மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 - ஓவியங்கள்: ராமமூர்த்தி

அனுபவங்கள் பேசுகின்றன!

ஏன் இந்த வெறுப்பு?

ன் தோழி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்த்து நலம் விசாரிக்கச் சென்றிருந்தேன். அவருடைய பக்கத்துப் படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தை பசியால் அழுதது. ஆனால், அந்தப் பெண் கண்டுகொள்ளவே இல்லை. சிறிதுநேரத்தில் குழந்தையின் முகம் சிவந்துவிட்டது. அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் திட்டிய பிறகே, அந்தப் பெண், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தாள்.

`ஏன் பால் கொடுக்கவில்லை?’ என்று விசாரித்த போது, அந்தப் பெண்ணுக்கு இது ஐந்தாவது பெண் குழந்தை என்பது தெரியவந்தது. ஆண்குழந்தையை எதிர்பார்த்திருந்த கணவர், பெண்குழந்தை பிறந்ததால், பார்க்கக்கூட வரவில்லையாம். அதனால், அந்தப் பெண்ணுக்கும் குழந்தையின்மீது வெறுப்பு ஏற்பட்டு பாலூட்டாமல் இருந்திருக்கிறாள். பெண்குழந்தை  என்றதும் பெற்றவளே வெறுப்பை கக்கும் நிலைமைக்கு ஆளாகிவிட்டதை நினைத்து வேதனை அடைந்தேன்.

- எஸ்.சந்திரா, சென்னை - 56

அனுபவங்கள் பேசுகின்றன!

திருமணத்துக்குப் பிறகு படிப்பா..?

நெருங்கிய உறவினரின் மகள் நன்றாகப் படிக்கக் கூடியவள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, அவளுக்கு ஒரு நல்ல வரன் அமையவே, உடனே திருமணம் செய்ய முடிவெடுத்தனர் பெற்றோர். `படிப்பு முடியட்டும்...’ என்று அந்தப் பெண் எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல், திருமணத் துக்குப் பிறகும் படிக்க அனுமதி வேண்டினாள். அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் திருமணத்துக்குச் சம்மதித்தாள்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து கல்லூரி செல்வதாக அந்தப் பெண் சொன்னாள். அப்போது, `கல்யாணத்துக்குப் பிறகு பொம்பள படிச்சா... ஆம்பளைக்கு அடங்கமாட்டா' என்று மாப்பிள்ளை வீட்டார் தடைபோட்டார்கள். அவள் எவ்வளவோ கெஞ்சியும் பலனில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் பிரச்னையைச் சரியாகக் கையாளாததால், கணவரைப் பிரிந்தாள், அந்தப் பெண். இப்போது படிப்பையும் தொடர முடியாததோடு, விவாகரத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறாள். பெற்றோர்களே... பெண்களுக்கு திருமணம் அவசியம்தான். ஆனால், நிதானமாகப் பேசி முடிவு செய்யுங்கள். பெண்களின் படிப்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் திருமணத்தை நடத்துங்கள். இல்லாவிட்டால், இப்படித்தான் படிப்பையும் தாம்பத்ய வாழ்க்கையையும் இழக்கும் அவலம் ஏற்படும்.

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்