Published:Updated:

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்
பிரீமியம் ஸ்டோரி
News
வேர்கள் - இஸ்மத் சுக்தாய்

தமிழில் : ஜி.விஜயபத்மா ஓவியம் : ட்ராட்ஸ்கி மருது

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்

ன்றைய தினம். வெளுத்த முகங்களுடன் அனைவரும் உறைந்திருந்தனர். சாப்பாட்டு வேலைகள் ஒன்றும் நடக்கவில்லை. வீட்டை மயானம் சூழ்ந்து இருந்தது. வலிகள் தெரியாக் குழந்தைகளின் உலகம் மட்டும் உல்லாசமாக இருந்தது.

பள்ளிகளுக்குக் கட்டாய விடுமுறை விடப்பட்ட ஆறாம் நாள் அன்று. குழந்தைகள், ஓடுவதும் தாவிக் குதிப்பதும் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு  கூச்சல் இடுவதுமாக வீடு இரண்டுபட்டது. இந்தக்  குழந்தைகளுக்கு ஆகஸ்ட் பதினைந்து என்றால் என்ன என்று புரியாது. ஆங்கிலேயர்கள் நாட்டைக் கூறுபோட்டதும், இன்று ரணங்களின் மேல் ஒரு சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறியதும் இந்தக் குட்டிப் பிசாசுகள் அறியாதவை. முனை மழுங்கிய கத்திகள் இந்தியாவைச் சிதைத்துப்போட்டன. குருதிக்கான ஊற்றை, தொண்டைக்குழியில் தோண்டி எடுத்த அரக்கத்தனம் ஊரெங்கும் ரத்தச் சேற்றினை வாரி இறைத்தது. வெட்டுப்பட்ட காயங்களைத் தைக்க இங்கு ஒருவரும் இல்லை.

சாதாரண நாள்களாக இருந்தால், விடுமுறை தினங்களில் இந்தக் குட்டிப் பிசாசுகளைச் சமாளிக்க இயலாமல்,விளையாடத் தெருவுக்கு அனுப்பி இருப்போம். ஆனால், சில நாள்களாக நகரமே ஒரு மயான வலைக்குள் சிக்கிக்கொண்டதுபோல கலவர பூமியாக இருந்தது. முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். வீட்டுக்கு வெளிப்புறம் தாளிட்டு, காவலர்கள் ஊரைச் சுற்றி வலம்வந்தனர். கள்ளம் கபடமில்லா குழந்தைகள் இவை எவற்றையும் அறியாமல், தங்கள் விளையாட்டை பூட்டிய வீட்டுக்குள் தொடர்ந்துகொண்டு இருந்தன.  

குழந்தைகள், வறுமை, அறியாமை ஆக்கிரமித்த இடங்கள், மிக இலகுவாக மத வெறியர்களுக்கான சரியான வேட்டைத்தளமாக உருமாறிவிடுகின்றன. மக்கள் துண்டாடப்பட்டு போக்கிடம் அறியாமல் இங்கும் அங்குமாகப் புலம் பெயர்ந்துகொண்டு இருந்தனர். இந்தப் பகுதியில் ஒவ்வொரு நாளும், கூட்டம் கூட்டமாகப் பஞ்சாபில் இருந்து வந்து குடியேறும் அகதிகளின் எண்ணிக்கை அச்சுறுத்தலாகி, அங்கேயே பூர்வீகமாக வசிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுமோ என்ற கவலையில் அவர்களிடையே பதற்றம் அதிகரித்தது. ஊரே குப்பைகளால் நிறைக்கப்பட்டு, அலங்கோலமாகக் கிடந்தது.

எப்போது என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் சவக்களையுடன் திரிந்தார்கள். இரண்டொரு இடங்களில் சச்சரவுகள் வெளிப்படையாகவே வெடித்தன. மேவார் மாகாணத்தைப் பொறுத்தவரை இந்துக்களும் முஸ்லிம்களும் மிகப் பெரிய அளவில் வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. அவர்களின் உருவங்களோ, ஆடைகளோ, பெயர்களோ ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தன. ஆனால், வேறுஇடங்களில் இருந்து இங்கு இடம்பெயரும் முஸ்லிம்கள் மட்டும் எளிதில் அடையாளம் காணப்பட்டனர். மக்களிடையே காற்றைப்போல வதந்தியாக,  ஆகஸ்ட் 15 பற்றியச் செய்தி பரவியிருந்தது.  யூகங்களால் விளைவுகளைப் புரிந்துகொள்ள முடிந்த ஒரு சிலர், ஏற்கெனவே பாகிஸ்தான் எல்லையைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுவிட்டனர். ஆனால், நீண்ட நாள்களாக அந்த மாகாணத்தில் வசித்து வந்தவர்கள், நடைமுறைச் சிக்கலை அவதானிக்க சாமர்த்தியம் இல்லாது இருந்தார்கள். இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவிக்கொண்டிருக்கும் பிரச்னைகள் பற்றிய போதிய ஞானம் அவர்களுக்கு இல்லை. அதனால், அது அங்கே விவாதப் பொருளாக மாறவில்லை. விஷயத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தவர்கள், தங்களையும் தங்கள் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ளும் முன்னேற்பாடுகளில் இறங்கி, தங்கள் அரண்களை பலமாக அமைத்துக் கொண்டனர்.

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்

மிச்சமிருந்த வெள்ளந்தி மக்கள்,  ‘பாகிஸ்தானில் நான்கு சேர் கோதுமை ஒரு ரூபாய்க்கும், பெரிய ரொட்டிகள், வெறும் காலணாவுக்கும் கிடைக்கிறது’ என்ற புரளியை உண்மை என்று நம்பினார்கள். அவர்கள், ஆசையால் தூண்டப்பட்டு பாகிஸ்தான் பகுதிக்குப் புலம்பெயரத் தொடங்கினர். மீதமுள்ள அறிவாளிகள், காலணாவும் ரூபாயும் சம்பாதிக்க இருத்தலைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம் என உணர்ந்து போராடினாலும் தங்கள் வாழ்வை இங்கேயே அமைத்துக்கொள்வது எனச் சமூகப் போருக்கும் தயாரான மனநிலையில் காத்திருந்தனர்.

இருத்தலைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய பயம் கலந்த தவிப்பில், சிறுபான்மை சமூகத்தினரை அப்புறப்படுத்துவதில் வெறியுடன் மக்கள் நின்றனர்.  இதை அவர்கள் வெளிப்படையாக விவாதிக்கவும் தயங்கவில்லை. இதனால், அங்கு சிக்கலான பிரச்னைகள் உருவாகி பதற்றநிலையை எல்லோருடைய மனதிலும் விதைத்திருந்தது. அந்த ஊரில் பரம்பரையாகப் பணக்காரர்களாக வாழ்ந்து வந்த தாகூர்கள், தங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி விவாதித்தார்கள். அவர்கள், நாட்டைத் துண்டாடும் விஷயத்தை அறவே வெறுத்தார்கள்.

“இங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து சரிசமமாக வாழ்ந்துவருகிறோம். அவர்களைத் தனித்தனியே அடையாளம் கண்டு பிரிப்பது சாதாரண வேலையல்ல. அதைச் சரியான ஆள் பலமில்லாது நீங்கள் செய்ய இயலாது. ஆட்களை வேலைக்கு எடுத்தால், அரசுக்கு வீண் செலவு. இங்கு புதிய மக்களைக் குடியேற்றத் தேவையான நிலத்தை ஒதுக்கித் தர அரசுக்குப் பணம் தேவை. அந்தப் பணத்தை நாங்கள் ஏற்பாடு செய்துதருகிறோம். இங்கு வாழ்பவர்கள் மனிதர்கள், ஒரு நாளில் விரட்டி அடிப்பதற்கு காட்டில் வசிக்கும் மிருகங்கள் அல்ல” என்று தங்கள் முடிவில் பிடிவாதமாக நின்றனர்.

ஒவ்வொரு நாளும், வலம்வரும் புதிய வதந்திகளால் அச்சுறுத்தப்பட்டு, தெளிவில்லாமல் மக்கள், அங்குமிங்குமாக இடம்பெயர அலைந்துகொண்டு இருந்தார்கள். இவற்றுக்கிடையே, அந்த ஊரில் சில குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறாமல் தங்கியிருந்தன.  ஏறக்குறைய அவர்கள் அனைவரும் மஹாராஜாவிடம் பணிபுரிபவர்களாகவே இருந்தனர். அவர்கள் வேறு எங்கும் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு மஹாராஜாவும் ஒப்புதல் அளிக்க மாட்டார். ஆனாலும், சில குடும்பங்கள் தொடர்ந்து அதே இடத்தில் வசிப்பது ஆபத்து என பயந்து போய், கிளம்பிவிட சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதில் எங்கள் குடும்பமும் ஒன்று.

அஜ்மீர் சென்றிருந்த பர்ரே பாய், அங்கிருந்து வந்த உடனேயே , எல்லோரிடமும் பீதியைக் கிளப்பினார். தங்கள் குடும்பத்தினர் பாகிஸ்தானில் குடியேறியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனாலும், அவர் பேச்சை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. தன் பேச்சை ஒருவரும் கேட்கவில்லை என்றதும் கிட்டத்தட்ட அந்தத் திட்டத்தைக் கைவிடும் மனநிலைக்கு வந்துவிட்டார் பர்ரே பாய். அந்தச் சமயத்தில் சப்பன் மியான் செய்த சில தந்திரமான காரியங்களால், பர்ரே பாய் கூறியதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று அவர்கள் புரிந்து கொண்டனர்.

சப்பன் மியான், பள்ளிக்கூடச் சுவரில்  ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று எழுத எல்லா ஏற்பாடுகளும் செய்து, எழுதத் தொடங்கினார். அதே சமயம் ரூப்சந்த்ஜியின் பிள்ளைகள் அந்த சுவரில் ‘அகண்ட் ஹிந்துஸ்தான்’ என எழுதினர். இரு சாராருக்கும் இந்த விஷயத்தில் சண்டை வந்து, அது பெரும் சமூக அச்சுறுத்தலாகவும் இருபுறமும் கொலைமிரட்டல்களுமாகக் கிளர்ந்தெழுந்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் வரம்புமீறிப் போகத் தொடங்கியதும், போலீஸ் வரவழைக்கப் பட்டு, முஸ்லிம் சிறுவர்களை லாரியில் ஏற்றி அவரவர் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.

சிறுவர்கள் வீடு சேர்ந்ததும், எப்போதும் அவர்களைச் சபிக்கும் அவர்களின் தாய்மார்கள் இன்று தங்கள் குழந்தைகளை ஆரத்தழுவி முத்தமிட்டனர். எங்களின் இரு குடும்பங்களுக்கும் இடையே மூன்று தலைமுறைக்கும் மேலாக நெருங்கிய அன்பால் பிணைந்த உறவிருந்தது. முன்பு இதுபோல் நடந்திருந்தால், ரூப்சந்த்ஜியின் பிள்ளைகளுடன் சண்டையில் ஈடுபட்டு சப்பா வீடு திரும்பினான் என்றால், துல்ஹன் பாய் அவன் கன்னத்தில் சில அறைகள் விட்டு ரூப்சந்த்ஜி வீட்டுக்குப் போய் காயத்துக்கு விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு, கொஞ்சம் கொயினா மருந்தையும் வாங்கிக் குடித்து வரச்சொல்லி கண்டித்து அனுப்பியிருப்பாள்.

ரூப்சந்த்ஜி எங்கள் அப்பாவின் பால்ய நண்பர் மற்றும் எங்கள் குடும்ப வைத்தியரும் கூட. அவருடைய மகன்கள் என் சகோதரர்களுக்கு நண்பர்களாகவும், எங்கள் அண்ணிகள் அவரது மருமகள்களின் நெருகிய சினேகிதிகளாகவும் இருந்தனர். எங்கள் இரு குடும்பங்களின் குழந்தைகளுக்கு இடையே இருபாலரும் வேற்றுமை இன்றி அன்பாக இருந்தனர். குழந்தைகளும் அப்படியே ஒன்றாகவே வளர்ந்தனர். இதுபோல் எங்கள் நாட்டுக்குள் பிரிவினை வரும், அது எங்கள் ஒற்றுமையை, நட்பைக் கூறுபோடும் என்று ஒருநாளும் நாங்கள் கற்பனைகூட செய்து பார்த்தது இல்லை.

எங்கள் இரு குடும்பங்களுக்குள்ளும் எல்லாக் கட்சியைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்தனர். அனைவரும் ஒன்றுகூடும் சமயங்களில், கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி போலவே அனைவருக்குள்ளும் அரசியல் தொடர்பான காரசாரமான விவாதங்கள் நடைபெறும். அப்பா காங்கிரஸ்காரராகத் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துரைப்பார். டாக்டர் சாஹிப்பும், பர்ரே பாயும் முஸ்லிம் லீக் ஆதரவாளர்கள். கியான்சந்த் மகாசபா ஆதரவாளராக இருந்தார். குலாப் சந்த் சோஷலிஸ்டாகவும், மஞ்ஜ்லே பாய் கம்யூனிஸ்டாகவும் இருந்தனர். வீட்டுப் பெண்கள் இந்த விஷயத்தில் மிக ஒற்றுமையாக அவரவர் கணவர்களின் கட்சியை ஆதரித்தார்கள். குழந்தைகள் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு அவரவர் தந்தையை ஆதரித்துவிட்டு, ஒற்றுமையாக எல்லோர் பேச்சுக்கும் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். எப்போதும் விவாதங்கள் காங்கிரஸ்காரர்களால்தான் ஆரம்பித்து வைக்கப்படும்.காங்கிரஸ்காரர்கள் ஆரம்பித்துவைக்கும் விவாதங்கள்,  சூடேறி கம்யூனிஸ்டுகள் மீதும், சோஷலிஸ்டுகள் மீதும், குற்றச்சாட்டுகள் வசைகளாக முடியும். தங்கள் மீதான தாக்குதலுக்கு அரசியல்ரீதியாகப் பதில் இல்லாமல் அவர்கள் ஒரு கட்டத்தில் காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்துகொள்வார்கள்.

உடனே, மகாசபையும், முஸ்லிம் லீக்கும் ஒன்று சேர்ந்து காங்கிரஸைத் தாக்கும். சில ஆண்டுகளாக முஸ்லிம் லீக் மற்றும் மஹாசபாவிற்கு ஆதரவு அதிகமாகி காங்கிரஸின் பாடு திண்டாட்டமாகி விட்டது. இரு குடும்பத்தில் இருந்த காங்கிரஸ்காரர்களும் ஒன்றிணைந்து அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற ரீதியில் உரிமைகளைக் கையில் எடுத்துக்கொண்டு உலாவ ஆரம்பித்துவிட்டனர். மறுபுறம் சிறிய அளவில், கியான்சந்த் தலைமையில் சேவக் சங் தொடங்கியது. இவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் கருத்துகளில், கொள்கைகளில் வேறுபட்டு இருந்தாலும், நட்பிலும் பாசத்திலும் எவ்விதப் பாகுபாடும் இன்றி ஒற்றுமையாகவே இருந்தனர்.

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்

“என் லல்லு, முன்னியைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறானாம்” என்று மஹாசபா கியான்சந்த், முஸ்லிம் லீக் ஆதரவாளரான முன்னியின் தந்தையிடம் கூற, அவரோ “அப்பா உடனே உன் மருமகளுக்குத் தங்கக் கொலுசு வாங்கி வா... போ” என்று கேலி செய்வார். இதற்கு பர்ரே பாய், “அந்தக் கொலுசு சுத்தத் தங்கமாக இருக்கும்ல?” என்று கியான்சந்தின் தொழிலைக் கேலி செய்வார்.

சுவர்களில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று நேஷனல் குவார்டுகள், எழுதினால் சேவக் சங் ஆட்கள் அதை அழித்துவிட்டு,  ‘அகண்ட் ஹிந்துஸ்தான்’ என்று எழுதிவிடுவார்கள். முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான்  என்ற தனித் தேசம் உருவாகப் போகிறது என்ற புரளிகள் எங்கும் பரவிக் கொண்டிருந்தபோது, இப்படி எல்லாம் இன்னொருபுறம் கூத்து நடந்துகொண்டு இருந்தது. இந்து-முஸ்லிம் பிரிவினைக்கான உணர்வு, மக்கள் அறியாமலேயே அவர்களது சிந்தனையில் விதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்


ஒருங்கிணைந்த ஆசியாவைப் பற்றிய திட்டங்கள் குறித்து எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் அப்பாவும் ரூப்சந்திஜியும் இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு லேசாகப் புன்னகைப்பார்கள்.  

புற விஷயங்கள் குறித்த அக்கறை எதுவும் இல்லாமல், அம்மாவும் சாச்சியும் கொத்துமல்லி விதை பற்றியும் மஞ்சள் கிழங்கு பற்றியும் மகள்களின் சீர்வரிசைகள் பற்றியும் பேசிக்கொண்டிருப்பார்கள்.  

மருமகள்களோ, ஆடை அலங்காரங்கள் பற்றி தீவிரமாகக் கருத்து சொல்லிக்கொண்டு, விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். டாக்டர் சாஹிப் வீட்டிலிருந்து எங்கள்  வீட்டுக்கு சமையல் பொருள்களும் மருந்துகளும் வந்துகொண்டிருந்தன. வீட்டில் யாருக்காவது தும்மல் வந்துவிட்டால்கூட, அடுத்த கணம் அவர் டாக்டர் சாஹிப் வீட்டில் மருந்து குடித்துக்கொண்டிருப்பார்.

அம்மா, சப்பாத்தி, கெட்டிப் பருப்பு, தயிர்வடை, போன்றவற்றைச் செய்தால், டாக்டர் சாஹிப்புக்கு அழைப்பு போகும்.

அவர் தன்னுடைய பேரப்பிள்ளைகளைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவார். “அடிக்கடி அவங்க வீட்ல போய் சாப்பிடறீங்களே?” என்று டாக்டர் சாஹிப்பின் மனைவி கேட்டால், “அப்புறம் எப்படி மருந்துக்குக் காசு வசூல் செய்யறது..?” என்று திருப்பிக் கேட்டுவிட்டு, “லாலாவையும் சன்னியையும்கூட சாப்பாட்டுக்கு அங்கே அனுப்பி வை” என்று சொல்வார்.

“ஹே ராம். அநியாயத்துக்கு வெட்கம் கெட்ட ஜென்மங்களாக இருக்கே” என்று அவள் தலையில் அடித்துக்கொள்வாள்.

அம்மா, தனக்கு உடம்பு சரியில்லை என்றால், “ஐயோ இந்தக் கோமாளி டாக்டர் வேண்டாம். நான் நகரத்துக்குப் போய் நல்ல டாக்டரைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று புலம்புவாள். ஆனால், பக்கத்து ஊர் வரை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை. விளைவு, டாக்டர் சாஹிப், எங்கள் வீட்டுக்கு விரைந்து வந்துவிடுவார்.

“புலால் ஜர்தாவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாயா? அதுதான் பிரச்னை...” என்று அம்மாவைக் கிண்டல் செய்வார். அம்மா, பர்தாவின் உள்ளே இருந்துகொண்டு முறைப்பாள்.

“என்னைப் பார்க்கணும்னு சொன்னால் நான் வரமாட்டேனா, அதுக்கு ஏன் உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்றே? உனக்கு ஒண்ணும் இல்லேயே... நல்லா இருக்கியே” என்று அம்மாவை டாக்டர் சாஹேப் கிண்டல் செய்வார். அம்மா, வாய்க்குள்ளேயே அவரைத் திட்டி முணுமுணுப்பாள். அப்பா இவர்களின் சண்டையை ரசித்துச் சிரிப்பார்.

டாக்டர் சாஹிப், வீட்டுக்கு வந்து விட்டாலே, வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது வியாதியைச் சொல்லிக்கொண்டு அவரைப் பரிசோதிக்கச் சொல்வார்கள். “ஆஹா, நான் என்ன மிருக வைத்தியரா?” என்று கேட்டுக்கொண்டே அனைவரையும் வரிசையில் நிறுத்திப் பரிசோதிப்பார்.

எங்கள்  வீட்டில் யாருக்காவது குழந்தை பிறக்கப்போகிறது என்றால், “இலவச மருத்துவர் ஒருத்தர் இருக்காருன்னு வரிசையா பெற்றுத் தள்ளுகிறீர்களா?” என்று கேட்பார். பிரசவ வலி தொடங்கியதும் அவருக்குப் பதற்றம் அதிகமாகி, எங்கள் வீட்டுக்கும் அவர் வீட்டுக்குமாக அங்குமிங்கும் நடந்துகொண்டே இருப்பார். பிரசவ வலியில் கத்துபவர்களைக் காட்டிலும், இவர் அதிகமாகக் கத்தி, புலம்பி அக்கம் பக்கத்துக்கு ஆள்களை எல்லாம் கலவரப்படுத்திவிடுவார். தந்தையாகப் போறவனை இழுத்துவைத்து அறைவார்.  “உன்னால்தானே இந்தப் பெண் இவ்வளவு வேதனைப்படுகிறாள்” என்பார்.

 ஆனால், குழந்தை பிறந்து அழுகுரல் கேட்பதுதான் தாமதம், தன் வயதை மறந்து வராந்தாவில் இருந்து தாவிக் குதித்து, பிரசவ அறைக்குள் ஓடுவார். அவருடைய பதற்றத்தில் எங்கள் அப்பாவையும் இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைய, அங்குள்ள பெண்கள் கூச்சப்படுவார்கள். பிரசவித்த பெண்மணியை அவசர அவசரமாகப் பர்தாவுக்குள் நுழைப்பார்கள்.

பிரசவித்த தாயின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்துவிட்டு குழந்தையை அவரே குளிப்பாட்ட முயல்வார். அம்மா, அப்பாவையும் டாக்டர் சாஹிப்பையும் “ஆண்களுக்கு பிரசவ அறையில் என்ன வேலை?” என்று திட்டித் துரத்துவாள். இருவரும் பதில் சொல்லாமல் சிறுவர்களைப்போல் உற்சாகத்துடன் ஓடி வருவார்கள்.

அப்பாவுக்குப் பக்கவாதம் தாக்கி படுத்த படுக்கையானதும், அவருக்கு வேறு மருத்துவர்கள் வந்துதான் சிகிச்சை செய்தார்கள். ஆனால், டாக்டர் சாஹேப் அந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் “இது ஏன் செய்கிறீர்கள், மருந்து கொடுத்தீர்களா?” என்று கூடவே நின்று அவர்களை மேற்பார்வை பார்த்துக்கொண்டார். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் அப்பா இறந்ததும், அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டார்.

பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் படிப்பைப் பற்றி விசாரித்து அவர்களின் பள்ளிக் கட்டணத்தில் விலக்கு வாங்கி வருவது, வீட்டுத் திருமணத்துக்குத் தேவையான நகைகளை கியான்சந்திடம் பேசி விலை குறைத்து வாங்கிவருவது என எங்கள் குடும்பத்தை, தன் குடும்பமாகவே பாவித்து பொறுப்புகளைத் தானாகவே எடுத்துக்கொண்டு அலைந்தார். வீட்டில் இடப் பற்றாக்குறை. அதனால், வீட்டின் மேற்குப் புறத்தில் இரு அறைகள் கட்டலாம் என வீட்டில் அனைவரும் முடிவு செய்தபோது டாக்டர் சாஹேப், அது தேவையில்லை என்று சொன்னதால் அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. “அதற்குப் பதிலாக வீட்டின் மேல் பகுதியில் ஏன் அறைகள் கட்டக் கூடாது?” என்று டாக்டர் சாஹேப் கூறியதும், மறுபேச்சு இல்லாமல் மாடியில் அறை கட்டினார்கள்.

விஞ்ஞானப் பாடம் எடுத்துப் படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த ஃபஜ்ஜனை, டாக்டர் சாஹிப் தன்னுடைய ஷூவினால் விளாசி, அவனை வழிக்குக் கொண்டுவந்தார்.

ஃபரீதா, கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு பிறந்தகம் வந்தபோது டாக்டர் சாஹேப் தலையிட்டு அவர்களைச் சமாதானம் செய்துவைத்தார். டாக்டரின் இளைய மருமகள் ஷீலாவால் எங்கள் வீட்டுப் பிரசவத்துக்கு வெளியில் செவிலியரைத் தேடும் சுமை குறைந்தது. பிரசவ வலி என்று தகவல் கிடைத்தவுடன் அவள் தன் மருத்துவமனையில் இருந்து விரைந்து வந்து பிரசவம் பார்த்துவிட்டு குழந்தைக்கு ஆறாம் நாள் குல்லாவும் குர்த்தாவும் பரிசளிப்பாள்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாக இருந்தது. சப்பா சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் அவனை ஒரு விடுதலைப் போராட்ட வீரனைப்போல் நடத்தினர். எல்லோரும் ஆவலுடன் அவனிடம் சண்டையை விவரிக்கச் சொல்லி அதை மிகப்பெரிய சாகசச் செயலாகக் கொண்டாடினர். ஆனால், அம்மா மட்டும் இது எதிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாக இருந்தாள். அவள் ஆகஸ்ட் பதினைந்து கொண்டாட்டங்களைப் பார்த்துவிட்டு மனவேதனையுடன் வந்திருக்கிறாள். அன்று டாக்டர் சாஹேப் வீட்டில் மூவர்ணக் கொடியும், எங்கள் வீட்டில் முஸ்லிம் லீக் கொடியும் ஏற்றப்பட்டன. இந்த இரு கொடிகளும் பல மனங்களை ஆக்ரோஷமாக உடைத்து, இடைவெளியை உருவாக்கி பல மைல் நீளத்துக்குத் தெறித்துப் பிளந்து அகண்டு, முடிவில்லாது விரித்துகொண்டே சென்றன. அதன் முடிவற்ற பிளவுகளின் எல்லையில் கண்ணீர் மல்க நடுங்கிக்கொண்டு நின்றாள் அம்மா.

எங்கிருந்து வருகிறார்கள் என்று யோசிக்கும் முன்பே கூட்டம் கூட்டமாக அகதிகள் வந்து குவிய, நிறையத் தொடங்கியது நகரம். மூத்த மருமகளின் உறவினர்கள் பவல்பூரில் தங்கள் உடமைகளை இழந்து உயிர் பிழைத்து ஓடிவந்தபோது, இந்த விரிசல்கள் ஆழமாகவும் அகலமாகவும் விரிந்தன. அதன் பிறகு நிர்மலாவின் உறவினர்கள் இரத்தம் கொப்பளிக்க, வெட்டுக்காயங்களுடன் வந்துசேர்ந்தபோது அந்த இடைவெளிகள் இனி ஒருபோதும் இணைய முடியாதபடி நச்சுப் பாம்புகளால் நிரப்பப்பட்டன.

எங்கள் இளைய அண்ணி, தன் மகனின் வயிற்று வலி அதிகரித்துத் துடித்தபோது, டாக்டர் சாஹிப்பின் மருமகள் ஷீலா வர மறுத்து, தகவல் சொல்லச் சென்ற எங்கள் வீட்டு வேலைக்காரப் பையனைத் திட்டித் துரத்திவிட்டாள். இரு குடும்பமும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட சந்தோஷ கணங்கள், துயர்மிகு நாள்கள் எல்லாவற்றுக்கும் அர்த்தமில்லாமல் போய் பரஸ்பரம் பேசிக்கொள்வதும் நின்று போனது.

பர்ரே பாபி தன்னுடைய ஹிஸ்டீரியா வலிப்புகளையும் மறந்து இங்கிருந்து கிளம்புதற்கு ஆயத்தமானாள். அம்மா தன் மௌனத்தைக் கலைத்து, “நான் உங்களுடன் வரவில்லை, என் டிரங்குப் பெட்டியை ஒருவரும் தொட வேண்டாம். என்னால் அங்கே அந்த சிந்தி ஆள்களோடு போராட முடியாது. அவர்கள் புர்காவையும், பைஜாமாவையும் தூக்கியெறிந்து அருவருப்பாக அலைகிறார்கள்” என்றாள். அனைவரும் அம்மாவின் மௌனம் இவ்வளவு சீற்றமாகக் கலையும் என்று எதிர்பார்க்காமல் வாயடைத்துப் போனார்கள்.

“அப்ப, டாக்காவில் இருக்கிற சின்ன மகனோடும் இவங்க போக மறுக்கிறார்களே!”

“ஐயோ, அங்க தலையை வெட்டித் தின்னும் பெங்காலிகள் வெறும் கைகளால் சாதத்தைப் பிசைந்து விழுங்குவார்கள். இவங்க ஏன் அங்க போகணும்?” ஸஞ்ஜ்லே பையாவின் மாமியார் முமானி பீபி குரோதம் நிறைந்த குரலில் கூறினாள்.

“அப்படின்னா ராவல்பிண்டிக்குப் போய் ஃபரீதாவோட தங்கலாமே?” என்றாள் காலா. “ஐயயோ... அங்க இருக்கிற பஞ்சாபிகள் நரகத்தில் வசிக்கிற பேய்கள். அவர்களிடம் இருந்து நம்மை அல்லாதான் காப்பாற்ற வேண்டும்.”
அம்மாவின் மௌனம் உடைந்து வார்த்தைகள் வெள்ளமாகப் பொங்கிவந்தது. அவள், அளவுக்கு மீறி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்.

“ஐயோ, அத்தை நாம் என்னவோ ஜனங்களே இல்லாத பாலைவனப் பிரதேசத்துக்குக் குடிபோவதுபோலவே பேசுகிறாயே! உன்னை எந்த மகாராஜாவாவது சேனைகளை அனுப்பி பல்லக்குல ஊர்வலமா கூட்டிப் போகப்போறாரா என்ன?” என்றதும், அனைவரும் சூழலை மறந்து சிரிக்க அம்மா, முகம் வாடிப்போனாள். அதைக் கவனிக்காமல் அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தனர்.

“சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறீர்கள்... நிறுத்துங்கள்!” என்று நேஷனல் கார்ட்ஸின் தலைவன் சர்தார் அலி, கத்தி எல்லோரையும் அடக்கினான்.

“நீதான் மடத்தனமா பேசுறே. இங்கேயே தங்கி எங்களையும் யாராவது கொல்லணுமா?”

“நீங்க எல்லாரும் போங்க. இந்த வயசுல நான் எங்கேயும் வரல!” என்றாள் அம்மா தீர்மானமாக.

“கடைசியிலே இந்தக் காஃபிர்கள் கையாலேதான் நாங்க சாகணும்னு எழுதியிருக்குபோல!”

தங்கம், வெள்ளி மட்டுமல்லாது, சந்தனம், வெந்தயம், ஆட்டுக்கால் எலும்புத் தூள்கள், முல்தானிமட்டி கட்டிகள் என்று பல பொருள்களையும் மூட்டைகளாகக் கட்டி, தன் உடைமைகளை எண்ணிக்கொண்டு இருந்தாள் காலா பீபீ.

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்

பர்ரே பாய்க்கு கோபம் வந்து அந்த பொருள்களைத் தூர எறிய, பாகிஸ்தானில் தன் வாழ்வாதாரமே அந்தப் பொருள்கள்தான் என்பதுபோல பதறிக் கூச்சலிட்டு மீண்டும் அவற்றைத் தன் பொருள்களுடன் சேர்த்து வைத்துக்கொண்டாள் காலா பீபீ.

குழந்தைகள் சிறுநீர் கழித்துப் பிய்ந்துபோன பழைய மெத்தைகளின் பருத்திப் பஞ்சுகளையும்கூட மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டனர். கோணிகளில் பாத்திரங்கள் கட்டப்பட்டன. கட்டில்களைப் பிரித்து, கட்டைகளாக ஒன்று சேர்த்துக் கட்டினார்கள். எங்கள் கண் முன்னே வீட்டை அழகாக நிறைத்து இருந்த அத்தனை பொருள்களும், மூட்டைகளாகவும் பெட்டிகளாகவும் வீடு முழுவதும் இறைந்துகிடந்தன. வீடு வெறுமையாகி விட்டிருந்தது. அங்கு கட்டிவைக்கப்பட்ட அத்தனை பொருள்களும் அந்தந்த உடமையாளர்களின் எண்ணங்களைப்போல கால் முளைத்துத் தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தன. ஆனால், அம்மாவின் டிரங்குப் பெட்டி மட்டும் அவளைப்போலவே இறுக்கமாக அமைதியாக அசைவில்லாமல் இருந்தது.

“இங்கேதான் சாகணும்னு நீ தீர்மானித்து இருந்தா, அதை யாரும் தடுக்க முடியாது” என்று பாய் சாஹிப் முடிவாகச் சொன்னார்.

என்னுடைய வெகுளியான அம்மா, தன் அலைபாயும் கண்களால் வானத்தை வெறித்துப் பார்த்து, “என்னை யாரால் கொல்ல முடியும்? எப்போது அது நடக்கும்?” என்றாள்.

“அம்மாவுக்கு மூளை பிசகிவிட்டது போல” என்று பாய் சாஹிப் கிசுகிசுத்தார்.

“அந்த காஃபிர்கள் அப்பாவிகளை எப்படிச் சித்திரவதை செய்தார்கள் என்று இவளுக்கு என்ன தெரியும்?”  

“நம் மக்கள் வாழும் நமக்கான சொந்த இடத்துக்குப் போய்விட்டால், அதுதான்  பாதுகாப்பு இல்லையா? அங்குதானே நாமும் நம் உடைமைகளும் பத்திரமாக இருக்க முடியும்!”

அத்தனை அதிகமாகப் பேசாத அம்மாவுக்கு கூர்மையான நாவு இல்லாது போனது துரதிர்ஷ்டமே! அவளுக்குப் பேச மட்டும் தெரிந்திருந்தால் அவர்களைத் திருப்பி இப்படிக் கேட்டிருப்பாள்:

“நம் சொந்த இடம் என்று சொல்லும் அந்த விசித்திர உலகின் பெயர் என்ன, அது எங்கே இருக்கிறது, இங்குதானே நாம் பிறந்தோம், உயிரும் உடலுமாக வளர்ந்தோம்.நாம் பிறந்த நம் மண் இன்று அந்நிய பூமியாகப் போய்விட்டதா? இதோ இன்று நீ வேறு இடத்துக்கு அடைக்கலம் போகிறாய்... அங்கும் யாராவது வந்து உன்னை நாளை விரட்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அங்கு யாராவது வந்து ‘இங்கா நீ பிறந்தாய், ஓடு...’ என்று விரட்டினால் என்ன செய்வீர்கள்? பலமான காற்று வீசினால் அணைந்துபோகும் விளக்குபோல பலகீனமாக இருக்கிறேன் நான். எந்த நிமிடமும் எல்லாம் முடிந்து போகும். அதன் பிறகு எனக்கான சொந்த இடத்தைத் தேடும் உங்கள் சிக்கலும் தீர்ந்துபோகும். ஒருத்தரின் சொந்த பூமி திடீரென அவர்களுக்கு அந்நியமாவதும், சம்பந்தமே இல்லாத ஏதோ ஓர் இடம் நமக்கு சொந்தமாவதும் அத்தனை ரசிக்கக்கூடிய விளையாட்டு அல்ல. ஒரு காலத்தில் முகலாயர்கள், தங்கள் காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி எறிவதுபோல், தங்கள் சொந்த நாட்டை விட்டு அந்நிய தேசத்தைச் சொந்த பூமி எனச் சொல்ல விழைந்தார்கள்; என்ன ஆனார்கள்?”

அம்மா அமைதியானாள். அவள் முகம், அவள் வாழ்ந்து முடித்த காலங்களின் நினைவுகளைச் சுமந்து தாங்க இயலாமல் களைத்து, இருண்டுபோய் இருந்தது. பல நூற்றாண்டுகளாகத் தனக்கான பூமியைத் தேடும் முயற்சியில் அலைந்து கலைத்தவள்போலக் காணப்பட்டாள்.

நேரம், தன் வழியில் நகர்ந்துகொண்டே இருந்தது. எத்தனை சூறாவளியையும் தாண்டி நிமிர்ந்து நிற்கும் ஆலமரம்போல் அம்மா, தன் நிலையில் உறுதியாக இருந்தாள்.

அவளுடைய மகன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் தங்கள் உடைமைகளுடன் வாசலில் போலீஸ் காவலுடன் இருக்கும் லாரியில் ஏறலானார்கள். அதுவரை அசைவில்லாது இருந்த அவள் மனம் படபடத்தது. விரிந்த வெளியில் எல்லைகளைத் தாண்டி அவளின் பார்வை எதையோ தேடி அலைந்தது. பக்கத்து வீடு காற்றில் கலைந்து மேகங்களுடன் கரைந்து காணாமல் போகத் தொடங்கியிருந்தது.

ரூப்சந்த்ஜியின் வீட்டு வராந்தா வெறுமையாக இருந்தது. ஓரிரு முறை ஏதோ ஆவலுடன் வெளியில் வந்த குழந்தைகளை வலிமையான கரங்கள் அவசரமாக உள்ளே இழுத்துக்கொண்டன. அம்மாவின் கண்களிலிருந்து அருவிபோல் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. கண்ணீருக்கு இடையில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் திரைகளின் இடுக்குகளில் இருந்து கலக்கத்துடன் எட்டிப் பார்க்கும் குழந்தைகளின் கண்ணீரை அவளால் உணர முடிந்தது.

அம்மா மிகவும் கலவரமடைந்து இருந்தாள். அந்த விசாலமான பெரிய முற்றத்தில் தனியாளாக, தான் நேசித்தவர்களையும், தனக்காக ஆண்டவன் கொடுத்த அத்தனை ஐஸ்வர்யங்களையும், இறைவனின் கருணையின் பாதங்களில் ஒப்படைத்துவிட்டு, அனாதையாக அவள் ஆட்சிசெய்த வீட்டில் நின்றிருந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தனிமை அவளை அச்சுறுத்தியது. அந்தச் சூழலின் ஏகாந்தம், பல அமானுஷ்யங்கள் அவளைச் சூழ்ந்து தாக்க வருவதான உணர்வில் அவள் மிரண்டுபோனாள். எண்ணங்கள் வலையாகப் பின்னி, அவள் மூளைக்குள் மொய்த்தன. அவளுக்குத் தலைசுற்றி மயக்கம் வருவதுபோல இருந்தது. அருகில் இருந்த தூணில் சாய்ந்து, நிற்க இயலாமல் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்தாள்.

மெள்ள எழுந்து ஆளில்லாத அந்த வீட்டை, இன்றுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் சுற்றிவந்தாள். அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியும் அவள் வாழ்வை அவளுக்குத் திருப்பிச் சொன்னது. வீட்டின் முன்னறைக்கு வந்ததும், நெஞ்சு வெடித்துவிடும் போன்றதோர் அழுத்தம் பிறந்து, துக்கம் அவள் தொண்டையை அடைத்தது. இந்த அறையில்தான் அவளின் இல்லறம் தொடங்கியது. இந்த அறைக்குள் முதன்முறையாக எந்தத் தவிப்புடன், உள் நுழைந்தாளோ, அதே தவிப்புடன் இன்று அந்தக் காட்சியை நினைவுகூர்ந்தாள். அவள் வாழ்வின் இன்ப துன்பங்களில் இணைபிரியாது பங்குகொள்வேன் என்று கூறிய அவளின் கணவன், இந்த அறையில் போடப்பட்ட கட்டிலில் அமரவைத்துதான் அவள் முக்காட்டை விலக்கி, நிலவு போன்ற அழகிய முகத்தைத் தன் கரங்களில் தாங்கி ரசித்துப் பார்த்தான். முழுவதுமாக அவனை நம்பி, தன்னை மொத்தமாக அவனிடம் அவள் ஒப்படைத்த அறை இதுதான்.

இதோ இந்த அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையில்தான் அவளது தலைப்பிரசவம் நடந்தது. அதோ அந்த மூலையில்தான் அந்த மூத்த மகளின் தொப்புள்கொடி புதைக்கப்பட்டது. முதன்முதலாக தாய்மையை உணரச்செய்த மகளைக் கையில் ஏந்தி உச்சி முகர்ந்தது இந்த அறையில்தான். ஏறக்குறைய அவளது எல்லாக் குழந்தைகளையும் இந்த அறையில்தான் பிரசவித்தாள். அவளது எல்லாக் குழந்தைகளின் தொப்புள்கொடியும் இந்த அறையின் மூலைகளில்தான் புதைக்கப்பட்டு இருக்கின்றன. தன் அந்திமக் காலத்தில் ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பத்துக் குழந்தைகளை, பத்து மனித உயிர்களை இந்த அறையில்தான் பெற்று எடுத்தாள். இன்று அந்த நினைவுகள் மட்டுமே சொந்தமாக, யாரும் இல்லாத தனிமரமாகப் பெற்றெடுத்த அந்தப் புனிதக் கருப்பையின் வெறுமையுடன் நிற்கிறாள்.

பாம்பு தன் தோலை எளிதாக உரித்து விட்டு, அகன்று சென்று விடுவதைப்போல இவளின் குழந்தைகள் இவளை விட்டு, அமைதியும் நிம்மதியுமான வாழ்வைத் தேடிச் சென்றுவிட்டன.

அந்த வீட்டின் திசையெங்கும் குழந்தைகளின் குரல்கள் ஒலிப்பது போன்ற பிரமையை, உண்மை என நினைத்து அங்குமிங்கும் திரும்பி அலைபாய்கிறாள். புதிதாகத் திருமணமாகி வரும் பெண்கள் எல்லோரும் அம்மாவின் மடியை வணங்கி,  ‘பத்துப் பிள்ளைகள் பெற்ற தங்க மடி இது... எங்களை ஆசீர்வதியுங்கள்’ என்று ஆசி வாங்கிச் செல்வதுண்டு. அம்மாவின் மடி, அதிர்ஷ்டம் பொங்கிவரும் மடி என்றும் அதனை வணங்குவதால் நல்லபடியாக பிள்ளைப்பேறு நடைபெறும் என்றும் பெண்கள் நம்பினார்கள். இன்று அவள் பிள்ளை பெற்று மகிழ்ந்த அறையைப்போலவே அவளது கருப்பையும் வெறுமையால் நிறைந்திருந்தது.

மனம் கனத்து வேதனைச் சுமை கூடியதால், நடக்க இயலாமல் கால் தடுமாற அடுத்த அறைக்குள் நுழைகிறாள். இந்த அறை அன்று தந்த வேதனையை இன்றும் அவளால் உணர முடிந்தது. ஐம்பதாண்டுக் காலம் அவள் வாழ்வில் நிறைவாகப் பங்கெடுத்த அவளின் வாழ்க்கைத் துணை, தன் இறுதி மூச்சை விட்டது இந்த அறையில்தான்.  இதோ இப்பொழுதும் அவளால் பார்க்க முடிகிறது. இதோ அந்த அறையின், கதவுக்குப் பக்கத்தில்தான், அவரின் சவத்தை கோடித்துணி போர்த்தி மூடிவைத்து கிடத்தியிருந்தார்கள். அத்தனை சொந்தமும், பிள்ளைகளும், உற்றார் உறவினரும் அவரைச் சுற்றி அழுதுகொண்டு இருந்தார்கள். அழுவதற்கு மனிதர்கள் சுற்றி இருக்கும்போதே இறப்பது கொடுப்பினைதான்.

‘அவர் என்னமோ மிக அதிர்ஷ்டசாலிதான். என்னைப்போல் இல்லை. நான் இன்று உயிரோடு இருக்கும்போதே பிணமாக, யாரும் அருகில் இல்லாமல் அலைகிறேனே... இந்த அவலவாழ்வை அனுபவிக்காமல் அவர் விரைந்து சென்றது நல்லதுதான்’ என்று அவளுக்குத் தோன்றியது. அவள் கால்கள் நடக்க இயலாமல் துவண்டன. கணவரை இறுதியாகப் படுக்கவைத்திருந்த இடத்தில், தலைப்பகுதியில் சென்று சரிந்து விழுந்தாள். கணவர் இறந்த தினத்திலிருந்து கடந்த பத்து ஆண்டுகளாக அவரின் நினைவாக தினமும் விளக்கேற்றி வழிபடும் இடம் அது. வீட்டின் அத்தனை பொருள்களையும் எடுத்துச் சென்றவர்கள் தேவையில்லை என்று விட்டுப் போயிருந்த பொருள் அது. விளக்கில் எண்ணெய் தீர்ந்து போய், திரி எரிந்து கருகிவிட்டிருந்தது.

ரூப்சந்த்ஜி பித்துப் பிடித்தவர்போல அவர் வீட்டு முற்றத்தில் நிலைகொள்ளாது நடந்துகொண்டு இருந்தார். அவருக்கு உலகை நினைத்தாலே வெறுப்பாக இருந்தது. இந்த அரசாங்கம், அரசியல், அவளின் மனைவி, குடும்பத்தினர், அவர் வசிக்கும் தெரு, சாலைகள், கத்திகள் என எல்லாவற்றையும் சபித்துத் திட்டிக்கொண்டு இருந்தார்.

அவரின் சாபம் பலித்துவிடும் என இந்த உலகு பயந்து அவர் முன் மண்டியிட்டு, மன்னிப்புக் கோருவதாகக் கற்பனை செய்து கொண்டார். இத்தனை ஆண்டுக்காலமும் ஒன்றாகக்கூடி வாழ்ந்த பக்கத்து வீட்டின் வெறுமை அவரை மிகவும் கலங்கடித்தது.

தானே பார்த்து ரசித்துக் கட்டிய வீட்டை, தானே சுக்குநூறாக சம்மட்டி எடுத்து உடைத்தது போன்றதொரு வேதனையில் துடித்தார். அந்த வீடு இருக்கும் திசையைப் பார்க்கவே அஞ்சினார். அந்தக் குடும்பத்துக்கும் தனக்குமான பந்தம் நிலத்தின் ஆழம் வரை ஊடுருவிச் சென்ற வேர்களைப்போல, நினைவுகளாகப் பின்னிப் பிணைந்து உயிர்வரை இணைந்திருப்பதை எப்படி வேரறுப்பது? அந்த நினைவுகளை மறக்க வேண்டும் என்று நினைத்தாலே, தன்னைத்தானே, வெட்டிக்கொண்டு, ரத்தநாளங்களைச் சிதைத்துக்கொண்டு, வீழ்வதைப்போல ஒரு வேதனை அவரைத் துடிக்கச் செய்தது.

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்



அவருக்கு, பக்கத்து வீட்டின் கனத்த மௌனத்தைத் தாங்க முடியாது இருந்தது. மனம் என்னவோபோல, பித்தனைப்போல உளறச் செய்தது. சட்டென்று அமைதியானார். என்னவோ யோசித்தார். தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

ஊர் மொத்தமும் இரவின் இருண்மைக்குள் தன்னை இருத்திக்கொண்டு மௌனமான பின், பக்கத்து வீட்டின் பின் கதவின் வழியாக, தன் இரு கைகளிலும் உணவை ஏந்திக்கொண்டு ரூப்சந்த்ஜியின் மனைவி வீட்டினுள் பிரவேசித்தாள். எதுவும் பேசாமல் அம்மாவின் எதிரில் அமைதியாக அமர்ந்திருந்தாள். இரு கிழவிகளும், நீண்ட நேரம் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். ஆனால், இருவரின் மனமும் ஓராயிரம் விஷயங்களை உள்ளுக்குள் பேசிக்கொண்டு இருந்தன. அவர்களின் பார்வையில் மொழிப் பரிமாற்றம் மௌனமாக நடந்தது. இந்த இருவரும் முன்பு பேசிக்கொள்ளும்போது, அந்தச் சூழல் கிடுகிடுக்கும். இன்று உணர்ச்சி வசப்பட்டு வாயடைத்துப் போய் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் இருந்த பந்தத்தின் நெகிழ்வு அவர்கள் வாய்க்குப் பூட்டுப் போட்டு மனதைத் திறந்து விட்டிருந்தது.

அத்தனை பெரிய வீடு. முழுவதும் மனிதர்களால் நிறைந்திருந்த வீடு, இன்று மௌனமாக சத்தமின்றி இருந்தது. அனைவரும் அவளைவிட்டுப் போய்விட்டாலும், குழந்தைகளுடன் செல்லும் அவர்களுக்கு ஒன்றும் அசம்பாவிதம் நடக்காமல், அவர்கள் விரும்பிய இடம் சென்று சேரவேண்டுமே என்று கவலைப்பட்டாள். நாடு இருக்கும் பதற்றமான சூழலில், எல்லா இடங்களிலும் ஆள்களைக் கொன்று குவித்து, ஊரே ரத்தக் களறியாக இருக்கிறதே, ரயில் வண்டிகளில் மனிதர்களாக பயணத்துக்கு ஏறியவர்கள் பிணங்களாகக் குவித்து இறக்கப்படுகிறார்கள் எனச் செய்திகள் வருகிறதே என்றெல்லாம் பல சிந்தனைகள், கவலைகள் அவளை அலைக்கழித்தன. அவளால் இரவு முழுவதும் தூங்க இயலாமல், இருட்டில் விழித்தபடி இருளுக்குள் தன்னை ஒளித்துக்கொண்டு படுத்திருந்தாள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக, அவள் அக்கறையுடன் தன் உயிரைவிட்டு ரத்தத்தால் வளர்த்த பயிர்கள், இன்று வேறு நிலத்தில்தான் தங்களால் செழிப்பாக வளர இயலும் என்று சென்றுவிட்டன. சொந்த நிலத்தை மறுத்து புதிய நிலம் சென்ற பயிர்களின் குருத்து, கருகிவிடாமல், செழித்து வளருமா என்ற கவலை அவளுக்குள் உழன்றுகொண்டே இருந்தது.

பாவம் இளைய மருமகள், நிறைமாதக் கர்ப்பிணி. அவளை அல்லாஹ் ரட்சிக்கட்டும். அவளுக்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம். அவர்கள் செல்லும் வழியில் எந்தப் பால்வெளியில், அந்தக் குழந்தை பிறக்கப்போகிறதோ யாருக்குத் தெரியும்? இது என் தேசம் அல்ல என்று, அந்நிய தேசத்தை நம்பிச் சென்றிருக்கிறார்கள். ஏற்கெனவே அந்த மண்ணில் வசித்துக்கொண்டிருக்கும், நயவஞ்சகக் கழுகுகள் இவர்களை நிம்மதியாக வாழ விட்டுவிடுமா? இல்லை, மீண்டும் இவர்கள் சொந்த மண்ணைத் தேடி வந்து விடுவார்களா?

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்

அப்படி ஒருவேளை திரும்பி வந்தால்... இங்கிருந்து பிய்த்துக்கொண்டு சென்ற வேர்கள், மீண்டும் இந்த மண்ணில் தழைக்குமா?அப்படி ஒருவேளை அவர்களுக்கு மகிழ்வான தருணங்கள் இந்த மண்ணில் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பிருக்கும் எனில், அன்று என் மக்கிப்போன எலும்புகள் சாட்சியாக நிற்குமா?அவள் தனக்குள்ளேயே எதை எதையோ பிதற்றிக்கொண்டு, அந்த வீட்டின் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் ஒரு தாயின் வாஞ்சையுடன் தடவிக் கொடுத்த வண்ணம் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவளது மனக்கலவரத்தில், இளைய மருமகளையும், மக்களையும் கலகக்காரர்கள் நிர்வாணமாக்கி ரோட்டில் ஓடவிட்டு வெட்டுவதுபோலவும், குழந்தைகளைக் கதறக் கதறத் துண்டு துண்டாக வெட்டி எறிவதைப்போலவும் காட்சிகள் வந்து அவளின் தனிமையை மேலும் கொடூரமாகச் சிதைத்தன.

களைப்பில் அவள் மயங்கிக் கண்ணயர நேர்ந்தால், தெருவில் கேட்கும், கூச்சல்களும் அலறல்களும் அவளைக் குலுக்கி எழுப்பி மேலும் அச்சுறுத்தின. அவளைப் பற்றிய கவலைகள் அவளுக்குக் கொஞ்சம்கூட இல்லை. ஆனால், கொடும் ராட்சசர்களாக வெறிபிடித்தலையும் மனிதர்கள் கையால் வரும் மரணத்தைவிட, இயற்கையான சாவு சிறிது மென்மையாகத்தான் இருக்கும்போலும். அணையும் விளக்கு படபடத்துக்கொண்டிருப்பதைப்போல அவள் படபடத்துக்கொண்டிருந்தாள்.

வேர்கள் - இஸ்மத் சுக்தாய்


நாட்டில் கலவரக்காரர்கள் கிழவிகள் என்றுகூட பாராமல், அவர்களது தோல் தேய்ந்து, ரத்தமும் சதையுமாக எலும்புகள் துருத்தித் தொங்கும் அளவுக்கு இருந்தாலும், இரக்கமின்றி தெருவில் இழுத்துச் செல்வதாக யாரோ கூறினார்கள். நரகத்தைவிடப் பல மடங்கு கொடுமைகள் இன்று நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் நடந்துகொண்டு இருப்பாதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

வீட்டு வாயிலில் யாரோ நின்றுகொண்டு முரட்டுத்தனமாகக் கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. தூரத்தில் இருந்து யாரோ குரல் கொடுத்து அழைப்பது கனவில் கேட்பதுபோல் தெளிவில்லாமல் கேட்கிறது. ஒருவேளை மூத்த மகன் திரும்பி வந்து விட்டானோ? இல்லையே... இது இளைய மகனின் குரல்போல இருக்கிறதே... அச்சத்தில் அவளுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டதுபோல் சிந்தனைகள் தறிகெட்டு அலைகின்றன. மரணத்தின் தூதுவன் அவளைச் சந்திக்க ஆவேசமாக வருகிறான் போலும். அவன் மிகவும் அவசரத்தில் இருப்பதாக அவளுக்குத் தோன்றுகிறது.தெளிவில்லாத காட்சிகள் மாறுகின்றன. இதோ... எல்லோரும் புதிய இடத்தில் நின்று கொண்டு அவளைத் திரும்பிப் பார்க்கிறார்களே... இளைய மகன் தன் மனைவி குழந்தைகளோடு பேசிக்கொண்டு இருக்கும் காட்சி தெளிவாகத் தெரிகிறதே... கலங்கிய மனதில் சிறிது நிம்மதி உருவாகிறது. திடீரென்று வீடு வெளிச்சத்தால் நிறைந்து, மீண்டும் எல்லோரும் அவள் அருகில் வந்து நிற்கிறார்கள். குழந்தைகள் அவளைக் கூடிநின்று கட்டிக்கொள்கின்றன. களை இழந்து வெறுமையில் நிறைந்திருந்த வீடு, மீண்டும் களைகட்டியது. கலகலப்பாக குழந்தைகளும் மகன்களும் மருமகள்களும் அந்த வீட்டை நிறைத்து இருந்தனர்.

அவளது அச்சம் மறைந்து மனதில் நிம்மதி பிறந்தது. இனிக் கவலையில்லை என்று மனம் சொன்னது. அவள் நிம்மதியாக கண்ணைத் திறந்து பார்த்தாள். அவளுக்கு மிகவும் பரிச்சயமான கரம் ஒன்று அவள் நாடியைப் பரிசோதித்துக்கொண்டு இருந்தது. “மன்னிக்கணும் பாபி. உனக்கு என்னைப் பார்க்கணும்னு தோணினா, கூப்பிட்டால் நான் வருவேன்ல. அதற்காக ஏன் மயங்கி விழுவதுபோல் நடிக்கிறாய்?” என்று ரூப்சந்த்ஜி கலகலவென்று சிரித்தபடி அவளிடம் பேசினார்.

“இந்த முறை நீ பீஸ் எனக்கு கொடுத்தே ஆக வேண்டும். உன் உதவாக்கரைப் பிள்ளைகளை லோனி ஜங்க்ஷனில் இருந்து, மிரட்டி, திரும்ப அழைத்து வந்திருக்கிறேன். முட்டாள்கள்! இவங்களுக்குப் போலீஸ் சூப்பிரண்டு மேல்கூட நம்பிக்கை இல்லை.”

அந்தப் பெண்மணியின் கிழட்டு முகத்தில் மகிழ்ச்சி பரவியது. பரவசத்தில், உணர்ச்சி மேலீட்டில் கண்கள் கசிந்தன. ரூப்சந்த்ஜி அவளை அன்பாகப் பார்த்து மெள்ளச் சிரித்தார். அவளால்  பேச இயலாமல், அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு புன்னகைத்தாள். அவரின் கிழட்டுக் கரங்களில் சூடான அவளின் கண்ணீர்த் துளிகள் சிதறின.