Published:Updated:

வெள்ளி நிலம் - 6

வெள்ளி நிலம் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 6

ஜெயமோகன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

முன்கதை:

இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட, புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் யார் என்ற மர்மத்தைக் கண்டுபிடிக்க கேப்டன் பாண்டியன், நோர்பா என்ற சிறுவனுடன் செல்கிறான். அப்போது, டாக்டர் நரேந்திர பிஸ்வாஸுக்கு ஆபத்து என்பதைத் தெரிந்துகொள்கிறான். இனி...

வெள்ளி நிலம் - 6

பாண்டியன், காரை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்று ராணுவ முகாமின் முன் நிறுத்தினான். அந்த ஓசை கேட்டு உள்ளிருந்து ஒரு ராணுவ வீரர் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். நாக்போ பாய்ந்து மேலே சென்றது. நோர்பா கீழே இறங்கி, “சுற்றும் பார்த்துக்கொண்டிரு நாக்போ” என்றான்.

நாக்போ முகர்ந்துவிட்டு, “அன்று நான் பார்த்த மீதி மூன்று பேரும் இங்கே நடந்துசென்றிருக்கிறார்கள்” என்றது. மோப்பம் பிடித்துக்கொண்டு காலை மெதுவாகத் தூக்கிவைத்து நடந்தது. வாலைத் தாழ்த்தி வைத்திருந்தது.

பாண்டியன் உள்ளே சென்று தன் அடையாள அட்டையைக் காட்டினான். அந்த ராணுவ வீரன் சல்யூட் அடித்தான். உள்ளிருந்து ஜமேதார் ஒருவர் வந்து, ‘‘யார்?” என்றார். அடையாள அட்டையைக் காட்டியதும் சல்யூட் அடித்தார்.

“என் செல்பேசி வேலை செய்யவில்லை. அவசரம்” என்று பாண்டியன் சொன்னான்.

“எங்கள் செல்பேசிகளும் வேலை செய்யவில்லை. பனிப்புயலால் செல்பேசிக் கோபுரம் பழுதடைந்துவிட்டது” என்றார்.

‘‘உடனே எனக்கு உங்கள் செயற்கைக்கோள் தொலைபேசி தேவை” என்றான் பாண்டியன்.

“இது ராணுவ முகாம் அல்ல. பயணிகளுக்கு இலவசமாக டீ அளிக்கும் இடம். இங்கே செய்தித் தொடர்பு ஏதுமில்லை. உடனடியாக மேலிடத்துக்கு அபாய அறிவிப்பு செய்ய ஒரே ஒரு கம்பித்தொடர்பு உண்டு. 1948 முதல் அது மட்டும்தான் உள்ளது. அதைப் பயன்படுத்த வாய்ப்பே வந்ததில்லை. அதில், தந்தி மட்டும்தான் அனுப்ப முடியும்” என்றார் ஜமேதார்.

வெள்ளி நிலம் - 6

‘‘அதுபோதும்… கொடுங்கள்” என்ற பாண்டியன் உள்ளே செல்லும்போது, “நாங்கள் செல்லும் வழி, பனிவிழுந்து மூடிவிட்டது” என்றான்.

“உடனே அள்ளச் சொல்கிறேன் சார். பனி அள்ளும் வண்டியும் ஓட்டுநர்களும் இங்கேதான் இருக்கிறார்கள்” என்றார் ஜமேதார்.

பாண்டியன் உள்ளே போனான். அங்கே மூலையில் மேஜை மேல் தந்தி இயந்திரம் இருந்தது. அது ‘மோர்ஸ்’ கண்டுபிடித்த பழைய தந்தி இயந்திரம். அதை ஜமேதார் இயக்கினார்.

“இது லே-யில் உள்ள முகாமுடன் தொடர்புள்ளது. ஆனால், மறு எல்லையில் யாராவது இருந்து இந்தத் தந்தியை வாங்குவார்களா என்று சொல்ல முடியாது. இது, இப்போது புழக்கத்திலேயே இல்லை” என்று ஜமேதார் சொன்னார்.

பாண்டியனுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் கற்றுக்கொண்ட தந்தி மொழி கொஞ்சம் ஞாபகம் வந்தது. தந்தி அடிக்க ஆரம்பித்தான். ‘கட் கடா கட் கட் கடா’ என அது ஒலித்தது.

‘அவசரம்! அவசரம்! மிகமிக அவசரம்!’ என்று செய்தி சென்றது. பாண்டியன் பதற்றமாக நகங்களைக் கடித்தான். ‘லே முகாமில் தந்திக்கருவி வேலை செய்கிறதா... இல்லை தூக்கிப் போட்டுவிட்டார்களா? வேறு என்ன செய்யலாம்?’

“எங்கே போனால் செல்பேசி கிடைக்கும்?” என்றபடி பாண்டியன் எழப் போனபோது, மறுபக்கம் பதில் வந்தது. ‘எஸ் சார்.’

‘நான் கேப்டன் பாண்டியன். 1962bjm82mk81’ என்று தன் குறியீட்டு எண்ணை அளித்தான். ‘முக்கியமான செய்தி. உடனடி ஆணை’ என்று ‘கட் கடா’ மொழியில் தட்டினான்.

‘சொல்லுங்கள் சார்’ என்றது தந்தி.

‘இது, கர்னல் மகேந்திரனுக்கு. உடனடியாக டாக்டர் நரேந்திர பிஸ்வாஸுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரைக் கொல்லச் சென்றுகொண்டிருக்கிறார்கள்’ என்று பாண்டியன் செய்தி அனுப்பிவிட்டு, ஆறுதலுடன் எழுந்தான்.

வெள்ளி நிலம் - 6



ஜமேதார் “டீ சாப்பிடுங்கள் சார். மோமோ சூடாக இருக்கிறது” என்றார்.

“டீ வேண்டாம். வளைந்து செல்லும் பாதையில் குமட்டல் வரும்” என்றான் பாண்டியன்.

“கஷ்மீரி கவா இருக்கிறது. தரட்டுமா?” என்றார் ராணுவ வீரர்.

“சரி, வெளியே என் நண்பர்களுக்கும் கொடுங்கள்” என்றான் பாண்டியன்.

நம்மூர் கொழுக்கட்டைபோல அரிசிமாவைப்  பரப்பி, உள்ளே காய்கறியை வைத்து உருட்டி, ஆவியில் வேகவைப்பது ‘மோமோ’ என்னும் தின்பண்டம். பால் இல்லாத டீயுடன் ஏலக்காய், சுக்கு, குங்குமப்பூ ஆகியவற்றைப் போட்டுச் செய்வது ‘கவா’. அதில், வாதுமைக்கொட்டை மற்றும் அக்ரூட்டுக் கொட்டை போன்றவற்றையும் அரைத்துச் சேர்ப்பார்கள்.

பாண்டியன், மோமோவும் கவாவும் சாப்பிட்டான். நோர்பாவும் உள்ளே வந்து கவாவும் டீயும் வாங்கிச் சாப்பிட்டான்.

“பனி அள்ளுகிறார்கள் சார். ஒருநாளைக்கு மூன்று முறையாவது அள்ளவேண்டியிருக்கிறது” என்றார் ஜமேதார்.

பனியை அள்ளிவிட்டார்கள் என்ற செய்தியை ராணுவ வீரர் வந்து சொன்னதும், பாண்டியன் விடைபெற்று காரில் ஏறிக்கொண்டு, “எங்கே நாக்போ?” என்றான்.

நோர்பா, “நாக்போ! நாக்போ!” என்று  கூப்பிட்டான்.

வாலை ஆட்டியபடி நாக்போ ஓடிவந்து  வாயை நீட்டி உறுமியது. நோர்பா, அதன் வாயில் இருந்து ஒரு சிறிய தாளை எடுத்தான்.

அதை வாங்கி பாண்டியன் புரட்டிப் பார்த்தான். அதில் ஒன்றும் இல்லை. ஒரு செய்தித்தாளில் இருந்து கிழிக்கப்பட்டிருந்தது.

“அவர்கள் போட்ட தாள்தான். நாக்போ மணத்தை வைத்து எடுத்துவிட்டது” என்றான் நோர்பா.

“எதையாவது துடைத்துவிட்டு போட்டிருக்கலாம். சரி இருக்கட்டும். தூர வீசிவிட வேண்டாம்” என்றான் பாண்டியன்.

அவர்கள் சென்றபோது, பனியை அள்ளிக் கீழே தள்ளி இருந்தார்கள். வழியில் இரண்டு லாரிகள் நின்றிருந்தன. மேலிருந்து பனி உருகிக்கொண்டே இருந்தது.

“இந்த வழியில் காரில் செல்வது தற்கொலை செய்வதற்குச் சமம்” என்றான் பாண்டியன்.

லே செல்லும் சாலை முழுக்க இரு பக்கங்களிலும் பனி உறைந்து, பெரிய கோட்டைச் சுவர் போல நின்றது. நடுவே கார் சென்றபோது, காருக்கு மேல் பனிச் சுவர் இருந்தது.

அவர்கள் இருட்டிய பிறகுதான் லே நகருக்குச் சென்றார்கள். நகரமே ஓய்ந்து கிடந்தது. இருட்டும் பனியும் மூடியிருந்தன. எங்கும் வெளிச்சம் இல்லை.

“சரிதான், மின்சாரமும் இல்லை. குளிர்ந்து சாக வேண்டியதுதான்” என்றான் பாண்டியன்.

நல்லவேளையாக, நகரத்துக்குள் செல்பேசி இணைப்பு கிடைத்தது. பாண்டியன் கர்னல் மகேந்திரனிடம் பேசினான். கர்னல் டாக்டருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்.

“அவர் திக்ஸே மடாலயத்தின் விருந்தினர் அறையில் தங்கியிருந்தார். அங்கிருந்து அவரை அருகே உள்ள ராணுவ முகாமுக்குக் கூட்டிவந்துவிட்டோம். அபாயம் பற்றி ஏதும் சொல்லவில்லை” என்று மகேந்திரன் கூறினார்.

“நல்லது! ஆறுதலாக இருக்கிறது. அவரைக் காப்பாற்றிவிட்டோம்” என்றான் பாண்டியன்.

“அவர்கள் ஏன் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸைக் கொல்ல விரும்பினார்கள்?” என்று நோர்பா கேட்டான்.

நடுவே, நாக்போ குறட்டைவிட்ட ஒலி கேட்டது. தூங்கி விழுந்தபின், எழுந்து வாலை ஆட்டியபடி, வாயைச் சப்புக்கொட்டிக்கொண்டு மீண்டும் தூங்கியது.

“நாம் எதற்காக அவரைத் தேடிச்செல்கிறோம்? அதுதான் காரணம். அவர், சீன எழுத்துகள் அறிந்தவர். அவருக்கு ஏதோ ரகசியம் தெரிந்திருக்கும். அந்த ரகசியத்தை அவர்கள் அழிக்க விரும்புகிறார்கள்” என்றான் பாண்டியன்.

அவர்கள் லே நகருக்குச் சற்று வெளியே இருந்த ‘திக்ஸே’ என்னும் பௌத்த மடாலயத்தை நோக்கிச் சென்றார்கள். பாண்டியன் முன்பே அங்கே வந்ததுண்டு. திபெத்திய பௌத்தத்தின் ‘கெலுக்’ என்னும் பிரிவைச் சேர்ந்த அந்த மடாலயம், ஒரு குன்றின் மேல் அமைந்திருந்தது. குன்று முழுக்க ஏராளமான கட்டடங்களைக் கட்டி, மடாலயத்தை அமைத்திருந்தனர். ஆகவே, அது கட்டடங்களை அள்ளிக் குவித்து மலை அமைத்தது போலிருக்கும்.

அவர்கள் நெருங்கியபோது, திக்ஸே மடாலயத்தின் மெழுகுவத்தி விளக்குகள் மட்டும் குன்றுபோலத் தெரிந்தன. திக்ஸே மடாலயத்துக்குக் கீழேயே ஒரு ராணுவ முகாம் இருந்தது. அவர்கள் அங்கே சென்றபோது, வாசலிலேயே அதன் காவலர் தலைவரான சுபேதார் அவர்களுக்காகக் காத்திருந்தார்.

பாண்டியனுக்கு சல்யூட் அடித்துவிட்டு, “வாருங்கள் சார். டாக்டர் என் அறையில் இருக்கிறார்” என்று சொன்னார்.

“அவருக்கு ஏதாவது ஆபத்து நடந்ததா?” என்று பாண்டியன் கேட்டான்.

“இல்லை சார். கர்னலிடம் இருந்து செய்தி வந்ததும் கூட்டிவந்துவிட்டோம்” என்றார் சுபேதார்.

அவர்கள், சுபேதாரின் அறைக்குள் சென்றனர். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், அரிக்கேன் விளக்கொளியில் செல்பேசியில் எதையோ படித்துக்கொண்டிருந்தார்.

“வாருங்கள் பாண்டியன். உங்களைப் பற்றி கர்னல் மகேந்திரன் சொன்னார். உங்களைப் பற்றித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“நான் சாதாரண ராணுவ வீரன்” என்றான் பாண்டியன்.

“நீங்கள், முன்பு இமயமலையில் நடத்திய சாகசங்கள் ஒரு நாவலாகவே வந்திருக்கின்றன இல்லையா? ஜெயமோகன் எழுதிய ‘பனிமனிதன்’ என்ற நாவல். அது தமிழில் இருக்கிறது. இணையத்தில் இப்போதுதான் வாசித்தேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“அதில் நிறைய கற்பனைகள் உள்ளன” என்ற பாண்டியன், நோர்பாவை அறிமுகம் செய்தான். சுபேதார் வெளியே சென்றார்.

“நீங்கள் ஏன் வந்திருக்கிறீர்கள் என்று மகேந்திரன் சொன்னார். எல்லாச் செய்திகளையும் மின்னஞ்சலில் அளித்தார்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று பாண்டியன் கேட்டான்.

“நீங்கள் ஊகித்தது சரிதான். அந்த மம்மியின் கையில் இருந்த எழுத்துகள் மிகத்தொன்மையான சீன சித்திர எழுத்துகள். சீனாவின் மிகத்தொன்மையான நாகரிகம்       லியங்ஷு [Liangzhu]. அந்த நாகரிகத்தைச் சேர்ந்த எழுத்துகள் இவை.”
பாண்டியன் வியப்புடன், “அந்த எழுத்துகள் இங்கே எப்படி வந்தன?” என்றான்.

“அதைத்தான் நானும் நினைத்து ஆச்சர்யப்படுகிறேன். 2006-ல்தான் சீனாவில் ஜெஞ்சியாங் [Zhejiang] என்ற இடத்தில் உள்ள ஷுவாங்கியோ [Zhuangqiao] என்னும் ஊரில் ஒரு புதிய அகழ்வாராய்ச்சியைச் செய்தார்கள். 10,000 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் அது. 5,000 ஆண்டுகள் பழைமையான எழுத்து வடிவம் கிடைத்தது. அதைப் பற்றி இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்குள் இதோ என் கண்முன் ஒரு மம்மியில் அதே எழுத்துகள்’’ என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“டாக்டர், இந்தச் செய்திகளை நீங்கள் எங்கேயாவது விவாதிப்பதுண்டா?” என்றான் பாண்டியன்.

‘‘ஆமாம்! வரலாற்றுச் செய்திகளை நாங்கள் ஓர் இணையக் குழுமத்தில் விவாதிப்போம். அதில் உள்ள அத்தனை பேரும் அறிஞர்கள்தான்!”

“அங்கிருந்துதான் உங்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்” என்றான் பாண்டியன்.

“யார்?’’ என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“ஒன்றுமில்லை, இவற்றை வாசிக்க முடிகிறதா?” என்றான் பாண்டியன்.

“சீன எழுத்துகளைச் சும்மா பார்த்தாலே பொருள் தெரியும். அவை ஓவியங்கள்தானே? ஆனால், அவற்றைச் சரியாக வாசிப்பது மிகவும் கடினம். அந்தப் புதைந்த பழைய நாகரிகத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சொன்னார்.

“இவற்றை நாம் புரிந்துகொண்டாக வேண்டும் டாக்டர். மிக அவசியம். ஏன் என்று மகேந்திரன் சொல்லியிருப்பார்” என்றான் பாண்டியன்.

வெள்ளி நிலம் - 6

“ஆமாம். சீனாவுக்கு இதில் என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. இந்த மம்மிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“அதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும். இன்று நான் ஓய்வெடுக்கிறேன். நாளை நாம் முழுமையாகப் பேசுவோம்” என்று பாண்டியன் எழுந்துகொண்டான்.

“ஆமாம். இரவுக்குள் நான் இந்த நாகரிகம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் முழுமையாக வாசித்துவிடுகிறேன். நிறைய செய்திகளைத் திரட்டி வைத்திருக்கிறேன். நாளை என் அறைக்குச் சென்றதும் காட்டுகிறேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

சுபேதார் வேகமாக உள்ளே ஓடிவந்து சல்யூட் அடித்தார். அவர் முகம் பதற்றமாக இருந்தது.

“சொல்லுங்கள்” என்றான் பாண்டியன்.

‘‘சார், சற்றுமுன் மூன்று பேர் திக்ஸே மடாலயத்துக்குள் நுழைந்து, டாக்டர் அறையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று எதையோ தேடியிருக்கிறார்கள். காவலர்கள் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, ஒருவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருக்கிறான். பிறகு அறைக்குத் தீ வைத்திருக்கிறார்கள். அறை மரத்தாலும் கம்பளியாலும் ஆனது. முழுமையாகவே எரிந்துவிட்டது. அணைக்க முடியவில்லை.  அவர்கள் ஓடிவிட்டார்கள்” என்றார்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “அய்யோ... என் ஆராய்ச்சிகள்... என் ஆராய்ச்சிப் பொருட்கள் எல்லாமே அங்கேதான் இருந்தன” என்று கூவினார்.

பாண்டியன் வெளியே ஓடிச்சென்று மேலே பார்த்தான். குன்றுக்கு மேலே அந்த விருந்தினர் மாளிகை சிவப்பாக எரிந்துகொண்டிருந்தது. அதைச் சூழ்ந்து அங்குள்ளவர்கள் கூச்சலிட்டபடி அணைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். நிழல்களும் தீக்கதிர்களும் சேர்ந்து ஆடின.

“என் புத்தகங்கள், குறிப்புகள் எல்லாம் அங்குதான் இருந்தன. நான் என்ன செய்வேன்” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் அழுதார்.

பாண்டியன் அந்தத் தீயையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் தேடிவந்த ஆதாரம் எது என்று தெரியவில்லை. ஆனால், அது தீயில் எரிந்துவிட்டதென்று தோன்றியது.

நாக்போ கொட்டாவி விட்டு, “நாம் எப்போது தூங்குவோம்?” என்று கேட்டது. நோர்பா அதன் தலைமேல் தட்டி, “பேசாமலிரு” என்றான்.

(தொடரும்...)

‘மோர்ஸ்’ தந்தி முறை

வெள்ளி நிலம் - 6

சாமுவேல் மோர்ஸ் [Samuel Finley Breese Morse] 1791-ம் ஆண்டு பிறந்த அமெரிக்க ஓவியர். இவர், மின்சாரத்தைப் பயன்படுத்திச் செய்திகளை அனுப்பும் வழிமுறையை 1836-ம் ஆண்டு கண்டுபிடித்தார். ஒரே ஒரு மின்சாரக் கம்பி வழியாக செய்திகளை அனுப்பும் மிக எளிய முறை இது.

மின்சாரமும் காந்தமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. ஓர் இரும்புச் சுருளில் மின்சாரம் வரும்போது, அது காந்தமாக மாறும். அருகே இருக்கும் இரும்பை இழுக்கும். அந்த இரும்பு மின்சுருளில் மோதும் ஒலி ‘கட்’ என்று கேட்கும். மின்சாரத்தைத் துண்டித்தால் அது விலகும். அது ‘கடா’ என்று ஒலிக்கும். ஒரு முனையில் இருந்து மின்சாரத்தை ஒரு கருவியின் உதவியால் வெட்டி வெட்டி அனுப்பினால், அது மறுமுனையில் ‘கட் கடா’ என்ற ஓசையை எழுப்பும். இதுதான், மோர்ஸின் தந்தி இயந்திரம்.

‘கட் கடா’ என்ற ஒலிகளை மட்டுமேகொண்டு ஆங்கிலத்தில் உள்ள எல்லா எழுத்துகளையும் சொல்லிவிட முடியும். அதில் எல்லா செய்திகளையும் அனுப்ப முடியும். மோர்ஸ் கண்டுபிடித்ததே தந்தி எனப்படுகிறது. எளிய முறை என்பதனால், இது தொலைபேசி வந்தபிறகும் புழக்கத்தில் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பும் நம் தபால்நிலையங்களில் தந்தி இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. தபால் தந்தித் துறை என்றுதான் அந்தத் துறை அழைக்கப்பட்டது.