மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 19

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 19

டிக்கணக்கும் நஞ்சுக்கணக்கும் அறிந்த மூத்த பிடாரனின் கணக்குகளைத் தவறாக்கின செத்து விழுந்த வீரர்களின் உடல்கள். பாம்புகள் முன்நகரும் என்று மட்டுமே அறிந்த பிடாரனின் அறிவைப் பொய்ப்பித்தது செம்மண்ணுளி. அது கோடைக்காலத்தில் முன்நகரும்; மழைக்காலத்தில் பின்நகரும். நிலத்தின் வெப்பத்துக்கு ஏற்ப நகரும் இரு வகைச் செதில்களைக்கொண்டது அது.

எரிவிரியனையும் ஊதுசுருட்டையும்  நண்டுதின்னி நாகத்தையும் கண்கொண்டு பார்த்தறிந்தான் இளம் பிடாரன். இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்தபடி ஆறாம் மலை அடிவாரத்துக்கு அவர்கள் வந்தபோது உயிரோடு இருந்தவர்கள், இரு பிடாரன்களோடு ஒரு வீரன் மட்டுமே.

இவர்கள் வந்த செய்தி, நாகர் குலத் தலைவனுக்கு எட்டியது. அழைத்துவந்து விசாரித்தான். தலைவனைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர் மூவரும். பெருஞ்சேரலின் வேண்டுதலைச் சொன்னான் மூத்த பிடாரன்.

“தோலை உரிப்பதற்காக பாம்பு தின்னும் மூலிகையை, சேரல் குலத் தலைவனுக்கு நீங்கள் தந்துதவ வேண்டும்.”

நாகர் குலத் தலைவன் மிக இளவயதுக்காரன்போல் தெரிந்தான். அசட்டையான பார்வையோடு கேட்டான், “ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொருவிதமான மூலிகையைத் தின்னும். நீ எந்த மூலிகையைக் கேட்டு வந்துள்ளாய்?”

மூத்த பிடாரனுக்கு இந்தக் கேள்வி பெரும்வியப்பைத் தந்தது. பாம்பு தின்னும் ஏதாவது ஒரு மூலிகையை அறிந்துவைத்திருப்பதே அரிதானது. இவர்கள் ஒவ்வொரு பாம்புக்குமான மூலிகையை அறிந்துவைத்திருக்கின்றனர்.

“எந்த மூலிகையைத் தின்றால், மனிதனின் மேல் தோல் உரியும்?” எனக் கேட்டான் மூத்த பிடாரன்.

“நாங்கள் அதைத் தின்றதில்லை” என்றான் நாகர் குலத் தலைவன்.

மூத்த பிடாரனுக்கு, அடுத்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெருஞ்சேரல் சொல்லி அனுப்பிய இரண்டாவது வேண்டுகோளை முன்வைக்க முடிவுசெய்தான்.

கொண்டுவந்த கோணிப்பையில் இருந்து வெண்ணிறத் துணி ஒன்றை எடுத்து, நாகர் குலத் தலைவனை நோக்கி நீட்டியபடி, “இந்தத் துகிலை, புணரும் நாகங்களின் மீது போத்தி எடுத்துத் தர வேண்டும்” என்றான்.

`நாகங்கள் புணர்கையில் அவற்றின் மீது போத்தப்பட்ட துணியால் மனிதனுக்கு நீடித்த  ஆயுளும் அதிர்ஷ்டமும் கைக்கூடும்' என்பது வடதேசத்து முனியின் வாக்கு. அதனால்தான் இதைக் கொடுத்து அனுப்பினான் பெருஞ்சேரல்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 19

``நாகங்கள் புணர்வதைக் கண்டவர் யாரும் இல்லை” என்றான் நாகர் குலத் தலைவன்.

“நாகங்கள் பின்னிக்கிடப்பதை ஊரெங்கும் உள்ள மக்கள் பார்த்திருக்கின்றனர். நீங்கள் பார்த்ததில்லை என்பது நம்பும்படியாக இல்லையே” என்றான் மூத்த பிடாரன்.

“நாகங்கள் பின்னிக்கொள்வது அவற்றின் காதல் விளையாட்டு. அதை எல்லோரும் பார்க்கலாம். ஆனால், நாகங்கள் புணர்வதைத்தான் யாரும் பார்க்க முடியாது.”

இவை இரண்டும் வெவ்வேறு வகையான செயல்கள் என்பதை இப்போதுதான் மூத்த பிடாரன் கேள்விப்படுகிறான்.

நாகர் குலத் தலைவன் சொன்னான், ``நாகத்துக்கு காமம் பெருகும் காலங்களில் மெல்லிய நீரொன்று உடலெங்கும் ஊறி, அதன் கண்களை மறைக்கத் தொடங்கும். மனிதரைப் போலத்தான் அதற்கும் காமம் கண்களைக் கட்டும். அதற்குரிய மூலிகையைத் தின்ற பிறகு, நாகம் தனது மூக்கு நுனியின் வழியே அந்த நீர்த்தோலைக் கழற்றத் தொடங்கும். கண்களின் மேல் படர்ந்த காமத்திரையை அகற்றும். முழு உடலையும் உருவிப் புத்துடல்கொள்ளும். அதன் பிறகு அது எட்டு நாள்களுக்கு வெளியே வராது. எங்கு, எப்படி இருக்கும் என்பதை இதுவரை யாரும் அறிந்ததில்லை. தன் இணையோடின்றி, தனித்து நாகம் தோல் உரிப்பதில்லை.

புத்துடல்கொண்ட கணத்திலிருந்து அது இணை சேரத் தொடங்கும். ஒவ்வொரு செதிலாலும் தன் இணையின் ஒவ்வொரு செதிலுடன் கலந்து மீளும். திருகி, புரண்டு, இறுகி, மேல் தோல் கனிந்து முதிர்ந்த பிறகுதான் இணையைப் பிரிந்து வெளியேறும். தன் பழைய உடலின் வழியே இணை கூடாத ஒரே உயிரினம் அது மட்டும்தான்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாகனின் கருவிழிகளில் நீல நிற வளையம் ஒன்று பூத்து அடங்கியது.

நாகன் மேலும் சொன்னான், “புதிய மேனிகொண்டு மட்டுமே தழுவி வாழும் காதல் வாழ்க்கை நாகத்தினுடையது. இந்தப் புவியில் எந்த உயிரும் இன்புற்றிராத அபூர்வக் காதல் அது.”

மூத்த பிடாரன், வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான். ‘காமம்கொள்கையில் மனிதன் நாகங்களைப் போல பின்ன ஆசைப்படுவது அதனால்தானா?’ என்ற எண்ணம் ஓடியது. சற்றே நிதானித்தான். தனது இரண்டு வேண்டுதல்களும் அர்த்தமற்றதாகிவிட்டன என்பதை உணர்ந்தான். அடுத்து என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.

“வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?”

``நீங்கள் வணங்கும் நாகதேவதையை நாங்கள் வணங்கி விடைபெற எண்ணுகிறோம்.”

``பொழுது சரிந்துவிட்டது. நாளை உங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறேன். இன்றிரவு குடிலில் தங்குங்கள். எக்காரணம்கொண்டும் குடிலைவிட்டு வெளியே வரக் கூடாது.”

“சரி” என்று சம்மதித்தான் மூத்த பிடாரன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 19



தனித்து இருந்த குடில் ஒன்றில், அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இரவு கூடியது. `மகுளி'ப் பறை இசைக்கும் ஓசை கேட்டது. இன்று நாகர்களின் விருப்ப நாள். வந்துள்ளவன் பிடாரன் எனத் தெரிந்தும் அவனிடம் கனிவுகாட்டியதற்கு அதுதான் காரணம்.

குலத்தின் வழக்கப்படி புதிய இணையர்கள் விரும்பிக்கூடும் நாள் இது. நாகர்குடி முழுவதும் மந்தையைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தது. நடுவில் பெரும்வட்டத்தில் நெருப்பு மூட்டியிருந்தனர்.

குடிலுக்குள் அடைபட்டிருந்தனர் மூவரும். வீரனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவன் படுக்க தலை சாய்த்தான். பிடாரன்கள் இருவரும் வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தவியாய்த் தவித்தனர். இசையின் ஓசை கூடிக்கொண்டே இருந்தது.

இளம் ஆண்களும் பெண்களும் தங்களின் இணையைத் தேர்வுசெய்யத் தொடங்கினர். மூத்த பிடாரன், ஓலை வேய்ந்த குடிலில் மிகவும் பக்குவமாக சிறுதுளையை உருவாக்க முயன்றுகொண்டிருந்தான். நாகர்கள் வேய்ந்த குடிலில் ஆபத்து நிறைந்திருக்கும் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. எனவே, மிகவும் கவனமாக அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தான்.

இளம்பெண்கள் அமர்ந்திருக்க, இளம் ஆண்கள் அவர்களின் அருகில் வந்து இரு கைகளையும் பற்றி உள்ளங்கையை ஒன்றோடொன்று உரசினர். சாரைப்பாம்பின் அடிவயிறு வழவழப்பானதாக இருக்கும். நல்லபாம்பின் அடிவயிறு சொரசொரப் பானதாக இருக்கும். அது மரம் ஏறக்கூடியதால், அந்தத் தன்மை வாய்ந்தது.

ஆண், பெண் இருவரிலும் இந்த இரு இனங்களும் உண்டு. எதிரெதிர் தன்மை உள்ளவர்கள் கைகளை இறுகப் பற்றினர். அவ்வாறு இல்லாதவர்களின் கைகள், விலகி மறு கை பற்றின. வழவழப்பான சாரையின் அடிவயிற்றை, சொரசொரப்பான உள்ளங்கைகள் சூழத்தொடங்கின.

மூத்த பிடாரன் பக்குவமாகத் துளையிட்டு தொலைவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். இளைய பிடாரனும் அதே போல துளையிட முயன்றான். கைகளைப் பற்றியவர்களின் ஆட்டம் தொடங்கியது. கை புணர்ந்து ஆடும் துணங்கைக் கூத்து. நாகத்திடமிருந்து மனிதன் கற்ற காதற்கலை இது. சுழிவும் பின்னலுமாக நெருப்பின் தழல் போல் உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று படர்ந்து மேலேறின. இசை கூடியது. நாகம் படம் விரிக்கையில், மயில்தோகையில் பல வண்ணம் சட்டெனத் தோன்றி மறையும். நாகர் குலப் பெண்களின் முகங்கள் தழல் படர்ந்த வெளிச்சத்தில் அவ்வாறே தோன்றின.

மூத்த பிடாரன் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கையில், “ஐயோ..!'' எனக் கத்தியபடி கீழே சரிந்தான் இளம் பிடாரன். வேகமாக வந்து அவனைத் தாங்கிப்பிடித்தான் மூத்த பிடாரன். அவனது கண்களின் ஓரம் சிறியதாக நீண்டிருந்தது உள்ளே சென்றதன் வால் பகுதி.

அதிர்ந்துபோனான் மூத்த பிடாரன். கொத்தும் பாம்புகளைத்தான் இதுவரைப் பார்த்துள்ளான். தீண்டிய வேகத்தில் உள்நுழையும் நாகத்தை இப்போதுதான் பார்க்கிறான். தாங்கிப் பிடித்தவனின் கை நடுங்கியது. இனி அவனைக் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்ததும் அப்படியே தரையில் படுக்கவைத்தான். ‘நாகர்கள் வேய்ந்த ஓலையில் எல்லாம் இருக்கும் என்பதை அறியாது அவசரப்பட்டு விட்டானே’ என்று மூத்த பிடாரன் கவலைகொண்டான்.

அதன் பிறகு துளையில் எட்டிப்பார்க்க மனம்வரவில்லை. இசை கேட்டுக்கொண்டே இருந்தது. நாகங்களுக்கு நெருப்பு ஆகாது. இவர்கள் ஏன் நெருப்பை மூட்டி ஆடுகின்றனர் என்பதை அறியவேண்டும் என ஆவலிருந்தது. ஆனால், கண்ணுக்குள் நுழைந்ததைப் பார்த்த பிறகு எல்லாம் வடிந்துவிட்டன.

மறுநாள் காலை நாகர்குடி இளைஞன் ஒருவன் வந்து, இருவரையும் நாகதேவதையின் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். செல்லும்போது வீரன் கேட்டான், “இளைய பிடாரன் ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான்?”

``எழுந்திருக்க முடியாததால்” என்றான் மூத்த பிடாரன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 19

நாகதேவதையின் இருப்பிடத்தை அடைந்தனர். மர அடிவாரத்தில் சிறு சிறு கற்களும் பாம்பு உரித்த தோல் ஒன்றும் இருந்தன.

நாகங்களைப் படமெடுக்கச் செய்து, அவற்றின் தலையில் சிறு கல் வைத்து அழைத்துவருவாள் குலத்தின் முதுமகள் எனக் கேள்விப்பட்டுள்ளான் பிடாரன். அங்கு இருக்கும் கற்கள் எல்லாம் தலைமுறை தலைமுறையாக அவ்வாறு கொண்டுவரப்பட்ட கற்களாக இருக்கும் என யூகித்தான் மூத்த பிடாரன். ஆனால், ``பாம்பு கழற்றிய அந்தத் தோலை வைத்து ஏன் வணங்குகின்றனர், அதன் காரணம் என்ன?'' என்று கேட்டான்.

அழைத்து வந்த நாகர்குடி வீரன் சொன்னான், “அது வெண்சாரைக் கழற்றிய தோல்.”

இரண்டு நாள்களில் அடைந்திராத பேரதிர்ச்சியை மூத்த பிடாரன் இப்போது அடைந்தான்.

“வெண்சாரையைப் பார்ப்பது தெய்வத்தைப் பார்ப்பதற்குச் சமம் என்பார்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

“எங்கள் முன்னோர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்று மட்டும் சொன்னான் நாகன்.

சே
ரலின் அவையில் நடந்தவற்றை விளக்கினான் மூத்த பிடாரன். வரும்போது நாக வீரன் எங்களை கீழ்மலையின் அடிவாரம் வரை அழைத்து வந்தான். உயிரிழப்பு இன்றி இருவரும் வந்து சேர்ந்தோம்” என்றான்.

“நாம் கேட்ட இரண்டையும் அவர்கள் கொடுக்காமல், கவனமாகப் பேசி உங்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்” என்றான் சேரல்.

“கவனம் பேச்சில் இருந்து என்ன செய்ய, செயலில் வேண்டும்” என்றான் மூத்த பிடாரன்.

அவன் சொல்வது அவையோருக்குப் புரியவில்லை.

“நாகம், என்றுமே மனிதனின் எதிரிதான். அதனிடம் இரந்து பயன் ஏதுமில்லை. அதை அழித்தால் மட்டுமே மனிதன் பயனடைவான். நாகர்கள் அதனினும் கொடிய அழிவுசக்திகள். அவர்களைக் கூண்டோடு அழித்தாக வேண்டும். அவர்கள் இறங்கி வர முடிவெடுத்தால், ஒரே நாளில் சேரல் குலம் அழிந்துபோகும்”.

அந்தக் கணம், பெருஞ்சேரலின் உடல் நடுங்கி அடங்கியது.

“என்ன உளறுகிறாய்?”

“நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டது, நீங்கள் தர முன்வந்த செல்வத்துக்காக அல்ல. பிடாரன்களின் வாழ்நாள் வைராக்கியம், நாகங்களை வெல்வதே. கரும்பருந்திடம் நாங்கள் அளித்துள்ள வாக்கும் அதுதான். நாகர்களின் ஆற்றலை அறியவே எருக்குமலை ஏறினேன். என்னை யாரென அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால், அவர்களை நான் கண்டறிந்துவிட்டேன். மிகச் சிறியதொரு கூட்டம் அது. பெரும்சக்தி வாய்ந்த சேரலர் அவர்களை ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கிறீர்கள் எனப் புரியவில்லை.”

“என்ன செய்யலாம் எனச் சொல்கிறாய்?”

``நீங்கள் உதவ முன்வந்தால், அவர்களைக் கூண்டோடு அழித்துவிடலாம்.”

``ஆறு மலைகளைத் தாண்டி அவர்களின் இருப்பிடம் உள்ளது. எப்படி அழிக்க முடியும்?”

“இந்தத் திசையில் போனால்தான் ஆறு மலைகளைத் தாண்ட முடியும். நாட்டின் வட எல்லையில் கடலோடு இணைந்த மலைமுகடு ஒன்று உள்ளது அல்லவா? அந்தத் திசையில் நுழைந்தால், முதல் குன்றின் மீதுதான் நாகக்குடியின் இருப்பிடம் உள்ளது. இந்தப் பயணத்தில் நான் கண்டறிந்த உண்மை அதுவே.”

பெருஞ்சேரல் மூத்தமகன் பதுமன், “அப்படியென்றால், தாக்குதலை இன்றே தொடங்கலாம்” என்றான் படுஉற்சாகமாக.

பெருஞ்சேரலோ, நிதானம் தவறாமல் இருந்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 19



“நாகர்களை நம்மால் எப்படி வெல்ல முடியும்?”

``நீங்கள் படைகளைத் தாருங்கள். நான் வெற்றியைத் தருகிறேன்.”

‘பிடாரனின் சொல்லை நம்பலாமா?’ என்ற சிந்தனையில் இருந்தான் பெருஞ்சேரல்.

“நாம் வென்றால், வளம்மிக்க மலைக்குன்றுகள் நம் நாட்டுடன் இணையும். அதுமட்டுமன்று, நாகர்களையே வென்றவர்களாக சேரலர் அறியப்படுவர். அதன் பிறகு, யார் மீது நாம் போர் தொடுத்தாலும் நமது ஆயுதங்கள் தாக்கும் முன் நாம் வென்ற நாகர்களின் கதைகள் அவர்களைத் தாக்கி பலம் இழக்கச் செய்யும்” என்றான் பதுமன்.

பெருஞ்சேரல் மூத்த பிடாரனைப் பார்த்துக் கேட்டான், “படைகள் எப்போது புறப்பட வேண்டும்?'’

``எனக்கான ஆயுதங்களை நான் சேகரிக்க, சில மாதங்கள் ஆகும். அதன் பிறகு புறப்படலாம்.”

டதிசை மலைமுகட்டின் அடிவாரத்தில், சேரலர் படை அணிவகுத்து நின்றது. தளபதிகள் இரண்டு நிலைகளாகப் படைகளை நிறுத்தியிருந்தனர். காலாட்படையும் விற்படையும் எருக்குமலையை நோக்கி நின்றன. படைகளுக்குப் பின்னால் முகட்டின் மேல்புறத்திலிருந்து பெருஞ்சேரல் களத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

பெருஞ்சேரலின் படை அடிவாரத்தில் திரண்டிருப்பதை அறிந்த நாகர்கள், எதிர் தாக்குதலுக்கு ஆயத்தமானார்கள்.

மூத்த பிடாரன் மூன்று மாதங்களாகச் சேகரித்த ஆயுதங்கள் எல்லாம் நான்கு கூட்டு வண்டிகளில் இருந்தன. அவை என்ன ஆயுதங்கள் என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. போரின் போக்குகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தலாம் என்ற முடிவோடு, நாகர்களின் தாக்குதல் உத்தியைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவனோடு பெருஞ்சேரல் மகன் பதுமன் நின்றிருந்தான்.

விரிசங்கு ஊதி போரைத் தொடங்கினான் பெருஞ்சேரல். அவன் படைவீரர்கள் ஆயுதங்களோடு மெள்ள முன்நகர்ந்தனர். மலையின் மீதிருந்து நாகர் படைத் தளபதியின் கொம்போசை கேட்டது.

நாகர்களின் தாக்குதல் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் பார்த்ததில்லை. எனவே, வீரர்கள் பெரும் நடுக்கத்தின் வழியேதான் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு முன்னேறினர். சேரலர் படை எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தது. அதில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் நாகர் குடியினர் இருப்பார்கள் எனக் கணித்திருந்தான் மூத்த பிடாரன். எனவே, இந்தப் போர் உச்சிப் பொழுதுக்குள் முடிந்துவிடும் என்பது அவனது எண்ணம்.

சேரல வீரர்கள் முன்னோக்கிச் சென்றபோது நாகர்களும் மூன்று அணிகளாக இறங்கி வந்தனர். ஒவ்வோர் அணியிலும் மிகக் குறைவான வீரர்களே இருந்தனர். அதைக் கண்ட சேரல வீரர்களுக்கு பெரும் நம்பிக்கை பிறந்தது. அவர்கள் இறங்கி வருவதில் ஏதோ மாறுபட்டத்தன்மை இருக்கிறதே என உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன்.

நாகர்களின் இடதுபுறக் குழு குறுவளைவு கொண்டு இறங்கியது. வலதுபுறக் குழு பெரும்வளைவு கொண்டு இறங்கியது. நடுவில் வந்த குழு, வளைவுகளற்று நெட்டுவாக்கில் படுவேகமாக இறங்கியது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனக் கணித்துக்கொண்டிருக்கும்போதே சேரலர் படை நாகர்களை நோக்கி அம்புகளை வீசியது.

நடுவில் நெட்டுவாக்கில் வந்த நாகர் படையின் முன்வரிசையினர் மண்டியிட்டு அமர்ந்து அம்பை நாணில் ஏற்றினர். வழக்கமான நேரத்தைவிட அவர்கள் நாண் ஏற்ற மும்மடங்கு நேரமானது. ``போர்ப் பயிற்சி அற்றவர்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது'' என்றான் பதுமன்.

நாகர்கள் தொடுத்த நாணில் இருந்து அம்புகள் பறந்து வரும்போதுதான், அம்போடு சேர்த்து மற்றொன்று நெளிந்துகொண்டு வருவது தெரிந்தது. கண நேரத்துக்குள் சேரலர் படை கதிகலங்கியது.

அம்போடு வந்து இறங்கிய சாரைகள் நான்கு புறங்களிலும் விழுந்து நகர, படைவீரர்கள் திசையெங்கும் தெறித்து ஓடினர்.

நாகர்களின் இந்தத் தாக்குதலை எதிர்பார்த்திருந்தான் மூத்த பிடாரன். “முதலிலே சொன்னால், படைவீரன் ஒருவன்கூட களத்தில் நிற்க மாட்டான். அதனால்தான் சொல்லவில்லை” என்று பதுமனிடம் கூறினான்.

“நடுவில் நெட்டுவாக்கில் இறங்கியது சாரைப்பாம்பு உத்தி. இடதுபுறம் குறுவளைவு கொண்டு இறங்கியது எரிவிரியன் உத்தி. வலதுபுறம் பெருவளைவுகொண்டு இறங்கியது நல்லபாம்பு உத்தி. பாம்புகளின் தடத்துக்கு ஏற்ப உத்தி வகுத்துள்ளனர். அவர்கள் இப்போது சாரைப் பாம்பை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்துள்ளனர்” என்றான் பிடாரன்.

பதுமனுக்கு, உடல் நடுக்கம்கொள்ளத் தொடங்கியது.

“இதைத் தடுக்க வழி என்ன?”

கேட்டுக்கொண்டிருக்கும்போதே தனது கூட்டு வண்டியின் மேல்கூடாரத்தைத் திறந்துவிட்டான் மூத்த பிடாரன். கரும்பருந்துகளும் பாம்புப் பருந்துகளும் படபடத்து வெளியேறின. காற்றில் ஏறிய பருந்துகளின் ஓசை, எங்கும் எதிரொலித்தது. பருந்துகளின் விரல்கள் களத்தில் நெளியும் சாரைகளைக் கவ்வி மேலேறின. அந்தக் காடு முழுவதும் பருந்துகள் வட்டமடிக்கத் தொடங்கின. பருந்தின் கண்கள் பாம்பைக் காணும் முன் அதை பாம்பு கண்டுணர்ந்துவிடும்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 19

“இனி எந்தப் பாம்பும் வெளியே நிலைகொள்ளாது. அனைத்தும் தன் இருப்பிடத்தை நோக்கி ஓடிவிடும். அவர்களால் அதைக் கையில் எடுத்து அம்பில் பொருத்தி அனுப்ப முடியாது” என்றான் பிடாரன்.

பதுமனுக்கு, மேலெல்லாம் வியர்த்திருந்தது.

பிடாரனின் இந்த உத்தியை எதிர்பார்த்து இருந்தவனைப் போல நாகர் குலத் தளபதி குறுஞ்சிரிப்பு ஒன்றை உகுத்தான்.

“முகட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருக்கும் அடுத்த படைப் பிரிவை முன்னகர்ந்து வரச் சொல்” என்று கத்தினான் மூத்த பிடாரன்.

பதுமன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும்போதே, நான்காவது கூட்டுவண்டியின் கதவைத் திறந்தான் மூத்த பிடாரன். மரப்பெட்டிகள் நிறைந்திருந்தன. “வீரர்களிடம் பெட்டியை எடுத்துக்கொண்டுபோய், எதிர்திசையில் பகுதிக்கு ஒன்றாகத் திறந்துவிடச் சொல்'' என்றான் மூத்த பிடாரன். பதுமன் உடனடியாக அதற்கான உத்தரவை இட்டான்.

வீரர்கள், பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடினர்.

“பெட்டிகள் முழுக்க எண்ணற்ற பாம்புக்கீரிகளும் கருங்கீரிகளும் இருக்கின்றன. அவை முக்கியம் அல்ல. எட்டு பழந்தின்னிக் கீறிகள் இருக்கின்றன. அவற்றின் வாடை காற்றில் மிதந்தாலே போதும், இந்தத் திசைவிட்டே பாம்புகள் வெளியேறிவிடும்” என்றான் மூத்த பிடாரன்.

சேரலர் படை, மறுமுறை அணிவகுத்தது. இப்போது பின்வரிசையில் கம்பீரமாக நிலைகொண்டது யானைப்படை. அதற்கு முன்னால் விற்படையும் காலாட்படையும் அணிவகுத்தன. முதலில் இருந்ததைப்போல இருமடங்கு வீரர்கள். உத்தரவு கிடைத்ததும் முன்னேறினர்.

நாகர் குலத் தளபதி கை அசைத்ததும் நாகர்களின் அம்புகள் நாணில் இருந்து விடுபட்டு, காற்றில் பாய்ந்தன. இப்போது அம்போடு நெளிந்து வளையும் பாம்புகள் எவையும் தென்படவில்லை. சேரல வீரர்கள் உற்சாகத்துடன் முன்னேறினர். பதுமன், மூத்த பிடாரனைத் தழுவிப் பாராட்டினான். “இனி வெற்றி உறுதி!” என்று சொல்லி மகிழ்ந்தான் பதுமன்.

சிறிது நேரத்தில் முன்கள வீரர்களிடம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. என்னவென்று அறியும் முன்பே வீரர்கள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தனர். சருகில் தீப்பற்றுவதைப் போலத்தான் போர்க்களத்தில் ஓட ஆரம்பிப்பது. ஒருவன் ஓட ஆரம்பித்தால், அந்த அச்சம் கண நேரத்துக்குள் ஒட்டுமொத்த படையிலும் பரவும். யானைப்படைத் தளபதி சட்டென அனுமானித்து, களத்தைவிட்டு வெளியேற உத்தரவிட்டான்.

மூத்த பிடாரனுக்கு, நடப்பது எதுவும் புரியவில்லை. நாகர்கள், அம்பு எய்தியபடி முன்னோக்கி வந்துகொண்டிருந்தனர். சேரலர் படை, களம்விட்டு ஓடிக்கொண்டிருந்தது. பிடாரன் நடப்பதை அறியாமல் திகைத்து நின்றான்.

வீரர்கள், உயிர்பிழைக்க வெறிகொண்டு ஓடினர். என்ன என்பது விளங்கவில்லை. `தாமதிக்கக் கூடாது' என முடிவெடுத்த மூத்த பிடாரன், முன் களத்தை நோக்கி விரைந்தான். பதுமன் அடுத்து என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் தந்தை இருக்கும் இடம் நோக்கி மேலேறினான்.

பெருஞ்சேரல், முகட்டின் மேல் இருந்தபடி களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது படை பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறிய நாகர் கூட்டம் முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. பதுமன் வந்து தந்தையோடு இணைந்தான். எந்தவித முடிவும் எடுக்காமல் மூத்த பிடாரனுக்காக அவர்கள் காத்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து மூச்சிரைக்க ஓடிவந்தான் மூத்த பிடாரன். மேலெல்லாம் அலங்கோலமாய் இருந்தது. “எள்ளுச்செடியில் உற்பத்தியாகும் கண்ணுக்குத் தெரியாத கொடும்நாகம் ‘குருதிப்பனையன்’. அம்புகளோடு இணைந்து அவை வந்துகொண்டிருக்கின்றன” என்று தன் மீது பாய்ந்த அம்பை கையில் ஏந்தியபடி கூறினான்.

பெருஞ்சேரலன் நடுங்கிப்போனான்.

“இப்போது என்ன செய்யலாம்?”

பதில்  சொல்லும் ஆற்றல் குறைந்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பாயும் நஞ்சின் வேகத்தை கணித்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன். அப்போது பாய்ந்து வந்த அம்பு ஒன்று, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் குத்தியது.

மூத்த பிடாரன் சொன்னான், “இந்தக் குன்றில் மட்டுமே அவர்களின் குடி இருக்கிறது. இன்று இரவோடு இரவாகக் குன்றைச் சுற்றிவளையமிட்டுத் தீயிடுங்கள். தீயில் இருந்து மீள, அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. நாகர் இனம் முழு முற்றாக அழியும்.”

பெருஞ்சேரல் சற்றே தயங்கிச் சிந்தித்தான்.

மூத்த பிடாரன் சொன்னான், “ஒருமுறை தாக்கிவிட்டுப் பாதியில்விட்டால், அவர்கள் உங்களை அழிக்காமல் விட மாட்டார்கள். எனவே, முழுமையும் அழித்துவிடுங்கள்.”

பெருஞ்சேரலின் உடலெங்கும் அச்சம் பரவியிருந்தது. அவனது தயக்கத்தைக் கணித்தபடி பிடாரன் வாய் குழறிச் சொன்னான், “இவர்களை அழித்தால் மட்டுமே உங்கள் இரண்டாவது மகனின் ஆட்சிக்காலம் நிலைத்திருக்கும்.”

‘முதல் மகன் பதுமன் இருக்கும்போது ஏன் இவன் இரண்டாவது மகனைப் பற்றிச் சொல்கிறான்?’ என்ற அதிர்ச்சியோடு பெருஞ்சேரல் திரும்பி பதுமனைப் பார்த்தான்.

பெருஞ்சேரலின் கதறல், காதில் சன்னமாக விழுந்தது. கேட்டபடியே மண்ணில் சரிந்த மூத்த பிடாரனின் வாய் முணுமுணுத்தது, “ஒரு முழம் அளவில் கிளைகளில் தொங்கியபடி வாய் பிளந்து இருக்கும் மனிதனைக் கண்டால் தாவிக் கடிக்கும் உச்ச நஞ்சுகொண்ட பச்சிலை விரியன், சிறிது நேரத்துக்கு முன் பாய்ந்து வந்த அம்பிலிருந்து விலகித் தாவி பதுமனின் தொண்டையைக் கவ்வியது.”

வாயில் நுரை தள்ளியபடி இருந்தது. ஆனாலும் மூத்த பிடாரனின் உடலில் இருந்த நச்சுமுறி மருந்துகள் அவனை விரைவில் சாகவிடவில்லை.

அன்று இரவு எருக்குமலையைச் சுற்றி தீ மூட்டப்பட்டது. மூத்த பிடாரனின் கண் முன் எருக்குமலை முழுமுற்றாக எரிந்தது. அதன் மஞ்சள் வெளிச்சத்தில் நாகர்கள் துடிதுடித்துச் செத்தனர். நாகர்களின் அழிவோடு பிடாரனின் வாழ்வும் முடிந்தது.

தை கேட்டுக்கொண்டிருந்த கபிலருக்கு, உயிர் உறைந்துவிடுவதுபோல் இருந்தது. ஆனால், கதையைவிட அவரை உலுக்கியது கண்ணுக்கு முன்னால் காணும் காட்சி. நெருப்பு அணைந்த பிறகு கங்குகளின் மீதுதான் இறங்குவார்கள் என்றுதான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், புதிதாக இரண்டு காதல் இணையர்கள் கை புணர்ந்து ஆடியபடி நெருப்பை நோக்கி நகர்ந்தனர்.

நெருப்பின் அனலில் நின்றாடப்போகிறார்கள் எனக் கபிலர் நினைத்துக்கொண்டிருந்தபோதே, அவர்கள் எரியும் நெருப்புக்குள் நுழைந்தனர். கபிலருக்கு குருதியோட்டமே நின்றுவிடுவதுபோல் இருந்தது.

மனிதர்கள் உயிரோடு நெருப்புக்குள் இறங்குவதை, கண்களால் காண முடியவில்லை. நெருப்புக்குள் இறங்கியவர்கள் சுழன்று கைகளை வீசியபோது, உள்ளிருந்து தீப்பொறிகள் நான்கு புறங்களிலும் தெறித்தன. அவர்கள் ஆடுகின்றனரா... எரிகின்றனரா? புரியாத நிலையில் கண்ணிமை செருக, மயங்கிச் சரிந்தார் கபிலர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...