Published:Updated:

வெள்ளி நிலம் - 7

வெள்ளி நிலம் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 7

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமாச்சலப்பிரதேசத்தின் மலைக் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட, புத்த பிட்சுவின் பாடம் செய்யப்பட்ட உடலைத் திருட வந்தவர்கள் யார் என்ற மர்மத்தைக் கண்டுபிடிக்க நோர்பா என்ற சிறுவனுடன் செல்லும் கேப்டன் பாண்டியன், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸைச் சந்திக்கிறான். இனி...

வெள்ளி நிலம் - 7

றுநாள் பாண்டியனும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் திக்ஸே மடாலயத்துக்குச் சென்றார்கள். கீழிருந்து மேலே செல்ல குறுகலான பழங்காலப் படிகள் இருந்தன. அவற்றின் மேல் வெண்ணிறமான பனி படிந்திருந்தது. நடந்துசென்ற இடங்களில் மண்ணுடன் கலந்து அது உடைந்து உருகியிருந்தது.

உருகி, பின்னர் உறைந்த பனி ஆபத்தானது. அது கண்ணாடிபோல இருப்பதனால் பனி தெரியாது. கால் வைத்தால் வழுக்கிவிடும். ஆகவே, அவர்கள் கவனமாகச் சென்றார்கள்.

நாக்போ அவர்களுக்கு முன்னால் வாலை ஆட்டியபடி உற்சாகமாக ஓடியது. அதன் முடியில் பனி விழுந்து சிறிய பாசிமணிகள் போல தொங்கிக்கிடந்தது. அடிக்கடி உடலைச் சிலிர்த்து பனியை உதறியது. அதற்குக் குளிர் பிடித்திருந்தது. அதைவிட புதிய இடங்களுக்குச் செல்வது மகிழ்ச்சி அளித்தது. முன்னால் ஓடிச்சென்று அவர்கள் வருவதற்காக பொறுமையுடன் காத்து நின்றது. நோர்பா அதனுடன் பேசியபடியே பின்னால் சென்றான்.

டாக்டரின் அறை முழுமையாக எரிந்து சாம்பலாகி இருந்தது. மடாலயத்தின் ஒரு பகுதி தீயில் கருகி தெரிந்தது. தீயணைக்கும் படையினர் அங்கே இருந்தனர். அவர்களின் தலைவருக்கு பாண்டியன் ராணுவ அதிகாரி என்று சொல்லப்பட்டிருந்தது. அவர் பாண்டியனிடம் வந்து சல்யூட் அடித்து விறைப்பாக நின்றார்.

“என்ன நடந்தது?” என்று பாண்டியன் கேட்டான்.

“அவர்கள் வரும்போதே கையில் டீசலுடன் வந்திருக்கிறார்கள். டீசலை அறை முழுக்கத் தெளித்து தீ வைத்திருக்கிறார்கள். இது மரத்தாலான அறை. உள்ளே நிறையக் காகிதங்களும் துணிப் பொருட்களும்தான். எதுவுமே எஞ்சவில்லை” என்றார் தீயணைப்புப் படைத் தலைவர்.

வெள்ளி நிலம் - 7பாண்டியன் அறைக்குள் சென்று பார்த்தான். ஒரு பெரிய கரி அடுப்புக்குள் நுழைந்தது போலிருந்தது. காகிதங்களின் கரிச்சுருள்கள் காற்றில் பறந்தன. காலடியில் கரியாக மாறிய துணி மிதிபட்டது. கம்பளி எரிந்ததனால் மயிர் பொசுங்கிய நாற்றம் அடித்தது. பாண்டியன் தரையைக் கூர்ந்து நோக்கினான்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் உள்ளே வந்ததுமே அழத் தொடங்கினார். “எல்லாம் போயிற்று. இருபது ஆண்டுக் கால சேமிப்புகள் வீணாகிவிட்டன” என்றார்.

பாண்டியனுக்கு எப்படி ஆறுதல்படுத்துவது என்று தெரியவில்லை. அவர் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.

“இங்கே இருந்த டாங்காக்கள் ஒவ்வொன்றும் தேடித் தேடிச் சேகரித்தவை. சில டாங்காக்களுக்கு சர்வதேச கலைச்சந்தையில் இருபத்தைந்து லட்சம் ரூபாய் விலை உண்டு” என்ற நரேந்திர பிஸ்வாஸ், தனக்குத்தானே தலையை ஆட்டியபடி, ‘‘இங்கே 120 டாங்காக்கள் இருந்தன” என்றார்.

டாங்காக்கள் என்பவை திபெத்தில் செய்யப்படும் சித்திரத் திரைச்சீலைகள். கம்பளி, பருத்தி, பட்டு ஆகியவற்றைக் கலந்து இறுக்கமாகப் பின்னி கெட்டியான விரிப்பு போல செய்வார்கள். அவற்றில் வண்ணங்களால் ஓவியங்களை வரைவார்கள். அல்லது வண்ண நூல்களால் ஓவியங்களைப் பின்னுவார்கள். புத்தரின் தோற்றங்களும் பௌத்த மதத்தின் புனிதர்களான போதிசத்வர்களின் வடிவங்களும் அவற்றில் இருக்கும். இவை புத்த மடாலயங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும். டாங்காக்களில் உள்ள உருவங்களை அவர்கள் வழிபடுவார்கள்.

“120 டாங்காக்களா? பல கோடி ரூபாய் மதிப்பு இருக்குமே” என்றான் பாண்டியன்.

“ஆமாம். பணத்தைவிட முக்கியமானது இவற்றின் வரலாறு. உண்மையில் நான் இங்கே வந்ததே டாங்காக்களை சேகரிப்பதற்காகத்தான்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“ஏன்?”

வெள்ளி நிலம் - 7

“திபெத் மீது சீனா படையெடுத்தபோது அங்கிருந்த பௌத்த துறவிகள் முக்கியமான பொருட்களுடன் தப்பி இந்தியாவுக்கு வந்தனர். மலைப்பாதை வழியாக லடாக்கில் நுழைந்தனர். அந்த டாங்காக்கள் லடாக்கின் சிறிய ஊர்களின் பழைமையான மடாலயங்களில் ஒளித்துவைக்கப்பட்டன. அவற்றைக் கொண்டுவந்த துறவிகள் இறந்துவிட்டனர். இன்று இருப்பவர்களுக்கு அவற்றின் மதிப்பை உணரத் தெரியவில்லை” என்றார் டாக்டர்.

தொடர்ந்து, “ஆகவேதான் திக்ஸே மடாலயத்தின் தலைவர் என்னை அழைத்து சிறிய மடாலயங்கள் தோறும் சென்று டாங்காக்களை அடையாளம் கண்டு முக்கியமானவற்றைக் கொண்டுவந்து சேர்க்கச் சொன்னார். அதைத்தான் செய்துகொண்டிருந்தேன். அத்தனையும் போயிற்று” என்று தரையில் பரவியிருந்த சாம்பலைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.

‘‘என்ன செய்வது... நாம் எதிர்பார்க்கவில்லையே” என்றான் பாண்டியன்.

“நான் சேர்த்து வைத்திருந்த டாங்கா ஓவியங்கள் ஆயிரம் வருடம் பழைமையானவை. திபெத்தில் பௌத்த மதம் சென்று சேர்வதற்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள்கூட நான்கு இருந்தன” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

வெள்ளி நிலம் - 7

“பௌத்தத்துக்கு முன்னால் உள்ள டாங்காக்களா..! அவற்றில் என்ன வரையப்பட்டிருந்தது?” என்று பாண்டியன் ஆர்வத்துடன் கேட்டான்.

‘‘இன்றிலிருந்து 1,600 வருடங்களுக்கு முன்புதான் பௌத்தம் திபெத்துக்குச் சென்றது. அதாவது, கிபி ஏழாம் நூற்றாண்டில். அதற்கு முன்பு திபெத்தில் இருந்த மதம் ‘போன்’ (Bon). அதைப் பின்பற்றியவர்கள் போன்போக்கள் எனப்படுகிறார்கள். போன் மதத்தைச் சேர்ந்த டாங்காக்களே அந்த நான்கும்’’ என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“போன் மதமா? கேள்விப்பட்டதே இல்லை” என்றான் பாண்டியன்.

“பழைய போன் மதம் மலைத்தெய்வங்களையும் ஆவிகளையும் வழிபடுவது. எனவே, ஆரம்ப கால புத்த மதகுருக்களால் தடைசெய்யப்பட்டது. அதன் அடையாளங்கள் பெரும்பாலும் கிடைப்பது இல்லை. ஆகவே, இந்த டாங்காக்கள் மிக அபூர்வமானவை” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பாண்டியன், “அந்த மம்மிக்கும் இந்த டாங்காக்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று தோன்றுகிறது” என்றான். “அவற்றில் என்ன வரையப்பட்டிருந்தது?”

“எல்லாமே கொடூரமான மலைத்தெய்வங்களின் வடிவங்கள். நீலம், சிவப்பு, மஞ்சள் நிறம் கொண்ட நூல்களால் பின்னப்பட்டவை. பொன்னாலான கம்பிகளால் அவற்றுக்கு நகைகள் பின்னி இருக்கிறார்கள்.”

“பொன்னா?” என்றான் பாண்டியன் பரபரப்புடன்.

“ஏன்?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“அந்த டாங்காக்கள் எரிந்திருந்தால் இங்கே உருகிய பொன் கிடக்க வேண்டும். பொன் உருகி விழுந்திருந்தால் தெளிவாகவே தெரியும்’’ - பாண்டியன் குனிந்து சாம்பலைத் துழாவியபடியே சொன்னான்.

சில கணங்களிலேயே அவன் முடிவுக்கு வந்துவிட்டான். “அந்த டாங்காக்கள் எரிக்கப்படவில்லை. அவற்றைத் திருடிச்சென்றுவிட்டார்கள்” என்றான்.

“அதற்காகவா வந்தார்கள்?’’ என்றார் டாக்டர்.

பாண்டியன் பரபரப்புடன், “அந்த டாங்காக்களின் புகைப்படங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டான்.

“ஆம், அவற்றைப் படம் எடுத்து கணிப்பொறியில் வைத்திருக்கிறோம். மடாலயத்தின் நூலக அறையில் இருக்கிறது” என்றார் டாக்டர்.

“வாருங்கள்” என்று சொன்னபடியே பாண்டியன் விரைந்து உள்ளே சென்றான். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் காவலரும் தொடர்ந்து சென்றார்கள்.

அவர்கள் திக்ஸே மடாலயத்துக்குள்  சென்றார்கள். அந்த மடாலயம்,  கட்டடங்களின் தொகுப்பு போலிருந்தது. ஒவ்வோர் அறையும் ஒவ்வோர் உயரத்தில் அமைந்திருந்தது. மண்சுவர்களில் வெண்ணிறச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. அதன் மேல் செந்நிறத்தில் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. மரத்தாலான கதவுகளும் உத்தரங்களும் ரத்தச் சிவப்பு நிறம் பூசப்பட்டவை. திபெத்திலும் சீனாவிலும் அனைவருக்கும் பிடித்த நிறம் சிவப்புதான்.

வெள்ளி நிலம் - 7

அவர்கள் நூலக அறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே, நாக்போ அவர்களைத் தாண்டி முன்னால் சென்றது. ‘‘நாக்போ... எங்கே போகிறாய்?” என்று கேட்டபடி அதைத் தொடர்ந்து ஓடினான் நோர்பா.

நாக்போ தரையை முகர்ந்தபடியே ஓடியது. “அது எரிந்த அறையில் இருந்து மோப்பம் பிடித்துச் செல்கிறது. அந்த அறையை எரித்தவன் உள்ளே வந்திருக்கிறான்” என்றான் பாண்டியன்.

காவலர், “இதற்குள்ளா? ஒருபோதும் இல்லை. அவர்களை நாங்கள் பார்த்தபோதே அறைக்குத் தீவைத்துவிட்டு ஓடிவிட்டனர்’’ என்றார்.

நாக்போ ஓடிச்சென்று ஓர் அறையின் கதவைப் பிறாண்டியபடி குரைத்தது. அதை ஒரு முதிய புத்தபிட்சு திறந்தார். அவருடைய முகத்தில் சுருக்கங்கள் நிறைந்திருந்தன. முதுகு நன்றாகக் கூன் விழுந்திருந்தது.

அவரைப் பார்த்ததும் காவலரும் டாக்டரும்  குனிந்து வணங்கினர். “இவர் இங்குள்ள மிக மூத்த பிட்சு. இப்போது ஓய்வில் இருக்கிறார்” என்றார் காவலர். பாண்டியன் வணங்கினான்.

“என்ன நாய் குரைக்கிறது?” என்றார் அவர்.

“மோப்பம் பிடித்து வந்திருக்கிறது.”

“இங்கேயா?” என்று அவர் கேட்டார்.

“வணங்குகிறேன். இங்கு சந்தேகப்படும்படியாக எவராவது வந்தார்களா?” என்றான் பாண்டியன்.

“இல்லையே... நான் இதற்குள்தான் பெரும்பாலும் இருப்பேன். கதவைத் திறப்பதே குறைவுதான்” என்று அவர் சொன்னார்.

“மன்னிக்க வேண்டும். ஏதோ தவறு. நாய் குழம்பிவிட்டது” என்றான் பாண்டியன்.

நாக்போ குரைத்துக்கொண்டே துள்ளியது.

“நாக்போ… அடங்கி இரு” என்றான் பாண்டியன்.

‘மனிதர்கள் பாவம், அறிவே இல்லை’ என்று நாக்போ நினைத்துக்கொண்டது. ‘இந்த முட்டாள்களிடம் பேசுவதைவிட பேசாமல் சுவரை முகர்ந்து பார்க்கலாம். இந்த மடாலயத்தில் பன்றி இறைச்சி உண்கிறார்கள். நல்ல மணம்” என அது முனகியது.

‘‘தீயை அணைத்த பிறகு எவராவது உள்ளே வந்திருக்கலாம்” என்றபடி பாண்டியனும் நரேந்திர பிஸ்வாஸும் உள்ளே சென்றனர்.

‘முட்டாள்கள். சொன்னால் புரிந்தால்தானே? நமக்கென்ன?’ என்ற நாக்போ, திரும்பி தன் புட்டத்தில் அமர்ந்த ஒரு பூச்சியை கவ்வியது. அப்போது, அதன் பற்கள் சிரிப்பதுபோலத் தெரிந்தன.

அவர்கள் நூலக அறைக்குள் சென்றார்கள். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் கணிப்பொறியை இயக்கி தகவல்களை எடுத்தார். பாண்டியன் அருகே அமர்ந்தான். கணிப்பொறியின் திரையில் அந்த நான்கு டாங்காக்களும் தெரிந்தன. அவற்றை பாண்டியன் உற்றுப் பார்த்தான்.

அந்த டாங்காக்களின் படங்களைப் பெரிதாக ஆக்கி, அணு அணுவாக பரிசோதனை செய்தார்கள். கன்னங்கரிய உடலும் கோரைப் பற்களும் உருண்ட கண்களும்கொண்ட ஒரு தெய்வம் பாய்ந்து செல்லும் வெண்மையான குதிரை மேல் அமர்ந்திருந்தது. அதன் ஆடைகள் பல வகையாகப் பறந்தன. அய்யனார் போல இருக்கிறது என்று பாண்டியன் நினைத்தான்.

“இது, சாவின் தெய்வம். நமது எமனைப் போல. ‘யம’ என்றுதான் பெயர்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். இன்னொரு ஓவியத்தில் நீல நிறமான ஒரு தெய்வத்தின் தலைமுடி தீ போல கொழுந்துவிட்டு பறந்தது.  “இது, போன் மதத்தவரின் நெருப்புக் கடவுள். ‘யேஷீ வால்மோ’ என்று பெயர். அவர் கையில் வைத்திருப்பது மின்னல்” என்றார் டாக்டர்.

இன்னொரு ஓவியத்தில் ஒரு பெண் தெய்வம் எட்டு கைகளுடன் அமர்ந்திருந்தது. அதன் கைகளில் வில்-அம்பு, கோடரி போன்ற ஆயுதங்களும் தானியக் கதிரும் தாமரை மலரும் இருந்தன.

‘‘இந்த தெய்வத்தின் பெயர் ‘மரிசி’. போன் மதத்தினர் வணங்கிய தாய் தெய்வம்’’ என்றார்.

நான்காவது ஓவியத்தில் கரிய உருவம் ஒன்று கையில் ஒரு பெரிய கதாயுதத்தை ஓங்கியபடி அமர்ந்திருந்தது. அதன் தாடியும் மீசையும் நீண்டு மடியில் விழுந்து கிடந்தன. புருவங்கள்கூட தொங்கி கன்னம் வரை வந்திருந்தன. ‘‘இது எந்த தெய்வம் என்று தெரியவில்லை. ஆனால், பான் மதத்தின் தெய்வம்தான்” என்றார் டாக்டர்.

அவர்கள் அந்த ஓவியத்தை மீண்டும் மீண்டும் நோக்கினார்கள். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ‘‘இதேபோல மேலும் பல டாங்காக்கள் திபெத்தில் இருக்கலாம். இந்த டாங்காக்களுக்காக ஏன் இவ்வளவு தூரம் வந்தார்கள்?’’ என்றான் பாண்டியன்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “நாம் மேலும் விரிவாக ஆராயலாம். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. என் ஆராய்ச்சியில் யாரும் இதுவரைக்கும் தலையிட்டதில்லை” என்றார் பெருமூச்சுடன்.

“டாக்டர், இந்தக் கணிப்பொறியில் இணைய இணைப்பு உண்டா?” என்றான் பாண்டியன்.

“ஆம். நான் மின்னஞ்சல் பார்ப்பதுண்டு” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“சீனாவில் இருந்து உளவு பார்க்கும் செயலிகள் வழியாக இந்தக் கணிப்பொறியை வேவு பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் டாங்காக்களைப் பற்றி தெரிந்திருக்கிறது” என்றான் பாண்டியன்.

நரேந்திர பிஸ்வாஸ், “இருக்கலாம்” என்றபடி கணிப்பொறியை அணைக்கப்போனார்.

பாண்டியன், ‘‘டாக்டர்!’’ என்று கூவினான் ‘‘ஒரு நிமிடம்...” என்று அந்த நான்காவது ஓவியத்தைப் பார்த்தான்

“என்ன?” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்

“இந்த டாங்கா ஓவியத்தில் இந்தத் தெய்வம் அமர்ந்திருக்கும் இதே அமைப்பில்தான் அந்த மம்மி அமர்ந்திருந்தது” என்றான் பாண்டியன்.

 (தொடரும்...)

உளவுச்செயலி [Spyware]

வெள்ளி நிலம் - 7

ரு கணிப்பொறியில் உள்ள கருவிகளை ஹார்டுவேர் என்பார்கள். தமிழில், வன்பொருள்கள் என்று சொல்கிறார்கள். அதை இயங்கவைக்கும் புரொகிராம்களை ‘செயலிகள்’ என்றும் சொல்கிறார்கள்.

தமிழிலேயே கணிப்பொறியை இன்று இயக்கலாம். தமிழ் மொழியைக் கணிப்பொறியில் கொண்டுவருவதற்காக உழைத்தவர் நா.கோவிந்தசாமி. சிங்கப்பூரைச் சேர்ந்த இவர், 1992-ம் ஆண்டு  மறைந்தார். இவர் உருவாக்கிய ‘சிங்கப்பூர் தமிழ்வெப்’, இணையத்தில் வெளிவந்த முதல் தமிழ்ப் பக்கம்.

‘உளவுச்செயலி’ என்பது நம்மை அறியாமலேயே நம் கணிப்பொறிக்குள் எதிரிகளால் நிறுவப்படும் ஒரு செயலி. நாம் எதையாவது இணையத்தில் இருந்து கணிப்பொறிக்குள் கொண்டுவரும்போது நம் அனுமதி இல்லாமல் இதுவும் இறங்கி, கணிப்பொறிக்குள் ரகசியமாக இருக்கும். நாம் மீண்டும் இணையத்தைப் பயன்படுத்தும்போது அதை நிறுவியவர்கள் நம் கணிப்பொறியைத் தொடர்புகொண்டு தகவல்களை எடுத்துக்கொள்வார்கள்.