போதே, அவர் முகம் கடுகடுவென இருந்தது. எப்போதும் என் குரல் கேட்டாலே மலர்வார். அன்று அப்படி இல்லை. ஏதோ விவகாரம் என நினைத்தேன். என்னிடம் ‘மகாகவி’ என்றால் யார்? என்றார். எனக்கு விஷயம் புரிந்தது. முதல் நாள் ஞாயிறு மாலை காந்திபுரத்தில் ஓர் இலக்கியக் கூட்டம். ஞானி முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார். மேடையில் பேசிய அப்துல்ரகுமான், சிற்பியின் கவிதை ஒன்றைக் குறிப்பிட்டுவிட்டு, “டி.எஸ்.எலியட்டும் இப்படி எழுதி இருக்கிறார். இன்னும் ஏன் ஞானி எங்களை மகாகவி என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள்?” என்று பேசினார். உள்ளே நுழைந்ததும் ஞானி கேட்கிறார். ‘யார் மகாகவி சொல்லு?’ இன்று இதுதான் பேசுபொருள் என்று புரிந்தது. நான் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அவர் உலகம் முழுதும் நடந்த ‘மகாகவி’ என்ற பதம் குறித்த உரையாடல்களைப் பேசத் தொடங்கினார். மேற்கில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, அது உருவாக்கிய தேசியம் குறித்த பிரக்ஞை, ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் இலக்கியங்களுக்கு இடையே நிகழ்ந்த பரிவர்த்தனை, அந்நிய மொழியின் வரவால் உள்ளூர் மொழியின் படைப்பாளிகளுக்கு ஏற்பட்ட அடையாள சிக்கல், அதனால் தொடங்கிய மகாகவிக்கான தேடல், சமஸ்கிருத மொழியில் உள்ள கவி, மகாகவி என்ற விளித்தல்களுக்கான பொருள், ஆங்கிலத்தின் பொயட், மேஜர் பொயட் உரையாடல்கள், ஷேக்ஸ்பியரின் படைப்பாளுமை, டி.எஸ்.எலியட்டின் கவித்துவம் என்று பின்னிரவு வரை நீண்ட உரையாடலில் அன்று ஞானி கொண்டது ஒரு விஸ்வரூபம். வீட்டுக்குத் திரும்பும்போது, எனக்கு ஒரு வீட்டுப் பாடம் கொடுத்தார். மிகையில் பக்தினின் ‘தஸ்தாயெவ்ஸ்கியின் கலையியல்’ குறித்த நூலைப் படித்துக்கொண்டு வரச்சொன்னார். நான் அந்த நூலுடன் கட்டிப்புரண்டேன். கரையேறினேன். தொடர்ந்து அது குறித்து உரையாடிக்கொண்டே இருந்தேன். அது எனக்கு ஏற்படுத்திய திறப்புகள் பல. இது ஒரு சம்பவம். இப்படி எத்தனையோ சொல்லலாம்.

ஞானிக்கு உயிருக்கு இணையான விஷயங்கள், அவர் சேர்த்துவைத்திருக்கும் புத்தகங்கள். அவரிடம் படிக்க வேண்டும் என்று கேட்டால் எந்தப் புத்தகத்தையும் தயங்காமல் தருவார். ஒரே பிரச்னை, அதை நிஜமாகவே படிக்க வேண்டும். சில சமயங்களில் ஒரு புத்தகம் குறித்து அவர் சொல்லும் விஷயங்களின் அழகில் மயங்கி அந்தப் புத்தகத்தை வாங்கிப்போகும் நண்பர்கள், பிறகு அதை அப்படியே மறந்துவிடுவார்கள். இது அவரை கோபமூட்டக்கூடியது. புத்தகத்தை வாங்கிச் சென்றால் படித்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். நம்மிடம் அதைக் கேட்டும்விடுவார். ஒரு புத்தகத்தைப் படிக்காமல் கொடுத்துவிட்டால், மறுமுறை புத்தகம் வாங்கவே முடியாது. நிர்தாட்சண்யமாக மறுப்பதோடு அல்லாமல், திட்டவும் செய்வார். ஒரு புத்தகத்தை வாங்கினால் உடனே படித்துவிடுவது என்ற நல்ல பழக்கம் எனக்கு ஞானியால் விளைந்தது. இன்று வரை என்னைக் காப்பதும் அந்த நற்பழக்கமே.

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

சில நண்பர்கள் அவருக்குத் தெரியாமல் அவரின் வீட்டிலிருந்து புத்தகத்தைத் தூக்கிச் சென்றுவிடுவார்கள். ஆனால், அதை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். மறுமுறை அவர்கள் வரும்போது சில சமயம் கேட்பார். சில சமயம் கேட்க மாட்டார். ஆனால், சரியான ஒரு சமயத்தில் கேட்டுவிடுவார். அவர் கேட்கிற தொனியிலேயே நண்பர்கள் வெளிறி சுண்ணாம்பாய் உதிர்ந்துவிடுவார்கள்.

தொண்ணூறுகளின் முற்பகுதியில் அவருக்குப் பார்வை பறிபோனது. உண்மையில் இது தமிழ் சமூகத்துக்கே ஒரு பேரிழப்பு. அன்று முதல் அவரின் பயணம் கொஞ்சம் சுணங்கிப்போனதே தவிர, முடங்கிப் போகவில்லை. அதற்குப் பிறகுதான் அவர் முக்கியமான நூல்கள் எழுதினார்.  ‘தமிழ் நேயம்’ இதழைத் தொடங்கினார். பிரேம், ஜெயமோகன், எம்.ஜி.சுரேஷ், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் என அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருந்தார். பாலைநிலவன், இளஞ்சேரல், தென்பாண்டியன், இசை என அடுத்தடுத்த தலைமுறையை உருவாக்கினார்.

ஞானியின் புலன் உணர்வு நுட்பமானது. அவரின் காதுகள் அசாதாரணமானக் கவனம் கொண்டவை. அவர் என்னுடன் பேசும்போது, ‘உம்’ கொட்டிக்கொண்டே இருப்பேன். இடையிடையே அவர் சொன்னதைத் திரும்பச் சொல்வேன்.

‘ஓ... சரிங்கய்யா!’ என்பேன். இதெல்லாம் அவர் சொல்வதை நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை அவருக்கு ஸ்தூலமாக உணர்த்தும் எனக் கருதி அவ்வாறு செய்வேன். ஆனால், இது எதுவுமே சொல்லாது இருந்தால்கூட, அவர் பேசுவதை நான் கவனிக்கிறேனா இல்லையா எனக் கண்டுகொள்ள முடியும் அவரால். அது எப்படி என்று இன்று வரை எனக்குப் புரிந்ததே இல்லை. உரையாடும்போது ஒரு சின்னச் சத்தம் இடையீடாகக் கேட்டாலும் உடனே நிறுத்திக்கொள்வார்.  அதில், ‘அது என்ன?’ என்கிற பாவம் இருக்கும். ‘அறிவன் வந்திருக்கிறாருங்க அய்யா...’ நான் சொல்வேன். ‘ம்ம்ம்...’ என்பார். சில சமயங்களில் வெளியில் நிழலாடுவதுகூட அவருக்கு எப்படியோ புலப்படும். ‘அது என்னன்னு பாருங்க...’ என்பார். அவருக்கு பார்வை இல்லை என்ற குறையை எப்போதும் நாங்கள்தான் உணர்ந்துகொண்டே இருந்தோம். அவர் மிக இயல்பாகவே எப்போதும் இருந்திருக்கிறார்.

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்

சில சமயங்களில் ஏதேனும் சமகால இலக்கிய சர்ச்சை ஒன்றைச் சொல்லி அவர் கருத்தைக் கேட்பேன். அதுகுறித்து அவர் உரையாடும் தொனியில், அவரால் இந்தச் சமகால உலகுடன் ஓடி வர இயலவில்லையே என்கிற ஏக்கம் இருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். உண்மையில்  பார்வை இல்லாமைக்காக அவர் வருந்துகிற விஷயம் அது ஒன்றுதான். காரணம், ஞானி இளைஞர்களுடன் உரையாடும் உடல்மொழியை, பெருகும் ஆர்வத்தை நான் பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை ஜெயமோகன், அவர் தேவையில்லாமல் சந்தேகப்படுகிறார் என்றும், கண் தெரியாதவர்களின் பொதுவான இயல்பு இது என்றும் மில்டனை முன்னிட்டு ஏதோ சொல்லிவிட்டார் போல... அன்று முழுவதும் கடும் கோபத்திலும் வருத்தத்திலும் இருந்தார். வேறொரு சமயம் அவருடன் மில்டன் பற்றி பேசும்போது, ஜெயமோகன் சொன்னதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஓர் ஆழமான அமைதியையே பதிலாகத் தந்தார் ஞானி.

ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்



மெய்யியலும் இலக்கியமும் அவரின் இரு கண்கள் என்றால், தமிழ் அவரது உயிர். தமிழ்ச் சமூகம் குறித்து ஓயாது சிந்தித்துக் கொண்டே இருப்பவர். அவரின் நண்பர்கள் பேராசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூகப் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பத்திரிகையாளர்கள், கடைநிலை ஊழியர்கள் எனப் பலதரப்பட்டவர்கள்.  எஸ்.வி.ஆர். போன்ற தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள்,  பிலிப்சுதாகர் போன்ற கிறித்துவ இறையியலாளர்கள், ஜெயமோகன் போன்ற வலதுசாரி அனுசரணையாளர்கள் என எல்லோருடனும் உரையாடிக் கொண்டிருப்பவர். இதனாலேயே கடுமையாக விமர்சிக்கவும்படுபவர். அவரை எப்படிப் புரிந்துகொள்வது என்ற குழப்பமும் மயக்கமும் பலருக்கும் உண்டு. ஞானி போன்றவர்களை நான் கறாரான தத்துவவாதிகளாகக் கருதவில்லை. அவர்கள் தத்துவத்தின் குழைவுநிலையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்குத் தங்களை இந்தத் தரப்பு என நிறுவிக்கொள்ளும் ஆவலைவிட, எந்தத் தரப்பு சரி என்ற தத்தளிப்பே அதிகம் இருக்கும். உண்மையில் இது கலைஞனுக்கான பண்பு.

உலக அளவில் எல்லா மொழிகளிலும் இப்படியான சிந்தனையாளர்கள் உண்டு. உடனடியாகத் தோன்றும் பெயர் நீட்ஷே. ஒருவகையில் இவர்கள் அசலான சிந்தனையாளர்கள். வென்றெடுக்கப்பட்ட தத்துவங்களைவிடவும் அதன் தோற்கடிக்கப்பட்ட பக்கங்களைப் பற்றியே அதிகம் சிந்திப்பவர்கள். அதனால், புதிய, அசலான சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் கூடியவர்கள். தத்துவங்களின் போதாமையை அவற்றுக்கிடையேயான இடைவெளியைத் தம் சந்தேகங்களால் விசாரிப்பவர்கள், அவற்றை முழுமையடையச் செய்பவர்கள். அதைப் புதுப்பிப்பவர்கள். அந்த வகையில் ஞானி நம் தமிழின் பெருங்கொடை. அவரின் எழுத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொல்லி கா.சிவத்தம்பி அடிக்கடி வலியுறுத்திக்கொண்டே இருந்தார். அவரின் நண்பர்கள் சிலர் அதற்கான முயற்சிகளிலும் இருந்தார்கள். ஆனால், இதுவரை எல்லாம் யானை பிழைத்த வேலாகவே உள்ளன.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கணம் அவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார். முதுமை ஒருபுறம், அவரின் உயிருக்கு உயிரான மனைவியை இழந்த தனிமை மறுபுறம். ஆனால், இதற்கு எல்லாம் கவலைப்படுவதற்கு ஞானிக்கு நேரம் இல்லை. உற்சாகமாக என்னிடம், கொற்றவை மொழிபெயர்த்த ரங்கநாயகம்மாவின் நூலைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். இதுதான் ஞானி. அதனால்தான் அவர் என் ஆசான்.

படங்கள்: http://kovaignani.org/