மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 18

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 18

கொற்றவைக்கூத்தின்  மூன்றாம் நாள். கூட்டத்தின் அளவு பாதிதான் இருந்தது. தரையில் எவரும் உட்காரவில்லை. மூன்று அடிகளுக்குமேல் இருக்கும் திட்டுகளிலும் மரக்கட்டை களிலும்தான் உட்கார்ந்திருந்தனர். இந்த மலையெங்கும் இருக்கும் பாம்புகள், இன்றைய கூத்தைக் கேட்கின்றன என்பது நம்பிக்கை.

ஆடுகளத்தின் முன் ஒரு பனை நீளத்துக்கும் இரு கை அகலத்துக்கும் மரக்கட்டைகளை அடுக்கி, அதில் நெருப்பைப் பற்றவைத்துக்கொண்டிருந்தனர். பற்றிய நெருப்பு, நான்கு முனைகளில் இருந்தும் மெள்ளப் பரவிக்கொண்டிருந்தது.

வழக்கமாகக் கபிலரின் முகக்குறிப்பு அறிந்தே விளக்கம் சொல்லும் பாரி, இமை மூடாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுக்கிவைக்கப்பட்ட எல்லா கட்டைகளிலும் நெருப்பு பற்றியது.

 தழல், மேலேறத் தொடங்கியது. சற்று நேரம் கழித்து கபிலர் கேட்டார், “இங்கு என்ன நடக்கிறது?”

“பாம்புக்கு நீர் கொடுக்கும் நாகரவண்டுகள் இன்னும் வந்து சேரவில்லை.”

கபிலர் சுற்றும்முற்றும் பார்த்தார். சூழல் வழக்கம்போல் இல்லை. நாகர்குடி பாணன் ‘பகுளி’ என்ற பறையை இசைக்கத் தொடங்கினான். அதன் ஓசை சன்னமாக வெளிவந்தது. கபிலர், இசைப்பவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு பாரியிடம் கேட்டார், “நாகரவண்டுகள் வந்துவிட்டனவா?”

“அவை வந்த பிறகுதான் ஆட்டம் தொடங்கியது.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 18``எங்கே, யார் ஆடுவது?” எனக் கேட்டார் கபிலர்.

“உற்றுப்பாருங்கள், நெருப்பின் பின்புறம் என்ன நடக்கிறது என்று.”

கபிலர் சற்றே கூர்ந்து கவனித்தார். நெருப்பின் பின்புறம் வளைந்தும் நெளிந்தும் இரண்டு உருவங்கள் ஆடிக்கொண்டிருந்தன. எரியும் தழலுக்குப் பின்புறம் இருளின் அசைவுகள்போல் அவை இருந்தன.

``கை புணர்ந்தாடும் துணங்கை ஆட்டம்” என்றான் பாரி.

``அவர்களை நாம் பார்க்கக் கூடாது என்பதற்காக நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறதா?” என்று கேட்டார் கபிலர்.

``இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, அவர்கள் நெருப்புக்குள் இறங்கி ஆடுவார்கள்” என்றான்.

நெருப்பு எரிந்து முடிந்த பிறகு, கங்குகளின் மீது ஆடத்தான் இந்த ஏற்பாடு எனப் புரிந்துகொண்டார் கபிலர்.

பின்புறம் ஆடுபவர்களின் உடல்மொழி மாறியது. பாம்புத்துள்ளல் தொடங்கியது. நாகக்குடியின் கதையை, பாணன் தொடங்கினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 18

ருக்குமலையைச் சேர்ந்த நாகர்கள்தான் இந்த மலைத்தொடரில் மிகவும் பழைமையான குடிகள். ‘நாகம், இவர்களின் சொல் கேட்கும்; இவர்களின் வாசனை அறிந்து விலகிச் செல்லும். இவர்களால் நாகத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என இவர்களைப் பற்றி பலவிதமான பேச்சுகள் இந்த மலை முழுவதும் உண்டு.

தேறிமலையின் அடிவாரத்தில் `சேரலர்' என்ற ஒரு குலம் உண்டு. எருக்குமலையும் தேறிமலையும் ஒரே மலைத்தொடரின் இரு வேறு பகுதிகள். எருக்குமலை, தேறிமலையைவிட மிக உயர்ந்து பரந்தது. அந்த மலையின் மீதுதான் நாகர்கள் இருந்தனர். தேறிமலையின் அடிவாரத்தில் சேரலர் இருந்தனர்.

சேரலர் குடி, மலை அடிவாரத்தின் சமதளத்தில் இருந்ததால் வேளாண்மை, வணிகம் என தங்களின் செயல்களை விரைவாகப் பெருக்கியது. வளமும் கூடியது. பெருஞ்சேரல்தான் அந்தக் குலத்தின் தலைவனாக இருந்தான். நீண்டகாலம் அவனது தலைமையில் சேரலர் குலம் தழைத்தது. அவனுக்கு வயது கூடியது. தோலில் சுருக்கம்படியத் தொடங்கியது.

ஒருநாள் அவனது ஊர் மன்றலில் குடிக்கூத்து நடந்துகொண்டிருந்தது. பெருஞ்சேரலும் அவன் குலமக்கள் அனைவரும் அதைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது கூத்தாடிய இளம்பெண் ஒருத்தி, கூத்தின் வேகத்துக்கு ஏற்ப கண்களைச் சுழற்றிச் சுழற்றி ஆடினாள். அவளது கண்கள் தன்னைத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன எனப் பெருஞ்சேரல் நினைத்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவளது கண்கள் சுழன்று வந்து மொய்த்தது தன்னை அல்ல; தனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் வீரனை என்று. அன்று இரவு முழுவதும் சேரலுக்குத் தூக்கம் கொள்ளவில்லை. அழகியின் கண்கள் தன்னைத் தாண்டிப்போன கணத்தை அவனால் தாங்க முடியவில்லை.

`சேரல்குலத்தின் வளம்பெருக்கி, திறன்கூட்டிய மாவீரன்' எனப் புகழப்பட்ட தன்னை, வயோதிகம் வந்து பற்ற நினைப்பதை அவனால் ஏற்க முடியவில்லை. தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் காண, கண்கள் மறுத்தன. ``சுருக்கம் களைய வழி உண்டா?” எனக் கேட்டு, திசையெங்கும் ஆட்களை அனுப்பினான்.

வடதிசை போனவன் வந்து சொன்னான், “நான் பார்த்த பெருமுனி ஒருவன், இதற்கு வழி உண்டு எனச்

வீரயுக நாயகன் வேள்பாரி - 18

சொன்னான். ஆனால், என்னவென்று சொல்ல மறுத்துவிட்டான்” என்றான்.

வெகுவிரைவில் அந்த முனி தேறிமலைக்கு வரவழைக்கப்பட்டார். “தேகத்தின் சுருக்கம், மரத்தின் சருகைப்போல உதிரக்கூடியதுதான்” என்றார் அவர்.

“அதற்கான வழியைக் காட்டுங்கள்” என்று பெருஞ்சேரல் வேண்டி நின்றான்.

சிறு குண்டம் அமைத்து, அதில் பலவிதமான மரக்குச்சிகளைப் போட்டுத் தீமூட்டி, அந்தப் புகை நடுவே நின்று அந்த முனி சொன்னார், “நாகங்கள் சட்டையைக் கழற்ற ஒரு மூலிகையை உண்ணும். அந்த மூலிகையை நீ உண்டால், உனது தேகத்தின் சுருங்கிய மேல்தோல் கழன்று யெளவனம் அடைவாய்” என்று.

“அந்த மூலிகையை எவ்வாறு கண்டறிவது?” எனக் கேட்க, “இந்தப் புவிமேல் அந்த ரகசியத்தை அறிந்தவர்கள் நாகக்குடியினர் மட்டுமே.

நீ அவர்களிடம் கேட்டு அந்த மூலிகையைப் பெற்றுப் பயனடைவாய்” என்றார் முனி.

பெருஞ்சேரலின் மனம் குளிர்ந்தது. முனியின் மனம் குளிரச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து அனுப்பினான்.

எருக்குமலைக்குச் சென்று நாகர் குடியின் தலைவனைக் காணுமாறு, தனது அவையினருக்குப் பெருஞ்சேரல் உத்தரவிட்டான். அந்த உத்தரவை ஏற்று மலையேற, யாரும் முன்வரவில்லை. காரணம், நாகர்களைப் பற்றிய கதைகள் அப்படி. நாகர்குடியின் வயதான முதுமகள் உடுத்தியிருக்கும் ஆடையில் இருந்துதான் விரியன்பாம்புக் குட்டிகள் உதிர்ந்து வெளியேறுகின்றன என அவர்கள் நம்பினர். நாகத்தைப் பற்றி எப்போது பேசினாலும் அதைக் கேட்கும் சக்தி அதற்கு உண்டு என நம்பினர். நாகத்தைப் பற்றிய எந்த ஒரு சொல்லும் நாகத்தின் செவியில்தான் போய்த் தங்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.

``தங்களின் குலத்தலைவனுக்காகப் போக எவருக்கும் துணிவு இல்லையா?” எனக் கேட்டபோது, பெரியவர் பொறையன் முன்வந்தார். திறன்கொண்ட பன்னிரு வீரர்களின் துணையோடு, தான் போய் வருவதாகக் கூறினார். பெருஞ்சேரல் மகிழ்வுற்றான்.

சற்றே தயக்கத்துடன் பொறையன் கேட்டார். “ஒருவேளை அந்த மூலிகையை அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டால் என்ன செய்வது?”

“வடதிசை முனி சொன்ன இரண்டாவது வழியில் வேண்டிப் பெறுங்கள்” என்றான் பெருஞ்சேரல்.

சரியென பொறையன் சம்மதித்தார். பன்னிரு வீரர்களுடன், பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கும் பிடார வைத்தியன் இருவருமாக பதினான்கு பேரை உடன் அனுப்ப முடிவானது. வயதில் மூத்த பிடார வைத்தியனுக்கு, இரு காதுகளும் அறுபட்டிருந்தன. இன்னொருவன் வயதில் இளையவனாக இருந்தான். இருவரும் இருவேறு திசைகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். பொறையனோடு சேர்த்து பதினைந்து பேரிடமும் குடிமுனை வாக்குப் பெற்றான் பெருஞ்சேரல். எந்தச் சூழலிலும் அவர்கள் இந்தக் கட்டளையை நிறைவேற்றாமல் இனி நாடு திரும்ப முடியாது.

பதினைந்து பேரும் எருக்குமலையில் ஏறத் தொடங்கினர். நாகர்குடி அல்லாத வேற்றுக்குடியினரின் காலடி, எருக்குமலையில் இதுவரை பட்டதில்லை. முதன்முதலாக அது நிகழ்ந்தது. எருக்குமலையின் அடிவாரம், காட்டுப்புற்களாலும் குறுமரங் களாலும் நிரம்பியதாக இருக்கும். புற்களை விலக்கி அவர்கள் மலையேறத் தொடங்கினர். புது மனிதர்களின் வாடையை நாகங்கள் நன்கு அறியும். அவர்கள் முன்னால் இருக்கும் புற்களை விலக்கி, கால்களை மிகக் கவனமாக முன்நகர்த்திச் சென்று கொண்டிருந்தனர். மலையின் முதல் குன்றைக் கடந்தபோது நிழல்விரியன் ஒன்று நடந்துகொண்டிருந்த ஒருவனின் நிழலுக்குள் நுழைந்தது.

எந்த மனிதனின் நிழலுக்குள் அது நுழைகிறதோ, அவன் நிழலிலேயே அது ஊர்ந்து வந்துகொண்டிருக்கும். நடந்துசெல்பவன் எவ்வளவு வேகமாக நடந்தாலும், மெதுவாக நடந்தாலும் அதுவும் அதே வேகத்தில் நிழலுக்குள் நெளிந்தபடியே வரும். அதன் உடலில் படிந்த நிழலைவிட்டு அது பிரியாது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 18

இளைய பிடாரனின் நாசி, பாம்பின் வாசனையை நுகர்ந்தது. “யாரும் நின்றுவிடாதீர்கள். ஏதோ ஒரு பாம்பு நம் அருகில் வந்துகொண்டிருக்கிறது” என்றான். எல்லோருக்குள்ளும் அதிர்ச்சி பரவியது; வியர்க்கத் தொடங்கியது. என்ன வாசனை என்பது அவனுக்குப் பிடிபடவில்லை. மூத்த பிடாரனைப் பார்த்துக் கேட்டான், “உங்களின் மூக்கை வாசனை எட்டவில்லையா?”

மூத்த பிடாரன், ‘இவனது செயல் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதே’ என்று நினைத்தபடியே பதில் ஏதும் சொல்லாமல் நடந்துகொண்டிருந்தான். நடந்துசெல்லும் வீரர்கள் அனைவரும் கையில் ஆயுதங்களுடன் இருந்தனர். மனிதன், பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது. வெளியே அவன் எந்த வகை ஆயுதங்களை வைத்திருந்தும் என்னவாகப் போகிறது? உள்ளுக்குள் ஏற்படும் நடுக்கத்தை எவரால் நிறுத்த முடியும்?

நடுக்கமின்றி நடந்துகொண்டிருந்தவன் மூத்த பிடாரன் மட்டும்தான். அவனது நாசி, நீண்ட நேரத்துக்கு முன்பே நாவிப்பூ மணத்தைக் கண்டறிந்துவிட்டது. கருவிரியனுக்கும் நிழல் விரியனுக்கும்தான் இந்த வாடை வரும். கருவிரியனாக இருந்தால் வாடை நுகர்வதற்குள் கடி விழுந்திருக்கும். இது நிழல்விரியன்தான். அதனால்தான் நடக்கவிட்டு வந்துகொண்டே இருக்கிறது. யாருடைய நிழலில் வருகிறது என்பதுதான் அவனுக்குத் தெரியவில்லை.

`மனிதரின் நிழலுக்குள் அது நுழைந்துவிட்டால், அந்த நிழலைவிட்டு விலகாமல் வந்துகொண்டே இருக்கும். நிழலுக்கு உரியவன் அதனிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, நிற்காமல் நடந்துகொண்டே இருப்பதுதான். மாலையில் கதிரவனின் ஒளி மறைந்து மனித நிழல் அதுவாகச் சிதைந்தால் மட்டுமே அது திக்குத்தெரியாமல் திசை மாறும். இல்லையென்றால், அது வந்துகொண்டேதான் இருக்கும். நடப்பவன் எந்த இடத்தில் நின்று இளைப்பாறுகிறானோ, அந்த இடத்தில் அவனது குதிக்காலைக் கடித்துச் சுற்றும். இதை நாம் சொன்னால், மொத்தக் கூட்டமும் பயந்து சிதறிவிடும். என்ன செய்வது?' என, மூத்த பிடாரன் சிந்தித்தபடியே நடந்துகொண்டிருந்தான். இளைய பிடாரனோ பொறையனிடம் போய்ச் சொன்னான், “பாம்பின் வாடை வருகிறது. இந்த வாடையைக்கூட இந்தக் காது அறுந்தவனால் உணர முடியவில்லை. இவன் பாம்புப் பிடாரன்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.”

அவனது சொல்லைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் பொறையன். மூத்த பிடாரனைத் திரும்பிப் பார்த்தார். பொறையன் நடையை நிறுத்தியதும் எல்லோரும் நின்றனர். மூத்த பிடாரன் மட்டும் நிற்காமல் நடந்தான். தன்னை இவன் அவமதிக்கிறான் எனப் பொறையன் நினைத்த கணத்தில், இடதுபக்கம் வந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் கத்திக்கொண்டு கீழே விழுந்தான்.

அன்று இரவு, தனித்த மரம் ஒன்றில் பரண் அமைத்துத் தங்கினர். வீரர்கள், சுழற்சி முறையில் காவல் காத்தனர். உணவு மூடைகளைக்கூட கீழே வைக்காமல் மரத்திலேயே கட்டித் தொங்கவிட்டனர். நடந்ததை மூத்த பிடாரன் விளக்கியபோது, இளைய பிடாரன் வணங்கி மன்னிப்புக் கோரினான்.

மறுநாள் விடிந்தது. ``பாம்பு பெரும்பாலும் காலையிலும் மாலையிலும்தான் இரை மேயும். எனவே, வெயில் நன்கு மேலேறிய பிறகு நடக்கலாம்'' என்றான் மூத்த பிடாரன். அதன்படியே அவர்கள் பொறுத்திருந்து நடந்தனர்.

வீரர்கள் எல்லோருக்குள்ளும் அச்சம் அப்பிக்கிடந்தது. மூத்த பிடாரன் முன் சென்றுகொண்டிருந்தான். வீரர்களுக்கு நடுவில் பொறையனும் இறுதியில் இளைய பிடாரனும் நடந்தனர். பாம்புகளின் விதவிதமான தடங்கள் நெடுகக்கிடந்தன. தொலைவில் இருந்த புதரின் மேல் பெரும்கிளையைப்போல கழுத்தை நீட்டி பறப்பவற்றை மேய்ந்துகொண்டிருந்தது ஏதோ ஒன்று. பின்னால் நடந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் அதைப் பார்த்துக் கை காட்டினான். இளைய பிடாரன் அதை உற்றுப்பார்த்தான்.

அது கட்டையா அல்லது பாம்பா என்பதை அவனால் உணர முடியவில்லை. ஒரு கல் எடுத்து அதை நோக்கி வீசினான். அது மெள்ளத் திரும்பியது.

முன்னால் போய்க்கொண்டிருந்த மூத்த பிடாரனிடம் சத்தம்போட்டுச் சொன்னான், “உனது காதுகளை அறுத்தால் ஒழிய உனக்குப் புத்தி வராது.’’

அப்போதுதான் புரிந்தது. அவன் ஏற்கெனவே அதைப் பார்த்துவிட்டான் என்று. பதில் சொல்லியபடியே நடக்கும் வேகத்தை இரு மடங்கு கூட்டினான் மூத்த பிடாரன். ஏதோ ஓர் ஆபத்து வரப்போகிறது என்பதை எல்லோரும் புரிந்து, வேகம்கொண்டனர்.

இளைய பிடாரன், வீரர்களைக் கடந்து சற்று உள்ளே போய்விட முயன்றபோது, அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வீரர்கள், ``காலிலே குச்சியாலேயே குத்திவிட்டது'' என்று சொல்லி கீழே உட்கார்ந்தனர். அவ்வாறு உட்கார்ந்த நான்கு பேரும் அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.

“ஒரு கட்டைவிரியன் இருந்தால், அதைச் சுற்றி எண்ணற்றக் குறுவிரியன்கள் இருக்கும் என்பதுகூடவா உனக்குத் தெரியாது? தேன்கூட்டைக் கலைப்பதுபோல புதரில் கிடந்தவற்றைக் கல் வீசிக் கலைத்துவிட்டாயே!” என்று சொல்லிக்கொண்டே இளைய பிடாரனது காதோரத்தின் சிறு பகுதியை அறுத்தான் மூத்த பிடாரன்.

இளைய பிடாரன் வலியால் கத்தினான். ஆனால், நான்கு வீரர்களின் மரணத்துக்கு, தான்

வீரயுக நாயகன் வேள்பாரி - 18

காரணமாகிவிட்டதால் தண்டனையை ஏற்றான்.

இதுபோன்ற காரணங்களுக்காகச் சிறுகச் சிறுக அறுத்து இரண்டு காதுகளையும் முழுமையாக இழந்து நிற்பவன்தான் மூத்த பிடாரன். காதுகள் அற்ற அவனது தோற்றத்துக்குப் பின்னால், எத்தனை வகையான பாம்புகளைப் பற்றிய அறிவு இருக்கும் என்பதை இளைய பிடாரன் அப்போதுதான் உணர்ந்தான்.

மூன்றில் ஒரு பங்கு வீரர்களை இரண்டாம் நாளிலேயே இழந்தனர். `நாகக்குடியினரின் வாழ்விடத்துக்கு என, ஆறு நாள்கள் ஆகும்’ என்று முன்னோர் சொல்லக் கேட்டுள்ளனர். அங்கு சென்று சேரும்போது எத்தனை பேர் உயிரோடு இருப்போம் என்ற அச்சம் எல்லோரையும் ஆட்கொண்டது.

மூன்றாம் நாள் காலைப்பொழுது கழிந்த பிறகு நடக்க ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் எந்தவிதப் பேச்சும் பேசவில்லை. சற்றே பெரும் மரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் காடு அது. வழக்கத்தைவிடக் கூடுதல் அச்சம் உள்ளுக்குள் ஆட்டிக்கொண்டிருந்தது. ஐந்து பேர் மரணித்துள்ளனர். வாயில் நுரைதள்ளி, உடல் நீலம்பூத்து, கால் விரல் சுருண்டு இழுத்து... என மரணத்தின் இறுதி வடிவங்கள் நினைவிலிருந்து அகல மறுத்தன.

முன்னால் நடந்துகொண்டிருந்த மூத்த பிடாரன், கீழே பதிந்துகிடக்கும் தடத்தைப் பார்த்ததும் நடையை நிறுத்தினான். எல்லோரும் இடம்விட்டு அசையாமல் அப்படியே நின்றனர். அவன் குனிந்து மண்ணில் இருக்கும் நெளிவுகளை உற்றுப்பார்த்தான். பின்னால் இருப்பவர்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. நின்றால் நிழல்விரியன் குதிக்காலைக் கவ்வும், பேசினால் குறுவிரியன் செவிக்கு எட்டும். என்ன செய்வது எனப் புரியவில்லை. ஆயுதங்களின் பிடி வழுக்கும் அளவு வீரர்களின் உள்ளங்கை வியர்த்தது.

மூத்த பிடாரன், அந்தத் தடத்தைப் பார்த்தபடி அது போன திசையில் இன்னும் சிறிது தொலைவு புற்களை விலக்கி உள்ளே போனான். அவன் எதுவும் சொல்லாததால் பதற்றத்தின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பின்னால் நின்று இருந்த இளைய பிடாரன், ``நான் அங்கு வரவா?” என்று கேட்க வாயெடுத்தபோது, கை மீறிக் காதைத் தடவிப் பார்த்துக்கொண்டது.

மூத்த பிடாரனின் முகம் இன்னும் தெளிவடையாமல் இருப்பதைப் பொறையன் கவனித்தார். சின்னதாக அச்சம் அவருக்குள் ஏற ஆரம்பித்தது. மூத்த பிடாரன் தடத்தைப் பார்த்தபடியே அங்கு இருந்த பாறை விரிசலை நோக்கி நகர்ந்துபோனான்.

`எந்தப் பாம்பின் தடத்தையும் தொலைவில் இருந்தே சொல்லக்கூடியவன் மூத்த பிடாரன். இந்தத் தடம் பற்றி மட்டும் ஏன் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறான்?' என்று பொறையன் குழம்பிக்கொண்டிருக்கையில், மூத்த பிடாரன் சொன்னான், “மலஞ்சாரைப் புரண்டிருக்கிறது”.

அவன் சொல்வது மற்றவர்களுக்குப் புரியவில்லை.

“பாம்புகள், வளைந்து வளைந்து போகக்கூடியவை. பாம்புகளின் இனத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப வளைவுகளின் அகலம் மாறுபடும். பாம்புகளுக்கு வயது ஆக ஆக வளையும் ஆற்றல் குறையும். அதனால் அவற்றின் வேகம் குறையும். இந்த நிலையிலேயே பெரும்பாலான பாம்புகள் இறந்துவிடும். ஒருசில பாம்புகள்தான் இவற்றைத் தாண்டியும் வாழும். முடிந்தவரை நெளிவுகொடுத்து நகர்ந்துபோகும். மிகவும் வயதானால், அதாவது, மனிதன் நூறு வயதை எட்டுவதைப்போல பாம்பும் பெரும் வயதை அடைந்தால், அதன் உடல் பாதி அளவுக்குச் சுருங்கிவிடும். அதனால் நெளிந்தபடி நகர முடியாது. உடலை முறுக்கிப் புரளத் தொடங்கும். அப்படியே இடதுபுறமும் வலதுபுறமுமாகப் புரண்டு புரண்டுதான் இடத்தைக் கடக்கும். மனிதன் வயோதிகத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து போவதைப்போலத்தான் அதுவும். இந்த இடத்தில் மலஞ்சாரை ஒன்று புரண்டுபோயிருக்கிறது” என்றான் மூத்த பிடாரன்.

அவன் சொல்வதை அனைவரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

மூத்த பிடாரன் தொடர்ந்தான், “இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்தக் குன்றில் வேறு எந்தப் பாம்பும் இருக்காது.”

எல்லோரையும் ஆச்சர்யம் தொற்றியது.

`` `பாம்பு புரளும் மண்ணில் பிற பாம்புகள் தங்காது’ என்பது முன்னோர் வாக்கு. எனவே, இன்று இந்தக் குன்றைக் கடக்கும் வரை உங்களுக்கு அச்சம் தேவையில்லை” என்றான் மூத்த பிடாரன்.

வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. “அப்பாடா!'' என்று பெருமூச்சு விட்டனர். அச்சமற்ற அடிகளை கால்கள் எடுத்துவைத்தன. நடையின் வேகம் கூடியது. பேச்சு தொடங்கியது. பாம்புகளைக் கையாள்வதில் உள்ள நுட்பங்களைப் பற்றி பேசினர்.

“பாம்புகள், மனிதனைக் கண்டு அஞ்சித்தானே ஓடுகின்றன. பின்னர் ஏன் மனித மனம் பாம்பைக் கண்டு பதறுகிறது?” என்று கேட்டான் வீரன் ஒருவன்.

அசட்டுச் சிரிப்புடன் மூத்த பிடாரன் சொன்னான், “மனிதன், பாம்பின் ஓட்டத்தைப் பொய்யாகப் புரிந்துகொண்டான் என்று பொருள்.”

“அது அஞ்சி ஓடவில்லை என்கிறீர்களா?”

“அதைக் கண்டு நாம் அஞ்ச, அதனிடம் நஞ்சு இருக்கிறது. நம்மைக் கண்டு அது அஞ்சி ஓட, என்ன இருக்கிறது நம்மிடம்?”

வீரனிடம் பதில் இல்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 18

``ஒவ்வொரு பாம்பும் தனது இனத்தின் எண்ணற்றப் பாம்புகளைத் தின்றுவிட்டுத்தான் உயிர்வாழ்கிறது. மனிதனைப்போல் ஓர் உடம்புக்குள் வாழும் ஓர் உயிர் அல்ல; எண்ணிலடங்காத உயிர்கள் வாழும் ஓர் உடல். அது தின்ற உயிருக்கு ஏற்ப அதன் கால்கள் அமைகின்றன.”

மூத்த பிடாரனின் பேச்சு, அச்சமூட்டுவதாக இருந்தது. பாம்பை விடுத்து வேறு எதையும் பேசும் சூழல் இல்லை. இன்னொரு வீரன் நாகர்களைப் பற்றி கேட்டான். ``நாகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானா அல்லது அவர்களுக்குத் தனித்த அடையாளம் ஏதும் உண்டா?”

“நம்மைப் போன்ற மனிதர்கள்தான். ஆனால், தனித்த அடையாளங்களும் உண்டு.”

“என்னென்ன?”

``நாகர்குடியின் ஆண்களை நீங்கள் கண்டறிய வேண்டும் என்றால், அவர்களின் கால்களை வைத்துத்தான் கண்டறிய முடியும். குதிக்காலில் நமக்கு மேலும் கீழுமாக வெடிப்புகள் இருக்கும். அவர்களுக்கோ, செதில் செதிலாகப் பக்குகள் இருக்கும். அதேபோல கைவிரல் நகக்கண்ணில் தோல் நமக்கு மேலும் கீழுமாக உரியும். அவர்களுக்கோ செதில் செதிலாகத்தான் உரியும். உற்றுப்பார்த்தால் நகம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாது” அவ்வளவு நேரம் உற்சாகமாக இருந்த பேச்சொலி, இப்போது சற்றே அமைதிகொள்ளத் தொடங்கியது.

இன்னொருவன் கேட்டான், “நாகர்குடிப் பெண்களை எப்படிக் கண்டறிவது?”

“காமம் கொள்கையில்” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டான் மூத்த பிடாரன்.

“எப்படி?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான் அவன். இந்தப் பதிலை அறிய, எல்லோரும் மிக ஆவலுடன் இருந்தனர். சிறு சத்தம்கூட எழுப்பாமல் கால்கள் நடந்துகொண்டிருந்தன.

மூத்த பிடாரன் சொன்னான், “காமம் கொள்கையில் விம்மும் கொங்கையின் நாவு படம்போல் விரிந்து அடங்கும். அதை உணரும்போது நாம் மரணித்துக்கொண்டிருப்போம்.”

அந்த இடம் அமைதியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து ஒருவன் கேட்டான், “காமத்தின்போது அவர்கள் இமை மூட மாட்டார்கள் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் வேறொன்றைச் சொல்கிறீர்களே?”

“எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள்தானே. ஆளுக்கு ஒன்றாகத்தான் இருக்கும்” என்றான் மூத்த பிடாரன். மூன்றாம் குன்றைவிட்டுக் கீழ் இறங்கினர். ``இந்த இடத்தில் இன்று தங்கிவிட்டு, நாளை மீண்டும் பயணத்தைத் தொடங்கலாம்'' என்றார் பொறையன்.

வீரர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். உணவு மூடைகளைத் தூக்கிவந்த ஒருவன், ஆளுக்கு ஒரு கனியை உண்ணக் கொடுத்தான். மூத்த பிடாரனும் பொறையனும் கனியைப் பெற்றுக்கொண்டு சற்றுத் தள்ளியிருக்கும் சிறுபாறையை நோக்கி நடந்தனர்.

பொறையன், பாறையின் மீது ஏறி உட்கார்ந்து கனியைக் கடித்தார். அவருக்கு எதிரில் நின்றபடி மூத்த பிடாரன் கனியைக் கடிக்கும்போதுதான் கவனித்தான். பொறையன் கனியைக் கடிக்கும்போது பற்களுக்கு இடையில் இருக்கும் செதில்களிலிருந்து குருதி வந்துகொண்டிருந்தது.

பொறையன் கனியைக் கடித்துத் தின்றபடியே சொன்னார், “மரணம் ஏதும் இன்றி இன்றைய பொழுது முடிந்தது.''

அவரது சொல்லை அவரே இன்னும் சிறிது நேரத்தில் பொய்யாக்கப்போகிறார் என்பது மூத்த பிடாரனுக்குப் புரிந்துவிட்டது. ‘நேற்று இரவு மூடைகளைக் கட்டித் தொங்கவிட்ட மரத்திலிருந்து அது கனிகளுக்குள் இறங்கியிருக்க வேண்டும்’ என ஊகித்தபடியே பதில் ஏதும் சொல்லாமல், பொறையனையே பார்த்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...