மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 17

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 17

ணங்கேறி ஆடிய பெண்கள் உக்கிரம்கொண்டனர். போர்க்களத்தில், விரிந்த கூந்தலும் பிளந்த வாயுமாக நிணத்தைத் தின்று குதித்தாடும் பேயாடல் தொடங்கியது. துடியின் ஓசை காதைக் கிழித்தது. கூட்டத்தின் குலவை ஒலி பயங்கர அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

முன்புறம் கொற்றவையின் திசைநோக்கி துடியடித்துக் குலப்பாடலைப் பாடிக்கொண்டிருந்த பெண், ஆவேசம் மேலிட துடியை வீசியெறிந்து பின்புறம் திரும்பினாள். நெருப்புக்கோலமாக இருந்தன அவளது கண்கள். அணங்குகளின் பேய் ஆட்டத்தால் நிலம் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்புறம் திரும்பியவள் களத்தின் நடுவில் வரையப்பட்டிருந்த கோலத்தைக் கால்களால் குறுக்கும் நெடுக்குமாக அழித்து அலங்கோலமாக்கினாள். “செம்பாதேவி…வேணாந்தாயீ…” என ஆண்களும் பெண்களும் பெருங்குரலெடுத்து வேண்டினர். கதறலும் கண்ணீரும் கரைபுரண்டன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 17

கோலத்தின் நடுவில் நாணல் கூடையில் வைக்கப்பட்டிருந்த வெண்சாந்து உருண்டையை நோக்கிப் போனாள் அவள். அவளது கண்களில் இருந்த ஆவேசத்தையும் கைகளின் வேகத்தையும் கண்டு கூட்டம் நடுங்கியது.

`அங்கு என்ன நடக்கப்போகிறதோ?!' என்ற பதற்றத்தில் கூச்சல் உச்சத்துக்குப்போனது. குலவை ஒலி பீறிட எல்லோரும் களத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அணங்குகளின் ஆட்டத்தைத் தாண்டி யாரும் உள்ளே நுழைய முடியவில்லை.
வெண்சாந்து உருண்டையில் வைக்கப்பட்டிருந்த இரு கொம்புகளையும் ஆவேசத்தோடு பிடுங்கி எடுத்தாள் அவள். கூட்டம் கதறியது. பிறர் அவளை நெருங்க முடியாத வளையத்தை அணங்குகள் உருவாக்கினர். “வேண்டாந்தாயீ…” என உயிர் நடுங்கக் கத்தினர். கத்தும் குரல்களுக்கு நடுவில், அவளோ பிடுங்கிய கொம்புகளை தனது இரு மார்புகளை நோக்கி உள்ளிறக்கத் துணிந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் இடதுபுறத்தில் இருந்து தாக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டாள்.

இரு கொம்புகளும் எங்கோ போய் உருண்டன. கூட்டத்தினர் வாய் பிளந்து நின்றனர். தாக்கிய குலநாகினி, அணங்குகளுக்கு நடுவில் மூச்சிரைக்க நின்றாள். அணங்குகளின் ஆத்திரம் தணிய ஆரம்பித்தது. ஆவேசம்கொண்ட குலநாகினி காலத்தையும் கதையையும் தனது இரு கைகளைக்கொண்டு இறுக்கி நிறுத்தினாள். கூட்டம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 17

தள்ளப்பட்டு கீழே விழுந்தவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பற்களை நறநறவெனக் கடித்தபடி குலநாகினியை நோக்கிப் பாய்ந்து வந்தாள். மரமே நிலைகுலைந்து சரிந்துவிழுவதுபோல் இருந்தது அவளின் பாய்ச்சல். அவளின் வேகத்தை எதிர்கொண்டு தாங்கி அசையவிடாமல் பிடித்து நிறுத்தினாள் குலநாகினி. கூடியிருந்தவர்களின் குலவை ஒலி மீண்டும் உச்சத்துக்குப்போனது. அவளது இரு கைகளையும் பிடித்த குலநாகினி, அப்படியே அழுத்தி வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டிருந்த கூடைக்கு முன் அமரவைத்தாள். கூடையைப் பார்த்ததும் அவளின் கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கியது.

குலநாகினியை அண்ணாந்து பார்த்தபடி, அனைத்துப் பற்களும் தெரிவதைப்போல முழு வாயிலும் சிரிப்பைக் காட்டித் தலையாட்டினாள். அதே போன்ற சிரிப்புடன் தலையை வேகமாக ஆட்டி அமைதிப்படுத்தினாள் குலநாகினி. அணங்கு ஆடிய நான்கு பெண்களும் பல்வரிசை காட்டிச் சிரித்தபடியே அவளைச் சுற்றி அமர்ந்தனர். குலநாகினி, அந்த வட்டத்தைவிட்டு வெளியேறி தனது இடத்துக்குப் போனாள்.

கபிலருக்கு உடல் முழுவதும் வியர்த்து வடிந்தது. கூட்டத்தின் நெரிசலில் பாரி எங்கு நிற்கிறான் எனத் தெரியவில்லை. நிலைமை அமைதியான பிறகுதான் பாரியின் அருகில் அவரால் வர முடிந்தது.

“கணிக்க முடியாத நிகழ்வுகளைக் கைக்கொள்ள யாரால் முடியும்? இது காலங்களுக்கு இடையில் நடக்கும் போர். நினைவுகளின் வழியே குருதி வழிகிறது. நம்மால் என்ன செய்ய முடியும்? வெட்டுக்காயம் இருப்பதோ, பல நூறு ஆண்டுகளுக்கு முன்” பாரியின் வார்த்தைகளை கபிலரால் பற்ற முடியவில்லை. காட்சிகள் ஏற்படுத்திய கொதிப்பால் அவர் மனம் திணறிக்கிடந்தது.

மூச்சுவிட முடியாத திணறலோடுதான் பாரியின் குரலும் இருந்தது. கபிலர், பாரியை உற்றுப்பார்த்தார். புருவம் உயர்த்தி பெருமூச்சு விட்டபடி பாரி சொன்னான், “கதை இன்னும் முடியவில்லை.”

கபிலரின் கருவிழிகள் அசைவற்று நின்றன.

மூன்று வாரங்களுக்குப் பிறகு பெரும்படையோடு உறையூர் தலைவன் செம்மலை அடிவாரம் போனான். அப்போது அவர்களை எதிர்த்துப் போரிட அங்கு யாரும் இல்லை. அந்தப் பெரும் பொக்கிஷ மலை, தங்களின் ஆளுகைக்கு வரக் காரணமான மகன் கிள்ளியைக் கொண்டாடித் தீர்த்தான் தந்தை.

சில மாதங்களுக்குப் பிறகு, கிள்ளியின் குதிரை உறையூரின் பெரும்வீதியைக் கடந்தபோது தொலைவில் வெண்ணெய் விற்கும் பெண் ஒருத்தி போவது தெரிந்தது. சற்றே அருகில் போய்ப் பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை, தலையில் கூடையைச் சுமந்து போய்க்கொண்டிருந்தவள் செம்பா. வாய் பிளந்து நின்றான். `அன்று நள்ளிரவு நடந்த தாக்குதலில் இந்த அழகு தேவதை அழிந்துபோனாள் என்று அல்லவா எண்ணியிருந்தேன். எனக்காகவே மீண்டு வந்தவள்போல், அதே தெருவில் வந்து நிற்கிறாளே!' என்று திகைத்துப்போனான் கிள்ளி.

வீரயுக நாயகன் வேள்பாரி - 17

சற்றே திரும்பி அவனைப் பார்த்த செம்பா, சின்னதாகச் சிரித்துவிட்டு நடந்தாள். அன்று பார்த்ததைவிட மெருகேறிய அழகு. அருகில் இருந்தவனை அழைத்து குதிரையை அவன் கையில் கொடுத்த கிள்ளி, “போய் தந்தையை அழைத்து வா. அன்று பார்க்காத அழகை இன்றாவது பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்” என்று சொல்லி அனுப்பிவிட்டு, அவள் பின்னால் நடந்தான்.

இறங்கு வெயிலில் ஊரைவிட்டு மிகத் தள்ளி, முன்னர் கிடைபோட்டிருந்த நிலத்தை நோக்கி அவள் நடந்தாள். அடர்ந்த செடி கொடிகள் துளிர்த்துக்கிடக்கும் பாதையில் அவள் நடந்துபோகும் அழகை ரசித்தபடி பின்னால் நடந்தான் கிள்ளி. அவள் வேண்டுமென்றே எதையும் செய்வதுபோல் தெரியவில்லை. கைகளை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நீட்டி பூக்களைப் பறிப்பதும் பூச்சிகளைத் தட்டிவிடுவதுமாக அவள் நடந்துகொண்டிருந்தாள். பின்னால் வரும் ஒருவனுக்கு, அவை அனைத்தும் சமிக்ஞைகளாக இருந்தன.

காற்றில் பறந்தபடி காமம்கொண்ட இணைத் தும்பிகள் அவளின் முகத்துக்கு நேராகப் பறந்தபோது, தலைவணங்கி அந்த இடம் கடந்தாள். பின்னால் வந்தவனால் அந்தக் காட்சியைக் கடக்க முடியவில்லை.

பெருங்கூடையைக் கவிழ்த்துப்போட்டதைப் போன்ற அந்தச் சிறுகுடில் தனித்து இருந்தது. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே குடிலுக்குள் நுழைந்த செம்பா, படலை மூடாமல் திறந்தேவைத்தாள். அவள் நடக்கத் தொடங்கிய பொழுதில் இருந்து அவனை அழைத்தபடிதான் இருக்கிறாள். வீட்டுக்குள் நுழையும்போது தனியாக அழைக்க வேண்டுமா என்ன? அவன் குடிலுக்குள் தலை நுழைத்தான். அதற்குள் வைக்கோல் பாய் ஒன்றை விரித்திருந்தாள். அதன் நடுவில் கால் மடக்கி அவள் அமர்ந்தபோது, தும்பி உடல் மடக்கிப் பறந்தது அவனின் நினைவுக்கு வந்தது. முன்செல்லும் தும்பியை நினைத்தபடி பின்னந்தலை சரிய, பாயில் படுத்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 17



செம்பாவின் முதுகின் மேல் கை வைக்கப்போகும்போதுதான், அவனுக்கு உள்ளிருந்த ஆபத்து பிடிபடத் தொடங்கியது. குடிலின் நான்கு திசைகளிலும் செம்பாவைப் போலவே நான்கு பெண்கள் குத்தவைத்த நிலையில் உட்கார்ந்து இருந்தனர். பார்த்த கணத்தில் சட்டென எழ முயற்சி செய்யும்போது ஆளுக்கு ஒருவராக அவனது கைகளையும் கால்களையும் பிடித்தனர். அவன் கடுங்கோபத்தோடு கூச்சலிட்டு, தன்னை விடுவிக்க முயன்றான். அவர்கள் பெரும் அழுத்தம் கொடுக்காமல் மிக இயல்பாக அவனை அழுத்திப் பிடித்திருந்தனர். நாள் ஒன்றுக்கு நூறு மாடுகளின் நானூறு காம்புகளில் பால் கறக்கும் விரல்கள். பெரும் கிடைக்குள் விதவிதமான கொம்புகளோடு உரசிக்கிடக்கும் எண்ணற்ற மாடுகளை விலக்கி, நகர்த்தி, தள்ளி வெளிவரும் கைகள். அதுவும் ஒருவர் இருவர் அல்ல, நான்கு பேர். அவனால் என்ன செய்ய முடியும்?

செம்பா, குடிலின் மேல் செருகிவைக்கப்பட்டிருந்த இரண்டு கொம்புகளை உருவி எடுத்தாள். அதுவரை கத்திக்கொண்டிருந்தவன், கண்களின் முன் மரணத்தின் வடிவத்தைப் பார்த்து உறைந்துபோனான். குருதிக்கறையேறி இருந்த கொம்புகள். கோவனின் தொண்டைக்குழிக்குள் இறங்கியவை.

“விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்...'' என்று மீண்டும் மீண்டும் உயிர்போகக் கத்தினான். காவிரி ஆற்றங்கரையில் செழித்துக்கிடக்கும் மரப்புதர்களைத் தாண்டி, தனித்து இருக்கும் குடிலுக்குள் போடும் கத்தல் யாருக்குக் கேட்கும்? செம்பா, கால் மடக்கி அவன் அருகில் உட்கார்ந்தாள். நெஞ்சுக்குழிக்குள் கொம்பை இறக்கப்போகிறாள் என அவன் நடுங்கியபோது, அவனது மார்பில் கோவனுக்குப் பிடித்த ஒற்றைச்சுழிக் கோலத்தைப் போட்டாள் செம்பா.

கொம்பின் நுனி அவன் நெஞ்சின் மேல்தோலைக் கீறியபடி நகர, நெஞ்சு நிறைய மெள்ள ஊறும் குருதியின் வழியே ஒற்றைச்சுழிக் கோலம் உருவானது. அவள் என்ன செய்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. நெஞ்சுப் பகுதியை முடித்த பிறகு இடுப்புக்குக் கீழ் இரு கால்களிலும் வளைந்த இரு கோடுகளைக் கொம்பின் கூர்முனைகொண்டு இழுத்தாள். கதறலை நிறுத்திய அவன், அவளது விநோதமான செயலால் உறைந்துபோனான்.

நான்கு பெண்களும் அவனை அப்படியே புரட்டிப்போட்டனர். முதுகிலும் ஒற்றைச்சுழிக் கோலத்தைப் போட்டு, இடுப்புக்குக் கீழ் பாதம் வரை இருகோடுகளை இழுத்தாள் செம்பா.

கொம்புகளால் குத்திக் கொல்லாமல் மேலெழுந்தபடி கீறிவிடுகிறாள். `இதுபோதும் எப்படியாவது உயிர் பிழைத்துவிடலாம்!' என்ற நம்பிக்கை அவனது கண்களில் உயிர்கொண்டபோது, அவனைத் தூக்கி நிறுத்தினர். சட்டென கையை உதறி தன்னை விடுவிக்க முயற்சித்தபோது, இடதுபுறம் நின்றவள் ஒரு முறுக்கு முறுக்கினாள். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் மூக்கில், பச்சிலை சாறு விடவேண்டும். அப்போது அதன் கொம்புகளை முறுக்கி மூக்கை மேல்நோக்கித் திருப்பியபடி சாறு இறங்கும் வரை பிடித்திருக்க வேண்டும். மாடு, தனது முழு பலத்தால் கொம்பைத் திருகும். ஆனால், அதைப் பிடித்திருப்பவர் அசையவிடக் கூடாது. மாட்டின் கொம்பைத் திருகி நிறுத்தும் பணிதான், கிடையில் அவளுக்குப் பல நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவனது கையை சற்றே திருகியபோது உள்ளுக்குள் எத்தனை எலும்புகள் நொறுங்கின எனத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு நேரமும் அவன் கத்திய மொத்தக் கதறலும் இப்போது ஒரே நேரத்தில் வெளிவந்தது. போதும் என நினைத்துத் திரும்பிய செம்பா, அப்போதுதான் அவனது தோள்களைப் பார்த்தாள். வலதுகை தோள்பட்டையில் ஒரு சுழியைக் கீறி, விரல்கள் வரை இறக்கினாள். அதே போல இடது கையிலும் இழுத்தாள்.

கொம்பை மீண்டும் மேற்கூரையில் செருகிய செம்பா, குடிலின் ஓரத்தில் மூடிவைக்கப்பட்டிருந்த நாணல்கூடையை எடுத்தாள். அதில் மணமணத்துக்கிடந்தது வெண்சாந்து உருண்டை. அதை இரு கைகளாலும் அள்ளி அவனது கால்கணுவில் இருந்து கழுத்து வரை பூசினாள். வெண்ணெயின் குளுமை அவனது உடலெங்கும் பரவியது. கூடை நிறைய இருந்த வெண்சாந்து உருண்டை அவன் உடல் முழுவதும் மணமணத்தது. நால்வரும் பிடியைவிட்டு விலகினர். உயிர்பிழைத்தால் போதும் என, குடிலைவிட்டு வெளியே ஓடினான் கிள்ளி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெண்சாந்து உருண்டையின் மணம் காற்றில் பரவி, பறவைகளின் மூக்குக்குள் இறங்கியது. ஓடிய கிள்ளியின் இடதுபுறத் தோளிலே வந்து அமர்ந்தது ஒரு காகம். ஒரு கையால் அதைத் தட்டிவிட்டு திரும்பும்போது மூன்று காகங்கள் வலதுபுறத் தோளில் அமர வந்தன. இன்னொரு கையைத் தூக்க முடியாததால், வலதுகையாலே அவற்றைத் தட்டி விரட்ட முயன்றபோது தோளின் கிழிபாடுகளுக்குள் இறங்கி எழுந்தது காக்கையின் அலகு. “அய்யோ” எனக் கத்த வாயெடுத்தவனின் செயலை, மறுகணமே வாயடைக்கவைத்தது எதிர் திசையில் படபடத்து வந்துகொண்டிருந்த பறவைகளின் பெருங்கூட்டம். காய்ந்த நாணல்கூடையையே நார்நாராகக் கிழிக்கும் அளவுக்கு பறவைகளை வெறிகொள்ளச் செய்தது வெண்சாந்து உருண்டை.

மாலை நேரத்தில் பறவைகள் வலசை போகின்றன என ஊரார்கள் நினைத்தபோது, அவை அனைத்தும் அலை அலையாக வந்து இவன் மீது இறங்கிக்கொண்டிருந்தன. துள்ளத் துடிக்கக் கதறியபடி அவன் ஓட ஓட,  பறவைகளின் கூட்டம் மகிழ்ந்து அவனைச் சூழ்ந்தது. பறவைகளின் அலகுகள் கொத்தியெடுக்கும் இடம் எல்லாம் வெண்சாந்து உருண்டை உருகி உள்ளேபோனது. அடுத்த பறவையின் அலகு, ஆழத்துக்குள் போய் அதை எடுத்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 17

செம்பா வெண்சாந்து உருண்டையை மேலெல்லாம் பூசும்போது, அவனது முகத்தில் சிறு துளிகூடப் படாமல் பூசினாள். ஏன் என்பது, உடன் இருந்த நான்கு பெண்களுக்குக்கூட விளங்கவில்லை. குடிலின் வாசலில் நின்று பார்க்கும்போதுதான் அவர்களுக்கு விளங்கியது. பறவைகள் அவனது உடலை துகள்துகளாகக் கிள்ளி எடுப்பதை, கண்களில் கடைசித்துளி உயிர் இருக்கும் வரை அவன் பார்க்க வேண்டும்.

அழிவு அணு அணுவாக நிகழ்ந்துகொண்டிருந்த அந்த இடத்துக்கு மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன மரங்கொத்திகள். அவற்றால் உள்நுழைய முடியவில்லை. காக்கைகளின் இடைவிடாத கரைச்சலும் பிற பறவைகளின் கத்தலுமாகப் பேரிரைச்சல் நிலவிய அந்த இடத்தில், மரங்கொத்திப் பறவை ஒன்று, அவனது இடதுபுற மார்பை நோக்கி ஓர் அம்பு நுழைவதைப்போல பாய்ந்து, அதே வேகத்தில் வெளியே இழுத்தது தனது கூரிய அலகை.

பிலர் மறுநாள் காலையில் எழுந்தபோது உடல் முழுவதும் நடுக்கம்கொண்டிருந்தது. மூலிகைச் சாற்றைக் கொடுத்தார்கள். வாங்கிக் குடித்தார். பகல் முழுவதும் நடுக்கம் நீடித்தது. கண்ணுக்குள் செம்பாதேவி நிலைகொண்டிருந்தாள். ஆடுகளத்தில் உருண்டு விழுந்த இரு கொம்புகளை எடுத்துவந்து அவள் முன் வணங்கி நின்றான் முடியன். அதில் ஒன்றை அவனது இடுப்பு உறையில் செருகினாள். மற்றொன்றை அவளின் காலடியைத் தொட்டு வணங்கிக்கிடந்த வீரன் ஒருவனின் இடுப்பில் செருகினாள்.

குலப்பாடலைத் துடியடித்துப் பாடிய அந்தப் பெண்ணின் முகத்தை அப்போதுதான் கூர்ந்து பார்த்தார் கபிலர். அவருக்கு அறிமுகமான முகம் அது. ‘எங்கே பார்த்திருக்கிறோம்?’ என யோசித்தபோது புலிவால் குகை அவரின் நினைவுக்கு வந்தது. பன்றிக்கறியை அவளின் கையில் கொடுத்த கணம் நிழலாட, கைகூப்பி கபிலர் சொன்னார், “மகள் அல்லள், என் தாய் நீ”.

மாலை நெருங்கியபோது, கபிலரின் இருப்பிடத்துக்கு வந்தான் பாரி. உடல் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. அதைக் காட்டிக்கொள்ளக் கூடாது என அவர் செய்த முயற்சி, பலன் அளிக்கவில்லை.

``உங்களின் நடுக்கத்துக்குக் காரணம் உடல் அல்ல, மனம். அது கலங்கிப்போய் இருக்கிறது” என்றான் பாரி.

அதை ஏற்பதைப்போல தலையாட்டிய கபிலர் சற்று மெளனத்துக்குப் பிறகு, “சிந்தப்பட்ட குருதி, கதைகளின் வழியே தலைமுறைகளுக்குக் கைமாறி வந்துகொண்டே இருக்கிறது. கதைகள்தான் மனித நினைவுகளில் இருந்து, குருதிவாடை அகலாமல் இருக்கக் காரணமா?” என்றார்.

`ஆம்' எனத் தலையசைத்தபடி பாரி சொன்னான், “கடித்து இழுக்க விலங்குகளுக்குப் பல் இருப்பதைப்போல் மனிதனுக்குக் கதை.”

நடுங்கி எழுந்தார் கபிலர். மனம் அல்ல, சொல்லால் நிகழ்கிறது நடுக்கம்.

“கிள்ளியின் முன்புறம் பாய்ந்த மரங்கொத்தி, பின்புறமாக வெளியேறிச் சென்றதைப் பேசும் கதைதான் நம்பிக்கையின் வேராக இருக்கிறது. அது இல்லையென்றால், `மேலெல்லாம் வைரக்கல் பதித்த பெரும்வடம் அணிந்தபடி கிள்ளி ஆட்சிசெய்து, எல்லோரையும் வாழவைத்தான்' என்றே கதைகள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.

கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி கொடி என இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை, கதையன்றி வேறு யார் கொடுப்பது?” - பாரி சொல்வதை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர்.

பாரி தொடர்ந்தான், “ஈட்டியை விசைகொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமைகொண்டிருப்பது சதையால் அன்று, கதையால்.”

‘இந்தப் பதிலில் இருக்கும் நியாயங்கள் ஏன் என்னை வந்து சேரவில்லை? அதைத் தடுத்துக்கொண்டிருந்த உண்மைகள் என்ன?’ என்று யோசித்தார் கபிலர். வேந்தர்களுடன் தான்கொண்ட நட்புக்கு மனம் நம்பிக்கையாக இருக்க நினைக்கிறது. தன்னைப் பேணிப் போற்றுவதில் வேந்தர்கள் காட்டிய அக்கறையை பொய் என எப்படிச் சொல்ல முடியும்? எண்ணங்கள், மனக்கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தின. அவர் பாரி சொன்னதை வழிமொழியவில்லை. முகம் உணர்வுகளை வெளிக்காட்டிவிடக் கூடாது என நினைத்து சற்றே இறுக்கத்துடன் தலைசாய்த்தார்.

கவனித்த பாரி, சின்னதாகப் புன்முறுவல் பூத்தபடி இருக்கையைவிட்டு எழுந்தான். “நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நாளை காலை நான் வந்து பார்க்கிறேன்” என்றான்.

“ஏன், நான் இன்று வர வேண்டாமா?”

“உங்களது உடல்நிலை அப்படியிருப்பதால் `ஓய்வெடுங்கள்' என்று சொல்கிறேன். இன்று மூன்றாம் நாள். பிற நாளைப்போல இருக்காது. சற்றே அச்சமூட்டுவதாக இருக்கும்.”

அச்சம் என்பதற்கு அவன் கொண்டுள்ள விளக்கத்துக்குள் நேற்றைய நாள் இடம் பெறவில்லைபோலும். கடந்த இரு நாள்களில் நடந்தவற்றை நினைவுகூர்ந்தவாறே கபிலர் கேட்டார், `‘தெய்வவாக்கு விலங்கு பழம் எடுத்தப் பிறகுதானே குலப்பாணன் உள்ளிறங்குவான். முன்கூட்டியே எப்படிச் சொல்கிறீர்கள்?”

“மூன்றாம் நாளில் தெய்வவாக்கு விலங்குக்கு வேலை இல்லை. காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபு இது.”

“மரபுகளுக்குக் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?”

“நீங்கள் வருவதில் உறுதியாக இருக்கிறீர்களா?”

``ஆம்” என்றார் கபிலர்.

“சரி வாருங்கள், பேசிக்கொண்டே போவோம்” என்றான் பாரி.

இருவரும் கொற்றவை மரம் நோக்கி புறப்பட்டபோது இருள் முழுமை கொண்டுவிட்டது. கபிலர் சொன்னார், “மரபுக்கான காரணத்தைச் சொல்லாமல் அமைதி காப்பது எதனால்?”

“தனித்தக் காரணம் ஒன்றும் இல்லை. நான் வேறு சிந்தனையில் இருந்ததால் மறந்துவிட்டேன்” என்று சொன்ன பாரி மேலும் கூறினான். “உடலெல்லாம் அச்சம்கொண்ட தெய்வவாக்கு விலங்கால் பழங்களைத்தான் எடுக்க முடியும், பாம்புகளை எப்படி எடுக்க முடியும்?”

“புரியவில்லை” என்றார் கபிலர்.

“இன்று சொல்லப்படப்போவது நாகக்குடியின் கதை”.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...